சிம்சோன் மிகவும் தாகமுற்று, ஆண்டவரை நோக்கிக் குரல் எழுப்பி, 'நீர் உம் ஊழியன்மூலம் இம் மாபெரும் விடுதலையைத் தந்தீர். ஆனால் இப்பொழுது நான் தாகத்தால் செத்து, விருத்தசேதனம் செய்யப்படாதவரின் கையில் வீழ்வேனோ?' என்று மன்றாடினார். கடவுள் இலேகியில் ஒரு நிலப்பிளவைத் தோற்றுவிக்க, அதிலிருந்து தண்ணீர் வெளிவந்தது. சிம்சோன் அதைக் குடித்ததும் அவருக்கு உயிர் திரும்ப, அவர் புத்துயிர் பெற்றார். அவ்விடத்தை 'மன்றாடுவோரின் நீர்ஊற்று' என அழைத்தார். (நீதித் தலைவர்கள் 15:18-19)
தன் மனைவி தன் மாப்பிள்ளைத் தோழனுக்குக் கொடுக்கப்பட்டதால் தன் மாமனார் மேல் கோபம் கொள்கின்ற சிம்சோன் அந்த ஊராரின் வயல்களையும், திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவத் தோப்புகளையும் நெருப்பிட்டு அழிக்கின்றார். மாமனார் மேல் கோபம் என்றால் மாமனார் மேல் காட்ட வேண்டும்! அதை விடுத்து சிம்சோன் ஏன் ஊரார் மேல் காட்டுகின்றார்? நம்மூர் கண்ணகிதான் நினைவிற்கு வருகிறார். பாண்டிய மன்னன் மேல் கோபமென்றால் அதை அவரிடம் காட்டியிருக்க வேண்டும். அதற்குப் பதில் மதுரையை தீக்கிரையாக்கியதோ ஏனோ? தங்கள் வயல்களும், தோட்டங்களும், தோப்புக்களும் அழிந்த நிலையில் அந்தக் கோபத்தை அவர்கள் சிம்சோனின் மாமனார் மேலும் அவரின் மகள்மேலும் திருப்புகின்றனர். அவர்களைத் தீக்கிரையாக்குகின்றனர். இவர்களும் கோபத்தை சிம்சோனிடம் காட்டாமல் குடும்பத்தார்மேல் காட்டியது ஏனோ?
சில நாட்கள் கழித்து யூதா இனமே தன் சகோதரன் சிம்சோனை பெலிஸ்தியர்கள் கைகளில் ஒப்புவிக்கிறது. அவர்கள் அவரை அழிக்க நினைத்த போது கழுதையின் தாடை எலும்பைக் கொண்டு ஆயிரம் பேரைக் கொல்கின்றார். இறைவனுக்கான நாசீர் இறந்த உடலையும், அது சார்ந்த பொருட்களையும் தொடக் கூடாது. ஆனால் இங்கே தாடை எலும்பைத் தொடுவதன் வழியாக மறுபடியும் தன்னையே தீட்டுப்படுத்திக் கொள்கின்றார்.
சண்டை முடிந்து தாகம் எடுக்கிறது. அவர் உயிரே போய்விடும்போல இருக்கிறது. இந்நேரம் தான் அவருக்கு கடவுள் நினைவிற்கு வருகிறார். கடவுளை உயிர்போகும் நேரத்தில் மட்டுமே நினைக்கிறார் சிம்சோன். 'சாகும்போது சங்கரா! சங்கரா!' என்று பழமொழி சொல்வார்கள் நம்மூரில். சிம்சோன் தன்னை மறந்தாலும், அவரை என்றும் நினைவில் கொண்டிருக்கிறார் கடவுள். அதுதான் கடவுளின் பேரன்பு. இது என்றும் நமக்கு ஒரு பெரும் ஆறுதல். நம்மை நினைவுகொள்பவர் இறைவன். அவரை நோக்கிக் குரல் எழுப்புபவர்களுக்கு நீருற்றைத் திறக்கின்றார் அவர்.
'நான் தாகத்தால் செத்து வீழ்வேனோ?'
இறுதி வரிகள் நெருக்கடி வேளையில் நம் உதவிக்கு வரும் ஆண்டவரின் 20ம் சங்கீதத்தை நினைவுபடுத்துகின்றன.நாம் அவரை நோக்கிக் கூவி அழகைக்கும் வேளையில் சுவாசிக்கும் காற்றாகவும் அருந்தும் நீராகவும், உண்ணும் உணவாகவும் வருகிறார்.நம்மை என்றும் தன் நினைவில் வைத்திருக்கும் அந்த நீரூற்றிடம் சரணாகதி யடையத் தூண்டும் தஙகளின் செய்தி ஏதோ காயத்துக்கு மருந்திட்டு
ReplyDeleteவருடி விடும சுகத்தைத் தந்தது.வாழ்த்துக்கள்.