Sunday, October 30, 2022

கைம்மாறு

இன்றைய (31 அக்டோபர் 2022) நற்செய்தி (லூக் 14:12-14)

கைம்மாறு

இயேசு இன்னும் விருந்து நடக்கும் இடத்தில்தான் இருக்கிறார். இதற்கு முந்தைய நற்செய்திப் பகுதியில் (லூக் 14:1,7-11) விருந்தினர்களிடம் பேசிய இயேசு, இன்றைய நற்செய்திப் பகுதியில் விருந்துக்கு அழைத்தவரிடம் பேசுகின்றார். இன்றைய விருந்துகள் தங்களின் பொருளை இழந்துகொண்டே வருகின்றன என்பது கண்கூடு. 'என்னால் எவ்வளவு முடியும் பார்!' என்று மற்றவரைக் கூப்பிட்டுக் காட்டுவதாகவும், விருந்திற்கு வருபவர்களும், 'என்னிடமும் நிறைய உள்ளது' என்று காட்டுவது போலவும் இருக்கிறது. வருகின்ற விருந்தினர்களுக்கு விருந்து வைத்து அனுப்புவதோடு அல்லாமல், இப்போது 'ரிட்டர்ன்' கிஃப்ட் என்ற ஒன்றும் பிரசித்தியாக உள்ளது. அதாவது, வருகின்ற விருந்தினர்களின் பிரசன்னத்தையும், அவர்கள் கொண்டுவரும் அன்பளிப்புக்களையும் திரும்பச் செலுத்தும்விதமாக இப்போது ரிட்டர்ன் கிஃப்ட் கொடுக்கிறோம். இதன் பொருள் என்ன? 'நானும் உனக்குக் கடன் பட்டவர் அல்லர். நீயும் எனக்குக் கடன் பட்டவர் அல்லர். நீ கொடுத்ததை நான் உனக்கு கை மாற்றிவிட்டேன்' என்பதுதான். இவ்வாறாக, ஒருவர் கொடுத்ததை நாம் நம் கைகளால் வாங்கி, அதே கைகளில் வேறொன்றைக் கொடுத்து விடுகிறோம். இதுதான் கைம்மாறு.

யாரையெல்லாம் விருந்துக்கு அழைக்கக்கூடாது, விருந்துக்கு அழைக்க வேண்டும் என்று சொல்கின்ற இயேசு, 'நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றவரையும் அழையும். அப்போது நீர் பேறுபெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்கு கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை' என்கிறார். இதை ஒருவேளை ஏழையோ, அநாதையோ, கால் ஊனமுற்றவரோ, அல்லது பார்வையற்றவரோ வாசித்தால் அல்லது கேட்டால் அவருடைய மனம் எப்படி பதைபதைக்கும்? ஏன் அவர்களிடம் கைம்மாறு செய்ய ஒன்றுமே இல்லையா? பொருளால் செய்வதுதான் கைம்மாறா? அன்பால், உடனிருப்பால் செய்வது கைம்மாறு ஆகாதா? இன்றைய நாளில் கால் ஊனமுற்றவர் அல்லது பார்வையற்றவர் செல்வத்தில் உயர்ந்த நிலையில் இல்லையா? 

நிற்க.

ஆனால், இயேசுவின் காலத்தில் நிலை அப்படி அல்ல. ஏழைகளும், உடல் ஊனமுற்றவர்களும், அநாதைகளும், கைம்பெண்களும் சமூகத்தின் சாபங்களாகக் கருதப்பட்டனர். இன்றைய நம் அரசியல் சூழல்கூட, ஏழ்மையைக் களைவதற்குப் பதிலாக, ஏழையரையே ஒட்டுமொத்தமாகக் களைய மெனக்கெடுவதுபோலத்தான் இருக்கிறது.

