ஆண்டின் பொதுக்காலம் 2ஆம் ஞாயிறு
I. 1 சாமுவேல் 3:3-10,19 II. 1 கொரிந்தியர் 6:13-15,17-20 III. யோவான் 1:35-42
அழைத்தலும் அறிதலும்
இறைவனின் அழைத்தலை அறிதலும், அறிதலுக்கு ஏற்ற பதிலிறுப்பு தருவதும் நம் வாழ்வைப் புரட்டிப் போடுகின்றன. அவரின் அழைப்பு நம் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளில் நடந்தேறுகிறது. அதை உய்த்துணர்ந்து தேர்ந்து தெளிபவர்கள் தங்கள் வாழ்க்கைத் திசையை மாற்றுகின்றனர்.
முதல் வாசகத்தில் (காண். 1 சாமு 3:3-10,19), சாமுவேலின் அழைப்பு நிகழ்வை வாசிக்கின்றோம். கடவுள் சாமுவேலை அழைக்க, இளவல் சாமுவேல் அந்த அழைப்புக்கு பதிலிறுப்பு தருகின்றார். 'சாமுவேல்' என்றால் 'கடவுள் கேட்டார்' என்பது பொருள். கடவுள் இஸ்ரயேல் மக்களின் குரலைக் கேட்டார் என்ற செய்தியைத் தாங்கி நிற்கிறது சாமுவேல் நூல். முதலில், சாமுவேல், மலடியாயிருந்த அன்னாவின் விண்ணப்பத்தைக் கேட்டார். பின்னர், தங்களுக்கென்று ஓர் அரசன் வேண்டும் என்ற இஸ்ரயேல் மக்களின் விண்ணப்பத்தைக் கேட்டார். பால்குடி மறந்தவுடன் அன்னா சாமுவேலை ஏலியிடம் கொண்டுபோய் விடுகின்றார். சீலோவிலே அருள்பணியாளராக இருந்த அவருடைய இல்லத்திலேயே சாமுவேல் தங்குகின்றார். அங்குதான் அழைத்தல் நிகழ்வு நடக்கிறது. கடவுள் நேரடியாகவும் தனிப்பட்ட விதத்திலும் இளவல் சாமுவேலை அழைக்கின்றார். ஆனால், கடவுளின் குரலை ஏலியின் குரல் என நினைத்துக் கொள்கின்றார் சாமுவேல். இரு முறை அப்படியே நடக்கின்றது. இந்த இடத்தில், 'சாமுவேல் ஆண்டவரை இன்னும் அறியவில்லை' என்று ஒரு குறிப்பைத் தருகின்றார் ஆசிரியர். ஞானமும் கனிவும் நிறைந்த தந்தையாக இருந்த ஏலி, சாமுவேல் ஆண்டவரது குரலை அடையாளம் காண உதவுகின்றார். 'ஆண்டவரே பேசும்! உம் அடியான் கேட்கிறேன்!' எனப் பதிலிறுக்குமாறு சொல்லி அனுப்ப, சாமுவேல், 'பேசும்! உம் அடியான் கேட்கிறேன்!' என்கிறார்.
சாமுவேல் மூன்று முறை அழைக்கப்படும் நிகழ்வு, அவருடைய அறிதலில் எழுந்த படிநிலையைக் காட்டுகிறது. மேலும், 'பேசும்! உம் அடியான் கேட்கிறேன்!' என்ற சாமுவேலின் தயார்நிலை, 'காது வழியாகக் கேட்டல்' என்பதோடு அல்லாமல், 'கீழ்ப்படிகிறேன்' என்ற பொருளையும் தருவதால், சாமுவேல் இங்கேயே ஓர் இறைவாக்கினராகத் தன் பணியைத் தொடங்குவதைப் பார்க்கின்றோம். 'சாமுவேல் வளர்ந்தான். ஆண்டவர் அவனோடு இருந்தார். சாமுவேலது வார்த்தை எதையும் அவர் தரையில் விழவிடவில்லை' என நிகழ்வை நிறைவு செய்கிறார் ஆசிரியர்.
