Tuesday, December 31, 2013

பழையன கழிதலும் புதியன புகுதலும்

கல்லூரி மாணவன் ஒருவனுக்கு ஃபெராரி கார் என்றால் மிகவும் பிடிக்கும். எந்நேரமும் அந்தக் கார் பற்றியே எண்ணிக் கொண்டிருப்பான். தன் நண்பர்களோடு பேசும் போதும் அதைப் பற்றியே பேசுவான். அந்த காரைப் பற்றி எங்கே செய்தி இருந்தாலும் அதை வெட்டி எடுத்துக் கொள்வான். தன் அறை முழுவதும் அந்தக் காரின் ஃபோட்டோக்களை ஒட்டி வைத்திருந்தான். கல்லூரிப் படிப்பு முடிக்கும் தறுவாயில் பெரிய தொழிலதிபராய் விளங்கிய தன் தந்தையிடம் ஃபெராரி வாங்கித் தருமாறு கேட்கிறான். 'நீ கல்லூரிப் படிப்பை முடிக்கும் இறுதி நாளில் உனக்கு கார் நிச்சயம்!' என்கிறார். கல்லூரிப் படிப்பின் இறுதி நாள். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என முடிந்து வீடு திரும்புகிறான். வீட்டின் கேட்டைத் திறந்தவுடன் கார் நிற்கும் என நினைக்கிறான். ஆனால் ஏமாற்றம். கார் நிறுத்தத்தில் சென்று பார்க்கிறான். அங்கும் ஃபெராரி இல்லை. கோபத்தோடும் ஏமாற்றத்தோடும் வீட்டிற்குள் செல்கிறான். அவனை ஆரத்தழுவும் தந்தை ஒரு பார்சலை அவனிடம் தருகின்றார். வேகமாகத் திறக்கிறான் மாணவன். உள்ளே ஒரு புதிய டைரி. கோபம் அதிகமாகிவிட, நீங்கள் என்னை ஏமாற்றிவிட்டீர்கள்! நான் இன்னும் ஒரு நிமிடம் கூட இங்கே இருக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு வீட்டை விட்டுப் புறப்படுகிறான். தனியாக வீடு எடுத்துத் தங்கி, நல்லதொரு வேலை, திருமணம் என்று செட்டில் ஆகி விடுகிறான். தன் சம்பளத்தில் தன் கனவுக் காரையும் வாங்கி விடுகிறான். ஒரு நாள் அவனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு: 'உங்கள் தந்தை இறந்து விட்டார்!' கோபத்தில் தந்தையின் இறப்பிற்குக் கூடச் செல்ல மறுத்து விடுகிறான். சில வருடங்கள் கழித்து தந்தைதான் இல்லையே, தான் இருந்த வீட்டையாவது பார்த்துவிட்டு வரலாம் என நினைத்துப் புறப்படுகிறான். ஒவ்வொரு அறையாகப் பார்த்துக் கொண்டு வந்த போது, தன் தந்தையின் அறைக்குள் நுழைகிறான். அங்கே அவன் கல்லூரி பட்டவிழா அன்று தந்தை பரிசளித்த டைரியும் இருக்கின்றது. அதில் என்னதான் இருக்கும்? என எண்ணி அதைத் திறக்கிறான். உள்ளேயிருந்து ஒரு கார் சாவி கீழே விழுகின்றது. அந்த டைரிக்குள் கார் வாங்கியதற்கான பில்லும் இருக்கின்றது. அந்த பில்லில் இருந்த ஃபோன் நம்பரைத் தொடர்பு கொண்டு அந்தக் கார் கம்பெனியை விசாரிக்கிறான். 12 வருடங்களாக அந்தக் கார் டெலிவரி எடுக்கப்படாமல் நிற்பதாகச் சொல்கின்றனர் அவர்கள். ஒரு நிமிடம் நின்று அன்று டைரியைத் திறந்து பார்த்திருந்தால் இவ்வளவு மனவருத்தம் வந்திருக்காதே என்ற நினைவுடன் தன் வீடு திரும்புகிறான்.

இன்று புத்தாண்டுப் பெருவிழா. ஒவ்வொரு புத்தாண்டு அன்றும் இறைவன் நம் கையில் ஒரு புதிய டைரியைக் கொடுக்கின்றார். நடந்தது எப்படி இருந்தாலும் பரவாயில்லை. இதோ! புதிதாகத் தொடங்கு என்கிறார். நம் கனவு, நம் ஏக்கம், நம் கவலை அனைத்தையும் நிறைவேற்றும் சாவி அங்கே தான் மறைந்திருக்கின்றது. அந்த டைரியைத் திறக்க மனமில்லாமல் கடவுள் மேல் கோபப்பட்டு, 'அவனெல்லாம் நல்லா இருக்கிறானே! நான் மட்டும் ஏன் இப்படி இருக்கிறேன்?' எனப் புலம்பிக் கொண்டு டைரியைத் திறக்காமலேயே நாம் எத்தனை பொழுதுகள் வாழ்ந்து விடுகிறோம். 

