Wednesday, December 2, 2020

பெரிய தகப்பன்

இன்றைய (3 டிசம்பர் 2020) திருநாள்

பெரிய தகப்பன்

நம் தாய்த் திருநாட்டில் கிறிஸ்தவத்தைப் பதித்தவர்களில் முக்கியமானவராக் கருதப்படுபவர்களுள் ஒருவர் புனித பிரான்சிஸ் சவேரியார். தூத்துக்குடி மற்றும் கோட்டாறு கடற்கரைப் பகுதிகளில் தன் கால்களைப் பதித்து, அம்மக்களால் 'பெரிய தகப்பன்' என அன்போடு அழைக்கப்படும் இப்புனிதர் நம் வாழ்வுக்கும், நம் நற்செய்திப் பணிக்கும் தரும் 12 பாடங்களை இன்றைய நாளில் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

1. மாற்றமும் திரும்பாத திடமும்

பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த பிரான்சிஸ் சவேரியார், தன் எழுத்து, புத்தகம், கரும்பலகை, மாணவர் சந்திப்பு, ஆய்வுத்தாள் என்று மும்முரமாக இருந்தபோது, புனித இஞ்ஞாசியார் சுட்டிக்காட்டிய விவிலிய வார்த்தைகளை - 'ஒருவர் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் தன் வாழ்வை (ஆன்மாவை) இழந்துவிட்டால் என்ன பயன்!' - கேட்டவுடன், தன் வாழ்க்கைப் பாதையை மாற்றிக்கொண்டார். மாற்றியது மட்டுமல்ல, அந்தப் பாதையிலிருந்து ஒரு நொடியும் திரும்பவில்லை. மாற வேண்டியது மட்டுமல்ல, மாறியபின் திடமாக இருப்பதும் முக்கியமானது எனக் கற்றுத் தருகிறார் நம் புனிதர்.

2. நலம் தருதல்

நம் புனிதர் தன் பணிவாழ்வில் பல வல்ல செயல்களை நடத்தியிருப்பதாக - குறிப்பாக, நலம் நல்கியதாக - நாம் பல இடங்களில் வாசித்திருக்கின்றோம். புனித அருளானந்தரும் கூட, அவருடைய அன்னை புனித சவேரியாரிடம் மன்றாடியதால்தான் உடல்நலம் பெற்றதாக வரலாற்றில் வாசிக்கின்றோம். அவருடைய நலம் தரும் செயல்கள் அவருடைய நற்செய்திப் பணிக்கான உறுதியளிப்புச் சான்றாக அமைந்தன. தன்னிலே நலமாக இருக்கும் ஒருவர்தான் பிறருக்கு நலம் தர முடியும். இன்று, நாம் உடல், உள்ளம், ஆன்மா எனப் பல நிலைகளில் காயம் பட்டிருக்கலாம். ஒவ்வொரு காயமும் ஒரு பிளவு. அந்தப் பிளவின் வழியே நம் ஆற்றல் அன்றாடம் வெளியேறி வீணாகிறது. பிளவுகள் குறைந்து நலம் அடைந்தால் நலம் தருதல் நமக்கும் சாத்தியமே.

3. ஆன்மீகப் பயிற்சிகள்

நம் உடல்நலனுக்கு உடற்பயிற்சி பயன்தருவது போல, ஆன்மீக வாழ்வுக்கு ஆன்மீகப் பயிற்சிகள் பயன்தருவதோடு அவசியமாகின்றன. பயிற்சி தரப்படும் எதுவும் பலம் பெறுகிறது. புனித சவேரியார் தன் மனமாற்றத்தில் உறுதியாக இருக்கக் காரணம் அவர் தன்னையே அன்றாடம் ஆன்மீகத்தில் புதுப்பித்துக் கொண்டதுதான். இன்று நாம் மேற்கொள்ளும் ஆன்மீகப் பயிற்சிகள் எவை?

4. கீழ்ப்படிதல்

கீழ்ப்படிதலில் நம் கட்டின்மை (சுதந்திரம்) பாதிக்கபடுவதாக பல அருள்பணியாளர்கள் சொல்லக் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால், கீழ்ப்படிதலில்தான் முழுமையான கட்டின்மை (சுதந்திரம்) உள்ளது என்பதற்கு புனித சவேரியாரின் வாழ்வு நல்ல எடுத்துக்காட்டு. கடவுளுக்கும், திருஅவைக்கும், திருத்தந்தைக்கும், தன் சபையின் தலைவர் இனிகோவுக்கும் கீழ்ப்படிதலை வழங்கிய நம் புனிதர், கீழ்ப்படிதலே தூய்மை வாழ்வுக்கான அழைப்பின் முதற்படி என உணர்த்துகின்றார். என் விருப்பத்தை இறைவனின் விருப்பத்திற்குக் கையளிப்பது எனக்கு எளிதாக இருக்கிறதா? 

