Saturday, November 2, 2013

இன்று எனக்கு, நாளை உனக்கு

நவம்பர் மாதம் நம் முன்னோர்களை நினைவுகூறும் மாதம். 'என் முன்னோர்களே! நான் வாழ்வுப் பயணத்தில் ஓட உங்கள் இறகுகளைத் தாருங்கள்!' என்று அவர்களைப் பார்த்துக் கேட்டு, அவர்களின் கனவுகளை நனவுகளாக்க நம்மைத் தூண்டும் மாதம்.

இறப்பு நல்லதா? கெட்டதா?

சாலையோரத்தில் ஒரு கல்லறைத் தோட்டம். கல்லைறைத் தோட்ட கதவுநிலையில் ஒரு வாக்கியம்: 'இன்று எனக்கு, நாளை உனக்கு'. கல்லறை பேசுமா? கல்லறையில் இருப்பவர்கள்தாம் பேச முடியுமா? இந்த வாக்கியம் ஒரு எச்சரிக்கையா? அல்லது எதார்த்தமா?

இருதுருவ வாழ்க்கையில் வாழ்கின்ற நாம் ஒன்றைத் தேர்ந்துகொள்ளும்போது மற்றொன்றும் சேர்ந்தே வந்து விடுகிறது. பிறப்பு என்ற ஒன்றைத் தேர்ந்துகொண்;ட அனைவருக்கும் இறப்பு என்ற ஒன்று உண்டு. ரோஜாவை எடுத்தால் அத்தோடு முள்ளும் வரும். நாணயத்தின் ஒரு பக்கத்தை எடுத்தால் அத்தோடு மறுபக்கமும் வரத்தான் செய்யும். பகல் - இரவு, ஏற்றம் - இறக்கம், பிறப்பு - இறப்பு என்று வாழ்க்கை பயணம் அமைகிறது.

இறப்புக்குக் காரணம் நமது பாவம் என்கிறது மதங்கள். உடல் செல்களின் இறப்பு மனித இறப்பு என்கின்றது அறிவியல். என்ன காரணம் கேட்டாலும் மனித மனம் வாழ்க்கையைத்தான் விரும்புகிறது. மரணம் ஒரு அழையா விருந்தாளியாகத்தான் நம் நடுவீட்டிற்குள் நுழைகின்றான்.

வாழ்க்கை சாத்தியப்பட வேண்டுமென்றால் இறப்பு அவசியம். நாம் பேசுகின்ற உரையாடலில் ஒரு வார்த்தை இறந்தால்தான் மற்றொரு வார்த்தை பிறக்க முடியும், உரையாடல் தொடரும். நாம் நடக்கும்போது எடுத்து வைக்கின்ற முதல் அடி இறந்தால்தான் அடுத்த இடத்திற்கு நாம் நகர முடியும். நம் குழந்தைப் பருவம் இறந்தால்தான் வாலிபப் பருவத்திற்குள் நுழைய முடியும். நம் உடலிலும் ஒரு செல் இறந்தால்தான் அடுத்த செல் பிறக்க முடியும்.

மரணம் என்ற ஒன்று இல்லையென்றால் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். கண்ணீர் வடித்துக் கொண்டே பிறக்கின்றோம், பிறர் கண்ணீர் வடிக்க இறக்கின்றோம். கண்ணீருக்கும் கண்ணீருக்கும் இடையே நகரும் கண்ணீர்த்துளிகள்தாம் வாழ்க்கையென்றால், நாம் பிறவாமலே இறந்திருக்கலாமே என்று கூட கேள்வி எழலாம்.

இறப்பிற்குப் பின் உள்ள வாழ்க்கையைப் பற்றி பல நேரங்களில் அக்கறைப்படும் நாம் இறப்பிற்கு முன் உள்ள வாழ்க்கையை மறந்துவிடுகின்றோம்.

பல கல்லறைகளில் உள்ள வாசகங்களில் 'பிறந்தநாள் - இறந்தநாள்' என்று எழுதியிருப்பார்கள். பிறந்த நாளுக்கும், இறந்தநாளுக்கும் இடையே அவர் வாழ்ந்த வாழ்க்கை என்ன வெறும் 'வெற்றுக்கோடா'.
மரணமே, உனக்கு நன்றி!
வாழ்க்கையின் அர்த்தத்தை எங்களுக்கு உணர்த்தவதற்கு! கல்லறைக்குப் பின்னும் வாழ்க்கை என்ற கனவைத் தருவதற்கு! ஒவ்வொரு நொடியையும் இறுதி நொடியாக வாழச் செய்வதற்கு! மனித உறவுகளின் ஆழத்தை அர்த்தப்படுத்துவதற்கு! இந்த உலகின் உன்னதத்தை உயர்த்த உழைக்கச் செய்வதற்கு!

வாழ்க்கை நமக்கு இறப்பை தள்ளிப்போடாது. பின் ஏன் நாம் வாழ்க்கையைத் தள்ளிப்போட வேண்டும்? வாழ்க்கை என்ற சுரங்கத்தின் ஓர வெளிச்சம்தான் மரணம். பாரதி கேட்ட கேள்வியை நாம் மரணத்தை நோக்கி கேட்டால் நமது வாழ்விற்கு அர்த்தம் புரியும், பாதை தெரியும்:

'தேடிச் சோறுநிதந் தின்று, பல சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம் 
வாடித் துன்பமிகவுழன்று, பிறர் வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி, கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல 
வேடிக்கை மனிதரைப் போல, நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?'



No comments:

Post a Comment