அவர்கள் சிம்சோனிடம், 'விடுகதையைச் சொல். நாங்கள் கேட்கின்றோம்' என்றனர். அவர் அவர்களிடம், 'உண்பவனிடமிருந்து உணவு வெளிவந்தது. வலியவனிடமிருந்து இனியது வந்தது' என்றார். மூன்று நாளாகியும் அவர்களால் விடுகதைக்கு விடை காண முடியவில்லை. ஏழாம் நாள் கதிரவன் மறையும் முன் அந்நகரின் ஆண்கள் அவரிடம், 'தேனினும் இனியது எது? சிங்கத்தினும் வலியது எது?' என்றனர். (நீதித் தலைவர்கள் 14:14,18)
சிம்சோன் திமினாவில் பார்த்த பெண்ணை மணமுடிப்பதற்காக தன் பெற்றோரிடம் சென்றார். விவிலியம் சொல்லும் வார்த்தை: 'இறங்கிச் சென்றார்'. இது திமினா சேராவைவிட தாழ்வான பகுதியில் அமைந்திருந்தது என்று மட்டும் பொருளல்ல. சிம்சோனும் தன் வாழ்வில் தாழ்வாகிக் கொண்டே சென்றார் என்பதன் உருவகமாகவே இருக்கின்றது. திமினாவிற்குச் செல்லும் வழியில் தான் ஏற்கனவே கொன்ற சிங்கத்தின் உடலிலிருந்து தேனை எடுத்து தான் சாப்பிட்டது மட்டுமல்லாமல், அதைத் தன் பெற்றோருக்கும் கொடுக்கின்றார். 'தான் சிங்கத்தின் செத்த உடலிலிருந்து எடுத்தேன்' என்பதை அவர்களிடமிருந்து மறைக்கின்றார். அந்தத் தேனை வைத்தே திம்னாவின் இளைஞர்களுக்கு விடுகதையும் கூறுகின்றார். இறைவனுக்கான நாசீர் என்பவர் எந்தவகையான கடின பானமும், திராட்சை ரசமும் குடிக்கக் கூடாது என்பதும், இறந்த உடலைத் தொடக்கூடாது என்பதும் பரிந்துரை. இங்கே சிம்சோன் தேன் என்ற கடின பானத்தைக் குடிக்கின்றார். சிங்கத்தின் இறந்த உடலைத் தொடுகின்றார். இப்படியாக இரண்டு நிலைகளிலுமே நாசீர் என்ற நிலையிலிருந்து தாழ்ந்து போகின்றார்.
'தேனினும் இனியது எது? சிங்கத்தினும் வலியது எது?'
உண்பவன் சிங்கம். அவனிடமிருந்து வந்த உணவு தேன். வலியவனும் அவனே.
ஆனால் சிங்கம், தேன் என்ற இரண்டையும் தாண்டி இந்த உருவகம் இறைவனின் அன்பையே சுட்டிக்காட்டுகின்றது. இஸ்ரயேல் இனம் தன்னையே தீட்டுப்படுத்திக் கொண்டாலும், வேற்றுத் தெய்வங்களின் பின் சென்று அவைகள் தரும் தேனைப் பருகினாலும் யாவே இறைவனின் அன்பு அவர்களோடு கூடவே இருக்கின்றது.
'தேனினும் இனியது அன்பு. சிங்கத்தினும் வலியது அன்பு'.
அன்பில் இருப்பவர்களுக்கு இந்த அனுபவம் நிறையவே இருக்கும். இறைவனின் அன்பு நம் வாழ்வில் தேனைப்போல இனிமையைத் தருகிறது. அதுவே நமக்கு சிங்கத்தின் வலிமையையும் தருகிறது.
இதே அன்பை நாம் பிறருக்கு தேனின் இனிமையாகவும், சிங்கத்தின் வலிமையாகவும் பகிர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம்.
இன்று திருவருகைக் காலத்தைத் தொடங்கியுள்ளோம். 'ஆண்டவரின் இல்லம் தரும் மகிழ்வைப் பற்றிய' திருப்பாடல் 122-உடன் இந்தப் புதிய வழிபாட்டு ஆண்டைத் தொடங்கியுள்ளோம். இந்தத் திருப்பாடலை நான் நிறைய தடவை கேட்டிருக்கிறேன். ஆனால் இன்று திருப்பலியில் வாசிக்கக் கேட்டவுடன் என்னையறியாமல் அழுதுவிட்டேன். மிகவும் உருக்கமான பாடல். எருசலேம் ஒவ்வொரு இஸ்ரயேலருக்கும் தந்த பெருமையைப் பற்றிச் சொல்லும் பாடல். இந்தப் பாடலில் பெருமையும் இருக்கின்றது. கண்ணீரும் இருக்கின்றது. என்னைத் தொட்ட வார்த்தைகளை மட்டும் இங்கே பதிவு செய்கிறேன்:
'ஆண்டவரின் இல்லத்திற்குப் போவோம்' என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன்.
எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து உன் வாயில்களில் நிற்கின்றோம்.
எருசலேமில் சமாதானம் நிலைத்திருக்கும்படி வேண்டிக்கொள்ளுங்கள்.
'உன்னை விரும்புவோர் வளமுடன் வாழ்வார்களாக!
உன் கோட்டைக்குள் அமைதி நிலவுவதாக!
உன் மாளிகைக்குள் நல்வாழ்வு இருப்பதாக!
உன்னுள் சமாதானம் நிலவுவதாக!'
இந்த இறுதி நான்கு வரிகளைத் தான் நான் எந்த இல்லத்திற்குச் செபிக்கச் சென்றாலும் நான் ஆசீர் செபமாகச் சொல்வேன். இந்த நான்கு வரிகளும் ஒன்றிற்கொன்று தொடர்புடையவை.
நல்வாழ்வு நம் நலம் விரும்புவோரிடமிருந்து தொடங்குகிறது. அவர்கள் எங்கே இருந்தாலும், ஏன் இறந்தாலும், எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் அவர்களின் 'விரும்புதலே' நம்மை வாழவைக்கிறது. முதலில் அவர்கள் நன்றாக இருக்க வேண்டும். நம்மை விரும்பாதவர்களைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் நம் உலகில் வாழ்ந்தாலும் 'நாம்' என்ற உலகிற்குள் வருவதில்லை.
இரண்டாவதாக, நம் கோட்டை. இது வெறும் கல்லாலான கட்டடம் அன்று. இதுதான் நாம் பேணிக்காக்கும் மதிப்பீடுகள். நம்மிடம் இருக்கும் நற்குணங்கள். இங்குதான் அடிக்கடி பிரச்சனைகளும், குழப்பங்களும் வரும். தவறான முடிவு எடுத்து விட்டோமோ? நல்லா யோசிச்சிருக்கலாமோ? முடிவை மாற்றலாமா? திரும்பிப் போகலாமா? முதலிலிருந்து தொடங்குவோமா? இந்தக் குழப்பங்கள் நீங்கி அமைதி நிலவ வேண்டும்.
மூன்றாவதாக, மாளிகைக்குள் நல்வாழ்வு. மாளிகை என்றால் நம் வீடு. நம் வீடு வசந்த மாளிகை போல பெரிதாக இருக்க வேண்டும் என்பதல்ல. சின்னஞ்சிறியதாக இருந்தாலும், சாணி போட்டு மெழுகி இருந்தாலும், கூரை வேய்ந்திருந்தாலும், ஓட்டின் வழி தண்ணீர் வடிந்தாலும் அங்கே 'நல்வாழ்வு' இருந்தால் போதும் அது மாளிகைதான். உடல்நலமில்லாதவர்களால் வீடு நிறைந்திருந்தால் எவ்வளவு பெரிய வீட்டாலும் பயனில்லை. நம் வீட்டில் உள்ளவர்களுக்கு உடல்நலம். இதுவே மூன்றாம் ஆசீர்.
நான்காவதாக, தனிப்பட்ட நபரின் சமாதானம், மன அமைதி. எல்லாம் இருந்து இந்த சமாதானம் இல்லையென்றால் நாம் எப்போதும் படபடப்பாகவே இருப்போம். இறுதி ஆசீர் உள்ளத்தின் நலம்.
அடிக்கடி கேட்ட திருப்பாடல் என்றாலும் இன்று செபத்தோடு நான் கேட்டபோது இன்னும் இனிமையாக இருந்தது.
இறைவனின் அன்பை அனுபவித்து, அதையே மற்றவருக்கு தேனின் இனிமையாக, சிங்கத்தின் வலிமையாகப் பிறரோடு பகிர்ந்து கொண்ட ஒருவர்தான் இதை எழுதியிருக்க வேண்டும்.
நாம் எங்கு சென்றாலும், பிறரை இந்த நான்கு ஆசீர்களால் வாழ்த்தலாமே!
'தேனினும் இனியது எது?' 'சிங்கத்தினும் வலியது எது?'
''தேன் இனிமையிலும் யேசுவின் நாமம் திவ்ய மதுரமாமே'''..இந்தப்பாடல் தான் இப்போது மனத்தை வருடுகிறது. அந்த 122ம் சங்கீதமும் அதில் வரும் கருத்துக்கள்
ReplyDeleteபற்றிய விளக்கமும் அப்பாடலை தினமும் படிக்கத் தூண்டுகிறது.அப்பாடல் உணர்த்தும் சமாதானத்தையும் அமைதியையும் அந்தக் குவளையில் உள்ள முகம்
பிரதிபலிப்பதாக உணர்கிறேன்.பாராட்டுக்கள்.
Stay blessed always!
ReplyDelete