5. ஏழ்மையின்மேல் காதல்

நம்மவர்கள் வெளி நாடுகளில் சென்று பணி செய்வது கடினம் அல்ல. தட்பவெப்ப நிலை தவிர மற்ற அனைத்தும் மேலை நாடுகளில் மிகவும் சிறப்பாக இருக்கும். மோசமான தட்பவெப்ப நிலையை எதிர்கொள்வதும் அங்கே எளிது. ஆனால், அங்கிருப்பவர்கள் இங்கு வந்து பணி செய்வது கடினம். அதிக வெப்பம், காரம் நிறை உணவு, புரியாத மொழிகளும் கலாச்சாரங்களும், மோசமான வாழிடம், பாதுகாப்பற்ற தண்ணீர், கழிப்பிட வசதியின்மை, மருத்துவத்தில் பின்தங்கிய நிலை, மின்சாரம் மற்றும் சாலை வசதிகள் இல்லாமை, மக்களை பிரிவுபடுத்திய சாதியம், மக்களின் மூட நம்பிக்கைகள் என எவ்வளவோ இடர்பாடுகள் இருந்தாலும், தன் ஏழ்மையால் நம் மண்ணைத் தழுவிக்கொண்டார். நம் நாட்டின் ஏழையருள் ஒருவராகத் தன்னை இணைத்துக்கொண்டார் நம் புனிதர். இன்று நாம் ஏழ்மையை எப்படித் தழுவிக்கொள்கிறோம்?

6. மக்கள்மேல் அன்பு

மக்கள்மேல் கொண்ட அன்பினால் புனித சவேரியார் மக்களின் குறைகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டார். நம் புனிதர், தன் சபைத் தலைவர் இனிகோவுக்கு எழுதிய கடிதங்கள் நம் மக்களைப் பற்றி அறிந்துகொள்ளவும் உதவுகின்றன. நம் தாய்நாட்டு மக்களின் அறியாமை மற்றும் இயலாமையை அவர் குறையென்று ஒருபோதும் கருதவில்லை. அவற்றைப் பற்றி தன் தலைவரிடம் முறையிடவும் இல்லை. நம் மக்களைத் தீர்ப்பிடாமல் அன்பு செய்தவர் இவர். ஏனெனில், 'அன்பு அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும்' என்பதை இவர் உணர்ந்திருந்தார்.

7. திருத்தூதுப்பணி படைப்பாற்றல்

இன்று நம் கிறிஸ்தவம் தக்கவைக்கப்படுகிறதே அன்றி விரிவுபடுத்தப்படுவதில்லை. நாம் நம் பாதுகாப்பு வளையங்களான நிறுவனங்கள், ஆலயங்கள், வளாகங்களுக்குள் நம்மையே சுருக்கிவிட்டோம். நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குறிப்பிடுவதுபோல, 'காணாமல் போன ஆடுகளைத் தேடிச் செல்லாமல், இருக்கின்ற ஆடுகளுக்கு முடிவெட்டிக் கொண்டிருக்கிறோம்.' புனித சவேரியார் ஒரு நல்ல பேராசிரியராக இருந்ததால், மறைக்கல்வி கற்றலை எளிதாக்குகின்றார். பாடல்கள், சுலோகங்கள், பயிற்சிகள் வழியாக மறைக்கல்வி கற்றுத்தந்தார். இன்று நம் படைப்பாற்றலைப் பயன்படுத்தி திருத்தூதுப் பணி வழிமுறைகளை உருவாக்குகிறோமா?

8. திருமுழுக்கு

நாளின் இறுதியில் தன் கையைத் தூக்க முடியாத அளவுக்கு வலி ஏற்படும் அளவுக்கு புனித சவேரியார் திருமுழுக்கு கொடுத்ததாக நாம் அவரது வாழ்க்கை வரலாற்றில் வாசிக்கின்றோம். அந்தக் காலத்தில், அதிகமான திருமுழுக்கு அதிகமான கிறிஸ்தவர்கள்ளூ அதிகமான கிறிஸ்தவர்கள், அதிகமான கிறிஸ்தவம் என்ற புரிதலே இருந்தது. வெறும் திருமுழுக்கு மட்டும் நம்மைக் கிறிஸ்தவர்கள் ஆக்கிவிடுமா? எனப் பலர் விமர்சிப்பதுண்டு. ஆக்கிவிடாதுதான்! ஆனால், அது ஒரு நல்ல தொடக்கம் என்பதை அறிந்திருந்தார் நம் புனிதர்.

