இன்றைய (23 ஜனவரி 2021) நற்செய்தி (மாற் 3:20-21)
மக்கள் பேசிக்கொண்டனர்
நாசி வதை முகாமிலிருந்து வெளியேறிய விக்டர் ஃப்ராங்ள் என்ற உளவியல் அறிஞர், 'லோகோதெரபி' என்ற ஓர் உளவியல் ஆற்றுப்படுத்தும் முறையைக் கண்டறிகிறார். இதன்படி, மனிதர்கள் தங்கள் வாழ்வுக்கான பொருளை உணர்ந்தார்கள் என்றால், அவர்களால் எந்தவொரு துன்பத்தையும் தாங்கிக்கொள்ள முடியும்.
மனிதர்கள் இரு வகை என்கிறார் அவர்:
முதல் வகையினர், தங்களுடைய வாழ்க்கையைத் தாங்களே தெரிவு செய்து வாழ்கின்றனர். இவர்கள் தங்கள் வாழ்வுக்கு முழுவதும் தாங்களே பொறுப்பேற்று வாழ்பவர்கள்.
இரண்டாம் வகையினர், மற்றவர்களைப் போல வாழ முயற்சி செய்பவர்கள். இவர்களைப் பற்றி அவர் பின்வருமாறு எழுதுகிறார்: 'என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள் உள்ளுணர்வு அவர்களுக்குச் சொல்லாது. தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியாது. ஆகையால், மற்றவர்கள் செய்வது போலச் செய்வார்கள், அல்லது மற்றவர்கள் தங்களுக்குப் பணிப்பதைச் செய்துகொண்டிருப்பார்கள்.'
'ஒத்துப்போதல்' அல்லது 'இணக்கம்' (conformism) சமூகவியலில் அதிகாகப் பேசப்படும் வார்த்தை. இந்தப் பண்புதான் மானுடத்தை ஒன்றிணைக்கிறது, மானுடம் வளர உதவுகிறது. 'ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்' போன்ற பழமொழிகள் வழியாக, காலங்காலமாக இது நமக்குச் சொல்லப்பட்டு, நாம் ஊரோடு ஒத்துப் போக வேண்டும் என்று நமக்குக் கற்பிக்கப்படுகின்றது.
ஊரோடு ஒத்துப் போதல் நலமா? ஊரோடு நாம் எப்போதும் இணங்கியே வாழ வேண்டுமா?
'மக்கள்'
மாற்கு நற்செய்தியில் மக்கள் பெரும்பாலும் இயேசுவின் பணிக்குத் தடையாகவே இருப்பார்கள். முடக்குவாதமுற்ற ஒருவரை நால்வர் இயேசுவிடம் தூக்கிக்கொண்டு வரும்போது, மக்கள் அங்கு தடை போல அமர்ந்திருக்கின்றனர். பேய் பிடித்த சிறுவனுக்கு நலம் தரும் நிகழ்வில் மக்கள் தம்மிடம் ஓடி வருவதைக் கண்டு விரைவில் செயலாற்றுகின்றார். இரத்தப் போக்குடைய பெண் குணமாகும் நிகழ்வில் மக்கள் கூட்டம் இயேசுவை நெருக்குகிறது. யாயிரின் வீட்டுக்கு வெளியே கூட்டம் அமர்ந்து ஒப்பாரி வைப்பதுடன் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு எள்ளி நகையாடவும் செய்கிறது. உணவருந்தக் கூட நேரம் இல்லாத அளவுக்கு மக்கள் கூட்டம் இயேசுவைச் சூழ்ந்து நிற்கிறது.
இன்றைய நற்செய்தி வாசகம் மிகக் குறுகியதாக இருந்தாலும், மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.
'இயேசு மதிமயங்கி இருக்கிறார் என்று மக்கள் பேசிக்கொண்டனர்'
தனியே இரவு முழுவது இறைவேண்டல் செய்யும் ஒருவர்,
பரிவு கொண்டு ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்கு உணவளித்த ஒருவர்,
கடல்மீது நடந்து தன் சீடர்களை நோக்கி வந்த ஒருவர்,
புதிய மணமகனாகத் தன்னை முன்வைத்து நோன்பை ஒதுக்கிய ஒருவர்,
ஓய்வுநாளில் கை சூம்பிய ஒருவருக்கு நலம் தந்த ஒருவர்,
தன்னோடு இருக்கவும், அனுப்பப்படவும் பன்னிருவரைத் தேர்ந்துகொண்ட ஒருவர்,
மக்களின் பார்வையில் 'மதிமயங்கியவர்' என்று தெரிகின்றார்.
