அவர் தந்தையும், தாயும் அவரிடம், 'உன் உறவுப் பெண்களிடையே யாரும் இல்லையா? நம் மகள் அனைவரிடையே ஒரு பெண் கிடைக்கவில்லையா? நீ ஏன் விருத்தசேதனம் செய்யப்படாத பெலிஸ்தியரிடம் சென்று பெண் எடுக்க வேண்டும்?' என்று கேட்டனர். சிம்சோன் தம் தந்தையிடம், 'அவளை எனக்கு மணமுடித்து வையும். ஏனெனில் அவளை எனக்குப் பிடித்திருக்கிறது' என்றார். அவர் தந்தையும் தாயும் இது ஆண்டவரின் செயல் என்று அறியவில்லை. (நீதித் தலைவர்கள் 14:3-4)
சிம்சோன் திம்னா என்ற நகருக்குச் சென்றபோது அங்கே ஒரு பெண்ணைப் பார்க்கின்றார். 'கண்டதும் காதல்' பற்றிக் கொள்ள தன் பெற்றோரிடம் அந்தப் பெண்ணை தனக்கு மணமுடித்து வைக்குமாறு கேட்கின்றார். 'தங்கள் குழந்தைகளுக்கு பெற்றோர்களே மணப்பெண்கள் பார்க்கும் வழக்கம்' நம் மரபில் இன்று இருப்பது போல அன்றே எபிரேயர்களின் மத்தியில் இந்த வழக்கம் இருந்திருக்கிறது. திம்னா பெலிஸ்தியர்களின் ஊர். 'ஏன்ப்பா..அந்த சாதிப் பெண்ணை மணமுடிக்கணும்னு நினைக்கிற!' என்று இந்தக் காலத்துப் பெற்றோர் தங்கள் பிள்ளைகளைக் கேட்பதுபோலக் கேட்கின்றனர் சிம்சோனின் பெற்றோர். ஆனால் ஒரே வார்த்தை: 'எனக்குப் பிடித்திருக்கிறது!' என்று ஒற்றைக் காலில் நிற்கின்றார் சிம்சோன்.
'ஆனால் இது ஆண்டவரின் செயல் என்பதை அவர்கள் அறியவில்லை' என்கிறது விவிலியம். பல நேரங்களில் நாம் கேட்கும், பார்க்கும் அனைத்தும் நம் பார்வைக்கும், பிறர் பார்வைக்கும் தவறாகத் தெரியும்போது, அது ஆண்டவரின் பார்வைக்கு நல்லதாகத் தெரியலாம். ஆண்டவரின் பார்வையை அறிந்தவர் யார்? அறிவது எப்போது?
விவிலியத்தில் எங்கெல்லாம் 'எனக்குப் பிடித்திருக்கிறது' என்றும் 'கண்களுக்கு அழகாயிருக்கிறது' என்று ஒருவர் சொல்கிறாரோ அங்கு அவருக்கு விரைவில் ஆபத்து வரவிருக்கிறது என்பதும் பொருள். ஆதாம் ஏவாளின் பார்வைக்கு விலக்கப்பட்ட கனி 'பிடித்திருந்தது. கண்களுக்கு அழகாயிருந்தது'. விரைவில் ஆபத்தும் வந்தது. இன்று சிம்சோனின் கண்ணுக்கு அழகாய்த் தெரிவது நாளைக்கு அவருக்கே ஆபத்தாய் முடியும்.
'அவளை எனக்குப் பிடித்திருக்கிறது!'
ஒரு விஷயம் நமக்குப் பிடித்திருக்கிறது,பிடிக்கவில்லை என்பதை விட நாம் எடுக்கும் முடிவு சரியா தவறா என்பதுதான் முக்கியம். எப்படித் தெரிந்து கொளவது ஒரு செயலைச் செய்ய முற்படும்போது மனத்துக்கு எநத நெருடலுமின்றி காரியங்கள் நகர்ந்தால் இதுதான் இறைவனின் எண்ணம்.இதையும் மீிறி நம் வழித்தடத்தில் சில முட்களும் வரலாம்.அவற்றையும் தெரிந்தேஅனுமதிக்கிறார்...அவற்றை மலராய் மாற்றும் வித்தையையும் கற்றுத் தருகிறார்.நாம் செய்ய வேண்டியதெல்லாம் ''TotalSurrender''இது அனுபவம்.
ReplyDeleteநன்றி!
ReplyDelete