Monday, January 18, 2021

பசியாய் இருந்தபோது

இன்றைய (19 ஜனவரி 2021) நற்செய்தி (மாற் 2:23-28)

பசியாய் இருந்தபோது

'அப்பத்தின் வீடு' என்று பொருள்படும் 'பெத்லகேம்' என்ற ஊரில் பிறந்ததால் என்னவோ, இயேசுவுக்கு எங்கே சென்றாலும் 'உணவை' மையமாக வைத்தே பிரச்சினைகள் எழுகின்றன.

'நோன்பு இருத்தல்' - அதாவது, உண்ணாமல் இருத்தல் - நேற்றைய நற்செய்தியில் அவர் எதிர்கொண்ட விவாதம்.

இன்றைய நற்செய்தியில் அவருடைய சீடர்கள் ஓய்வுநாளில் கதிர்களைக் கொய்து உண்கின்றனர்.

மேலும், இயேசு பாவிகளோடு உணவருந்துவது பெரிய பேசுபொருளாக இருந்தது.

இயேசுவின் சீடர்களின் செயல்களைப் பார்த்தால், அவர்கள் எந்நேரம் சாப்பிட்டுக் கொண்டே இருந்தார்கள் என்று நகைச்சுவையாக எண்ணத் தோன்றுகிறது:

மற்றவர்கள் நோன்பு இருக்கும் நேரத்தில் அவர்கள் சாப்பிடுகிறார்கள்.

ஓய்வுநாளில் கதிர்களைக் கொய்து சாப்பிடுகிறார்கள்.

பாலைநிலத்தில், 'அனைவரையும் அனுப்பிவிடும் (நாம் சாப்பிடுவோம்!)' என்று இயேசுவிடம் சொல்கின்றனர்.

'பசி' - இதுதான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் எழும் பிரச்சினைக்குக் காரணம்.

பசியை வழக்கமாக மூன்று நிலைகளில் புரிந்துகொள்ளலாம்:

(அ) நாமே வலிந்து ஏற்கும் பசி - அதாவது, நோன்பு. நோன்பு இருத்தலின் வழியாக, நான் விரும்பி உணவை மறுக்கிறேன், பசியை விரும்பி ஏற்கிறேன்.

(ஆ) புகுத்தப்படும் பசி - வறுமை, ஏழ்மை, புலம்பெயர்தல், இயற்கைச் சீற்றம் போன்றவற்றால் பாதிக்கப்படும் பலர் பசியோடு இருக்கின்றனர், தூங்குகின்றனர், வேலை செய்கின்றனர், சிலர் இறந்தும் விடுகின்றனர்.

(இ) பரிந்துரைக்கப்படும் பசி - மருத்துவமனைகளில் நாம் இரத்தப் பரிசோதனை செய்வதற்கு முன், அல்லது சில மருந்துகள் எடுக்கும் முன், அல்லது அறுவைச் சிகிச்சைக்கு முன், அல்லது நம் உடல் பருமனைக் குறைக்க என்னும் காரணங்களுக்காக பசி பரிந்துரைக்கப்படுகிறது. இது நீடித்த பசி அல்ல.

இன்றைய நற்செய்தியில் நான்காம் வகையான ஒரு பசியைப் பார்க்கிறோம். தேவையற்ற சட்ட திட்டங்கள் உருவாக்குகின்ற பசி. தவறான அரசியல் சட்டம், அரசியல் சூழல், அல்லது சமூக அமைப்பு போன்றவற்றால் நிறைய மக்கள் பசியோடு உறங்கச் செல்கின்றனர்.

இரண்டு எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம்: ஒன்று, பெருந்தொற்றின் நேரத்தில், பல மக்கள் பசியால் வாடிய போது அவர்களுக்கு உணவு தராமல், கோதுமையிலிருந்து எத்தனால் பெறப்பட்டு, கிருமிநாசினிகள் தயாரிக்கப்பட்டு ஏழைகளுக்கு வழங்கப்படும் என்று மோடி அரசு அறிவித்தது. உணவுக்கான வழியை அடைத்துவிட்டு, கையில் சானிட்டைசர் தருவதாகச் சொன்னது அரசு. வயிறு காலியாக இருக்க, கையில் சானிட்டைசர் தேய்த்தால் என்ன? தேய்க்காவிட்டால் என்ன? இரண்டு, வேளாண் சட்ட வரைவுகள் நடைமுறைக்கு வருவதற்கு முன் பல கார்ப்பரேட்டுகள் உணவுச் சேமிப்புக் கிடங்குகளை உருவாக்கிவிட்டன. இவர்கள் அனைத்து உணவுப் பொருள்களையும் வாங்கி மொத்தமாகச் சேகரித்துக் கொண்டால் மக்கள் பட்டினி கிடக்க நேரிடும்.