ஆக, சாமுவேலுக்கு ஆண்டவரின் அழைத்தல் வருகின்றது. அந்த அழைத்தலை அறிந்துகொள்ள ஏலி உதவுகின்றார். அறிந்துகொண்ட சாமுவேல் அதற்கேற்ற பதிலிறுப்பு செய்கின்றார். பதிலிறுப்பின் விளைவாக இறைவாக்கினராகின்றார். இதுமுதல் இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின் குரல் எது என்பதை அறியவும், தேர்ந்து தெளியவும் அவர்களுக்கு இவர் வழிகாட்டுவார்.
இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 6:13-15,17-20), தூய்மையானவற்றுக்கும் பாவத்துக்குரியவற்றுக்கும் உள்ள வேறுபாட்டைக் காணத் தவறிய கொரிந்து நகரக் கிறிஸ்தவ மக்களைக் கடிந்துகொள்கின்றார் பவுல். கொரிந்து ஒரு துறைமுக நகரம். வளமைக்கும், ஆடம்பரத்துக்கும், மேட்டிமையான வாழ்க்கை முறைக்கும் பெயர் பெற்றது. மேலும், பாலியல் கூறுகள் நிடந்த நிறைய சமய வழிபாட்டு முறைகள் அங்கே இருந்தன. பரத்தைமை மற்றும் கூடாஒழுக்கம் அதிகமாக இருந்த அந்த நகரத்தில், நம்பிக்கையாளர்கள் தங்களின் தூய்மை நிலையைத் தக்கவைக்கவும், தங்கள் அழைப்புக்கேற்ற அறநெறி வாழ்க்கை வாழவும் வேண்டிய தேவை இருந்தது. பாலியல் பிறழ்வுகள் கிறிஸ்தவ அறநெறிக்கு எதிரானது என்பது பவுலின் போதனையாக இருக்கிறது. மேலும், உடல் மற்றும் ஆன்மா கொண்டுள்ள ஒவ்வொரு தனிநபரும் 'தூய ஆவியார் குடிகொள்ளும் கோவில்' என்று அவர்களுக்கு அறிவுறுத்துகின்றார். பாலியல் நன்னடத்தை என்று வரும்போது கிறிஸ்தவ நம்பிக்கையாளர்கள் அதில் சமரசம் செய்துகொள்ளவே கூடாது என்பது பவுலின் எண்ணமாக இருந்தது.
ஆக, கிறிஸ்தவர்களாகிய வாழ அழைப்பு பெற்றுள்ள கொரிந்து நகர மக்கள், அதற்கேற்றவாறு, நன்மை தீமையைச் சீர்தூக்கிப் பார்த்து, தீமையை அகற்றிவிட்டு, நன்மையைப் பற்றிக்கொள்ள வேண்டும். இதுவே அவர்கள் செய்யும் பதிலிறுப்பு.
நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 1:35-42) இன்னொரு அழைத்தல் கதையாடலை வாசிக்கின்றோம். திருமுழுக்கு யோவான் தன் சீடர்கள் இருவரிடம் இயேசுவைச் சுட்டிக்காட்டி, 'இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி!' என முன்மொழிகின்றார். அதைக் கேட்ட அச்சீடர்கள் இருவரும் இயேசுவைப் பின்தொடர்கின்றனர்.
இந்த நிகழ்வில், இயேசுவே தாமாக முன்வந்து, 'என்ன தேடுகிறீர்கள்?' எனக் கேட்கின்றார். இது வெறும் கேள்வி அல்ல. மாறாக, அவர்களை நோக்கி விடுக்கப்பட்ட சவால் மற்றும் அழைப்பு. தம்மைப் பற்றி அவர்கள் என்ன அறிந்துள்ளார்கள் என்பதை அவர்கள் ஆய்வு செய்து பார்ப்பதற்காக இயேசு கொடுக்கும் கால இடைவெளியே இக்கேள்வி.