இயேசுவின் சமகாலத்தில் விருந்தோம்பல் என்பது ஒருவரின் சமூக அந்தஸ்தை மற்றவர்களுக்குக் காட்டி பெருமை கொள்ளவும், அல்லது மற்றவர்களைவிட தான் உயர்ந்தவர் என்று பெருமிதம் கொள்ளவும், அல்லது இல்லாதவர்களை அவமானப்படுத்தும் உள்நோக்கம் கொண்டதாகவும் இருந்தது. மேலும், விருந்தோம்பல் செய்பவர் கைம்மாறு கருதியே விருந்தோம்பல் செய்தார். இந்த நிலையில் விருந்தோம்பல் பற்றிப் பேசுகிற இயேசு ஏழைகளால் விருந்தோம்பல் செய்ய முடியாது என்று சொன்னாலும், கடவுள் அவர்கள் சார்பாக விருந்தோம்பல் செய்வார் என்று சொல்வதன் வழியாக அவர்கள் கடவுளின் கண்மணிகள் என்றும், கடவுளின் பார்வையில் உயர்ந்தவர்கள் என்றும் சொல்லி அவர்களுடைய சமூக நிலையை உயர்த்துகின்றார்.

இன்றைய நற்செய்தி நமக்குச் சொல்லும் பாடம் எவை?

அ. நான் அனைத்திலும் கைம்மாறு செய்ய நினைப்பது தவறு. ஏனெனில், கடவுளிடமிருந்து நான் பெற்ற கொடைகளுக்கு நான் ஒருபோதும் கைம்மாறு செய்ய முடியாது. அதுபோல, தாயின் அன்பு, தந்தையின் தியாகம், உடன்பிறப்புக்களின் உடனிருப்பு, தோழர்களின் தோழமை போன்றவற்றிற்கு நான் ஒருபோதும் கைம்மாறு செய்யவே முடியாது. கைம்மாறு செய்வதைப் பற்றி நான் யோசிக்கும்போது கணக்குப் பார்ப்பவனாக மாறிவிடுகிறேன். இன்று என் வாழ்வில் கடவுள் இனியவர்கள் பலர் வழியாக ஆற்றிய செயல்களை நாம் பட்டியல் இடுவோமா? கைம்மாறு செய்ய முடியாத இந்நிலையில் அவர்களை நான் கடவுளின் கொடையாக ஏற்றுக்கொள்கிறேனா?

ஆ. விருந்து கொடுப்பவரை மனிதர் நிலையிலிருந்து கடவுள் நிலைக்கு உயர்த்துகிறார் இயேசு. திரும்ப விருந்து கொடுக்க முடிபவர்களை நாம் விருந்துக்கு அழைக்கும்போது நாம் மனிதர் நிலையில் இருக்கிறோம்.திரும்ப விருந்து கொடுக்க முடியாதவர்களை நாம் அழைக்கும்போது நாம் கடவுள் நிலையில் இருக்கிறோம்.மேலும், கடவுள் செய்யும் செயல்களுக்கு நாம் கைம்மாறு செய்ய முடியாது. அதுபோல, அடுத்தவர்கள் நமக்கு கைம்மாறு செய்ய முடியாத நிலையில் நாமும் கடவுளாகத்தான் இருக்கிறோம். பிறரைப் பார்க்கும் என்னுடைய பார்வை எப்படி இருக்கிறது? ஒருவரின் அடையாளங்களைக் கடந்து என்னால் பார்க்க முடிகிறதா? நான் பார்க்கும் ஒருவரில் என்னுடைய வலுவின்மையையும் நொறுங்கிநிலையையும் நான் அனுபவிக்க முடிகிறதா?

இ. இன்றைய முதல் வாசகத்தில் (பிலி 2:1-4) பவுலடியாரும், 'நீங்கள் யாவரும் உங்களைச் சார்ந்தவற்றில் அல்ல, பிறரைச் சார்ந்தவற்றிலேயே அக்கறை கொள்ள வேண்டும்' என்கிறார். தன்மையம் கைம்மாறு கருதும். பிறர்மையம் கருதாது.


No comments:

Post a Comment