Tuesday, January 26, 2021

கொடுத்து வைத்திருக்கிறது

இன்றைய (27 ஜனவரி 2021) நற்செய்தி (மாற் 4:1-20)

கொடுத்து வைத்திருக்கிறது

சமையல் பந்தியில் சோறு அல்லது பிரியாணி பரிமாறுபவர்களைக் கவனித்துள்ளீர்களா?

வழக்கமாக சோறு பரிமாற வீடுகளில் பயன்படுத்தும் கைக்கரண்டிக்குப் பதிலாக, ஒரு சிறிய தட்டு அல்லது மூடியை வைத்துப் பரிமாறுவார்கள். அவர்களின் கண்கள் ஒரே நேரத்தில் மூன்று இடங்களில் பதியும். பந்தியில் அமர்ந்திருப்பவர், அவர்முன் இருக்கும் இலை, மற்றும் சோற்றுப் பாத்திரம். அந்த ஒரு நொடியில் அமர்ந்திருப்பவரைக் காண்பார், கண்டவுடன் அவர் யாரென்று தன் மனதுக்குள் திறனாய்வு செய்வார். அவரின் திறனாய்வின் முடிவைப் பொருத்தே அவருடைய கையில் உள்ள தட்டில் சோறு அள்ளப்படும். அவர் சோறு அள்ளும் முறையைப் பார்த்தே, அமர்ந்திருப்பவர் தெரிந்தவரா, தெரியாதவரா, உறவினரா, அந்நியரா என்பதைக் கண்டுபிடித்துவிட முடியும். 

பந்தி பரிமாறுவதை இயேசுவின் போதனைக்கு ஒப்பிடுவோம். இயேசு தனக்கு முன் இருக்கும் கேட்பவரைப் பொருத்து தன் பேச்சின் தொனியை மாற்றுகின்றார்.

மூவகையான மக்கள் இயேசுவின் முன் இருக்கிறார்கள்:

(அ) திரண்டிருந்த மக்கள்

இவர்களுக்கு இயேசு உவமைகள் வாயிலாகப் பேசுகின்றார். இவர்கள் புறம்பே உள்ளவர்கள். அதாவது, இறையாட்சிக்கு வெளியே இருக்கிறவர்கள். இவர்கள் கதைகள் வழியாகவே அனைத்தையும் புரிந்துகொள்கின்றனர். அதாவது, புரியாத ஒரு மறைபொருளை புரிகின்ற ஒரு கதை வழியாக அவர்கள் கற்றுக்கொள்கின்றனர். எடுத்துக்காட்டாக, பள்ளியின் தொடக்கநிலையில் இருக்கும் குழந்தைகள். இவர்களுக்கு, 'சிங்கம் வந்தது, புலி வந்தது, மாடுகள் மேய்ந்தன' என்று சொல்லித்தான் ஒற்றுமையைப் புரிய வைக்க முடியும்.

(ஆ) சீடர்கள்

சீடர்கள் இப்போது இருக்கும் நிலையில் அவர்களுக்கு 'எல்லாம் கொடுத்து வைத்திருந்தாலும்' அதை அவர்கள் அறியவில்லை. மற்றவர்களின் நிலையிலேயே தங்களை இருத்திக் கொண்டனர். தங்கள் கால்களில் கட்டப்பட்டிருக்கும் சங்கிலியைக் கண்டு தங்களால் உடைக்க முடியாது என எண்ணும் யானை போன்றவர்கள் அவர்கள். இவர்களால் புரிந்துகொள்ள இயலவில்லை. இருந்தாலும், இயேசு அவர்களுக்குத் துணை நிற்கின்றார். அவர்களுக்கு விளக்கம் தருகின்றார்.

(இ) கொடுத்து வைத்தவர்கள்

இந்த நிலையில்தான் இயேசு தன் சீடர்களை வைத்திருந்தார். அவர்கள் தங்களைப் பற்றி மேன்மையான எண்ணம் கொண்டிருக்கவில்லை என்றாலும், இயேசு அவர்களை நம்பினார். இயேசுவின் பார்வையில் அவர்கள் கொடுத்து வைத்தவர்கள். ஏனெனில், மற்றவர்களுக்கு மறைக்கபட்டிருந்தது அவர்களுக்கு நேரிடையாகக் கிடைத்தது. நான் உரோம் நகரில் படித்தபோது, 'திருத்தந்தைக்கு உணவு பரிமாறும் வேலை கிடைத்தால் எனக்குப் போதும்!' என நினைத்துள்ளேன். மக்கள் கூட்டம் அவரைக் காண இங்கே வெளியே அலைமோதுகிறது. ஆனால், அவருக்கு உணவு பரிமாறுபவர் எவ்வளவு நெருக்கமாக அவரைப் பார்ப்பார்? அவருடைய டம்ளரில் தண்ணீர் நிரப்புவார். டவல் கீழே விழுந்தால் ஓடி எடுத்துக் கொடுப்பார். சில நேரங்களில் காரத்தால் புரை ஏறினால் உச்சந்தலையில் மெதுவாகத் தட்டிக்கொடுப்பார். இவ்வளவு அருகில் இருக்கும் அந்த நபர் கொடுத்து வைத்தவர் என எண்ணியதுண்டு. இயேசுவின் சீடர்கள் அந்த நிலையைப் பெற்றிருந்தாலும் அதை அவர்கள் அறிய மறந்தனர். இயேசு அவர்களைக் கடிந்துகொள்ளவில்லை. மாறாக, அவர்களைத் தம்மவர்கள் என ஏற்றுக்கொள்கின்றார்.

நாம் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள். 

பல நேரங்களில் நம் மேன்மையை நாம் அறியாமல் இருக்கிறோம்.

'ஆஸ்கர் ஒயில்ட்' படிக்கும் அளவுக்கு நாம் மேன்மை பெற்றிருந்தாலும், இன்னும் சிங்கம் புலி கதை கேட்கவே விரும்புகிறோம்.

1 comment:

  1. தன் சீடர்களைப் பலரகங்களாகப் பிரிக்கிறார் இயேசு.....திரண்டிருந்த மக்கள் எனவும்,சீடர்கள் எனவும்....கொடுத்து வைத்தவர்கள் எனவும்! இந்த மூன்று வகைக்குள் வராதவர்களாகவும் தன் சீடரைப் பற்றி சொல்வது போலும் ஒரு புரிதல்.யானை பலம் தங்களுக்குள் இருப்பதை உணராதவர்களென அவர்கள் மீது பரிவு கொள்கிறார்.தங்களைப் பற்றி மேன்மையான எண்ணம் அவர்களுக்கு இல்லை எனினும் அவர்களை நம்பும் இயேசு அவர்களைக் “ கொடுத்துவைத்தவர்கள்” என்கிறார்.

    இதில் நான் எந்த இரகம்? கையிலிருக்கும் வெண்ணெயை மறந்து நெய்க்கு அலையும் சீடர்கள் போன்றவளா? “ ஆஸ்கர் ஒயில்ட்” படிக்க வேண்டிய திறமையிருந்தும் சிங்கம் புலி கதை கேட்க விரும்புவளா? இல்லை “ நானும் மேன்மை பெற்றவளே! ஏனெனில் நானும் அவரின் நேரடிக்கண் பார்வையில் இருப்பதால் பேறு பெற்றவளே!”

    என் அருமை,பெருமை,மேன்மை அனைத்தையும் உணரச்செய்த தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete