அவள் அவரிடம் (இப்தாவிடம்), 'அப்பா, நீங்கள் ஆண்டவருக்கு வாக்குக் கொடுத்துவிட்டீர்களென்றால் உங்கள் வாக்கின்படியே எனக்குச் செய்யுங்கள். ஏனெனில், ஆண்டவர் உங்கள் எதிரிகளான உங்கள் எதிரிகளான அம்மோனியரை உங்களுக்காகப் பழிவாங்கிவிட்டார்' என்றாள். அவள் தந்தையிடம், 'என் விருப்பப்பத்தை நிறைவேற்றுங்கள். இரண்டு மாதங்கள் என்னைத் தனியாக விடுங்கள். நான் மலைகளில் சுற்றித்திரிந்து, எனது கன்னிமை குறித்து என் தோழியருடன் துக்கம் கொண்டாடுவேன்' என்றாள். அவர், 'சென்று வா!' என்று சொல்லி அவளை இரண்டு மாதங்களுக்கு அனுப்பி வைத்தார். (நீதித் தலைவர்கள் 11:36-38)
கிதியோனுக்கு அடுத்த பெரிய நீதித் தலைவர் இப்தா. அம்மோனியர்களுக்கு எதிரான போரில் இஸ்ரயேல் மக்களை விடுவிக்கின்றார் இப்தா. 'தான் போரில் வெற்றி பெற்றால் தன் வீட்டிலிருந்து முதலில் வெளியே வருவதை (ஆடோ, மாடோ, ஆளோ!) ஆண்டவருக்குப் எரிபலியாகக் கொடுக்கிறேன்' என ஆணையிட்டு வாக்களிக்கின்றார். போரிலும் வெற்றி பெற்று விடுகின்றார். வெற்றி பெற்று திரும்பும்போது அவரின் வாக்குறுதி பற்றி தெரிந்திராத அவரின் கன்னி மகள் ஆடிப் பாடிக்கொண்டு வருகின்றார். அவரைக் கண்டவுடன் தன் ஆடைகளைக் கிழித்துக்கொள்கிறார் (துக்கத்தின் அடையாளம்!) அவரின் தந்தை இப்தா. தான் ஆணையிட்டதை அவரிடம் கூற, அவரும் இரண்டு மாதங்களுக்குப் பின் தன்னைப் பலியிடலாம் என ஒத்துக் கொள்கின்றார்.
நீதித் தலைவர்களின் காலத்தில் இஸ்ரயேல் மக்கள் சமுதாயம் அறநெறியிலும், இறைபக்தியிலும் கீழே இறங்கிச் சென்றது என ஏற்கனவே கூறியிருந்தோம். தன் மகளையே பலி கொடுக்கத் துணிந்த இந்த நிகழ்வும், பெண் 'ஏன்? எதற்காக இப்படி வாக்கு கொடுத்தீர்கள்?' என்று கேட்க முடியாத நிலையும் இஸ்ரயேல் மக்களின் இறக்கத்தையே காட்டுகின்றன.
'கடவுளுக்கு நாம் இதைச் செய்கிறேன், அதைச் செய்கிறேன் என வாக்களிக்க வேண்டுமா?' 'என்னைக் காப்பாற்றுங்கள்! இந்த உலகைக் காப்பாற்றுங்கள்!' என தினமும் அவருக்கு நினைவுபடுத்திக் கொண்டேயிருக்க வேண்டுமா? 'இந்த உலகைப் படைத்த அவருக்கு அதைக் காப்பாற்றத் தெரியாதா?' என்று நிறைய கேள்விகளை இந்தப் பகுதிகளை எழுப்புகின்றது.
இன்று ஒன்றை மட்டும் சிந்திப்போம்: 'எனது கன்னிமை குறித்து துக்கம் கொண்டாடுவேன்!' என தன் தந்தையிடம் இரண்டு மாதங்கள் அனுமதி கேட்கின்றார் இப்தாவின் மகள். தொடர்ந்து விவிலியம் சொல்கிறது: 'அவள் தன் தோழியருடன் சென்று தன் கன்னிமை குறித்து மலைமீது துக்கம் கொண்டாடினாள்!' இதை நினைவுகூறும் பொருட்டு ஆண்டுதோறும் இஸ்ரயேல் மக்கள் நான்கு நாட்கள் துக்கம் கொண்டாடினர் எனவும் விவிலியம் பதிவு செய்கிறது.
'கன்னிமை'. யூத சமயத்திலிருந்து ஊற்றெடுத்த கிறிஸ்தவ சமயத்தில் 'கன்னிமை' குறித்த சிந்தனை முற்றிலும் மாறுபட்டதாகவே இருக்கின்றது. இப்தாவின் மகளுக்கு, 'தான் இறக்கப் போகிறோம்!' என்ற கவலையைவிட 'தான் கன்னியாக இறக்கப் போகிறோமே!' என்ற கவலைதான் அதிகமாக இருந்தது. 'கன்னிமை' யூத மதத்தில் பெரிய மதிப்பீடாகக் கருதப்படவில்லை. ஆகையால் தான் 'கற்பு' என்ற அர்ப்பண நிலையும் அதில் இல்லை. யூத மதக்குருக்கள் 'கன்னிமை' காப்பதில்லை. திருமணம் செய்து கொள்ளலாம். ஏனெனில் கன்னியாக இருப்பது பாவம்.