ஏறக்குறைய, இயேசுவின் காலத்தில் ஓய்வுநாள் சட்டம் வறியவர்களுக்கு இப்படித்தான் தீங்கிழைத்தது. வசதி இருப்பவர்கள் ஓய்வு நாளுக்கும் சேர்த்து உணவு சேகரித்துக் கொள்வார்கள். ஏழைகள் என்ன செய்வார்கள்? பயணிகள் என்ன செய்வார்கள்? நோயுற்றவர்கள் என்ன செய்வார்கள்? குழந்தைகள், பெரியவர்கள் என்ன செய்வார்கள்?

மனிதர் தன்னுடைய அடிப்படையான பசி என்னும் உணர்வைத் தணித்துக்கொள்ளக் கூட இயலாத நிலைக்கு அவரை வைத்திருந்த ஓய்வுநாள் சட்டத்தைக் கடிந்துகொள்கின்றார் இயேசு.

இரண்டு நிலைகளில் இயேசு அவர்களின் புரிதலை மாற்ற முயல்கின்றார்:

ஒன்று, பசி என்று வந்தவுடன் பேரரசர் தாவீதும் தடை செய்யப்பட்ட அர்ப்பண உணவை உண்டுள்ளார்.

இரண்டு, 'மனிதர்களுக்காகச் சட்டமே அன்றி, சட்டத்திற்காக மனிதர்கள் அல்லர்' என்று சட்டம் இயற்றப்பட்டதன் நோக்கத்தை எடுத்துரைக்கின்றார் இயேசு.

இந்த வாசகம் சொல்லும் பாடம் என்ன?

பல நேரங்களில் நாம் நமக்கு நாமே வரையறைகள் வைத்துக்கொண்டு, அவற்றை மீறுவதற்காக நாமே நம்மேல் பச்சாதப்படுகின்றோம், அல்லது குற்றவுணர்வு கொல்கின்றோம், அல்லது கோபப்படுகின்றோம்.

எடுத்துக்காட்டாக, 'காலையில் 6 மணிக்கு நான் எழுவேன்' என எனக்கு நானே வரையறுத்து விட்டு, தூங்கச் செல்கிறேன். காலையில் ஏதோ ஒரு காரணத்திற்காக என்னால் எழ முடியவில்லை. அப்போது என் மேலேயே எனக்குக் கோபம் வருகிறது. 'நான் எனக்குக் கொடுத்த சின்ன வாக்குறுதியையே என்னால் கடைப்பிடிக்க இயலவில்லையே!' என்ற குற்றவுணர்வு வருகிறது. அன்றைக்கு ஏதாவது தவறு நடந்தால், 'எல்லாவற்றுக்கும் காரணம் நீ லேட்டா எழுந்ததால்தான்' என்று ஆழ்மனம் பயமுறுத்துகிறது. நான் 6 மணிக்கு எழுவேன் என்று வாக்குறுதி எனக்காக என்பதை விடுத்து, நான் அந்த வாக்குறுதிக்காக என்ற நிலை வருதல் ஆபத்து.

என்மேல் நான் இரக்கம் காட்டவில்லை என்றால், யார் இரக்கம் காட்டுவார்?

என் பசியை நான் போக்கவில்லை என்றால், யார் என் பசியைப் போக்குவார்?

அவரவர் பசியை அவரவர் போக்கிக் கொள்ள வேண்டும் - அது ஓய்வுநாளாக இருந்தாலும்!

2 comments:

  1. தந்தை வரையறுக்கும் வகை வகையான பசிகள் போதாதென்று ஆட்சியில் இருப்பவர்கள் மக்களின் மேல் திணிக்கும் அசாதாரணப்பசி.” பசி வந்தால் பத்தும் பறந்து போம்.” சும்மாவா சொன்னார்கள்? இதற்கு பேரரசர் தாவீது மட்டும் எப்படி விதிவிலக்காக முடியும்?

    ‘பசி’ என்பது திணிக்கப்பட வேண்டிய உணர்வல்ல.... தணிக்கப்பட வேண்டிய ஒரு உணர்வு. இதை எப்படி ஒருவர் தடைபோட இயலும்? யாருக்கும் உபயோகமற்ற சட்டங்களால் வரும் பயன்தான் என்ன! சாடுகிறார் இயேசு? என் பசியை நான் தான் போக்க வேண்டும்.....அது ஓய்வு நாளென்று என் வயிற்றுக்குத் தெரியவா போகிறது?

    இந்தப்பதிவு எனக்குச் சொல்வது...என் பசி மட்டுமல்ல... அடுத்தவர் பசியையும் போக்கவல்ல இரக்க மனம்...தாராள உள்ளம் எனக்கிருந்தால் எத்துணை நலம்! இறைவன் எனக்கதை அளிப்பாராக! வாழ்க்கையில் நாம் அன்றாடம் சந்திக்கும் ஒரு பிரச்சனை பற்றி சிந்திக்க வைத்த தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete