Friday, November 8, 2013

நான் உம் கழுதையன்றோ?

உடனே ஆண்டவர் கழுதையின் வாயைத் திறந்தார். அது அவரிடம், 'நீர் மூன்று முறை இவ்வாறு என்னை அடிப்பதற்கு நான் உமக்கு என்ன செய்தேன்?' என்றது. பிலயாம் கழுதையிடம், 'நீதான் என்னை ஏளனம் செய்து கொண்டிருக்கிறாய். என் கையில் ஒரு வாள் மட்டும் இருந்தால் உன்னை இந்நேரம் கொன்றிருப்பேன்' என்றார். கழுதை பிலயாமிடம், 'நான் உம் கழுதையன்றோ? இன்றுவரை உம் வாழ்நாளெல்லாம் என் மீது ஏறி வந்துள்ளீரே! எப்போதாவது நான் இப்படி செய்து பழக்கமுண்டோ?' என்றது. அதற்கு அவர், 'இல்லை' என்றார். (எண்ணிக்கை 22:28-30)

விவிலியத்தில், குறிப்பாக பழைய ஏற்பாட்டில் பல இடங்களில் கழுதைகள் கதாநாயகன்களுக்கு உதவியாக வருகின்றன. இன்று நாம் காணும் நிகழ்வில் கழுதை ஒன்று கதாநாயகனாக வருகிறது. பழைய ஏற்பாட்டின் கழுதைகள் பற்றி ஒரு ஆய்வு செய்ய வேண்டும் என்பது என் ஆசைகளுள் ஒன்று. 

இன்றைய நிகழ்வின் பின்புலம் இதுதான்: இஸ்ராயேல் மக்கள் அதிக பலம் கொண்டவர்களாகவும், பணம் படைத்தவர்களாகவும் மாறுகின்றனர். இது பொறுக்காத மோவாபு நாட்டின் மன்னன் பாலாக்கு அவர்களைச் சபிப்பதற்காக பிலயாம் என்ற இறைவாக்கினரை அழைக்கின்றான். இஸ்ராயேல் மக்களைச் சபிக்க வேண்டாம் என பிலயாமின் கனவில் எச்சரிக்கிறார் யாவே இறைவன். ஆனால் அதைப் பொருட்படுத்தாத பிலயாம் தன் கழுதை மேல் ஏறி இஸ்ரயேல் மக்களைச் சபிக்கச் செல்கின்றார். அப்படிச் செல்லும் வழியில் ஆண்டவரின் தூதர் குறுக்கே நின்று கழுதைக்கு வழிவிட மறுக்கின்றார். கழுதை அடம்பிடிப்பதை நினைத்து அதை அடிக்கின்றார் பிலயாம். அப்பொழுது கழுதையின் வாய் திறக்கப்பட அது பேசுகின்றது.

முதலில் சபிப்பது என்றால் என்ன? ஆசி மொழி எந்த அளவிற்கு ஒருவரை முன்னேற்றுமோ, அந்த அளவிற்கு சபிப்பதும், சாபமும் ஒருவரை அவரின் வாழ்வில் பின்னடையச் செய்யும் என்பது இஸ்ரயேல் மற்றும் அதன் சுற்று நாடுகளின் மக்களின் நம்பிக்கை. சபித்தால் இஸ்ரயேல் மக்கள் அழிந்து போவார்கள் என நினைக்கின்றான் பாலாக்கு. ஊதினால் அணைந்து போவதற்கு இஸ்ரயேல் இனம் என்ன மெழுகுதிரியா? அது சூரியன். சுட்டெரித்துவிடும் என எச்சரிக்கின்றார் இறைவன். நாம் யாருக்கும் தெரியாமலும் கூட சாபம் விடக்கூடாது. இறைவன் நம்முடன் இருக்கின்றார் என்றால் நாம் எந்தச் சாபத்தையும் குறித்துப் பயப்படத் தேவையில்லை.

இரண்டாவதாக, கழுதைக்குத் தெரிந்தது இறைவாக்கினருக்குத் தெரியவில்லை. இறைவாக்கினரின் முக்கியப் பண்பு 'அவர் அனைத்தையும் அறிந்திருப்பதே!'. ஆனால் இங்கே இறைவாக்கினர் அறியாமையில் இருக்கின்றார். கழுதை அறிவோடு இருக்கின்றது. நம் வாழ்விலும் இந்தப் புரட்டிப்போடுதல் நடக்கின்றது. எல்லாம் தெரியும் என்று நாம் மட்டுமீறியிருக்கும்போது, நம் கண்களுக்குக் கீழே நடப்பதே நமக்குத் தெரியாமல் போய்விடுகிறது. யாரும் யாரையும் மட்டம் தட்ட வழியில்லை.

மூன்றாவதாக, 'இந்நேரம் வாள் இருந்தால்...' என்ற வார்த்தைகள் பிலயாம் கழுதையின்மேல் கொண்ட கோபத்தின் உக்கிரத்தைக் காட்டுகின்றது. தான் எதிர்பார்ப்பது போலவே தன் கழுதை நடக்க வேண்டும் என எதிர்பார்ப்பை வளர்க்கின்றார் பிலயாம். அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாததால் அதுவே அவரின் கோபமாக மாறுகின்றது. கோபத்தைத் தன்னைவிட சிறிய கழுதையிடம் காட்டுகிறார். இதுவே ஒரு யானையிடமோ, சிங்கத்திடமோ அவர் காட்டியிருக்க முடியுமா? நம்மைவிட சிறியவர்கள்மேல் தான் நம் கோபம் வேகமாகப் பாய்கிறது. 

நான்காவதாக, கழுதையின் சோகமும், இயலாமையும் கலந்த வார்த்தைகள்: 'எப்பவாவது நான் இப்படி பண்ணியிருக்கேனா?' 'என்னைப் புரிந்துகொண்டது இவ்வளவுதானா?' நம்மை அன்பு செய்பவர்கள் நம்மைப் புரிந்துகொள்ளாதபோது, அல்லது தவறாகப் புரிந்துகொள்ளும்போது நம் மனமும் இந்தக் கழுதையின் சோகத்தையும், இயலாமையையுமே வெளிப்படுத்துகின்றது.

'நான் உம் கழுதையன்றோ?'

1 comment:

  1. Anonymous11/08/2013

    புதிய ஏற்பாட்டுப் பகுதிகளை மட்டுமே படித்தும் கேட்டும் வந்த என் போன்றவர்களுக்கு பழைய ஏற்பாட்டின் பகுதிகளை தங்களுக்கே உரித்தான சுவையான, எளிமையான முறையில் பல துணுக்குகளுடன் சேர்த்து தாங்கள் படைக்கும் விதம் அருமை. பாராட்டுக்கள் படைப்பாளரே! பழைய ஏற்பாட்டுக் காலத்துக் கழுதை கூட அழகுதான்.

    ReplyDelete