கிறிஸ்தவ மரபில் 'கற்பு', அதிலும் 'கன்னிமை' பெரிய மதிப்பீடாகக் கருதப்படுகிறது. இறைவனுக்குத் தங்களையே அர்ப்பணம் செய்யும் அருள்நிலை இனியவர்கள் 'கன்னிமை' காக்க வேண்டும் என்பது திருச்சபையின் பரிந்துரை. இந்தக் கன்னிமையை வாக்குறுதியாகவும் எடுக்கின்றனர். இந்த வாக்குறுதியை இன்னும் திருச்சட்ட அடிப்படையில் ஆய்ந்து பார்த்தால் துறவு நிலையில் இருப்பவர்கள்தாம் இதை வாக்குறுதி என எடுக்கின்றனர். மறைமாவட்ட குருக்கள் என அழைக்கப்படும் பங்குப் பணியில் இருக்கும் குருக்கள் இதை வாக்குறுதியாக (vow, the other two vows being poverty and obedience) எடுப்பதில்லை. துறவியருக்கு இது கட்டாயம். மற்ற அருட்பணியாளர்களுக்கு 'இது நல்லது' என பரிந்துரை (recommendation) செய்யப்படுகின்றது. அதற்காக மீறலாம் என்று எடுத்துக்கொள்ள முடியாது!
அருள்நிலையில் இருப்பவர்கள் தங்கள் இறுதி அர்ப்பணத்திற்கு முன் இரண்டு மாதங்கள் அல்லது ஒரு மாதம் தியானம் செய்வார்கள். இந்தத் தியானம் தொடங்கியதற்கு ஊற்று இப்தாவின் மகள்தான். இந்த இரண்டு மாதங்கள் இவர்களும் 'தங்கள் கன்னிமை குறித்து துக்கம் கொண்டாடுகிறார்கள்'. பின் தங்களையே கடவுளுக்குகந்த பலிப்பொருட்களாகப் படைக்கின்றனர்.
கற்பு என்றால் என்ன? கற்பு உடல் சார்ந்ததா? மனம் சார்ந்ததா? 'பிளவுபடாத அன்பே' கற்பு என்கிறது திருச்சபையின் சட்ட நூல். அன்பு பிளவுபட்டு விட்டால் அர்ப்பணம் பிளவுபட்டுவிட்டால் கற்பு நிலை தவறுகிறோம் என்கிறது.
ஆண் பெண்ணை அறியாமல் இருப்பதும், பெண் ஆணை அறியாமல் இருப்பதும் கற்பு என்பது இன்னும் நம் சிந்தனையில் இருக்கத்தான் செய்கிறது. இது யூத சிந்தனையிலும் இருக்கிறது. ஆகையால் தான் தலைமைக்குரு பலி செலுத்துவதற்கு முந்திய நாள் தூய்மையாக இருக்க வேண்டும் என அவர்களின் சட்ட நூல் சொல்லுகிறது. முந்திய நாள் இரவு அவர் தன் மனைவியோடு உறவு கொள்ளக் கூடாது எனவும், முந்திய நாள் இரவு அவர் விழித்தேயிருக்க வேண்டும் (ஏனெனில் இரவில் கனவில் கூட விந்து வெளியேறி அவர் தீட்டாகி விடலாம்) எனவும் சொல்கிறது. 'உடல் அளவில் நெருக்கம் இல்லாத நிலையே' தூய்மை, கன்னிமை அல்லது கற்பு என்பது இதன் வழியாகச் சொல்லப்படுகிறது. மற்றொரு பக்கம் உயிரின் அணுக்கள் எப்படி தீட்டாக மாற முடியும்? உயிரின் சக்தியான பெண் எப்படி தீட்டு எனச் சொல்ல முடியும்? என்ற கேள்விகளும் எழுப்பப்படுகின்றன.
ஒன்று மட்டும் நிச்சயம்: 'தூய்மையின் வழிதான் இறைவனைக் காணமுடியும்' என்பதை எல்லா மதங்களும் ஏற்றுக்கொள்கின்றன. 'உடல் சார்ந்த தூய்மையை' அதிகமாக முன்வைக்கும் மதங்கள் கற்பையும், கன்னிமையையும் மதிப்பீடுகளாகக் கொண்டாடுகின்றன. மற்ற மதங்களுக்கு 'உள்ளம் சார்ந்த தூய்மை' இருந்தால் போதும்.
எது எப்படி இருந்தாலும், இப்தாவின் மகள் இன்றும் கன்னிமைக்கான ஒரு உருவகமாகவே வைக்கப்படுகின்றார்.
This comment has been removed by the author.
ReplyDeleteஇன்றைய செய்தியில் பலவிஷயங்கள் புதிதாக இருந்தன.1அபிரகாம் தன் மகனைப் பலியியட்டதை விசுவாசத்தின் உச்சமாக நினைக்கும் நாம் லஇப்தா தன் மகளை ப்லியிடுவதைமட்டும் ஏன் இஸ்ரேல் மக்களின் இறக்கம் எனறு கூற வேண்டும்?2அருள்நிலையில் உள்ளவர்கள் தாங்களாகவே விரும்பி அதைஏற்பார்களானால்
ReplyDeleteஎதற்காக அர்ப்பணத்திற்கு முன் தங்களின் கன்னிமை குறித்து துக்கம கொண்டாட
வேண்டும்?3.அருள் நிலை இனியவர்கள் தங்களின் அர்ப்பணவாழ்வை முன்னிட்டு
இழந்த அனைத்தையும் இறைவன் ஈடு செய்ய வேண்டும் என்று ஜெபிக்கத்
தூண்டுகிறது.4தஙகளின் ஒவ்வொரு நாள் செய்தியும் விவிலியம் குறித்த
என்னுடைய தேக்க நிலையைச்சுட்டிக்காட்டி என்னை இன்னும் வளர்த்துக்கொள்ள உதவுகிறது.நீங்கள செய்யும் இந்த.மகத்தான சேவையை இறைவன் நிறைவாக ஆசீர்வதிக்கட்டும்.