'இனி நான் நன்றாக இருப்பேன்!' என்ற எண்ணத்தில்தான் இங்கே நாம் கூடி வந்திருக்கின்றோம். புதிய ஆண்டு ஒரு பக்கம் மகிழ்ச்சி தந்தாலும் மற்றொரு பக்கம் இந்த ஆண்டும் பழைய மாதிரியே ஆகிவிடுமோ என்ற பயத்தையும் தருகின்றது. புதுமை ஒரு பக்கம் ஈர்ப்பாகத் தெரிந்தாலும், மறு பக்கம் கலக்கத்தையே தருகின்றது. 'இனி நான் குடிக்க மாட்டேன்!,' 'இனி நான் சீட்டாட மாட்டேன்', 'இனி நான் தவறான நட்பை விட்டுவிடுவேன்', 'இனி நான் தினமும் வாக்கிங் போவேன்' என்ற சின்னச் சின்ன வாக்குறுதிகளில் தொடங்கி, 'என் குடும்பத்தைத் திட்டமிட்டு நடத்துவேன்', 'புதிய வியாபாரத்தைத் தொடங்குவேன்' என்ற பெரிய வாக்குறுதிகள் வரை இன்று நாம் எடுத்திருப்போம். கடந்த வருடம் நாம் எடுத்த வாக்குறுதிகளை நினைத்துப் பார்த்தால் அதை எவ்வளவு சீக்கிரம் மீறியிருப்போம் என்பதும் நமக்குத் தெரியும். இத்தாலிய மொழியில் ஒரு பழமொழி உண்டு: 'உங்கள் கவலைகளெல்லாம் உங்கள் புத்தாண்டு வாக்குறுதிகள் போல சீக்கிரம் மறைந்து விடட்டும்!' நாம் நமக்கென அளித்துக்கொண்ட வாக்குறுதிகளை நாமே மீறும்போது வாழ்க்கை என்ற ஓவியப் பலகையில் ஓட்டை போட்டுக் கொள்கின்றோம். வாக்குறுதிகளைக் காப்பாற்றும்போது ஓவியப் பலகையில் தூரிகையால் வண்ணம் தீட்டுகிறோம்.

இறைவன் வாக்குறுதிகளின் இறைவன். தான் செய்த வாக்குறுதியிலும், தான் காட்டும் பேரன்பிலும் நிலைத்து நிற்கின்றார். தான் அளித்த வாக்குறுதியின் படியே தன் மகனை உலகிற்கு அனுப்புகிறார். 'இதோ ஆண்டவரின் அடிமை!' என இறைவனுக்கு வாக்குறுதி தந்த அன்னை மரியாளுக்கு இறைவனின் வாக்குறுதி தாய்மைப்பேறாக மாறுகின்றது. புதிய பாடல் (திபா 40:3), புதிய பெயர் (எசா 62:2), புதிய செயல் (எசா 43:19), புதிய உடன்படிக்கை (எரே 31:31), புதிய இதயம் (எசேக் 36:26), புதிய கட்டளை (யோவான் 13:34) மற்றும் புதிய விண்ணகம்-மண்ணகம் (திவெ 21:1) என ஏழு புதியவைகளை வாக்களிக்கின்றார் நம் இறைவன். இந்தப் புதியன நம் வாழ்வில் வளர வேண்டுவோம், பிறர்வாழ்வில் வளர அவர்களை வாழ்த்துவோம்.

4 comments:

  1. Anonymous1/01/2014

    இறைவன் நம்மீது கொண்ட பேரன்பினால் இன்னொரு புதிய ஆண்டை நமக்குக் கொடையாகத் தந்துள்ளார்.இதற்கு கைமாறாக.நாம் என்ன அவருக்கு அளிக்க முடியும்? நம் வாழ்க்கையையே அர்ப்பணிப்போம்........நம் இயலாமையோடும், பலவீனங்களோடும், நம்வாக்குறுதிகளையும் சேர்த்துத்தான்.எத்துணை முறை விழுந்தாலும் எழுந்து நிற்போம்.இதற்கு உந்துகோல்.சக்தியை.நமக்கு விவிலியம் வாயிலாகக் கொடுக்கும் நம் ஆசிரியரை இறைவன் நிறைவாக ஆசீர்வதிக்கட்டும். அனைவருக்கும் இனிய 'புத்தாண்டு'' வாழ்த்துக்கள்.

    ReplyDelete