இன்றைய (6 ஜனவரி 2021) நற்செய்தி (மாற் 6:45-52)
அது பேய்!
'திடீரென்று நம் அறையில் அல்லது இருளில் ஓர் உருவம் தோன்றினால், நாம், 'ஐயோ! பேய்!' என்று அலறுகின்றோமே தவிர, 'ஐயோ! கடவுள்!' என்று நாம் அலறுவதே இல்லை!'
- எப்போதோ டுவிட்டரில் படித்த வார்த்தைகள் இவை.
சமூக உளவியலில் 'லேபிளிங்' ('தலைப்பிடல்') என்ற ஒரு சொல்லாடல் உண்டு. எடுத்துக்காட்டாக, என் மனம் சோர்வாக இருக்கிறது என வைத்துக்கொள்வோம். 'சோர்வு' என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லாமல், 'வருத்தம்,' 'சோகம்' என்று உணர்வைத் தனியே பிரித்தறிந்து அதற்குத் தலைப்பிட முடிய வேண்டும். அப்படித் தலைப்பிட்டால்தான் என்னால் அந்த உணர்வைக் கடக்க முடியும். ஆக, ஒன்றுக்குத் தலைப்பிடும்போது நான் அதை முழுமையாகப் புரிந்துகொள்கிறேன். இன்னொரு பக்கம், நாம் புரிந்துகொள்ள முடியாதவற்றுக்கும் தலைப்பிடுகிறோம். எடுத்துக்காட்டாக, நான் செய்வது அனைத்திலும் ஒருவர் குறை காணுகிறார், அல்லது எனக்கு எதிராகத் திட்டம் தீட்டுகிறார், அல்லது என்னைக் கேலி செய்கிறார் என வைத்துக்கொள்வோம். 'ஓ! அவனா! அவன் ஒரு கிறுக்கன்!' அல்லது 'அவள் ஒரு லூசு' என்று நான் தலைப்பிடுவதும் உண்டு. இங்கே என்ன நடக்கிறது? என்னால் புரிந்துகொள்ள முடியாத ஒன்றுக்கு நான் தலைப்பிட்டு, அதன் பொருளைச் சுருக்கி விடுகிறேன். இந்த இரண்டாம் நிலை மிகவும் ஆபத்தானது.
ஆனால், நம் மூளை இதை ஒரு பாதுகாப்புக் கவசம் ('டிஃபென்ஸ் மெக்கனிஸம்') போலச் செய்கிறது. அப்படிச் செய்தால்தான் நமக்குப் பாதுகாப்பு என நினைக்கிறது.
இன்றைய நற்செய்தி வாசகம், நேற்றைய வாசகத்தின் தொடர்ச்சியாக இருக்கின்றது. ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குப் பகிர்ந்துகொடுத்த இயேசு, அவர்களைப் புறப்பட்டுச் செல்லுமாறு கட்டாயப்படுத்துகிறார். இறைவேண்டலை முடித்துவிட்டு, அவர்களை நோக்கிக் கடல்மேல் நடந்து வருகின்றார். அவரைக் கண்டு அஞ்சும் சீடர்கள், 'அது பேய்!' என்று சொல்கின்றனர்.
கடவுளாக இருந்தாலும், தேடப்படாத இடத்தில், தேடப்படாத நேரத்தில் அவர் தோன்றினால், 'அவர் பேய்தான்!'
அல்லது, தேடப்படாத எதுவும், தேடப்படாத இடத்தில், நேரத்தில் தோன்றினால் அது பேய்தான்!
இப்படி அவர்கள் இயேசுவைத் தலைப்பிடக் காரணம் என்ன?
நாள் முழுக்கத் தங்களோடு இருந்த இயேசுவை அவர்கள் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லையா?
'நான்காம் காவல் வேளையில்' அவர்கள் இப்படிச் சொல்கிறார்கள். 'நான்காம் காவல் வேளை' என்பது ஏறக்குறைய காலை 3 மணி முதல் 6 மணி வரை உள்ள நேரம். விடியலுக்கு முன்தான் இருள் அதிகமாக இருக்கும் என்ற நிலையில் அவர்கள் இயேசுவைக் கண்டுகொள்ளவில்லையா? அல்லது விடிந்திருந்தாலும் அவர்கள் இயேசுவை அங்கே எதிர்பார்க்காததால் அவரைக் கண்டுகொள்ளவில்லையா? தெரியவில்லை.
