நகோமிக்குப் போவாசு என்ற உறவினர் ஒருவர் இருந்தார். அவர் செல்வமும், செல்வாக்கும் உடையவர். எலிமலேக்கின் வழியில் உறவானவர். ரூத்து நகோமியிடம், 'நான் வயலுக்குப் போய், யார் என்னைக் கருணைக் கண் கொண்டு நோக்குவாரோ, அவர் பின்னே சென்று கதிர்களைக் பொறுக்கிக் கொண்டு வருகிறேன். எனக்கு அனுமதி தாரும்' என்றார். அவரும், 'போய் வா, மகளே' என்றார். ரூத்து ஒரு வயலுக்குப் போய், அறுவடையாள்கள் பின்னால் சென்று, அவர்கள் சிந்திய கதிர்களைப் பொறுக்கிச் சேர்த்தார். தற்செயலாக அவர் போயிருந்த அந்த வயல் எலிமலேக்கிற்கு உறவினரான போவாசுக்கு உரியதாய் இருந்தது. (ரூத்து 2:1-3)
ஏழை இளைஞனுக்கு பணக்காரப் பெண் காதலியாகக் கிடைப்பதும் அதனால் அவன் நிலை உயர்வதும், ஏழைப் பெண்ணுக்கு பணக்கார இளைஞன் காதலியாகக் கிடைத்து அவள் சிறப்படைவதும் திரைப்படங்களிலும், நாவல்களிலும் வரும் புரட்டிப்போடுதல் மட்டுமல்ல. விவிலியத்திலும் இது உண்டு. சவுலிடமிருந்து தப்பி ஓடி பாலைவனத்தில் நாடோடியாய்த் திரிந்த தாவீது என்ற இளைஞனின் வாழ்க்கைக்குள் அபிகாயில் என்ற இளவரசி நுழைகின்றாள். தாவீதின் வாழ்க்கை மாறிப்போகின்றது. கணவன் இல்லை, பொருள் இல்லை, சொந்த ஊர் இல்லை என அனைத்தையும இழந்து நின்ற ரூத்து போவாசு என்பவரைக் கைப்பிடிக்கின்றார். அவரது நிலையும் விரைவில் உயர்ந்து விடும்.
'செல்வமும், செல்வாக்கும்'. இந்த இரண்டு வார்த்தைகள் விவிலியத்தில் பயன்படுத்தப்படும் இடங்களில் என்ன பொருள் தெரியுமா? 'டாடாவும், பிர்லாவும்' போல என்று அர்த்தம். அந்த அளவிற்கு உயர்ந்து நின்ற ஒருவர்.
கைம்பெண்கள், ஏழைகள் அறுவடைக் காலத்தில் என்ன செய்வார்களென்றால் அறுவடை நடந்த இடத்தில் சென்று அறுவடை செய்வோர் விட்டுச் சென்ற கதிர்களைப் பறிப்பர். அப்படி ஒரு சில கதிர்களை அறுவடை செய்யும்போது அவர்களுக்காக விட வேண்டும் என மோசேயின் சட்டமும் அவர்களுக்குச் சொன்னது. அதை நம்பி ரூத்து வயலுக்குச் செல்கின்றார். அந்த வயல் 'தற்செயலாக' போவாசுடையதாக இருக்கின்றது. போவாசு என்றால் 'அவனது வலிமை' என்றும் 'இறைவனே வலிமை' என்றும் பொருள்.
'தற்செயலாக' என்று நடந்தது என்று சொல்வதை விட 'இறைவனின் செயலாக' அது நடந்தது என்றே சொல்லலாம். அன்றாடம் நாமும் தற்செயலாக பலரைச் சந்திக்கின்றோம், பல நிகழ்வுகளில் பங்கு கொள்கின்றோம். 'தற்செயலாக' நடக்கும் செயல்களே பல நேரங்களில் நீண்ட கால மாற்றத்தை நம்மில் உருவாக்குகின்றன.
ரூத்து சென்ற நேரம் போவாசு இல்லை. போவாசு எப்போது வந்தார்?
'என்னைக் கரம்பிடிக்க என் கண்ணாளன் வருவான்!' என்று ரூத்து காத்திருந்தாரா? கரம் பிடித்தாரா?
''தற்செயலாக'' என்று நாம் நினைக்கின்ற பலவிஷயங்கள் இறைவனின் அனுமதியுடன் தான் நடக்கின்றன என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு.......இறைவனின் கடைக்கண் பார்வைக்குச் சொந்தக்காரியான ரூத் அனுப்பப்பட்டது யாரோ ஒருவரிடமல்ல, யாரால் அவள் வாழ்வு.மேன்மையடையும் என்று நினத்தாரோ அப்பேற்பட்ட இறை பக்தன் ஒருவனிடமே.கடைசி இரு கேள்விகளைக் கேட்டு அவற்றிற்கு விவிலியத்திலிருந்து பதிலை வாசகர்களையேத் தேடத்தூண்டும் ஆசிரியரின் சமயோசித புத்திக்கு ஒரு சபாஷ்!......
ReplyDelete