Thursday, January 7, 2021

ஒத்துணர்வு

இன்றைய (8 ஜனவரி 2021) நற்செய்தி (லூக் 5:12-16)

ஒத்துணர்வு

உளவியலில் ஒரு பிரிவான என்.எல்.பி-யில் (Neuro-Linguistic Programming - NLP) 'ரப்போ' (rapport) என்ற ஒரு கருத்துரு உண்டு. அந்தக் கருத்துருவின்படி நாம் ஒருவர் மற்றவருடன் இணக்கம் ஏற்படுத்த வேண்டுமெனில், நாம் அவரைப் போல பேசவும், அவரின் செய்கைகளை 'மிரரிங்' (mirroring) செய்யவும் வேண்டும்.

எப்படி?

'உங்களுக்கு பிட்ஸா வேண்டுமா?' என என்னிடம் முன்பின் தெரியாத ஒருவர் கேட்கிறார் என வைத்துக்கொள்வோம்.

'ஆம்' அல்லது 'இல்லை' என்று ஒற்றை வார்த்தையில் நான் பதிலிறுத்தால் அவருக்கும் எனக்கும் எந்த நெருக்கமும் ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால், அவரிடம், 'இல்லை! எனக்கு பிட்ஸா வேண்டாம்' என்று நான் சொன்னால், அவர் என்னிடம் இன்னும் பேச ஆவலாக இருப்பார். ஏனெனில், என்னுடைய பதிலில், நான் அவர் பயன்படுத்திய மூன்று வார்த்தைகளை 'மிரரிங்' செய்துள்ளேன்.

நெருக்கம் ஏற்படுவது இப்படித்தான்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வருகிறார். இயேசு அவருடன் உரையாடுகின்றார். இவ்விருவருக்கும் நடுவில் உள்ள உரையாடலைக் கவனிப்போம்:

அவர் இயேசுவைக் கண்டு, காலில் விழுந்து, 'ஆண்டவரே! நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்!' என மன்றாடினார்.

இயேசு கையை நீட்டி, அவரைத் தொட்டு, 'நான் விரும்புகிறேன். உமது நோய் நீங்குக!' என்றார்.

தொழுநோயாளரிடமும் நெருக்கம் ஏற்படுத்திக்கொள்ள விழைகின்றார் இயேசு. இயேசுவின் காலத்தில் தொழுநோயாளர்கள் மூன்றுவகையான அந்நியப்படுத்துதலுக்கு உள்ளானர்கள்: ஒன்று, உடல்சார் அந்நியப்படுத்துதல். அவர்களுடைய நோயின் காரணமாக அவர்கள் தன்மதிப்பு இழந்தவர்களாகவும், துன்புறுபவர்களாகவும் இருந்தார்கள். இரண்டு, சமூக அந்நியப்படுத்துதல். தொழுநோய் ஒரு தொற்று நோய் என்று கருதப்பட்டதால், தொழுநோயாளர்கள் ஊருக்கு வெளியே தனிமைப்படுத்தப்பட்டனர். மூன்று, ஆன்மிக அந்நியப்படுத்துதல். கடவுளுக்கு எதிராக ஒருவர் செய்த பாவத்தாலும், அல்லது தனிநபர் பெற்ற சாபத்தாலும்தான் இந்த நோய் தாக்குகிறது என்பது அன்றைய புரிதல். இப்படிப்பட்ட நிலையில் இருந்தவர்களிடம் நெருக்கம் ஏற்படுத்திக்கொள்ள விழைகின்றார் இயேசு.

காணுதல் - கரம் நீட்டுதல், காலில் விழுதல் - தொடுதல், நீர் - நான், விரும்பினால் - விரும்புகிறேன், எனது நோய் - உமது நோய், நீக்க - நீங்குக என செயலுக்குச் செயல், வார்த்தைக்கு வார்த்தை தொழுநோய் பீடித்த நபரை 'மிரரிங்' செய்கின்றார் இயேசு.