மூன்று காரணங்களுக்காக, அவர்கள், 'அது பேய்!' எனத் தலைப்பிட்டுத் தங்கள் பார்வையைக் குறுக்கிக் கொள்கின்றனர்:
ஒன்று, அச்சம். யூதர்களைப் பொருத்தவரையில் கடல் என்பது பேய்கள் குடிகொள்ளும் இடம். ஆகையால்தான், பெரும்பாலும் யூதர்கள் கடல்சார் தொழில்களில் ஈடுபடுவதில்லை. கலிலேய ஏரி போன்ற சிறிய நீர்நிலைகள் அவர்களது வாழ்வாதாரமாக இருந்ததால் அவற்றைப் பற்றி அவர்கள் அஞ்சவில்லை. ஆனாலும். இங்கே அஞ்சுகின்றனர். நாம் அடுத்தவரைப் பார்த்துப் பயந்து பல நேரங்களில், தலைப்புகள் இடுகிறோம்.
இரண்டு, புரிந்துகொள்ளாமை. சீடர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்பம் எப்படி பலுகியது என்று புரிந்துகொள்வதற்கு முன்னரே, அவர்களுடைய போதகர் கடலின்மேல் நடந்து வருகிறார். அதற்கு முன்னர் விடிய விடிய இறைவேண்டல் செபிக்கிறார். நாம் ஒருவரைப் பற்றிப் புரிந்துகொள்ளாத நிலையிலும் அவருக்குத் தலைப்புகள் இடுகின்றோம்.
மூன்று, மழுங்கிய உள்ளம். இது மிகவும் ஆபத்தானது. மழுங்கிய உள்ளம் தனக்குத் தானே தான் போதும் என்று முடிவெடுத்து, தன்னையே மூடிக்கொள்கிறது. உறைபனி போல மாறிவிடுகிறது. எதுவும் அதற்குள் புக முடியாது. 'எனக்கு நானே போதும்!' என்ற உள்ளம் நம்மில் வந்துவிட்டால், ஊரில் உள்ள அனைவரையும், 'முட்டாள்! அறிவுகெட்டவன்! பேய்! கிறுக்கன்! கோமாளி!' என அழைக்கத் தொடங்கிவிடுவோம்.
கேள்விகள் இரண்டு:
இன்று நான் என் கடவுளை எத்தகைய தலைப்புகளால் அழைக்கிறேன்?
நான் ஒருவர் மற்றவரை எத்தகைய தலைப்புகளால் அழைக்கிறேன்? நான் இட்ட தலைப்புகளை மாற்றிக்கொள்ளத் தயாராக இருக்கிறேனா?
தலைப்புகள் சீடர்களின் மனத்தில் எந்த அளவுக்குப் பதிந்தன என்றால், இயேசு படகில் ஏறினாலும் அவர்களால் அவரைக் கண்டுகொள்ள முடியவில்லை.
'அது பேய்!' என்றவர்களுக்கு, 'எல்லாம் பேய்' என்றே தெரிகிறது.
"தேடப்படாத எதுவும், தேடப்படாத இடத்தில், நேரத்தில் தோன்றினால் அது பேய்தான்!"👌
ReplyDelete*1)அச்சம்
*2)புரிந்துகொள்ளாமை.
*3)மழுங்கிய உள்ளம்.
Invariably I(we) possess all the three.
கேள்விகள் இரண்டு:
பதில் ஒன்று:மாற்ற வேண்டியதை,மாற்றத் தயாராய் இருக்கிறேன்.
நன்றி🙏
கடவுளாக இருந்தாலும் தேடப்படாத இடத்தில்,தேடப்படாத நேரத்தில் தோன்றினால் அவர் ‘பேய்தான்!’
ReplyDeleteதேடப்படாத எதுவும் தேடப்படாத இடத்தில்,நேரத்தில் தோன்றினால் அதுவும் ‘ ‘பேய்தான்!
கடலின்...காற்றின் சூறாவளியிலிருந்து சீடர்களைக் அக்கரை சேர்க்க வந்த கர்த்தருக்கு இக்கதியெனில் உங்களுக்கும்,எனக்கும்...??
அச்சம், புரிந்து கொள்ளாமை,மழுங்கிய உள்ளங்களைக் காரணிகளாகத் தந்தை காட்டினாலும் சற்று முன் ஐயாயிரம் பேருக்கு அப்பம் கொடுத்தவர் என்ற காரணத்திற்காவது அவர்கள் அவரை அடையாளம் கண்டிருக்க வேண்டுமே!
தந்தையின் கேள்வி.... இன்று என் கடவுளை...என் அயலானை என்ன பெயரிட்டு அழைக்கிறேன்? ஒருவனை ‘ முட்டாளே!’ என விளிக்குமுன் ஒரு முட்டாள் தான் அடுத்த முட்டாளை இனம் கண்டுகொள்ளும் எனும் ஜாக்கிரதை உணர்வு நமக்கு எழுந்தால் நலம்!
நான் பேயா? தேவதையா? எப்படி அடையாளம் காணப்படப் போகிறேன்? யோசிக்க வைத்த தந்தைக்கு நன்றிகள்! அருமையானதொரு பதிவு!!!
ஆமென்!
ReplyDelete