இன்றைய (22 ஜனவரி 2021) நற்செய்தி (மாற் 3:13-19)
தாம் விரும்பியவர்களை
கடந்த சில நாள்களுக்கு முன்பாக, இறையழைத்தல் பற்றிய ஒரு மெய்நிகர் கருத்தரங்கில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது நடைபெறும் இறையழைத்தல் முகாம் முறை பற்றியும், அருள்பணி மற்றும் துறவற வாழ்வுப் பயிற்சிக்கான மாணவர்கள் மற்றும் மாணவியர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை பற்றியும் பேசப்பட்டது. இக்கருத்தரங்கில் பேசியவர்களில் அனைவரும் தவறாமல் ஒன்றைக் குறிப்பிட்டார்கள். அதாவது, வருகின்ற மாணவர்கள் மற்றும் மாணவியர்கள் தங்களின் முழு விருப்பத்தோடு வர வேண்டும். ஏனெனில், கட்டாயத்தின்பேரில் வருபவர்கள் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள்.
நிற்க.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன் பன்னிரு திருத்தூதர்களை அழைக்கின்ற நிகழ்வை வாசிக்கின்றோம்.
எந்தவொரு இறையழைத்தல் முகாமும் நடத்தாமல்,
யாருடைய பரிந்துரைக் கடிதமும் இல்லாமல்,
விளையாட்டுப் போட்டிகள், எழுத்துத் தேர்வுகள் இல்லாமல்,
யாருடைய பயோ டேட்டாவும் சேகரிக்கப்படாமல்
இனிதே நிறைவேறுகிறது இயேசு நடத்திய இறையழைத்தல் முகாம்.
'மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களை அழைத்தார். அவர்களும் அவரிடம் வந்தனர்.'
மலைமேல் இயேசு ஏறியது மூன்று நிலைகளில் முக்கியத்துவம் பெறுகிறது: ஒன்று, மலையில் அவர் இறைவேண்டல் செய்கின்றார். ஆக, தன் தந்தையின் துணையோடு தன் திருத்தூதர்களைத் தெரிவு செய்கின்றார். இரண்டு, மோசே மலைமேல் ஏறி நின்று இஸ்ரயேல் குலங்கள் பன்னிரண்டை ஒருங்கிணைத்தது போல, இயேசு புதிய இஸ்ரயேலின் அடித்தளத்தை உருவாக்குகின்றார். மூன்று, கீழே நின்று பார்ப்பதை விட, மலைமேல் நின்று பார்க்கும்போது பார்வை அகலமாகவும் முழுமையாகவும் இருக்கும். ஆக, இயேசு தன் திருத்தூதர்களை ஒரே முழுமையான பார்வையால் பார்க்கின்றார்.
இரு நோக்கங்களுக்காக அவர்களை அழைக்கின்றார்:
'தம்மோடு இருக்கவும், நற்செய்தி பறைசாற்ற மற்றும் தீய ஆவிகள் மேல் அதிகாரம் கொண்டிருக்க அனுப்பப்படவும்' அவர்களை அழைக்கின்றார்.
இயேசு, முதலில், தன் திருத்தூதர்களைத் தன்னுடன் வைத்துக்கொள்ள விரும்புகின்றார்.
இது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
'தனியாய் எவரும் சாதிப்பதில்லை' என்பதை அறிந்தவர் இயேசு என்பதை இங்கே நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
ஒவ்வொருவரும் அழைக்கப்பட்டபோது அவர்களுடைய உள்ளத்தில் எவ்வளவு துள்ளல் இருந்திருக்கும்?
இன்னொருவரால் நாம் விரும்பப்படுவது எவ்வளவு பெரிய பாக்கியம்?
அது நமக்கு எவ்வளவு தன்னம்பிக்கையையும் தன்மதிப்பையும் கொடுக்கிறது?
இன்று நான் கேட்கின்ற கேள்வி இதுதான்:
(அ) இயேசு விரும்பி என்னை அழைக்கும் அழைக்கும் அளவுக்கு நான் என்னையே தகுதிப்படுத்திக்கொள்கிறேனா? 'இயேசு தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கவில்லை. தேர்ந்தெடுத்தவர்களைத் தகுதியாக்கினார்' என்று பலர் சொல்லக் கேட்டிருப்போம். ஆனால், இயேசுவின் பார்வையில் இவர்கள் ஏதோ ஒரு வகையில் தகுதியானவர்களாக இருந்ததால்தான், அவர் அவர்களைத் தெரிவு செய்கின்றார்.
(ஆ) இயேசுவோடு - அவரோடு - இருப்பதுதான் அழைத்தல் வாழ்வின் முதன்மையான நோக்கம் என்றால், இன்று பல நேரங்களில் அதை நான் தவிர்ப்பது ஏன்? அவரோடு இருத்தல் என்னும் முதல் நோக்கம் நிறைவேறினால்தான், அனுப்பப்படுதல் என்னும் இரண்டாம் நோக்கம் நிறைவேறும். அவரோடு இல்லாமல் நான் புறப்பட்டுப் போகும் தளங்கள் அனைத்தும் வெற்றுத் தளங்களே.
மலைமேல் ஏறி நிற்கும் இயேசுவின் கண்களில் நானும் விருப்பமானவன்(ள்) என்றால் எத்துணை நலம்!
“ தேவ அழைத்தல்” குறித்த ஒரு பகிர்தல். இயேசு தான் தெரிந்தெடுத்தவர்களை மட்டுமே பார்த்தார்....அவர்களின் பின்புலங்களை யல்ல. தான் ‘ முக்கிம்’ என நினைத்த வற்றை மலைமேல் இருந்தபடியே செய்கிறார் இயேசு. “ இன்னொருவரால் நாம் விரும்ப ப் படுவது எத்துணை பெரிய விஷயம்!
ReplyDelete“ இயேசு தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கவுல்லை....தேர்ந்தெடுத்தபின தகுதியாக்கினார்.”....அருமை! மலைமேல் ஏறிநிற்கும் இயேசுவின் கண்களில் நானும் விருப்பமானவள் என்றார் எத்துணை நலம்!
இப்பதிவு அருட்பணியாளர்கள் மற்றும் கன்னியர்களைக் குறிவைப்பது போல் இருப்பினும்,திருமுழுக்கு பெற்ற அனைவருமே அழைக்கப்படவர்கள் தான் என,பதைக் கோடுகாட்டுகிறது்
“இயேசுவோடு இருப்பது தான் அழைத்தல்”...... நெத்தியடியாகச் சொல்லும் தந்தைக்கு வாழ்த்துக்களும்! நன்றிகளும்!!!
Good Reflection Yesu
ReplyDelete