Tuesday, December 31, 2013

பழையன கழிதலும் புதியன புகுதலும்

கல்லூரி மாணவன் ஒருவனுக்கு ஃபெராரி கார் என்றால் மிகவும் பிடிக்கும். எந்நேரமும் அந்தக் கார் பற்றியே எண்ணிக் கொண்டிருப்பான். தன் நண்பர்களோடு பேசும் போதும் அதைப் பற்றியே பேசுவான். அந்த காரைப் பற்றி எங்கே செய்தி இருந்தாலும் அதை வெட்டி எடுத்துக் கொள்வான். தன் அறை முழுவதும் அந்தக் காரின் ஃபோட்டோக்களை ஒட்டி வைத்திருந்தான். கல்லூரிப் படிப்பு முடிக்கும் தறுவாயில் பெரிய தொழிலதிபராய் விளங்கிய தன் தந்தையிடம் ஃபெராரி வாங்கித் தருமாறு கேட்கிறான். 'நீ கல்லூரிப் படிப்பை முடிக்கும் இறுதி நாளில் உனக்கு கார் நிச்சயம்!' என்கிறார். கல்லூரிப் படிப்பின் இறுதி நாள். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என முடிந்து வீடு திரும்புகிறான். வீட்டின் கேட்டைத் திறந்தவுடன் கார் நிற்கும் என நினைக்கிறான். ஆனால் ஏமாற்றம். கார் நிறுத்தத்தில் சென்று பார்க்கிறான். அங்கும் ஃபெராரி இல்லை. கோபத்தோடும் ஏமாற்றத்தோடும் வீட்டிற்குள் செல்கிறான். அவனை ஆரத்தழுவும் தந்தை ஒரு பார்சலை அவனிடம் தருகின்றார். வேகமாகத் திறக்கிறான் மாணவன். உள்ளே ஒரு புதிய டைரி. கோபம் அதிகமாகிவிட, நீங்கள் என்னை ஏமாற்றிவிட்டீர்கள்! நான் இன்னும் ஒரு நிமிடம் கூட இங்கே இருக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு வீட்டை விட்டுப் புறப்படுகிறான். தனியாக வீடு எடுத்துத் தங்கி, நல்லதொரு வேலை, திருமணம் என்று செட்டில் ஆகி விடுகிறான். தன் சம்பளத்தில் தன் கனவுக் காரையும் வாங்கி விடுகிறான். ஒரு நாள் அவனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு: 'உங்கள் தந்தை இறந்து விட்டார்!' கோபத்தில் தந்தையின் இறப்பிற்குக் கூடச் செல்ல மறுத்து விடுகிறான். சில வருடங்கள் கழித்து தந்தைதான் இல்லையே, தான் இருந்த வீட்டையாவது பார்த்துவிட்டு வரலாம் என நினைத்துப் புறப்படுகிறான். ஒவ்வொரு அறையாகப் பார்த்துக் கொண்டு வந்த போது, தன் தந்தையின் அறைக்குள் நுழைகிறான். அங்கே அவன் கல்லூரி பட்டவிழா அன்று தந்தை பரிசளித்த டைரியும் இருக்கின்றது. அதில் என்னதான் இருக்கும்? என எண்ணி அதைத் திறக்கிறான். உள்ளேயிருந்து ஒரு கார் சாவி கீழே விழுகின்றது. அந்த டைரிக்குள் கார் வாங்கியதற்கான பில்லும் இருக்கின்றது. அந்த பில்லில் இருந்த ஃபோன் நம்பரைத் தொடர்பு கொண்டு அந்தக் கார் கம்பெனியை விசாரிக்கிறான். 12 வருடங்களாக அந்தக் கார் டெலிவரி எடுக்கப்படாமல் நிற்பதாகச் சொல்கின்றனர் அவர்கள். ஒரு நிமிடம் நின்று அன்று டைரியைத் திறந்து பார்த்திருந்தால் இவ்வளவு மனவருத்தம் வந்திருக்காதே என்ற நினைவுடன் தன் வீடு திரும்புகிறான்.

இன்று புத்தாண்டுப் பெருவிழா. ஒவ்வொரு புத்தாண்டு அன்றும் இறைவன் நம் கையில் ஒரு புதிய டைரியைக் கொடுக்கின்றார். நடந்தது எப்படி இருந்தாலும் பரவாயில்லை. இதோ! புதிதாகத் தொடங்கு என்கிறார். நம் கனவு, நம் ஏக்கம், நம் கவலை அனைத்தையும் நிறைவேற்றும் சாவி அங்கே தான் மறைந்திருக்கின்றது. அந்த டைரியைத் திறக்க மனமில்லாமல் கடவுள் மேல் கோபப்பட்டு, 'அவனெல்லாம் நல்லா இருக்கிறானே! நான் மட்டும் ஏன் இப்படி இருக்கிறேன்?' எனப் புலம்பிக் கொண்டு டைரியைத் திறக்காமலேயே நாம் எத்தனை பொழுதுகள் வாழ்ந்து விடுகிறோம். 

'இனி நான் நன்றாக இருப்பேன்!' என்ற எண்ணத்தில்தான் இங்கே நாம் கூடி வந்திருக்கின்றோம். புதிய ஆண்டு ஒரு பக்கம் மகிழ்ச்சி தந்தாலும் மற்றொரு பக்கம் இந்த ஆண்டும் பழைய மாதிரியே ஆகிவிடுமோ என்ற பயத்தையும் தருகின்றது. புதுமை ஒரு பக்கம் ஈர்ப்பாகத் தெரிந்தாலும், மறு பக்கம் கலக்கத்தையே தருகின்றது. 'இனி நான் குடிக்க மாட்டேன்!,' 'இனி நான் சீட்டாட மாட்டேன்', 'இனி நான் தவறான நட்பை விட்டுவிடுவேன்', 'இனி நான் தினமும் வாக்கிங் போவேன்' என்ற சின்னச் சின்ன வாக்குறுதிகளில் தொடங்கி, 'என் குடும்பத்தைத் திட்டமிட்டு நடத்துவேன்', 'புதிய வியாபாரத்தைத் தொடங்குவேன்' என்ற பெரிய வாக்குறுதிகள் வரை இன்று நாம் எடுத்திருப்போம். கடந்த வருடம் நாம் எடுத்த வாக்குறுதிகளை நினைத்துப் பார்த்தால் அதை எவ்வளவு சீக்கிரம் மீறியிருப்போம் என்பதும் நமக்குத் தெரியும். இத்தாலிய மொழியில் ஒரு பழமொழி உண்டு: 'உங்கள் கவலைகளெல்லாம் உங்கள் புத்தாண்டு வாக்குறுதிகள் போல சீக்கிரம் மறைந்து விடட்டும்!' நாம் நமக்கென அளித்துக்கொண்ட வாக்குறுதிகளை நாமே மீறும்போது வாழ்க்கை என்ற ஓவியப் பலகையில் ஓட்டை போட்டுக் கொள்கின்றோம். வாக்குறுதிகளைக் காப்பாற்றும்போது ஓவியப் பலகையில் தூரிகையால் வண்ணம் தீட்டுகிறோம்.

இறைவன் வாக்குறுதிகளின் இறைவன். தான் செய்த வாக்குறுதியிலும், தான் காட்டும் பேரன்பிலும் நிலைத்து நிற்கின்றார். தான் அளித்த வாக்குறுதியின் படியே தன் மகனை உலகிற்கு அனுப்புகிறார். 'இதோ ஆண்டவரின் அடிமை!' என இறைவனுக்கு வாக்குறுதி தந்த அன்னை மரியாளுக்கு இறைவனின் வாக்குறுதி தாய்மைப்பேறாக மாறுகின்றது. புதிய பாடல் (திபா 40:3), புதிய பெயர் (எசா 62:2), புதிய செயல் (எசா 43:19), புதிய உடன்படிக்கை (எரே 31:31), புதிய இதயம் (எசேக் 36:26), புதிய கட்டளை (யோவான் 13:34) மற்றும் புதிய விண்ணகம்-மண்ணகம் (திவெ 21:1) என ஏழு புதியவைகளை வாக்களிக்கின்றார் நம் இறைவன். இந்தப் புதியன நம் வாழ்வில் வளர வேண்டுவோம், பிறர்வாழ்வில் வளர அவர்களை வாழ்த்துவோம்.

இன்று புதிதாய்ப் பிறந்தோம்!

