திபா 70ம் 69ன் கருத்தையே கொண்டிருப்பதால் அதை விடுத்து இன்று நாம் திபா 71ஐ சிந்திப்போம்.
இந்தத் திருப்பாடலுக்கு எபிரேய மொழிப்பாடத்தில் தலைப்பு இல்லை. தமிழ்ப்பாடத்தில் 'முதியோரின் மன்றாட்டு' எனக் கொடுக்கப்பட்டுள்ளது. தலைப்பு இல்லாத காரணத்தால் ஒரு சிலர் இதை திபா 70ன் நீட்சி எனவும் கருதுகின்றனர்.
தன் வாழ்நாளின் மாலைப்பொழுதில், அதாவது அஸ்தமனத்தில், நிற்கும் ஒருவர் - ஆணோ, பெண்ணோ - தன் வாழ்வைத் திரும்பிப் பார்த்து, தான் பயணித்த பாதையை நினைத்தவராய் இறைவனை நோக்கித் தன் கண்களை உயர்த்தும் பாடலே இத்திருப்பாடல்.
'Growing Old Gracefully' என்பது இன்று அதிகமாக எல்லா இடத்திலும் பேசப்படும் ஒரு கருத்தியல். பிறக்கின்ற ஒவ்வொன்றுமே வளர வேண்டும். வளர்தல் அல்லது முதிர்தல் என்பது இயற்கையின் நியதி. இந்த வளர்தலையும், முதிர்தலையும் உடல் ஒரு மாதிரி செய்கின்றது. மனம் மற்றொரு மாதிரி செய்கின்றது. சிலர் உடலால் முதிர்ந்திருப்பர். ஆனால் சிந்தனையால் இளமையாயிருப்பர். சிலர் உடல் இளமையாயிருக்க, சிந்தனை முதிர்ந்து (முதிர்ச்சி அல்ல!) போய் இருக்கும்.
மனமும், உடலும் ஒரே நேரத்தில், ஒரே போல வளர்வதில்லை என்பதும் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று.
'வாழும் கலை' என்று சொல்லும் அமைப்பு சொல்வதும் இதுதான்: பல நேரங்களில் நாம் நம் உடலுக்கு வெளியே நடக்கும் செயல்களைத்தான் சிந்திக்கின்றோமே தவிர, உடலுக்குள் நடக்கும் தொழிற்சாலையின் அமைப்பை நாம் புரிந்து கொள்வதேயில்லை. அதைப் புரிந்து கொள்ளும் முயற்சியைக் கூட நாம் எடுத்ததில்லை. சளிப் பிடிக்கும் போது தான் நம் மூக்கு நினைவிற்கு வருகின்றது. ஆஸ்துமா வரும்போதுதான் நம் நுரையீரல் நினைவிற்கு வருகிறது.
மனித வளர்ச்சியை பலரும் பல்வேறு நிலைகளாகப் பிரிக்கின்றனர். ஷேக்ஸ்பியர் மனித வாழ்க்கையை ஏழு நிலைகளாகப் பிரித்து இந்த ஏழு நிலைகளிலும் ஏழு கதாபாத்திரங்களில் நாம் நடிக்கின்றோம் என்று குறிப்பிடுகின்றார். எரிக்சன் என்னும் உளவியல் அறிஞர் குறிப்பிடும் எட்டு நிலைகளே இன்றும் அதிகப் பேரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று:
அ. குழந்தைப் பருவம் (0 - 18 மாதங்கள்) - போராட்டம்: நம்பிக்கை - அவநம்பிக்கை.
ஆ. தொடக்க குழந்தைப் பருவம் (2 - 3 ஆண்டுகள்) - போராட்டம்: தன்னிச்சை - வெட்கம் மற்றும் குழப்பம்.
இ. பள்ளிக்கு முன் பருவம் (3 - 5 ஆண்டுகள்) - போரட்டம்: ஆர்வம் - குற்ற உணர்வு.
ஈ. பள்ளிப் பருவம் (6 - 11 ஆண்டுகள்) - போரட்டம்: கடின உழைப்பு - தாழ்வு மனப்பான்மை.
உ. விடலைப் பருவம் (12 - 18 ஆண்டுகள்) - போரட்டம்: தான்மை - அடையாளக் குழப்பம்.
ஊ. முன் இளமைப் பருவம் (19 - 40 ஆண்டுகள்) - போராட்டம்: நெருக்கம் - தனிமை.
எ. பின் இளமைப் பருவம் (40 - 65 ஆண்டுகள்) - போராட்டம்: வளர்ச்சி - தேக்கம்.
ஏ. முதிர் பருவம் (65 - 0 ஆண்டுகள்) - போரட்டம்: நிறைவு - விரக்தி.