இவ்வாறாக, இயேசு அவருடன் ரப்போவை ஏற்படுத்துகின்றார்.

ரப்போ ஏற்படுத்திய அந்த நொடியே அற்புதம் நடந்தேறுகிறது.

அதற்குப் பின் நடப்பதெல்லாம் பரிசோதனையே. 

மனிதர்களுடன் இப்படி எளிதாக இயேசுவால் ரப்போ ஏற்படுத்த இயன்றது எப்படி?

அந்த இரகசியத்தை லூக்கா நற்செய்தியாளர் தொடர்ந்து பதிவு செய்கின்றார்: 'அவரோ ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்குச் சென்று தனித்திருந்து இறைவனிடம் வேண்டிவந்தார்.'

எவரொருவர் தன்னுடனும், தன் கடவுளுடனும் ரப்போ ஏற்படுத்திக்கொள்கிறாரோ, அவர் மட்டுமே மற்றவர்களுடன் ரப்போ ஏற்படுத்த முடியும்.

புனித அகுஸ்தினாரும், 'நான் என்னை அறிவதால் உம்மை அறிவேனாக!' என்று தனக்குத்தான் ஏற்படுத்த வேண்டிய ரப்போவை அடிக்கோடிடுகின்றார்.

2 comments:

  1. உடல், ஆன்மீகம், சமூகம்...... இவை சார்ந்த விஷயங்களால் அந்நியப்படுத்தப்பட்ட ஒரு தொழு நோயாளரோடு தந்தை வெளிப்படுத்தும் ‘ மிரரிங்’ எனும் முறையைப் பின்பற்றி இயேசு அவரை குணப்படுத்தியதாகச் சொல்கிறது இன்றையப்பதிவு. ஒரு நபர் இன்னொரு நபரோடு ...அவர் யாராக இருப்பினும் தொடர்பு ஏற்படுத்த விரும்பினால் அவரோடு தன்னை ஏற்படுத்திக்கொள்ளும் ஒரு நல்லெண்ண செயலே இது என்பது என் புரிதல். புரிதல் நன்றாக இருக்கும் பட்சத்தில் அது நட்பாக மாறக்கூட வழியுண்டு.இத்தகைய ‘பாசிட்டிவான’ ஒரு தொடர்பு ஏற்படுதலைத்தான் ‘ரப்போ’ என்கிறார் தந்தை.இந்த ரப்போ இயேசுவுக்கு சாத்தியமானது அவரது ‘இறைவேண்டினால் மட்டுமே’ என்பதும் அவரது வாதம்.

    “ எவரொருவர் தன்னுடனும்,தன் கடவுளுடனும் ரப்போ ஏற்படுத்திக்கொள்கிறாரோ, அவர் மட்டுமே மற்றவர்களுடன் ரப்போ ஏற்படுத்த முடியும்”... சத்தியமான உண்மைதான் எனினும் அதற்கு இன்னும் உரமேற்ற தான் நெருக்கமான ரப்போவில் இருக்கும் புனித.அகுஸ்தினாரைத் துணைக்கழைக்கிறார் தந்தை.

    ஆம்! “நான் என்னை அறிவதால் உம்மை அறிவேனாக!”.... இதை அவருடன் சேர்ந்து நாமும் சொல்வோமாக! ‘ ரப்போ’.... இறைவனுடனோ....மனிதருடனோ.... யாருடனான உறவுக்கும் இந்த ‘ரப்போ’ தேவை எனவும், இறைவனுடனான ரப்போ “ ஆள் நடமாட்டமில்லாத இடங்களில் தனித்திருந்து வேண்டுவதால் மட்டுமே சாத்தியம் எனவும்அடித்துக் கூறும் தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. அவரோ ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்குச் சென்று தனித்திருந்து இறைவனிடம் வேண்டிவந்தார்.'

    👍.

    That is what I need.
    Lord! Grant me that grace to be one with YOU always...🙏
    Thank you.
    👍

    ReplyDelete