'மதிமயங்கி இருக்கிறார்' அல்லது 'மூளை குழம்பியுள்ளார்' அல்லது 'அப்நார்மலாக இருக்கிறார்' என்று மக்கள் பேசிக்கொண்டனர்.
மக்கள் ஏன் இப்படிச் சொன்னார்கள்?
இயேசு தங்களைப் போல இருக்க வேண்டும் எனவும், தங்கள் ஊரோடு ஒத்துப் போக வேண்டும் அல்லது இணக்கமாக இருக்க வேண்டும் எனவும் அவர்கள் நினைக்கின்றனர்.
ஆனால், இயேசு தன் வாழ்வின் தெரிவுகளைத் தான் தேர்ந்தெடுக்கிறாரே ஒழிய, அவற்றை மற்றவர்களிடம் அவர் கொடுக்கவில்லை.
'உனக்காக இல்லடா! இத நீ ஊருக்காகச் செய்தே ஆக வேண்டும்!' என்று நம்மைச் சுற்றி மக்களின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. மக்கள் விரும்புவது போலப் பேச வேண்டிய, உண்ண வேண்டிய, நடக்க வேண்டிய கட்டாயத்திற்கு நாம் உள்ளாகிக்கொண்டே இருக்கின்றோம்.
ஊர் தனக்கென ஒரு வழக்கத்தை உருவாக்கிக் கொண்டு அதை மீறும் அனைவரையும் 'அப்நார்மல்' என அழைக்கிறது. அப்படி அழைத்துவிடுதல் எளிது. ஏனெனில், அவரைப் பற்றி மீண்டும் அவர்கள் அக்கறைகொள்ளத் தேவையில்லை.
இரண்டு கேள்விகள்:
(அ) மற்றவர்களின் வாழ்க்கை முறை, நடைவுடை பாவனை ஆகியவற்றைக் கண்டு, அல்லது என்னைவிட வித்தியாசமாக, அல்லது ஊராரை விட வித்தியாசமாக ஒருவர் இருக்கிறார் எனக் கண்டு, அவரை நான் 'அப்நார்மல்' என அழைக்கின்றேனா?
(ஆ) மக்கள் சொல்வதே சரி, மக்களோடு ஒத்துப் போவதே சரி, மக்களின் பேச்சுக்குப் பணிந்து செல்தலே சரி என்று நான் மக்கள் மந்தையைப் போல இருக்க முயல்கிறேனா?
இரண்டுமே தவறு.
மதிமயங்கியவர் இயேசு அல்ல.
மதிமயங்கியவர்கள் மக்களே.
தங்கள் வாழ்க்கைக்குப் பொறுப்பெடுத்து வாழும் சிலர்.......கூட இருப்பவரோடு இணங்கி வாழும் பலர்....... இதுவும் தேவை....அதுவும் தேவை..இவ்வகை இரட்டை வாழ்க்கையை தேவையின் பொருட்டு...சூழ்நிலைக்கேற்ப வளைந்து கொடுத்து வாழ்பவர்களே வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள் என்பது இன்றையப் பதிவின் சாராம்சம்.
ReplyDeleteமாற்கு நற்செய்தி பட்டியலிடும் இயேசுவின் பல செயல்களைப் பார்த்தும்....அவற்றிற்கு சாட்சியாக இருந்தும் அவரை “ மதிமயங்கியவர்” எனச்சொல்லும் மக்கள் பரிதாபத்திற்குரியவரே! ! இத்தகைய மக்கள் நம்மை மட்டும் விட்டு வைப்பார்களா என்ன?
தந்தை நம்மை நோக்கிக் கேள்விகளைத் திருப்புகிறார். என்னைப் போலன்றி வித்தியாசமாக இருப்பவரைப்பார்த்து “ அப்நார்மல்” என்கிறேனா?
மக்களோடு மந்தையாய் இருக்க விழைகிறானா?
“ உலகம் ஆயிரம் சொல்லட்டுமே! உனக்கு நீதான் நீதிபதி” எனும் பாடலின் வரிகள் என் செவிகளில் ஒலிக்கின்றன.
அழகான...யோசிக்க வைக்கும் பதிவிற்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!