தெலீலா சிம்சோனிடம், 'மனம் திறந்து பேசாமல் நீர் என்மீது அன்பு செலுத்துவதாய் எப்படிக் கூறலாம்? மும்முறை நீர் என்னை அற்பமாய் நடத்திவிட்டீர். உமது பேராற்றல் எதில் உள்ளது என்று நீர் எனக்கு இன்னும் சொல்லவில்லை' என்றாள். அவள் தன் வார்த்தைகளால் ஒவ்வொரு நாளும் அவரை நச்சரித்துத் தொந்தரவு செய்தாள். அவர் உயிர் போகுமளவிற்கு வருத்தமுற்றார். எனவே எதையும் மறைக்காமல் அவர் அவளிடம் தன் வலிமை பற்றிக் கூறினார். (நீதித் தலைவர்கள் 16:15-17).
சிம்சோனின் அழிவு நெருங்கப் போகிறது என்பதை ஆசிரியர் மறைமுகமாக 'உயிர் போகுமளவிற்கு' என்ற சொல்லாடல் வழியே வெளிப்படுத்துகிறார். தெலீலாவின் புகார் இன்றும் பெண்களின் புகாராகவே இருக்கின்றது. இதிலிருந்து என்ன தெரிகிறது? மனித குலம் 3000, 4000 வருடங்களாக ஒரே மாதிரிதான் இருக்கின்றது.
தெலீலாவின் நச்சரிப்பு சிம்சோனை உயிர் போகுமளவிற்கு வருத்தமுறச் செய்கிறது. பாவம் சிம்சோன். என் நண்பன் ஒரு முறை சொன்னான்: 'இந்தப் பொண்ணுங்க ரொம்ப வித்தியாசமானவங்க. நம்மள யாராவது காதலிக்க மாட்டார்களா என்று ஏங்கிக் கொண்டே இருப்பார்கள். அப்படி ஒருவன் காதலிக்கத் தொடங்கி விட்டால் அவனைப் படாத பாடு படுத்துவார்கள்!'
தான் நினைப்பதை அடைவதில் பெண்கள் ஆண்களைவிட திறமைசாலிகள் என்பதை பல ஆய்வுகள் நிருபித்திருக்கின்றன. இந்த நிகழ்வில் கொஞ்சம் role reversing செய்து பார்ப்போம். ஒருவேளை தெலீலாவின் பலம் என்பதை சிம்சோன் அறிய வேண்டியிருந்தால் அவர் என்ன செய்திருப்பார்: 'தெலீலா உன் பலம் என்ன?' என்று கேட்டிருப்பார். அப்படியும் பதில் கிடைக்கவில்லையென்றால் 'தெலீலா குட்டி உங்க பலம் என்னடா?' என்று கேட்டிருப்பார். அப்படியும் பதில் இல்லையென்றால், 'சீ போடி. ரொம்ப தான் பிகு பண்ணுற!' என்று கண்டுகொள்ளாமல் விட்டிருப்பார்.
தெலீலாவிற்குத் தெரிகிறது எங்க அடித்தால் சிம்சோனுக்கு வலிக்கும் என்று. ஒரே கேள்வியில் மடக்கி விடுகின்றார். இங்குள்ள எபிரேயத்தை அப்படியே மொழிபெயர்த்தால் இப்படி பொருள் தரும்: 'மனசுக்குள்ள ஒன்ன வச்சிகிட்டு எங்கிட்ட வேற சொல்றீங்களே ... நீங்க எப்படி 'நான் உன்னைக் காதலிக்கிறேன்னு' என்னைப் பார்த்துச் சொல்ல முடியும்?'
