இன்றைய (4 ஜனவரி 2020) நற்செய்தி (மத் 4:12-17,23-25)
அதுமுதல் இயேசு
ஒன்றை நினைப்பது அல்லது விரும்புவது மட்டுமல்ல, மாறாக, அதைச் செயல்படுத்தினால்தான் அது நிறைவேறும். அல்லது, ஒரு கேக்கின் சுவை அது தன்னையே உண்பதற்காகக் கையளிப்பதில்தான் இருக்கிறது. அல்லது, நாம் நல்லவராக இருப்பதாக மட்டுமல்லாமல், நல்லவர் என்பதை மற்றவர்களுக்கும் காட்ட வேண்டும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன் பணிவாழ்வைத் தொடங்குகின்றார். பணிவாழ்வு தொடங்கப்படுகிற நேரம், யோவானின் கைது என்றும், இடம், புறவினத்தாரின் பகுதி என்றும் மத்தேயு பதிவு செய்கின்றார். மேலும், இயேசுவின் பணித்தொடக்கத்தை எசாயா இறைவாக்கினரின் இறைவாக்கு நிறைவேறும் நிகழ்வு என்றும் பதிவு செய்கின்றார்.
இரண்டு விடயங்கள்: ஒன்று, நாம் அனைவரும் நேரத்திற்கும் இடத்திற்கும் கட்டுப்பட்டவர்கள். ஆக, எந்த நேரத்தில் எந்த இடத்தில் எதைச் செய்கிறோம் என்பதைப் பொருத்தே நம் வெற்றி இருக்கிறது. ஒவ்வொரு நேரமும், ஒவ்வொரு இடமும் அதற்கேற்ற பதிலிறுப்பை நம்மிடமிருந்து அழைக்கிறது. அந்த அழைப்புக்கு நாம் செவிகொடுக்கிறோமா? இரண்டு, நம் ஒவ்வொரு செயலிலும் கடவுள் நம்மைப் பற்றி முன்குறித்துவைத்த ஒன்று நிறைவேறுகிறது என்பதை உணர்ந்து நாம் செயல்படுதல் வேண்டும். நம் வாழ்வில் நடக்கும் எதுவும் விபத்து அல்ல. ஒவ்வொன்றுக்குப் பின்னும் அவருடைய கரமும் திட்டமும் இருக்கிறது. நம் செயல் ஒவ்வொன்றிலும் அவருடைய விருப்பம் நிறைவேறுகிறது என்று எண்ணி நாம் மகிழ்வதோடு அதற்கேற்ற பொறுப்புணர்வோடு செயலாற்ற வேண்டும்.
இயேசு, தான் மெசியா என்று எண்ணிக்கொண்டு மட்டும் இருக்கவில்லை.
மாறாக, அதற்குரிய செயலைத் தொடங்குகின்றார். அவருடைய செயல்கள் இரண்டு நிலைகளில் அமைகின்றன: ஒன்று, அவருடைய போதனை. இரண்டு, அவருடைய வல்லசெயல்கள் அல்லது அற்புதங்கள். அவருடைய போதனையும் அவருடைய செயல்களும் இணைந்து செல்கின்றன.
'மனம் மாறுங்கள். விண்ணரசு நெருங்கிவந்துவிட்டது' என்பது இயேசுவின் போதனையின் சுருக்கமாக இருக்கிறது. இயேசுவின் வருகையும் செயல்களுமே விண்ணரசு. அதை நாம் அனுபவிக்க, மனம் மாறுதல் அல்லது பாதை மாறுதல் அவசியம்.
'ஒரே செயலைச் செய்துகொண்டு வேறு மாதிரியான பலனை எதிர்பார்ப்பது இயலாது' என்பது மேலாண்மையியல் பாடம். வேறு மாதிரியான பலன் வேண்டுமெனில் செயலும் மாறுபட வேண்டும். திருச்சியிலிருந்து மதுரையை நோக்கிச் சென்றுவிட்டு, சென்னை வரவேண்டும் என நான் எதிர்பார்க்க முடியாது. சென்னை வர வேண்டுமென்றால் என் பயணத்தின் திசையும் மாற வேண்டும். நான் பத்துமுறை திருச்சியிலிருந்து மதுரை சென்றாலும் சென்னை வருவதில்லை. ஆக, ஒரே செயலைத் திரும்பத் திரும்பச் செய்வதால் அதன் பலன் மாறும் என்று எதிர்பார்த்தலும் தவறு.
புது வருடத்திற்குள் நுழைந்து மூன்று நாள்கள் கடந்திருக்கின்றன.
நம் வாழ்வின் இலக்குகள், நோக்கங்கள் எனப் பலவற்றை நாம் வரையறை செய்திருப்போம். அவற்றை வெறும் எண்ணங்களாக வைத்திருக்க வேண்டும். எண்ணத்திற்கும் செயலுக்கும் இடையே உள்ள அந்தச் சின்னக் கடினமான இடைவெளியை உடைக்க வேண்டும். இந்த ஆண்டில் நான் உடல்நலத்தோடு இருக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தால், உடனே ஒரு மருத்துவரைச் சந்தித்து என்ன செய்ய வேண்டும் என்று கலந்து பேசலாம். இந்த ஆண்டு புதிய புத்தகம் ஒன்றைப் படிக்க வேண்டும் என்றால், அதை உடனடியாக வாங்கலாம்.
என் வாழ்வில் பழைய செயல்களைச் செய்துகொண்டே புதிய விளைவுகளை அல்லது பலன்களை நான் எதிர்பார்ப்பது தவறு. எனவே, நான் மாற்ற வேண்டிய செயல்கள் அல்லது செயல்திட்டங்கள் எவை? என் உறவுநிலைகளில் ஒரே மாதிரியான பிரச்சினை வருகின்றதா? அதைச் சரிசெய்ய நான் என்ன செய்ய வேண்டும்? எப்போதும் நான் ஒரே மாதிரியாக இருந்துகொண்டு மற்றவர்கள் மாற வேண்டும் என நினைப்பதற்குப் பதிலாக, நான் ஒருமுறையேனும் என் செயல்களை மாற்றிப் பார்க்கலாமே!
'அதுமுதல் இயேசு ...' என்று இயேசுவின் பொதுவாழ்வுத் தொடக்கத்தைப் பதிவு செய்கின்றார்.
'இயேசு' என்ற இடத்தில் நம் பெயரை இட்டு,
'அதுமுதல் ராஜா ...'
'அதுமுதல் ராணி ...'
'அதுமுதல் நான் ...'
'அதுமுதல் அவர் ...' என்று நம் வாழ்வையும் புதிதாகத் தொடங்கலாமே!
நம் வாழ்வில் நடக்கும் எதுவும் விபத்து அல்ல. ஒவ்வொன்றுக்குப் பின்னும் அவருடைய கரமும் திட்டமும் இருக்கிறது. நம் செயல் ஒவ்வொன்றிலும் அவருடைய விருப்பம் நிறைவேறுகிறது என்று எண்ணி நாம் மகிழ்வதோடு அதற்கேற்ற பொறுப்புணர்வோடு செயலாற்ற வேண்டும்.
ReplyDeleteஒரே செயலைத் திரும்பத் திரும்பச் செய்வதால் அதன் பலன் மாறும் என்று எதிர்பார்த்தலும் தவறு.
இயேசு' என்ற இடத்தில் நம் பெயரை இட்டு,நம் வாழ்வையும் புதிதாகத் தொடங்கலாமே!
ம். தொடங்கலாம் தான்.
நன்றி🙏
இன்றையப்பதிவு முழுவதுமே புலர்ந்திருக்கும் புதுவருடத்தை பொலிவானதாக்கிட வழி சொல்வது போல் அமைந்துள்ளது.என் மனத்தைத் தொட்ட சில விஷயங்கள்....
ReplyDeleteநம் வாழ்வில் நடக்கும் எதுவுமே விபத்து அல்ல.ஒவ்வொன்றுக்குப் பின்னும் ‘அவருடைய’ கரமும் திட்டமும் இருக்கிறது.இதற்குத் தேவை என் பொறுப்புணர்வு.
நம் வாழ்வின் நோக்கங்கள்,இலக்குகள் இவற்றை வெறும் எண்ணங்களாக வைத்திராமல் எண்ணத்திற்கும்,செயலுக்கும் இடையே உள்ள இடைவெளியை உடைக்க வேண்டும்......என்னைப்பற்றி பிறருக்கு எடுத்துரைக்க வேண்டியது என் எண்ணங்களல்ல; செயல்களே!
மாற்றத்தை வெளிக்காரணிகளிடமிருந்து எதிர்பாராமல் என்னிடமுள்ள மாற்றத்தை வெளிக்கொணர்வது......’நான் மாறிவிட்டேன்’ என்பதை என் உள்மனதே தீர்மானிக்க வேண்டும்.
தந்தையின் வழியில் நான் மேலே குறிப்பிட்ட அத்தனையையும் பின்பற்றி வெற்றி காணும் பட்சத்தில் தந்தையின் யோசனைப்படி ‘ அது முதல் இயேசு’ எனும் இடத்தில் என் பெயரையும் இடலாம்.அதற்கு முதலில் என்னைத்தகுதியாக்கிக் கொள்ளும் பட்சத்தில் அது சரியே!
அழுத்தமான யோசனைகளை மட்டுமல்ல...அவற்றை செயலாக மாற்ற வழி சொல்லும் தந்தையின் யுத்தியை பின்பற்றினால் 2021 நமக்குப் பொலிவான வருடம் தான்! வழி சொல்லும் தந்தைக்கு என் நெஞ்சம் நிறை நன்றிகள்!!!