கிதியோன் சுக்கோத்து மக்களிடம், 'என் பின்னே வரும் இவர்களுக்கு உணவு கொடுங்கள். ஏனெனில் இவர்கள் களைத்திருக்கின்றனர். நான் மிதியானிய அரசர்களான செபாகு, சல்முன்னா என்பவர்களைத் தொடர்ந்து துரத்திக்கொண்டு செல்கிறேன்' என்றார். 'செபாகையும் சல்முன்னாவையும் நீ பிடித்துவிட்டாயா? உமது படைக்கு நாங்கள் ஏன் உணவு கொடுக்க வேண்டும்?' என்று சுக்கோத்தின் மக்கள் கேட்டனர். (நீதித் தலைவர்கள் 8:5-6)
கிதியோன் மிதியானியர்களைப் போரில் அழித்து விடுகிறார். மிதியானியர்களின் அரசர்கள் என்று சொல்லப்படும் அவர்களின் தலைவர்கள் மட்டும் தப்பி ஓடுகின்றனர். அவர்களை கிதியோன் விரட்டிச் செல்கின்றார். அவரோடு செல்லும் படைவீரர்கள் பசி, தாகத்தால் வருந்துகின்றனர். அந்நேரத்தில் அவர்கள் எதிர்கொண்டு அவர்களைச் சார்ந்த சுக்கோத்து என்ற நகர மக்களிடம் உணவும், தண்ணீரும் கேட்கின்றார். அவர்கள் அவரை ஏளனமாகப் பார்க்கின்றனர்.
'இறைவாக்கினர் தன் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை' என்பது போல வெற்றியாளர்களும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்பதே நிச்சயம். நம்மூரைச் சார்ந்த ஒருவர் வெளியூரில் சென்று படிப்பிலோ, வியாபாரத்திலோ, வாழ்விலோ சாதித்து விட்டால், 'அவனா? அவளா?' என்று தான் நாம் கேட்போம். எடுத்துக்காட்டாக, நாம் அன்றாடம் பயன்படுத்தும் மின்னஞ்சலைக் கடைப்பிடித்தவர் சிவா அய்யாதுரை என்ற இந்தியர், தமிழர். கடித சேவையைப் போல இன்றியமையாததாக மாறிவிட்ட மின்னஞ்சலைக் கண்டுபிடித்தவர் நமக்குப் பெரிதாகத் தெரிவதில்லை. ஆனால், வெளிநாட்டில் வேலையில்லாதவர்களுக்கும், பயணம் செய்பவர்களுக்கும் 'time-filler' எனக் கண்டுபிடிக்கப்பட்ட முகநூலை உருவாக்கிய மார்க் சுக்கெர்பர்க் நமக்கு அறிவாளியாகத் தெரிகிறார். சொந்த ஊர்க்காரர் என்றால் நாம் கண்டுகொள்வதில்லை. நம்மூர்க்காரர் திருவள்ளுவர் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக கண்டுபிடித்த மேலாண்மையியல் கருத்துக்களை இன்று களவெடுத்து மேலைநாடுகளில் புத்தகங்களாக எழுதுகிறார்கள். அவைகளை மிக அருமை என வியக்கின்ற நாம் திருக்குறளை பள்ளிப்படிப்பு சார்ந்தது எனவும், பேருந்தில் எழுதி வைப்பது எனவும் மட்டும் நிறுத்திக்கொண்டதற்கும் காரணம் திருவள்ளுவர் நம்மூரார் என்பதுதான்.
தன்னை ஏளனமாகப் பேசிய தன் ஊர்க்காரர்களிடம் தான் யார் என்பதை விரைவில் நிருபிக்கிறார் கிதியோன். இந்த மனநிலை தான் அடுத்தவர்கள் நம்மை குறைத்து எடைபோடும்போது நமக்குத் தேவையானதுதான்.
மற்றொரு பக்கம், நாம் சுக்கோத்து மக்களைப் போல இருக்கக் கூடாது. 'உணவில்லை. தண்ணீரில்லை' என்று சொல்லியிருந்தால் கூட பரவாயில்லை. 'உனக்கு ஏன்டா கொடுக்க வேண்டும்?' என்று கேட்பது எவ்வளவு பெரிய அவமானம். 'நாம் கொடுத்தால் அவர்கள் அதை என்ன செய்வார்கள்?' என்று கேட்பதை விட, 'நாம் கொடுக்கா விட்டால் அவர்கள் என்ன செய்வார்கள்?' என்று கேட்பது மேலானது. அதுவே பிறர்மேல் நாம் கொண்ட கரிசணை.
'நாங்கள் ஏன் உணவு கொடுக்க வேண்டும்?'
உண்ண உணவும் குடிக்க நீரும் எத்துணை அவசியம் என்பது அந்தக குறையோடு வளர்ந்தவர்களுக்குத்தான் புரியும்.பசி எடுக்க மாத்திரைகள் சாப்பிடும் மனிதர்கள் உள்ள இதே பூமியில் தான் மாத்திரையையே உணவாக உண்ணும் மக்களும் உள்ளனர்.இளம் வயதில் கால்வயிறும் அரைவயிறுமாக உண்ட நம் அருமைப் பிள்ளைகள் பலர் இன்று நம் ஊரிலும் அயலூரிலும் எவ்வளவோ சாதிக்கின்றனர். பிறந்த மண்ணுக்கு பெருமை சேர்க்கின்றனர்.அவர்களை இனம் காண்போம்.... பெருமை செய்வோம்.
ReplyDeleteசெய்வோம்.