இன்றைய (28 டிசம்பர் 2020) திருநாள்
மாசில்லாக் குழந்தைகள்
இயேசு பிறந்த காலத்தில், பெத்லகேமில் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஏறக்குறைய 20 முதல் 50 வரை இருந்திருக்கலாம். குழந்தைகள் படுகொலை பற்றிய குறிப்பு மத்தேயு நற்செய்தி தவிர, வேறு எந்த நற்செய்திப் பகுதியிலும், உரோமை அல்லது யூத வரலாற்றுப் பதிவேடுகளிலும் இல்லை. பெரிய ஏரோது தன் ஆட்சிப் பீடத்தைத் தக்கவைப்பதற்காக தன் பெற்றோர்களையும் தன் இரண்டு மகன்களையும் கொன்றவர். மேலும், தான் இறக்கும் நேரத்தில் தனது அமைச்சரவையில் உள்ள அனைத்து மேன்மக்களையும் கொன்றுவிடுமாறும் ஆள்களுக்கு முன்பணம் கொடுத்துவைத்திருந்தார். தானே அரியணைக்கு உரியவர். அரியணை தனக்கே உரியது என்ற எண்ணத்தில் வாழ்ந்தவரின் மனத்தில் உள்ள வன்மத்தை வைத்துப் பார்க்கும்போது இந்த நிகழ்வு ஒரு வரலாற்று நிகழ்வாக இருக்கிறது என்பதில் ஐயமில்லை.
இந்த நற்செய்திப் பாடத்தை ஒருமுறை நான் குழந்தைகளுக்கு மறைக்கல்வி வகுப்பில் நடத்திக்கொண்டிருந்தேன். அப்போது ஓர் இளவல், 'ஏன் ஃபாதர் கடவுள் மற்றக் குழந்தைகளையும் காப்பாற்றவில்லை?' என்று கேட்டார். எல்லாத் தந்தையர்களின் கனவுகளிலும் தூதர் வந்து எச்சரித்திருக்கலாமே? அல்லது பெரிய ஏரோதுவைக் கடவுள் கொன்றிருக்கலாமே? ஒரு குழந்தை காப்பாற்றப்படுவதற்காக மற்றக் குழந்தைகள் கொல்லப்பட வேண்டுமா? இலக்கு சரியானது என்பதற்காக, எந்தவொரு வழியையும் பயன்படுத்த இயலுமா? அந்தக் குழந்தையின் கேள்விகளில் பிறக்கும் கேள்விகள்தாம் இவை.
நிகழ்வின் சோகம் நம் முகங்களையும் நிறையவே அப்பிக்கொள்கிறது.
இந்த நிகழ்வின் சோகத்தை மத்தேயு நற்செய்தியாளர் பாபிலோனிய நாடுகடத்தல் நிகழ்வோடு ஒப்பிடுகின்றார்.
'ராமாவிலே ஒரு குரல் கேட்கிறது. ஒரே புலம்பலும் பேரழுகையுமாய் இருக்கிறது. இராகேல் தன் குழந்தைகளுக்காக அழுதுகொண்டிருக்கிறார். ஆறுதல் பெற அவர் மறுக்கிறார். ஏனெனில் அவர் குழந்தைகள் அவரோடு இல்லை' என்னும் எரேமியா இறைவாக்கினர் வார்த்தைகளை இங்கே மேற்கோள் காட்டுகின்றார். 'ராமா' என்பது இஸ்ரயேல் நாட்டின் எல்லைப் பகுதி. நெபுகத்னேசர் அரசர் யூதா மக்களை பாபிலோனுக்கு நாடு கடத்திச் செல்லும்போது, அந்த இடத்தில் அனைவரையும் கூட்டிச் சேர்த்து, அங்கிருந்து அவர்களை சங்கிலிகளால் பிணைத்து இழுத்துச் சென்றார். அந்த இடத்தில்தான் யாக்கோபின் இனிய இல்லாளாகிய இராகேலின் கல்லறை இருந்தது. நாடுகடத்தப்பட்ட மக்களின் அழுகுரல் கேட்டு, துயில் எழுகிற இராகேல் அழுகிறாள். அவளுடைய குழந்தைகள் நாடுகடத்தப்படுவதை அவளால் சகித்துக்கொள்ள முடியவில்லை.
என்ன ஒரு சோகம்!
இறந்தவளும் எழுந்து அமர்ந்து அழும் அளவுக்குச் சோகம்.
இருப்பவர்கள் நாம் அழலாம்! நம் தனிமையில், பிரச்சினையில், சோகத்தில், சோர்வில்! பாவம்! இறந்தவள் ஏன் எழ வேண்டும்?
மாசில்லாக் குழந்தைகள் கொண்டாடப்படுவதை விட, வன்முறையாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே நம் விருப்பமாக இருக்கிறது. மாசில்லாக் குழந்தைகள் இயேசுவுக்காக இறந்து சான்று பகர்ந்தார்கள் என்று ஆன்மிக நிலையில் புரிந்துகொள்ள என் மனம் ஒப்பவில்லை.
