Monday, November 11, 2013

ஆண்டவரை மறந்துவிடாதபடி கவனமாய் இரு!

... நீ கட்டி எழுப்பாத, பரந்த வசதியான நகர்களையும், நீ நிரப்பாத எல்லாச் செல்வங்களால் நிறைந்த வீடுகளையும், நீ வெட்டாத பாறைக் கிணறுகளையும், நீ நடாத திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவத் தோப்புகளையும் அவர் உனக்குக் கொடுக்கும் போதும், நீ உண்டு நிறைவு கொள்ளும்போதும், அடிமைத்தன வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியே கூட்டி வந்த ஆண்டவரை மறந்துவிடாதபடி கவனமாய் இரு. (இணைச்சட்டம் 6:10-12).

இயேசுவின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று இதுதான். தான் எருசலேமிற்குள் நுழைய வேண்டிய நேரம் வந்ததும் தன் சீடர்களை அனுப்பி 'கழுதையை' அவிழ்த்துக்கொண்டு வரச் சொல்கின்றார். எங்கோ கட்டியிருக்கின்ற ஒரு கழுதையின்மேல் இயேசு எப்படி உரிமை கொண்டாடினார்? என அடிக்கடி நினைத்திருக்கிறேன். அதற்குக் காரணம் என்ன தெரியுமா? தன் தந்தையின் பராமரிப்புச் செயல்மேல் இருந்த நம்பிக்கை தான். தான் எருசலேமிற்குள் நுழைய வேண்டுமென்றால் அவர் ஒரு கழுதையைத் தயாராக வைத்திருப்பார் என நம்புகின்றார். 

குருத்துவத்தின் இரண்டாம் மகிழ்ச்சி என்று நான் நினைப்பது இன்றைய இணைச்சட்டப் பகுதிதான். ஒவ்வொரு முறை நான் புதிய பங்கிற்கு மாற்றலாகிச் செல்லும்போதும் (எல்லாக் குருக்களுக்கும்!) எனக்கு நடப்பது இதுதான்: 'நான் கட்டியெழுப்பாத வீடு ஒன்றில் குடியேறுவேன். அந்த நகரமே பரந்து விரிந்து இருக்கும். நான் வாங்காத கட்டிலில் உறங்குவேன். நான் வாங்கி வைத்திராத shower-ல் குளிப்பேன். நான் முன்பின் சந்திக்காத ஒருவர் எனக்கு உணவு சமைத்துக் கொண்டிருப்பார். எப்போதுமே பார்த்திராத ஒருவர் காஃபி வாங்கி வருவார். எல்லாமே எனக்கெனச் செய்தது போல இருக்கும். 'அண்ணன், தம்பி, அக்கா, அம்மா' என உறவுகள் தொற்றிக் கொள்ளும். எங்கே சென்றாலும் புன்சிரிப்பு கண்டிப்பாகக் கிடைக்கும். நிறைய பேர் நம்மேல் உரிமை கொண்டாடுவார்கள். 

அடுத்த நாளிலிருந்து அந்த இடம் ஏதோ பல வருடங்கள் குடியிருந்த இடம் போலப் பரிச்சயமாகி விடும். 

இஸ்ரயேல் மக்களுக்காக நகர்களைக் கட்டி, கிணறுகளை வெட்டி, ஒலிவ மற்றும் திராட்சைத் தோட்டங்களை நட்டுக் காத்திருக்கின்றார் இறைவன்.

நாம் செய்ய வேண்டியதெல்லாம் இருப்பதை இருப்பதாக ஏற்றுக்கொண்டு அங்கே குடியேறுவதுதான்!

மற்றொரு விஷயம்...

'ஆண்டவரை மறந்துவிடாதபடி கவனமாய் இரு!'

1 comment:

  1. Anonymous11/11/2013

    இன்றையப் பகுதி சுவாரஸயமாக இருந்தது.எங்களைப் போன்ற குடும்பஸ்தர்கள் ஒருஇடத்திற்கு குடி பெயரும்போது மேற்கொள்ளும் சிரமங்கள் வார்த்தைகளில் வடிக்க இயலாதவை.ஆனால் நீங்கள் பேறு பெற்றவர்கள்.உங்களுக்காக நகர்களைக்கட்டி கிணறுகளை வெட்டி தோட்டங்களை நட்டுக் காத்திருக்கிறார் இறைவன் என்றால் இரு நீங்கள் அவருடைய ராஜ்ஜியத்தைக் கட்டி எழுப்புவதால்தான். விண்ணரசில் நீங்கள் குடியேறும் போது எங்களைப் போன்றவர்களுக்காகவும் பரிந்து பேசுவீர்களா? ஆண்டவரை மறந்து விடாதபடி என்றென்றும் அவர் நினைவில் வாழுவோம்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete