Saturday, November 16, 2013

யோர்தான் நடுவே வறண்ட தரையில் நின்றனர்

யோசுவா மக்களிடம், 'உங்களைத் தூய்மையாக்கிக்கொள்ளுங்கள். நாளை ஆண்டவர் உங்களிடையே வியத்தகு செயல்கள் புரிவார்' என்றார் ... ... கீழே ஓடிய நீர் பாலைநிலக் கடலாகிய சாக்கடல் வரை ஓடிமறைந்தது. மக்களும் எரிகோவுக்கு நேர்எதிராகக் கடந்து சென்றனர். இஸ்ரயேலர் அனைவரும் கடந்து முடிக்கும் வரை, ஆண்டவரது உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிச் சென்ற குருக்கள் யோர்தான் நடுவே வறண்ட தரையில் நின்றனர். எல்லா இஸ்ரயேல் மக்களும் அவ்வறண்ட தரை வழியாக நடந்தனர். (யோசுவா 3:5,16-17)

இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறும்போது செங்கடலைப் பிளந்து அவர்களுக்குப் பாதை உண்டாக்கிய யாவே இறைவன், அவர்கள் கானான் நாட்டிற்குள் நுழையும்போது யோர்தான் ஆற்றைப் பிளந்து வழி உண்டாக்குகின்றார்.

புதிய ஏற்பாட்டில் இயேசுவின் பணி யோர்தான் ஆற்றிலேயே தொடங்குவதாக நற்செய்தியாளர்கள் எழுதுகின்றனர். எதற்காக இயேசு யோர்தானுக்குச் செல்ல வேண்டும்? இது ஒரு உருவகம். எப்படி பழைய ஏற்பாட்டில் யோர்தானுக்குப் பின் இஸ்ரயேல் மக்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டை உரிமையாக்கினார்களோ, அதுபோலவே, புதிய ஏற்பாட்டில் இயேசு மக்களை இறையரசு என்னும் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் அழைத்துச் செல்கின்றார். நம் அனைவருக்காகவும் அவர் ஒருவரே யோர்தானில் இறங்குகிறார்.

வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் நுழைய இரண்டு தகுதிகளைக் குறிப்பிடுகிறது இன்றைய பகுதி:

1. தூய்மை. ஆண்டவரின் வியத்தகு செயல்கள் நடைபெற வேண்டுமென்றால் தூய்மை அதற்கு அவசியம். தூய்மையான இடத்தில் தான் இறைவன் இருக்கின்றார். தூய்மை என்பது வெறும் புறத்தூய்மை அல்ல. மாறாக, உள்ளத்தின் தூய்மையையே அது குறிக்கின்றது. 

2. பிறரின் துணை. லேவியர்கள், அதாவது இஸ்ரயேலின் குருக்கள், இஸ்ரயேல் மக்கள் கால் நனையாமல் கடந்து செல்வதற்காகக் கால்கடுக்க நின்று தங்களையே தியாகம் செய்கிறார்கள். 'தனியாய் எவரும் சாதிப்பதில்லை' என்பதற்கு இந்நிகழ்வு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

நாம் தூய்மையாவோம். அந்தத் தூய்மை பிறர்நலனாய் வெளிப்படட்டும். அப்போது வாக்களிக்கப்பட்ட நாடு நமக்கும் சாத்தியமே!

1 comment:

  1. Anonymous11/17/2013

    நம் சுமையின் பாரம் நம்மை அழுத்தும்போது நம்மைச் சுற்றியுள்ளவர்களின் உதவியோடு அதை மேற்கொள்ள வேண்டிய நாம்,நாமும் இதையே அவர்கள் சோர்ந்த நேரங்களில் அவர்களுக்குச் செய்தால் இந்த பூமியே சொர்க்கமாகும் என்று
    சொல்லாமல் சொல்லிய ஆசிரியருக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete