Friday, January 29, 2021

அழைத்தவர் உறங்குகிறார்

இன்றைய (30 ஜனவரி 2021) நற்செய்தி (மாற் 4:35-41)

அழைத்தவர் உறங்குகிறார்

இயேசு தன் சீடர்களோடு தனிமையாக இருந்ததோடு, அவர்களோடு படகில் பயணம் செய்யவும் விரும்பினார் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்குச் சொல்கிறது.

சும்மா வீட்டில் உட்கார்ந்திருந்தவர்களை, 'அக்கரைக்குச் செல்வோம்! வாருங்கள்!' என அழைத்து அனைவரையும் படகில் ஏற்றுகின்றார். படகை அவர்கள் முன்னால் செலுத்த, அவரோ படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்குகின்றார். இயேசுவின் தூக்கம் பயணக் களைப்பினாலோ, அல்லது படகின் ஓட்டத்தினாலோ வந்த தூக்கம் அல்ல. மாறாக, தானே விரும்பி, அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தூங்கும் தூக்கம். பேருந்தில் தூங்குபவர்கள் தலையணை வைத்தா தூங்குகிறார்கள்? போகிற போக்கில் தூங்கி எழுவார்கள் பயணிகள். ஆனால், இவரோ ஏறக்குறைய விமானத்தில் பயணம் செய்வதுபோல, சீட் பெல்ட் போட்டு, காலணிகளைக் கழற்றிவிட்டு, ஆடைகளைச் சற்றே தளர்த்திவிட்டு, 'டு நாட் டிஸ்டர்ப்' லைட்டைத் தனக்கு மேலே 'ஆன்' செய்துவிட்டு, தன் கண்களில் கறுப்புத் துணியைக் கட்டிக்கொண்டு, போர்வையால் நன்றாகப் போர்த்திக்கொண்டு தூங்குவதுபோலத் தூங்குகின்றார். 

வேறு படகுகளும் அவர்களோடு செல்கின்றனர். வந்திருந்தவர்கள் அனைவரும் மீன்பிடி அல்லது கடல்தொழில் செய்பவர்கள். கடலில் புயல் எழுந்தது கண்டு அவர்கள் பயப்பட, தச்சரோ தூங்கிக் கொண்டிருக்கிறார். அவர்களுக்கு அதிசயமும், சிரிப்பும், கோபமும் ஒருசேர வந்திருக்கும்.

கடலின் இரைச்சலுக்கு மேல் இருக்கிறது அவர்களுடைய இரைச்சல்: 'போதகரே, சாகப் போகிறோமே! உமக்குக் கவலையில்லையா?' 

வாழ்வு கொடுக்க வந்தவரிடம், 'நாம் சாகப்போகிறோம்' என்று அவரையும் தங்களோடு இணைத்துக்கொள்கின்றனர். எழுந்த இயேசு, இரைந்த அவர்களைக் கடிந்துகொள்ளாமல், இரையும் கடலைக் கடிந்துகொள்கின்றார். 

'காற்று அடங்கியது. மிகுந்த அமைதி உண்டாயிற்று'

இரண்டே வாக்கியங்களில் ஒட்டுமொத்த விளைவையும் சுருக்கிவிடுகின்றார் மாற்கு.

ஆனால், சீடர்களின் மனத்தில் அப்போதுதான் காற்று அடிக்கத் தொடங்குகிறது.

'நம்மோடு இருப்பவர் யார்? காற்றும் கடலும் கீழ்ப்படிகின்றனவே? தீமையின் ஆதிக்கம் இவருடைய ஒற்றைச் சொல்லுக்குக் கீழ்ப்படிகின்றதே இவர் யார்?' 

'போதகர்' என்ற நிலையில்தான் இயேசுவைக் கண்டார்கள் அவர்கள்.

போதகரை இறைமகன் எனக் காண வேண்டுமெனில் அவர்கள் மூன்று விடயங்களைச் செய்ய வேண்டும்:

ஒன்று, அச்சம் அகற்ற வேண்டும்.

இரண்டு, நம்பிக்கை கொள்ள வேண்டும்.

மூன்று, அக்கரைக்குச் செல்ல வேண்டும்.

ஆனால், அக்கரைக்கு அவரோடு செல்வதில் ஆபத்தும் இருக்கின்றது. பாதுகாப்பும் இருக்கின்றது. நம்மை அழைக்கின்ற அவர் தூங்கிவிடுகிறார் பல நேரங்களில்.

2 comments:

  1. “ அழைத்தவர் உறங்குகிறார்”.... தலைப்பே தாலாட்டாக இனிக்கிறது.” அக்கரைக்குச் செல்வோம்” என சீடர்களை அழைத்தவர் காற்றின் சீற்றத்திலும் உறங்குகிறார்....தான் அழைத்து வந்தவர்களைப் பற்றிக் கவலைப்படாதவர் போல்.” கடல் புயல் எழுந்தது கண்டு சீடர்கள் பயப்பட தச்சரோ உறங்கிக்கொண்டிருக்கிறார்”....தந்தையின் டச்!

    வாழ்வு கொடுக்க வந்தவரிடம் சாவு பற்றிப்பேசுகிறார்கள் அப்பாவி சீடர்கள்.காற்றையும், கடலையும் கடிந்து கொண்டதனால் ஏற்பட்ட அமைதியில் சீடர்கள் தங்கள் அமைதி இழக்கின்றனர். போதகரில் ஒரு “ இறைமகனை” அவர்கள் காணவில்லை என்கிறார் தந்தை.

    அவரை நம்பி, அச்சம் தவிர்த்து, நம்பிக்கை கொண்டு அக்கரைக்குச் சென்றிடினும் அவர் பல சமயங்களில் தூங்கி விடுகிறார் எனும் தந்தைக்கு ஒன்று சொல்வேன்.....அவர் தூங்குவது கூட நீங்களும்,நானும் அவரை எழுப்ப வேண்டுமெனும் காரணத்தினாலேயே!
    வாசகரை உசுப்பி விட்டுத் தீர்வு காண உதவும் தந்தைக்கு என் நன்றிகளும்! வாழ்த்துக்களும்!!!

    ReplyDelete