தன் காதலையும், அன்பையும் பகடைக்காயாகப் பயன்படுத்துகின்றார். தொடக்கத்தில் வேட்டைக்கார நிலையில் வாழ்ந்த ஆண்கள் இன்றும் தங்கள் நிலையை நிலைநாட்டப் பயன்படுத்துவது 'தங்கள் கைகள்!' உடனே நீட்டி விடுவார்கள்: அடிப்பதற்கு அல்லது அணைப்பதற்கு. ஆனால் பெண்கள் குகைக்குள் வாழ்ந்த காலம் முதல் இன்றும் ஐந்து ஆயுதங்களைப் பயன்படுத்துகின்றனர்: 'கூந்தல், முத்தம், நறுமணத் தைலம், கண்ணீர் மற்றும் வார்த்தைகள்!' தெலீலா இங்குப் பயன்படுத்துவது 'கண்ணீர் கலந்த சிணுங்கல் வார்த்தைகள்.' ஒருவேளை முத்தமும் கொடுத்திருக்கலாம். ஆசிரியர் கொஞ்சம் censor செய்து எழுதியிருக்கலாம்.
ஆனால் அன்பை முன்னிறுத்தி சிம்சோனிடமிருந்து பதில் விரும்பும் தெலீலா தன்னை விரைவில் ஏமாற்றப் போகிறார், தன் நம்பிக்கைக்குத் துரோகம் செய்யப் போகிறார் என்பது பாவம் சிம்சோனுக்குத் தெரியவில்லை. சிம்சோனின் அன்பைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்கிறார் தெலீலா.
இதில் யார் சரி? யார் தவறு? என்று சொல்வது சிரமமாகவே இருக்கின்றது. சிம்சோனின் பலம் அவருக்கே பலவீனமாக மாறுகிறது.
அன்பு எந்த அளவிற்குத் தேனினும் இனிமையாக இருக்கிறது அந்த அளவிற்கு 'உயிர்போகும் நச்சரிப்பாகவும் இருக்கிறது' சிம்சோனுக்கு. எந்த அளவிற்கு சிங்கத்தின் வலிமையாக இருக்கிறதோ அந்த அளவிற்கு பலவீனமாகவும் இருக்கிறது.
அன்பின் இந்த நெகிழ்வுத் தன்மைதான் இன்றும் நம்மை ஒருவர் மற்றவரிடம் சேர்க்கவும் செய்கின்றது. மற்றவர்களிடமிருந்து நம்மைப் பிரிக்கவும் செய்கின்றது.
அனைத்திற்கும் காரணம் மனித மனமே. அன்பில் கனிவதும் அதுதான். பின் அந்த அன்பிற்காக ஏங்கி உருகுவதும் அதுதான். பின் அதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும் அதுதான். எரிச்சல் படுவதும் அதுதான். என்னே மனத்தின் விளையாட்டு!
... அன்பு பொறுமையுள்ளது.
நன்மை செய்யும்.
பொறாமைப்படாது.
தற்புகழ்ச்சி கொள்ளாது.
இறுமாப்பு அடையாது.
அன்பு இழிவானதைச் செய்யாது.
தன்னலம் தேடாது.
எரிச்சலுக்கு இடம் கொடாது.
தீங்கு நினையாது.
அன்பு தீவினையில் மகிழ்வுறாது.
மாறாக உண்மையில் அது மகிழும்.
அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்.
அனைத்தையும் நம்பும்.
அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்.
அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும்...
(தூய பவுல், 1 கொரிந்தியர் 13:4-7)
வல்லினம் மெல்லினத்திடம் தன்னை விட்டுக்கொடுப்பது ஒன்றும் தோல்வியல்ல.சின்ன மீனைப் போட்டுப் பெரியமீனைப் பிடிக்கும் வித்தைதான்.
ReplyDeleteஅன்பின் பலபரிமாணஙகளை மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்.அன்பைக் கொடுப்பதும் பெறுவதும் எத்துணை அழகான விஷயம்.அன்பே சிவம்........பிறரை அன்பு செய்யப் பழகுவோம்.....எந்த எதிர்பார்ப்புமின்றி.பாராட்டுக்கள்.