அன்னாவின் மீது அவர் அன்புகொண்டிருந்தும் அவருக்கு ஒரே பங்கைத்தான் அளித்தார். ஏனெனில் ஆண்டவர் அவரை மலடியாக்கியிருந்தார். ஆண்டவர் அவரை மலடியாக்கியிருந்ததால், அவருடைய சக்களத்தி அவரைத் துன்புறுத்தி வதைத்தாள். இவ்வாறு ஆண்டுதோறும் நடந்தது. அவர் ஆண்டவரின் இல்லம் வந்தபோதெல்லாம் அவள் அவரைத் துன்புறுத்துவார். அன்னா உண்ணாமல் அழுவார். அப்போது அவர் கணவர் எல்கானா அவரை நோக்கி, 'அன்னா, நீ ஏன் அழுகிறாய்? நீ ஏன் உண்ணவில்லை? நீ ஏன் மனவருத்தம் அடைகிறாய்? நான் உனக்குப் பத்துப் புதல்வரை விட மேலாவன் அன்றோ?' என்பார். (1 சாமுவேல் 1:5-8)
இன்று முதல் இறைவாக்கினர் நூலைத் தொடங்குகிறோம். இஸ்ரயேல் மக்களில் இறைவாக்கினர் என்ற நிலையில் முதலில் மோசே இருந்தாலும், இறைவாக்கினர்களின் காலம் என்பது சாமுவேலில் இருந்துதான் தொடங்குகிறது. சாமுவேல் என்பதை 'சமு வேல்' எனப் பிரித்தால் 'கடவுளின் பெயர்' எனவும், 'சாமு ஏல்' எனப் பிரித்தால் 'கடவுள் கேட்டார்' எனவும் பொருள் தரும். சாமுவேலின் தந்தை பெயர் 'எல்கானா'. எல்கானா என்றால் 'கடவுள் வாங்கிக் கொண்டார்' எனவும் 'கடவுளுடையது' எனவும் பொருள். 'அன்னா' (எபிரேயத்தில் 'ஹன்னா') என்றால் 'அருள்' என்பது பொருள்.
எல்கானாவிற்கு இரண்டு மனைவியர்: ஒருவர் பெயர் 'பெனின்னா'. பெனின்னா என்றால் 'வைரச் சங்கிலி' என்று அர்த்தம். எபிரேயப் பெயர்கள் மிகவும் நேர்த்தியானவைதாம்! பெனின்னாதான் மூத்தவர். இரண்டாம் மனைவி தான் அன்னா. அன்னாவை மலடியாக்கியிருந்தார் கடவுள் என விவிலியம் சொல்கிறது. எதற்கு என்ற காரணம் கொடுக்கப்படவில்லை. அதன் காரணத்தை பின்னால் ஆராய்வோம். பெனின்னா என்ற வைரச் சங்கிலிதான் அன்னாவை அலைக்கழிக்கிறது. 'உனக்குக் குழந்தையில்லையே!' என அன்னாவைக் கேலி பேசுகின்றார் பெனின்னா.
இதற்கிடையில் எல்கானா, பெனின்னா, அன்னா என்னும் இம்மூவரும் ஆண்டுதோறும் சீலோவில் ஆண்டவரின் ஆலயத்திற்குச் செல்வது வழக்கம். 'சீலோ' என்றால் 'அனுப்பப்படுதல்' என்றும் 'எய்யப்பட்ட அம்பு' என்றும் பொருள். அங்கே ஏலி என்று குருவைச் சந்திக்கின்றனர். 'ஏலி' என்றால் 'என் கடவுள்' என்று பொருள்.
ஒவ்வொரு வருடமும், ஆண்டவரின் இல்லம் வரும்போதெல்லாம் அங்கே அன்னா பெனின்னாவால் துன்புறுத்தப்படுகிறாள். 'கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு வந்தா அங்க ரெண்டு கொடுமை அவுத்துப் போட்டு ஆடுச்சாம்' என்று நம்மூரில் பழமொழி உண்டு. அப்படிக் கோவிலில் தன் சக்களத்தியால் கொடுமைப்படுத்தப்பட்ட தன் இளைய மனைவி அன்னாவுக்கு ஆறுதல் வார்த்தை கூறுகின்றார் எல்கானா.
அவர் கூறும் வார்த்தைகளில் எனக்கு மிகவும் பிடித்தவை இவைதாம்: 'நான் உனக்குப் பத்துப் புதல்வரை விட மேலாவன் அன்றோ?'
நான் சிறு வயதாய் இருந்தபோது பேருந்துகளில் 'நாம் இருவர் – நமக்கு இருவர்' எனவும், 'ஆசைக்கு ஒன்று – ஆஸ்திக்கு ஒன்றும்' என எழுதி ஒரு குடும்பத்திற்கு இரண்டு குழந்தைகள் போதும் அல்லது தேவை என விளம்பரப்படுத்தியது நம் அரசு. 15 ஆண்டுகளுக்கு முன்பு 'நாம் இருவர் – நமக்கு ஒருவர்' என விளம்பரம் மாறியது. இன்று அதே விளம்பரம், 'நாமே குழந்தை – நமக்கேன் குழந்தை' என மாறிவிட்டது. இன்றைய இந்த விளம்பர வார்த்தைகளை அன்றே சொல்லிவிட்டார் எல்கானா: 'நானே உனக்குக் குழந்தை! இன்னும் நமக்கேன் குழந்தை!'
இல்லற வாழ்க்கைக்கு இது ஒரு நல்ல பாடம். ஒவ்வொரு கணவனும் தன் மனைவியின் முதல் குழந்தையாகிறார். வேறு வார்த்தைகளில் சொன்னால் ஒவ்வொரு மனைவியும் தன் கணவனுக்கு முதலில் தாயாகிறார்.
'நான் உனக்குப் பத்துப் புதல்வரைவிட மேலானவன் அன்றோ!'
எல்கானா அன்னாவிற்குபத்துப் புதல்வர்களைவிட மேலானவர் எனில் எதற்காக இன்னொரு மனைவி? சிலசமயங்களில் ஆண்கள் தங்கள் தவறுகளை மறைக்கக் கூறும் பசப்பு வார்த்தைகள் இவை.இருப்பினும் இறுதி வரிகளில் உள்ள கூற்று பின்பற்றப்படும் குடும்பங்கள் கோயில்தான்.வெகு சிரத்தையெடுத்துப் பிறமொழி பெயர்களுக்கெல்லாம் அர்த்தம் சொல்லியிருக்கும் ஆசிரியருக்கு ஒரு.பாராட்டு.
ReplyDeleteஇன்னொரு விஷயம்....படத்தில் உள்ள சிறுவனின்.பால்வடியும் முகம....ஐயோ!கண்களில் ஒத்திக்கொள்ளவேண்டும போல இருக்கு.என்னதான் படங்கள் இருப்பினும் அதில் சிறநததைக் கொடுக்க ஒரு சாமர்த்தியம் வேண்டும்.அது தங்களிஎன் நிறையவே இருக்கிறது. சபாஷ்!
ReplyDelete