Tuesday, December 1, 2020

இவருக்காகவே நாம்

இன்றைய (2 டிசம்பர் 2020) நற்செய்தி (லூக் 15:29-37)

இவருக்காகவே நாம்

இன்றைய முதல் வாசகமும் நற்செய்தி வாசகமும், 'மலையில் ஆண்டவரின் விருந்து' என்னும் தலைப்புக்குள் வருகின்றன.

முதல் வாசகத்தில் ஆண்டவராகிய கடவுள், படைகளின் ஆண்டவர், பாபிலோனியாவிலிருந்து நாடு திரும்பும் தன் மக்களுக்கு மலையில் விருந்தொன்று ஏற்பாடு செய்கின்றார். அந்த விருந்து உடலுக்கு மட்டுமல்லாமல் உள்ளத்திற்கும் புத்துணர்வு தருகின்றது. ஏனெனில், அங்கே பசி மட்டுமல்லாமல், அவர்களுடைய நிந்தை, அவமானம், கண்ணீர் அனைத்தும் துடைக்கப்படுகிறது. ஆண்டவரின் இந்த அரும்பெரும் செயலைக் காணும் மற்ற மக்கள், 'இவரே நம் கடவுள். இவருக்கென்றே நாம் காத்திருந்தோம்.இவர் நம்மை விடுவிப்பார். இவரே ஆண்டவர். இவருக்காகவே நாம் காத்திருந்தோம்' என்று அக்களிக்கிறார்கள்.

நற்செய்தி வாசகத்தில், தன்னைப் பின்பற்றி வரும் மக்கள்கூட்டத்தின்மேல் பரிவு கொள்ளும் இயேசு, மக்களின் இயலாமை மற்றும் இல்லாமை கண்டு அவர்களி;ன் பசியாற்றுகின்றார். 

பதிலுரைப் பாடலும், 'என்னுடைய எதிரிகளின் கண்முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர். எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது' என்று ஆண்டவரின் பேரிரக்கத்தை எடுத்தியம்புகிறது. 

ஆக, திருவருகைக்காலத்தின் பின்புலத்தில், 'பசி என்ற இல்லாமை போக்கி உயிர் தருகின்றார்' ஆண்டவராகிய கடவுள் என்னும் மெசியா.

ஆண்டவர் தரும் நிறைவை நாம் எப்படிப் புரிந்துகொள்வது?

'பாலைநிலத்தில் உணவு எங்கிருந்து கிடைக்கும்?' - இது சீடர்களின் கேள்வி.

'உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன?' - இது இயேசுவின் கேள்வி.

'உணவு நம்மிடமிருந்தே கிடைக்கும்' என்பது இயேசுவின் மறைமுகச் செய்தியாக இருக்கிறது. மெசியாவின் வருகையில் வயிறுகள் நிறைகின்றன. காலி வயிறுகள் கடவுளைத் தேட இயலாது. ஆனால், வயிறுகள் நிறைய வேண்டும் என்றால் கடவுளைத் தேட வேண்டும். அவரைத் தேடுபவர்கள் நிறைவுபெறுகிறார்கள். 

2 comments:

  1. “திருவருகைக்காலம்”...... இன்றைய வாசகங்கள் உள்ளப்பசியை மட்டுமல்ல..... உடல் பசியையும் போக்குவதாக அமைந்துள்ளன.பாபிலோனியாவிலிருந்து வந்த மக்களை விடுவித்து அவர்களுக்கு விருந்து படைத்த இறைவன்...தன்னிடம் நாடிவந்த மக்களின் இயலாமை கண்டு அவர்களின் பசி போக்கிய இறைவன்.....நம் எதிரிகள் முன்னே நமக்கொரு விருந்தை ஏற்பாடு செய்த இறைவன் இந்தத் திருவருகை காலத்தின் பின்புலத்தில் நமக்கும் பசி போக்கி உணவு தருகிறார். உணவு எங்கிருந்து வருமென மாறி மாறிக்கேட்ட இயேசு மற்றும் சீடர்களின் பின்புலத்தில் “ வயிறுகள் நிறைய வேண்டுமெனில் கடவுளைத் தேட வேண்டுமென உணர்த்தப் படுகிறோம்.....அதனால் நிறைவும் பெறுகிறோம். நம் வயிறை நிறைக்கும் தேவன்,நாம் நம்மைச்சுற்றியிருப்போரின் வயிறை நிறைக்கையில் மேலும்,மேலும் நம் பாத்திரங்களை நிரம்பி வழியச் செய்கிறார் எனும் உணர்வையும், உவகையையும் தருகிறது இன்றையப் பதிவு. தன் எழுத்துக்களால் உள்ளத்தை மட்டுமல்ல.....உடலையும் நிரப்ப வழி சொல்லும் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  2. ஆண்டவர் தரும் நிறைவை நாம் எப்படிப் புரிந்துகொள்வது?

    'பாலைநிலத்தில் உணவு எங்கிருந்து கிடைக்கும்?' - இது சீடர்களின் கேள்வி.

    'உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன?' - இது இயேசுவின் கேள்வி.
    .............................👌

    ReplyDelete