9. பணிப் பகிர்வு

தானே ஒரு இடத்தில் தங்கி தன் பணியைச் சுருக்கிக்கொள்ளவில்லை புனித சவேரியார். தன் வாழ்வின் குறுகிய தன்மையை உணர்ந்த ஞானியாக அவர் இருந்ததால், தான் தன் திருஅவையின் தலைவராக இருப்பதற்குப் பதிலாக, அந்தந்த ஊரில் தலைவர்களை உருவாக்கினார். இது நாம் கற்க வேண்டிய பெரிய மேய்ப்புப் பணிப் பாடம். நம் பங்குகள் இன்னும் அருள்பணியாளர்களை மையப்படுத்தியே இயங்குகின்றன. மேலும், அருள்பணியாளர்கள் பல நேரங்களில் தலைவர்களாக இருக்கவே விரும்புகின்றனரே, தலைவர்களை உருவாக்கத் தயங்குகிறார்கள். தனக்கு எதுவும் நிலையல்ல என்று நினைத்த நம் புனிதர், அனைவரையும் நிரந்தரத்திற்குத் தயாரித்தார்.

10. பண்பாட்டுமயமாக்கல்

நம் திருஅவையின் இரண்டாம் வத்திக்கான் சங்கம், பண்பாட்டுமயமாக்கல் அல்லது கலாச்சாரமயமாக்கலை அதிகமாக வலியுறுத்துகிறது. 'நான் எல்லாருக்கும் எல்லாம் ஆனேன்' என்ற பவுலைத் தன் முன்மாதிரியாகக் கொண்ட நம் புனிதர், கிறிஸ்தவத்தின் முக்கியக் கூறுகளை நம் பண்பாட்டின் கூறுகளோடு பிணைத்து மக்களுக்கு அளித்தார். இப்படியாக, தன் அந்நியத்தன்மை நம் மக்களுக்கு இடறலாக இல்லாதவாறு பார்த்துக்கொண்டார். மேலும், தன் இன்சொல்லால் நம் நாட்டு அரசர்களின் நன்மதிப்பைப் பெற்றார் புனிதர். எல்லாப் பண்பாடும் நல்லதே, எல்லா மாந்தர்களும் பண்புடையவர்களே என்ற தன் பெருந்தன்மையால் அவர் இவ்வாறு செயல்பட்டார். இன்று சில நேரங்களில் நாம் பாரம்பரிய இலத்தீன் திருச்சபையை விட அதிகமான இலத்தீன் கூறுகளைக் கொண்டிருப்பதில் மகிழ்ந்துகொண்டிருப்பதை மறு ஆய்வு செய்தல் நலம்.

11. செபமும் தவமும்

தன் அயராத பணிகளுக்கு நடுவிலும் பல மணி நேரங்கள் நற்கருணையின் முன் அமர்ந்து இறைவேண்டல் செய்தார். பல மைல் கற்கள் பயணம் செய்ய வேண்டியிருப்பினும் குறைவான உணவே உட்கொண்டார். இந்நாட்டு மக்கள் ஏழ்மையில் இருக்க தான் உண்டு குடிப்பது தவறு என்று உணர்ந்திருந்தார் நம் புனிதர். தன் பணிதான் செபம் என்று சொல்லித் தன் ஓய்வை நியாயப்படுத்தவில்லை அவர். 'ஆனால் தேவையானது ஒன்றே' என்று இயேசு மார்த்தாவுக்குச் சொன்ன வார்த்தைகளை இவர் எந்நேரமும் நினைவில் கொண்டிருந்தார். 'தேவையான ஒன்றான' ஆண்டவரின் காலடிகளில் அமர்ந்து, பற்றற்றான் பாதங்களை இறுதியாகப் பற்றிக்கொண்டார். இவ்வாறாக, தன் பற்றுகளைத் துறந்தார்.

12. திருத்தூது ஆர்வம்

'எனக்கு நிறைய ஆன்மாக்களைக் கொடும்!' என்பதும், 'எப்போதும் மேன்மையானதே!' என்பதும் தான் இவருடைய இறைவேண்டல்களாக இருந்தன. இவருடைய திருத்தூது ஆர்வம் இவரை ஜப்பான் நாட்டின் கடற்கரை வரை அழைத்துச் சென்றது. 'இது போதும்!' என்று தன் பணியை நிறுத்திக்கொள்ளவில்லை நம் புனிதர். 'இன்னும் கொஞ்சம்! இன்னும் கொஞ்சம்! என் இயேசுவுக்காக!' என்பதே இவரது எண்ணமும் செயலுமாக இருந்தது.

