மீக்காவின் வீட்டுக்குள் சென்ற ஐவரும் செதுக்கிய உருவம், ஏபோது, தெராபீம், வார்ப்புச்சிலை ஆகியவற்றை எடுத்தபொழுது குரு அவர்களிடம், 'நீங்கள் செய்வது என்ன?' என்று கேட்டார். அவர்கள் அவரிடம், 'பேசாதே! வாயை மூடு! எங்களுடன் நட. எங்களுக்குத் தந்தையாகவும் குருவாகவும் இருப்பாய். எது உனக்கு நலம்? ஒரு தனி மனிதனின் வீட்டிற்கு குருவாக இருப்பதா? இஸ்ரயேலின் ஒரு குலத்திற்கு, ஒரு குடும்பத்திற்குக் குருவாக இருப்பதா?' என்றனர். குருவின் இதயம் மகிழ்வுற்றது. அவர் ஏபோது, தெராபீம் செதுக்கிய உருவம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு மக்களிடையே வந்தார். (நீதித் தலைவர்கள் 18:18-20)
வேவு பார்த்தவர்கள் சொன்னதின் பேரில் தாண் குலத்தார் போருக்குப் புறப்படுகின்றனர். போருக்குச் செல்லும் வழியில் மீக்காவின் வீட்டிற்கு வருகின்ற அவர்கள் அங்கிருந்த சிலைகளைக் கொள்ளையிட்டு, அங்கிருந்த லேவியரையும் கடத்திச் செல்கின்றனர். 'இஸ்ரயேலில் அரசன் இல்லாத காலத்தில் மக்கள் தாங்கள் விரும்பியதையெல்லாம் செய்தார்கள்' என அடிக்கடி சொல்லும் இந்நூல், 'மக்கள் விரும்புவது அனைத்துமே' கடவுளுக்கு விரும்புவது அல்ல என்பதை நமக்குச் சொல்கின்றது. அடக்குமுறைக்கு விலைபோகின்றார் லேவி. அரசனும் இல்லை. குருக்களின் தலைமையும் சரியாக இல்லை. இஸ்ரயேல் மிகவும் கவலைக்கிடமாக இருக்கின்றது.
தங்கள் யாவே இறைவனை மறந்து விட்டு செதுக்கிய உருவங்களைக் கடவுளாகக் கருதத் தொடங்குகின்றனர் இஸ்ரயேல் மக்கள். கடவுளைச் சிலைகளாகச் சுருக்கி விட முடியுமா என்ன? இன்று கடவுளுக்குப் பதிலாக நாம் வைத்திருக்கும் குட்டி உருவங்கள் எவை?
'எது உனக்கு நலம்?'
இப்பகுதியின் மூலத்தைப்படித்த பின்பே இதைப்புரிந்து கொள்ள முடிந்தது.அக்காலத்திலேயே குருக்கள் விலை போயுள்ளார்கள்.......காரணங்களுக்காக.மக்களும் படைத்தவனை விட்டுப் படைப்பை வழிபடுகின்றனர்.இன்று நம்மில் பலர்நிலையும் அதுதான் இறைவனை விட்டு நாம் விலகிச் செல்ல எத்தனையோ தடைக்கற்கள்.அவற்றை இனம் கண்டு நம்பாதையிலிருந்து களைந்து விட்டுப் படைத்தவனின் பாதம் சேர்வோமே!
ReplyDelete