Friday, November 22, 2013

யார் முதலில் போரிடுவர்?

யோசுவா இறந்த பின் இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரிடம், யார் கானானியருக்கு எதிராகச் சென்று எங்கள் சார்பாக முதலில் அவர்களுடன் போரிடுவர்?' என்று கேட்டனர். ஆண்டவர், 'யூதா செல்வான். இதோ! அவன் கையில் நிலத்தைக் கொடுத்துள்ளேன்' என்றார். (நீதித் தலைவர்கள் 1:1-2)

யோசுவா இறந்து விட்டார். இப்போது அடுத்து யார் தலைமைப் பொறுப்பை ஏற்பார்கள்? இறைவனின் திருவுளத்தை இனி தங்களுக்கு யார் சொல்வார்?

யோசுவாவிற்குப் பின் இறைவன் இஸ்ரயேல் மக்களை நீதித் தலைவர்களின் தலைமையில் வழிநடத்துகின்றார். நீதித் தலைவர்களுக்கும் யோசுவாவிற்கும் இடையேயுள்ள கால இடைவெளியைத் தான் இன்று நாம் வாசிக்கின்றோம்.

இறைவன் பாலும் தேனும் பொழியும் நாட்டை இஸ்ரயேல் மக்களுக்கு அளித்த போது அந்த நாடு வெறும் வெற்று இடமாக இல்லை. மாறாக மற்றவர்கள் அங்கே ஏற்கனவே குடியிருக்கின்றனர். குடியிருப்புக்களை அகற்றி இஸ்ரயேல் மக்கள்தாம் அதை உரிமையாக்கிக் கொள்ள வேண்டும். அதற்கு ஒரே வழி: போர். போரிடத் தயாராகின்றனர். போருக்கு யார் தலைமை தாங்குவார்கள்?

அதைக் கண்டறிய இறைவன் முன்னிலையில் சீட்டுப் போடுகிறார்கள். சீட்டுப் போடுதல், குறி கேட்டல், பூ போட்டுப் பார்த்தல் இன்னும் பாமர மக்களின் சமய வழக்கங்களில் ஒன்றாக இருக்கின்றது. பழைய ஏற்பாட்டில் யூரிம், தும்மிம் என்ற இரண்டு கட்டைகளை வைத்து அறிகுறிகளைக் கணித்தனர். இந்த யூரிம், தும்மிம் என்னும் இரண்டு கட்டைகளைத்தான் இஸ்ரயேலின் தலைமைக்குரு எப்போதும் தான் மார்பில் அணிந்திருக்கும் 'எஃபோடு' என்ற ஆடையில் வைத்திருப்பார்.

இன்றும் பல நேரங்களில் நாம் முடிவெடுக்கும் போது 'நாணயம் போட்டுப் பார்ப்போம்!', 'சீட்டுக்களில் எழுதிப் பார்ப்போம்'. ஆனால் இறைவன் தான் என்ன நினைக்கிறார் என்பதை நம் மனதிற்குள்ளேயே ஏதோ ஒரு வகையில் வெளிப்படுத்திவிடுகின்றார். நமக்குத் தேவையானதெல்லாம் தெளிவான உள்ளமும், சோர்ந்து போகாத மனமும்தான்.

ஏதாவது முடிவெடுக்கும்போது 'நாணயம் குலுக்கிப் போடவா?' என்று அடிக்கடிக் கேட்கும் என்னைப் பார்த்து என் நண்பர் ஒருவர் சொன்னார்: 'நாணயத்தை நம்பும் அளவிற்கு உன்னை நம்ப மாட்டாயா?'

இஸ்ரயேல் மக்களின் சீட்டு அவர்களுக்குப் போரில் வெற்றி தரவில்லை. அவர்களுக்கு வெற்றி தந்தது 'இறைவனின் உடனிருப்பே'.

1 comment:

  1. Anonymous11/22/2013

    நான் சாலக்குடி தியான இல்லத்திற்கு 4முறை சென்றுள்ளேன்.ஒவ்வொரு முறையும் என்னை ஒருவிஷயம் வெகுவாகப் பாதிததது.நாணயம் போட்டுப் பார்த்தல் etc etc...வோடு திருஷ்டி சுற்றிப்போடுவது பற்றியும் பேசுவார்கள தெய்வ சக்தியோ பேய் சக்தியோ ஏதோ ஒன்றுதான் நம்மை ஆட்கொள்ள. வேண்டும் என்றுஅன்று நான் கேட்ட விஷயம் அப்பழக்கம் இருந்த என்னை முற்றிலும் மாற்றி விட்டது.ஆம், நம்மையும் நம்மைச்சார்ந்த அனைவரையும் ஏன் இந்த பிரபஞ்சம் அனைத்தையுமே காபபது ''இறைவனின் உடனிருப்பே'' ஆம்,இதை ஆணித்தரமாக
    அனுபவித்து உணர்ந்தவள் நான்.இதை ஞாபகப்படுத்திய உங்களுக்கு நன்றி.

    ReplyDelete