இயேசுவுக்குப் பதிலிறுக்கின்ற சீடர்கள், தங்கள் விடையை ஒரு கேள்வியாக முன்வைக்கின்றனர்: 'ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?' 'தங்குதல்' என்பது யோவான் நற்செய்தியில் மிகவும் பொருள் பொதிந்த வார்த்தை. ஏனெனில், இயேசு கிறிஸ்து வழியாக கடவுள் அல்லது வாக்கு மனுக்குலத்தோடு 'தங்குகின்றார்.' மேலும், 'நீர் கடவுளோடு தங்கியிருக்கிறீரா?' என்ற கேள்வியும் இக்கேள்வியில் அடங்கியுள்ளது. அவர்கள் இந்த இடத்தில் இயேசுவை, 'போதகர்' என்று அழைக்கின்றனர்.
'வந்து பாருங்கள்' என்னும் இயேசுவின் பதில் மொழி அவர்களைத் தன்னோடு இருப்பதற்கு அழைப்பதோடு, தன் உடனிருப்பை அனுபவிக்கவும் தூண்டுகிறது. மேலோட்டமான வாசிப்பில், இயேசுவின் இடம் எங்கே இருக்கிறது என்று பார்க்க சீடர்கள் சென்றார்கள் என்று தோன்றுகிறது. ஆனால், ஆழமான வாசிப்பில், அவர்கள் அவரைப் பின்பற்றத் தொடங்கினார்கள் என்று புரிந்துகொள்ள முடிகிறது.
இயேசுவோடு தங்கிய அந்த அனுபவம் அவர்களைப் புரட்டிப் போடுகின்றது. 'சரி! போய் வருகிறோம்!' என்ற புறப்பட்டவர்களில் ஒருவரான அந்திரேயா நேரடியாகத் தன் சகோதரர் சீமோனைச் சென்று பார்க்கின்றார். 'நாங்கள் மெசியாவைக் கண்டோம்!' என அறிக்கையிடுகின்றார். 'போதகர்' என்று அழைத்துப் பின் தொடர்ந்தவர், 'மெசியாவை' கண்டது எப்படி? இறையனுபவம் பெற்ற ஒருவர் இன்னொருவரைத் தேடிச் சென்று அழைத்து வருவது யோவான் நற்செய்தியில் காணப்படும் ஓர் இறையியல் கூறு (காண். யோவா 1:43-51ளூ யோவா 4:28-30,39-42). அந்திரேயா செய்ததையே நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும்.
ஆக, திருமுழுக்கு யோவான் சிறிய திரியை ஏற்ற, அதைத் தன் கேள்வியாலும் அழைப்பாலும் ஒளிரச் செய்கின்றார் இயேசு. அந்த ஒளியில் வழிநடந்த முதற்சீடர்கள் இயேசுவை மெசியா என்று அறிக்கையிட்டதோடு, அதை மற்றவர்களுக்கும் அறிவிக்கத் தொடங்குகின்றனர்.
இவ்வாறாக,
முதல் வாசகத்தில், ஏலி வழிகாட்ட, இளவல் சாமுவேல் ஆண்டவரின் குரலை அறிந்துகொள்கின்றார். 'பேசும்! கேட்கிறேன்!' எனப் பதிலிறுப்பு செய்கின்றார்.
இரண்டாம் வாசகத்தில், பவுல் வழிபாட்ட, கொரிந்து நகர இறைமக்கள் தங்கள் உடலாகிய கோவிலின் தூய்மையை அறிந்துகொள்வதோடு, பிறழ்வுபட்ட வாழ்வை அகற்றித் தூய்மையான வாழ்வு வாழ முன்வருகின்றனர்.
நற்செய்தி வாசகத்தில், திருமுழுக்கு யோவான் வழிகாட்ட, முதற்சீடர்கள் இயேசுவை மெசியா எனக் கண்டு அதற்குச் சான்று பகர்கின்றனர்.