இந்த எட்டுப் பருவங்களும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உணவுப் பழக்கம், கலாச்சாரம், வாழ்க்கை நிலை ஆகியவற்றின் பின்புலத்தில் எடுக்கப்பட்டவை. இந்தியா போன்ற வளரும் நாடுகளின் வாழ்க்கை நிலை சராசரி வயது 65. அப்படியிருக்க இதை நாம் அப்படியே நமக்கு எடுத்துக்கொள்ள முடியாது. சரியா?
கவிப்பேரரசு வைரமுத்து மனித வாழ்கை நிலையை எட்டு எட்டு என 64 வயது வரை எட்டு எட்டுக்களாகப் பிரித்துள்ளார். இதைத் திரைப்படப்பாடலாக நாம் பாட்ஷா திரைப்படத்தில் கேட்டிருப்போம். வைரமுத்துவின் வகைப்பாடு நமக்குப் பொருந்துகின்ற ஒன்று.
சரி இதற்கும் திபா 71க்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா?
திபா 71 அல்லது எபிரேய சிந்தனையைப் பொறுத்த வரை மனித வாழ்கை நான்கு நிலைகள்:
அ. தாயின் வயிறு.
ஆ. பிறப்பு.
இ. இளமை.
ஈ. முதுமை.
அறிவியல், உளவியல் மற்றும் சமூகவியல் ஆய்வுகள் இல்லாத போது பிரிக்கப்பட்ட இந்த வகைப்பாடு மிகவும் 'பொதுவானதாகத்' தோன்றினாலும், இன்றைய உளவியல் செய்யாத ஒன்றை எபிரேய சிந்தனை செய்திருக்கிறது. அதாவது தாயின் வயிற்றில் குழந்தை இருப்பதையும் குழந்தையின் வளர்ச்சி நிலையில் ஒன்றாகக் கருதியது. இது மிகவும் சிறப்பான ஒன்று. குழந்தையின் பிற்கால வளர்ச்சி அதன் தாயின் வயிற்றிலேயே நிர்ணயிக்கப்பட்டு விடுகின்றது. ஆகையால் தான் முதல் ஏற்பாட்டு நூல்கள் அதிகமாக 'தாயின் வயிற்றில் இருக்கும் போது' என்று பேசுகின்றன.
நம் பாடகர் இன்று தன் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லும் போது:
அ. வயது முதிர்ந்த
ஆ. நரைத்த
இ. ஆற்றல் குறைந்த என்று குறிப்பிடுகின்றார்.
'பலருக்கு நான் ஒரு புதிராய்க் காணப்படுகின்றேன்!'
நாம் வயதானவராக இருக்கும் போது நாம் மற்றவர்களுக்குப் புதிராக இருக்கின்றோமோ இல்லையோ நமக்கே நாம் புதிராகத் தான் இருப்போம்.
நடக்க வேண்டும் என்று மனம் நினைக்கும். ஆனால் கால் நடக்க மறுக்கும். எல்லாவற்றையும் சாப்பிட வேண்டும் போல இருக்கும். ஆனால் எதுவமே ஒவ்வாது. காலையில் ஷேவிங் செய்ய கையை முகத்துக்கு அருகில் கொண்டு சென்றால் அது வேறெங்கோ போகும். சாப்பிடும் போது சட்டையில் கொட்டும். நம்மை அறியாமல் எச்சில் கொட்டும். நீர் பிரியும். கை, கால்கள் தொடுவுணர்வை இழக்கும். எழுத்துக்கள் இரட்டிப்பாகத் தெரியும். நா குழறும். கை நடுங்கும்.
என்ன நேற்று வரை நல்லாதானே இருந்தேன்? இன்று என்ன ஆயிற்று? என்று நாம் நம்மையே கேட்போம்.
இந்த நிலையில் நமக்கு இருக்க வேண்டிய மனநிலை என்ன? திபா 71:8 மட்டும் தான்:
அ. என் நாவில் உள்ளதெல்லாம் உமது புகழே.
ஆ. நாளெல்லாம் நான் பேசுவது உமது பெருமையே.
இந்த வயதில் தன்னை நோக்கி நாம் மனதைத் திருப்பினால் அங்கே விரக்தி தான் வரும். ஆகவே இறைவனை நோக்கி மனதைத் திருப்பி, கடந்து வந்த பாதைக்கு, உடன் நடந்து வந்தவர்களுக்கு 'நன்றி' எனச் சொல்லத் தொடங்கினாலே போதும்.
நம் ஒவ்வொரு வாழ்க்கை நிலையும் இறைவனும், இயற்கையும் அளித்த கொடை. நாளை முதுமை அடைவதை நினைத்து இன்றே கவலைப்படத் தொடங்குவதும், முதுமை அடைந்தபின் 'ஐயோ...அன்னைக்கு நல்லா இருந்துச்சே!' என்று எரிச்சல் படுவதும் சால்பன்று.
ஒவ்வொரு வாழ்க்கை நிலையையும், முழுமையாக வாழ்ந்தால்...
அஸ்தமனம் கூட அழகுதானே!
To watch the Video Song of Vairamuthu on Eight Stages of Life click here:
Eight Stages of Life