Sunday, December 8, 2013

எங்கிருந்து வருகின்றீர்?

யூதாநாட்டுப் பெத்லகேமில், யூதா குலத்தைச் சார்ந்த லேவியரான ஓர் இளைஞர் தங்கியிருந்தார். அவர் யூதாநாட்டுப் பெத்லகேம் நகரிலிருந்து தாம் தங்கி வாழ, வேறோர் இடத்தைத் தேடிப் புறப்பட்டுச் சென்றார். செல்லும் வழியில் எப்ராயிம் மலைப் பகுதியில் இருந்த மீக்காவின் வீட்டை நெருங்கினார். மீக்கா அவரிடம், 'எங்கிருந்து வருகின்றீர்?' என்று கேட்டார். அவர் அவரிடம், 'நான் யூதா நாட்டுப் பெத்லகேமிலிருந்து வரும் ஒரு லேவியன். நான் தங்கி வாழ்வதற்கு ஓர் இடத்தைத் தேடிக் கொண்டிருக்கின்றேன்' என்றார். (நீதித் தலைவர்கள் 17:7-9)

நீதித் தலைவர்கள் நூலில் அடிக்கடி ஒரு வசனம் இதுதான்: 'அந்நாள்களில் இஸ்ரயேலுக்கு அரசன் கிடையாது'. அரசன் இல்லாத நாளில் அவர்கள்கள் வாழ்வு எப்படி இருந்ததற்கு மேற்காணும் நிகழ்வு நல்ல எடுத்துக்காட்டு. யூதா நாட்டுப் பெத்லகேமிலிருந்து ஒரு லேவியர் வேலை தேடிப் புறப்படுகின்றார். பெத்லகேமில் இறைவனின் இல்லம் இருந்தது. இறைவனின் இல்லத்திற்குப் பொறுப்பாக லேவியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். 'கோயிலுக்கு யாராவது வந்தால்தானே சாமியார்கள் தேவை'. இஸ்ரயேல் மக்கள் இறைவனை நாடித் தேடவில்லை. தங்கள் மனத்தில் பட்டதைச் செய்யத் தொடங்குகின்றனர். யாரும் கோயிலுக்கு வராததால் வேலையிழந்த ஒரு லேவியர் எப்ராயிம் மலை நாட்டைத் தேடிச் செல்கின்றார். மீக்காவின் வீட்டைக் கண்டுபிடிக்கின்றார். மீக்கா தன் வீட்டிற்கெனத் தனியாகக் கோவில் ஒன்றைக் கட்டியிருக்கின்றார். இங்கும் ஒரு 'irony'. 'மீக்கா' என்றால் 'மிக்கா யா?' – 'கடவுளுக்கு நிகர் யார்?' என்று அர்த்தம். 'யாவேக்கு நிகர் யார்?' என்ற பெயர் கொண்ட ஒருவர் யாவேயை மறந்துவிட்டு தன் இல்லத்தில் ஒரு கோயிலைக் கட்டுகின்றார். 

'கடவுள் இல்லையென்றால் மனிதர்கள் எப்படி இருப்பார்கள்?' என்று பயணம் படத்தில் ஒருவர் கேள்வி கேட்பார். அதற்கு அருகிலிருக்கும் 'பகுத்தறிவாளர்' சொல்வார்: 'மனிதர்கள் தங்கள் சொந்தக் கால்களில் நிற்கத் தொடங்கியிருப்பார்கள்!'

கடவுள் ஏன்? கடவுளின் பணியாளர்கள் ஏன் தேவை? கடவுள் பணி என்றால் என்ன? மக்கள் பணிதான் மகேசன் பணியா? 

மீக்காவின் வீட்டில் என்ன நடந்தது? லேவியருக்கு வேலை கிடைத்ததா? 

நாளை பார்ப்போம்.

1 comment:

  1. Anonymous12/08/2013

    கடவுள் இல்லையென்றால் மனிதர்கள் சொந்தக்காலில் நிற்க தொடங்கியிருக்கலாம் தான்.ஆனால் அடுத்தவர்கள் காலை வாரிவிடாமல் நம்மைக் காப்பது கடவுள் இருக்கிறார் என்ற எண்ணமே.இதை மனிதர்களுக்குப்
    புரியும் வகையில் எடுத்துச் சொல்ல கடவுளின் பணியாளர்கள் கண்டிப்பாகத் தேவைதான்.

    ReplyDelete