அழைத்தல் அல்லது இறையழைத்தல் என்பதை அர்ப்பண வாழ்வுக்கான அழைத்தல், அல்லது அருள்பணியாளர்களாக மாறுவதற்கான அழைத்தல் என்ற குறுகிய பார்வையோடு நாம் எடுத்துக்கொள்ளக் கூடாது. இறைவன் நம் எல்லாரையும் அழைக்கின்றார். இறைவன் யாரென்று அறியாமல் நாம் தூங்கும்போது, நம் பிறழ்வுபட்ட வாழ்க்கை முறைகளில் நாம் சிக்கித் தவிக்கும்போது, மற்றவர்களின் பின்னால் சென்றுகொண்டிருக்கும்போது, நம் வேலையில், படிப்பில், பயணத்தில், 'இதைச் செய்! இங்கே வா! இதுதான் நான்!' என்று அவர் நம் உள்ளுணர்வில், உறவுநிலைகளில் அழைத்துக் கொண்டே இருக்கின்றார்.
அவரின் அழைத்தலை அறிதல் என்றால், அவரை அறிதல். அவரை அறிதல் என்றால் அவரின் அழைத்தலை அறிதல். ஆக, அழைத்தலும் அறிதலும் இணைந்து செல்லும்போது அங்கே பதிலிறுப்பு அவசியமாகிறது, சாத்தியமாகிறது.
இன்று நாம் அவரது அழைத்தலையும், அவரையும் அறிந்துகொள்ளவும், அதற்கேற்ற பதிலிறுப்பு செய்யவும் மூன்று தடைகள் உள்ளன என்று வாசகங்கள் சொல்கின்றன:
(அ) தவறாகப் புரிந்துகொள்தல்
சாமுவேல் கடவுளின் குரலை ஏலியின் குரல் என நினைக்கிறார். ஆனாலும் எழுந்து செல்கின்றார். கடவுளின் குரலை வெறும் மனிதக் குரலாக எடுத்துக்கொள்வதுதான் பெரிய தடை. அதாவது, மனிதர் பேசுகிறாரா அல்லது மனிதர் வழியாகக் கடவுள் பேசுகிறாரா என்று தெளிந்து தெரிய இயலாத ஒரு நிலையில் இருக்கின்றோம். இந்த நேரத்தில் நம் மூளை நம்மை ஏமாற்ற முயற்சி செய்கின்றது. தனக்குச் சாதகமாக அது விடையைத் திருத்திக்கொள்கிறது. எடுத்துக்காட்டாக, நான் ஒன்றைச் செய்யக் கூடாது என முடிவு செய்துள்ளேன் என வைத்துக்கொள்வோம். 'அதைச் செய்தால் என்ன? எல்லாரும் செய்கிறார்களே! பிரச்சினை வந்தால் பார்த்துக்கொள்ளலாம்!' என்று என் இன்னொரு மூளை சொல்ல, என் மனம் அதை அப்படியே நம்பிச் செயலாற்றத் தொடங்குகிறது. ஆக, மூளை மனத்தை ஏமாற்றிவிடுகிறது. இதை எப்படி வெல்வது? விவிலியம் விடை கூறுகிறது: 'இவை எல்லாவற்றுக்கும் மேலாக, உன்னத இறைவனிடம் மன்றாடு. அப்பொழுது அவர் உன்னை உண்மையின் வழியில் நடத்துவார்' (சீஞா 37:15).
(ஆ) தூங்குதல்
சாமுவேலின் தூக்கம் ஆண்டவரின் அழைத்தலுக்கான இயங்குதளமாக இருந்தாலும், இத்தூக்கம் ஆண்டவரின் குரலை அறிந்துகொள்ளத் தடையாகவும் இருக்கின்றது. தூக்கம் என்பது நம் இருத்தல் நிலையைக் குறிக்கிறது. எழுந்து நடப்பதற்குப் பதிலாக இருத்தல் நிலையில் இருப்பது நமக்குப் பல நேரங்களில் இன்பமாக இருக்கிறது. கொரிந்து நகரத் திருஅவையும் ஒருவகைத் தூக்கத்தில்தான் இருந்தது. ஒரு பக்கம் கிறிஸ்தவம் விடுக்கும் அறநெறி வாழ்க்கை. இன்னொரு பக்கம் தங்களது பழைய வாழ்க்கையும் அதன் பிறழ்வுகளும் தந்த இன்பம். அந்த இன்பத்திலேயே சற்று நேரம் கை மடக்கித் தூங்குவது அவர்களுக்கு இனிமையாக இருந்தது. இன்று நான் எந்த நிலையில் தூங்கிக்கொண்டிருக்கிறேன்? என் பழைய வாழ்க்கை அல்லது பழைய இயல்பு என்னை இன்னும் கொஞ்சம் தூங்குமாறு அழைக்கிறதா?