இறுதியாக,

அருள்பணியாளர்களின் கட்டளை செபத்தில், இன்றைய திருநாளுக்கு வழங்கப்பட்டுள்ள, இரண்டாம் வாசகத்தின் ஒரு பகுதியோடு நம் சிந்தனையை நிறைவு செய்வோம்.

'இங்கிருக்கும் பலர் கிறிஸ்தவர்களாக மாறாமல் இருக்கக் காரணம் ஒன்றே: அவர்களைக் கிறிஸ்தவர்களாக மாற்ற யாரும் இல்லை! ஐரோப்பாவின் பல்கலைக்கழ வளாகங்களில், குறிப்பாக பாரிஸ் நகரத்தில், மற்ற இடங்களில் ஒரு பைத்தியக்காரன் போல ஓடிக் கத்த வேண்டும் என்று பலமுறை நான் எண்ணியிருக்கிறேன். அதிக அன்பு இல்லாமல், ஆனால் அதிகக் கற்றலை மட்டும் வைத்துக்கொண்டு வலம் வருபவர்களை உலுக்கி, 'என்னே ஒரு துயரம்! உங்களால் பலருக்கு விண்ணகத்தின் வாசல்கள் அடைக்கப்பட்டு, நகரத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன!' அவர்கள் தங்கள் கற்றல்மேல் காட்டும் ஆர்வத்தை ஆன்மாக்கள்மேல் காட்டி, தங்களுக்குக் கடவுள் கொடுத்த கொடைகளையும் ஆற்றல்களையும் கடவுளுக்கே கொடுத்தால் எத்துணை நலம்!' (புனித பிரான்சிஸ் சவேரியார் தன் சபைத் தலைவர் புனித இனிகோவுக்கு எழுதிய மடலிலிருந்து)

4 comments:

  1. அவர்கள் தங்கள் கற்றல்மேல் காட்டும் ஆர்வத்தை ஆன்மாக்கள்மேல் காட்டி, தங்களுக்குக் கடவுள் கொடுத்த கொடைகளையும் ஆற்றல்களையும் கடவுளுக்கே கொடுத்தால் எத்துணை நலம்!'

    Exactly 👍🤝

    ReplyDelete
  2. தூத்துக்குடி மற்றும் கோட்டாறு மக்களால் “ பெரிய தகப்பன்” என அன்புடன் அழைக்கப்படும் புனித சவேரியாரின் திருநாள். இவரை மனம் மாற்றியது புனித இஞ்ஞாசியாரின் வாரத்தைகளே எனினும் தாண்டி வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கவில்லை. “ மாற வேண்டியதையும் தாண்டி, மாறியபின் திடமாயிருப்பது அவசியம்” என்கிறார். ஒரு மாமேதையாக வலம் வந்திடினும் அவர் மனம் தேடிதெல்லாம் நலம், ஆன்மீகம் மற்றும் ஆன்மா போன்றவையே! கற்றலுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் மக்களைப்பார்த்து “ அவர்கள் தங்கள் கற்றல் மேல் காட்டும் ஆர்வத்தை ஆன்மாக்கள் மேல் காட்டி தங்களுக்கு கடவுள் கொடுத்த ஆற்றலையும், கொடைகளையும் கடவுளுக்கேகொடுத்தால் எத்துணை நலம்!” பொறுமுகிறார்.
    இத்தகைய மாமேதை புனித சவேரியார் குறித்த பல வஷயங்களைத் தந்திருக்கும் நம் “ மெத்தப் படித்த மாமேதை தந்தை” ஒரு பெரிய தகப்பனாக இல்லையெனினும், ஒரு சிறிய தகப்பனாகவாவது மாற வாழ்த்துக்கள்! என் செபங்கள் துணை நிற்கும்!!!.. அன்புடன்......

    ReplyDelete
  3. I always awe at these missionaries. What made them leave everything behind and work for God... Mother Theresa never went back to her home country once , even for her mother's death, after she became a postulate. And what they have sowed, has florished for generations and centuries. How strong the seed has been...!

    ReplyDelete
  4. Well Said Catherine! The seeds sown by the missionaries like Mother Teresa have become well rooted trees giving out branches far& wide.it’s only their thirst for The Lord that has driven them to be so.yea.. U are right. The seeds have been so strong. Love

    ReplyDelete