ஒரு குழந்தையை நள்ளிரவில் அதன் பெற்றோர் தூக்கிக் கொண்டு ஓட வேண்டிய நிலைக்கு அன்றைய அரசு எந்திரத்தின் அதிகார வெறி இருந்திருக்கிறது.
ஓர் அரசன் தன் கோபத்தை குழந்தைகள்மேலும் திருப்பலாம் என்ற அளவுக்கு அவன் உணர்ச்சிகளால் உந்தப்பட்டவனாக இருக்கிறான்.
அதிகாரத்தின் முன்னால் அதிகாரமின்மை துன்புறுகிறது.
வலிமையின் முன்னால் வலுவின்மை மரித்துப் போகிறது.
மாசில்லாக் குழந்தைகள் போல இன்றும் பலர் துன்புறுகிறார்கள் என்று சொல்லி, துன்பத்திற்கு மாட்சி உண்டு என்று ஆறுதல் தருவது தவறு.
வலுவற்றவர்களை வாழ வைக்காத வலிமையால் பயன் ஏது?
சாலையில் அவசரமாகச் சென்று கொண்டிருந்த ஒரு நபரை மறிக்கும் காவல்துறை என்ற அரசு எந்திரம், 'ஹெல்மெட் அணியவில்லை' என்று சொல்லி அவன் தன் குழந்தையின் மருத்துவச் செலவுக்கு வைத்திருந்த 100 ரூபாயைப் பறித்துக்கொள்கிறது. காவல்துறை என்ற ஏரோதின் முன் அந்த நபரும் மாசற்ற குழந்தையே.
இது ஓர் எடுத்துக்காட்டு மட்டுமே.
இன்றும் பல ஏரோதுக்கள் பல நிலைகளில் நம் பச்சிளம் குழந்தைகளைக் கொல்ல நம் இல்லங்களுக்கு வருகின்றனர்.
இன்றும் இராகேல் அழுகிறாள். தன் கல்லறையிலிருந்து!
நாம் அழலாம்! நம் தனிமையில், பிரச்சினையில், சோகத்தில், சோர்வில்!
ReplyDeleteஅதிகாரத்தின் முன்னால் அதிகாரமின்மை துன்புறுகிறது.
வலிமையின் முன்னால் வலுவின்மை மரித்துப் போகிறது.
வலுவற்றவர்களை வாழ வைக்காத வலிமையால் பயன் ஏது?
இன்றும் பல ஏரோதுக்கள் பல நிலைகளில் நம் பச்சிளம் குழந்தைகளைக் கொல்ல நம் இல்லங்களுக்கு வருகின்றனர்.
இன்றும் இராகேல் அழுகிறாள். தன் கல்லறையிலிருந்து!
Father,
You have said the fact & effect
& the most important factor,rectification is turned towards each reader...
I hope positively.,
சோகம்! மனத்தை அப்பும் சோகம்! மாசில்லாக் குழந்தைகளைக் கொண்டாட நினைக்கும் முன்னரே அதன் பின்னேயுள்ள சோகம் தான் நம்மில் மேலோங்கி நிற்பதை உணரமுடிகிறது.
ReplyDeleteஉண்மைதான்.... தந்தையிடம் இளவல் கேட்ட கேள்வியின் பின்னே நியாயம் இல்லாமல் இல்லை. ஒரு குழந்தை காப்பாற்றப்பட வேண்டுமென்பதற்காக பல குழந்தைகள் கொல்லப்பட வேண்டுமா? தந்தையே அடுத்த வரியில் பதிலையும் தருகிறார்....இலக்கு சரியானதென்றல் எந்த வழியையும் பயன்படுத்தலாம்.ஆம்!
“ The end justifies the means” என்று தான் நினைத்திருக்க வேண்டும் ஏரோது. ஆனால்அந்த இலக்கு எதற்கு? யாருக்கு? விடைதான்.....” மாசில்லாக் குழந்தைகள்.”
இறந்தவளைக் கூடத் துயில் எழுந்து அழவைக்கும் அளவிற்கு சோகம்!
அதிகாரமும்...வலிமையும் தவறாகப் பயன்படுத்தப்படும் வரையில் இங்கே மாசில்லாக்குழந்தைகளும் உருவாக்கப்பட்டுக்கொண்டு தான் இருப்பார்கள்...என்பது தந்தையின் கருத்து மட்டுமல்ல..நம்முடையதும்தான்!
இன்று நம் இல்லங்களுக்கு ஏரோதுகள் வருவதைத் தவிர்ப்போம்!
கல்லறையிலிருந்து இராக்கேல் அழுவதையும் சேர்த்தேதான்!!
வாழவேண்டிய குழந்தைகளை “ மாசில்லாக் குழந்தைகளாக்கும் நம் அதிகார வர்க்கங்கள் அனைத்துமே ஏரோதின் வழிவந்தவர்களே எனும் உண்மையைப் புரியவைத்த தந்தைக்கு நன்றிகள்!!!
Good Reflection Yesu
ReplyDeleteஆமென்!
ReplyDelete