(இ) தயக்கம்
திருமுழுக்கு யோவானின் சான்றைக் கேட்ட முதற் சீடர்கள் உடனடியாகத் தயக்கமின்றி இயேசுவைப் பின்தொடர்கின்றனர். 'வந்து பாருங்கள்' என்ற இயேசுவின் அழைப்பு எதிர்பாராமல் வந்தாலும், தயக்கமின்றி பதிலிறுப்பு செய்கின்றனர். 'நாளை பார்க்கலாம்! இன்னொரு நாள்! இப்பவேவா?' என்றெல்லாம் கேட்கவில்லை. எந்நேரமும் தயார்நிலையில் இருக்கின்றனர். பல நேரங்களில் நாம் தயங்குகின்றோம். புதிய முயற்சி எடுக்க, புதிய நபரைச் சந்திக்க, புதிய வேலையைத் தொடங்க, தொடங்கிய வேலையை முடிக்க என்று அச்சத்தாலும் தயக்கத்தாலும் அல்லல்படுகின்றோம்.
மேற்காணும் மூன்று தடைகளை நாம் தாண்டிவிட்டால், அவரின் அழைத்தலை அறிதலும், அவரை அறிதலும், அதற்கேற்ற பதிலிறுப்பு செய்தலும் எளிதாகும்.
அப்போது, நாமும் இன்றைய பதிலுரைப் பாடலின் ஆசிரியர் சொல்வது போல, 'உமது திருவுளம் நிறைவேற்ற ஆண்டவரே, இதோ வருகின்றேன்!' (காண். திபா 40) என்று சொல்ல முடியும்.
ஆமென்!
ReplyDelete“ அழைப்பின் அழகு” பற்றிக்கூறும் மறையுரை.....
ReplyDeleteமலடியாயிருந்த அன்னாவின் குரல் கேட்டு அவளுக்குக் கொடுத்த சாமுவேல் எனும் மகனை இறைவன் அழைத்த நிகழ்வு சொல்லும் முதல் வாசகம்!
பவுலின் காலத்தில் வாழ்ந்த மக்களின் ‘பிறழ்தல்’ பற்றிக்கூற, அவரின் குரல் கேட்டு தங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்துக்கொண்ட நிகழ்வு கூறும் இரண்டாம் வாசகம்!
யோவானின் சொல்கேட்டு இயேசுவைப் பார்க்க வந்த சீடர்கள் இயேசுவில் “ மெசியா” வைக் கண்டது பற்றிக்கூறும் நற்செய்தி வாசகம்!
‘அவரின் அழைத்தலை அறிதல் எனில் அவரை அறிதல்’... என்கிறார் தந்தை. அவரை அறிதலின் மூலமே அவருக்கு நம் ‘பதிலிறுப்பைத்’ தர முடியும் என்பது நிதர்சனம். இதற்குத் தடையாக உள்ள ‘தவறாகப்புரிந்து கொள்தல்’, ‘ தூங்குதல்’ மற்றும் ‘தயக்கம்’ இவற்றைக் களையும் போது மட்டுமே நம்மாலும் திருப்பாடலாசிரியரோடு இணைந்து
“ உமது திருவுளம் நிறைவேற்ற ஆண்டவரே! இதோ வருகிறேன்!” என்று பாட முடியும்.
“ ஆண்டவரே பேசும்; அடியான் கேட்கிறேன்”,” வந்து பாருங்கள்”, மற்றும் “ திருமுழுக்கு யோவான் சிறிய திரியை ஏற்ற, அதைத்தன் கேள்வியாலும்,அழைப்பாலும் ஒளிரச்செய்கிறார் இயேசு” எனும் வரிகள் தந்தையின் மறையுரைக்கு மெருகேற்றுகின்றன.
அழகான மறையுரையின் சொந்தக்கார்ருக்கு வாழ்த்துக்களும்! ஞாயிறு வணக்கங்களும்!!!