"ஆண்டு முழுவதும் உமது நலத்தால் முடிசூட்டுகின்றீர்.
உம்முடைய வழிகள் எல்லாம் வளம் கொழிக்கின்றன.
பாலைநிலத்தில் மேய்ச்சல் நிலங்கள் செழுமை பொங்குகின்றன.
குன்றுகள் அக்களிப்பை இடைக்கச்சையாய் அணிந்துள்ளன.
புல்வெளிகள் மந்தைகளை ஆடையெனக் கொண்டுள்ளன.
பள்ளத்தாக்குகள் தானியங்களால் தங்களைப் போர்த்திக் கொண்டுள்ளன".
(திருப்பாடல் 65:11-13)

புதிய குழந்தை, புதிய மலர், புதிய ஆடை, புதிய மனிதர், புதிய இடம், புதிய வீடு, புதிய வாகனம், புதிய மனைவி – என புதியவைகள் மனித மனத்திற்கு மலர்ச்சியைக் கொடுக்கின்றன. இன்று புதிய ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்கின்றோம் - ஒரு பக்கம் மகிழ்ச்சி, மற்றொரு பக்கம் தயக்கம். 'இனியாவது நல்லவர்களாக இருப்போம்' என நமக்கு நாமே வாக்குறுதிகள் கொடுத்திருப்போம். 'வருகின்ற ஆண்டாவது நன்றாக இருக்கட்டும்' என்று நம்பிக்கையோடு காத்திருப்போம். புதியவைகளை நமக்குப் பிடிக்கின்றன – ஏனென்றால் புதியவைகள் நமக்கு நம்பிக்கையைத் தருகின்றன. ஒரு சிலருக்கு புதியவைகளைக் கண்டால் பயமாகவும் இருக்கும். மகிழ்ச்சி, அச்சம், கலக்கம், தயக்கம், மலர்ச்சி, நம்பிக்கை என கலந்த உணர்வுகளைத் தருகின்றது புதிய ஆண்டு.

2014 - இதில் சிறப்பு என்ன? 1987 ஆண்டிற்குப் பிறகு ஆண்டின் நான்கு எண்களும் வெவ்வேறாக இருப்பது இந்த ஆண்டில்தான். ஆகையால் இந்த நான்கு எண்களைப் போல ஒவ்வொருவரும் தனித்தன்மை கொண்டவர்களாக வாழவும், பணவீக்கம் குறைந்து ரூபாய் மதிப்பு கூடி, எல்லாருக்கும் வேலை கிடைத்து, அமெரிக்க கனவுகள் நிறைவேறி, திருமணம், குழந்தை பாக்கியம் கைகூடி, நம் பிள்ளைகள் நன்கு படித்து, பசி, பட்டினி, சண்டைகள் மறைந்து, மீனவர்கள் பத்திரமாக கரை திரும்பி, 'திறப்பாங்களா, திறக்க மாட்டாங்களா?' னு இழுத்தடிக்கும் அணுவுலை மறைந்து, 24 மணிநேரமும் மின்சாரம் கிடைத்து, பாரக் ஒபாமாவிலிpருந்து, நம் பக்கத்து நாட்டு அதிபர் வரை நல்லாயிருந்து, பக்கத்து வீட்டு மாமியிலிருந்து, நம் பங்குச் சாமி வரை அனைவருக்கும் இந்த ஆண்டு இனிய ஆண்டாக அமையட்டும் என வாழ்த்துவோம்.

கிறிஸ்து பிறப்பு, புத்தாண்டையொட்டி நம் இல்லங்களைச் சுத்தப்படுத்தி அழகுபடுத்தியிருப்போம். சுத்தப்படுத்தும்போது நாம் ஒருசிலவற்றை பத்திரப்படுத்தியிருப்போம்;, ஒருசிலவற்றை 'தேவையில்லை' என்று தூக்கி எறிந்திருப்போம். ஒருசிலவற்றை 'ஐயோ! இது இங்கதான் இருக்கா' என்று பார்த்து ஆச்சர்யப்பட்டிருப்போம். புத்தாண்டிற்குள் நுழையும் நாம் இன்று எவற்றை வைத்துக்கொள்ள வேண்டும்? எவற்றைத் தூக்கியெறிய வேண்டும்? எவற்றை நினைத்து ஆச்சர்யப்பட வேண்டும்? என்று சிந்திப்போம்.

எவற்றை வைத்துக்கொள்ள வேண்டும்? நாம் வைத்துக்கொள்ள வேண்டியவை இரண்டு: 1) நமது வேர்கள். நாம் எங்கே தொடங்கினோம்? எப்படித் தொடங்கினோம்? என்பதை மறந்துவிடக்கூடாது. வேர்களை மறக்கின்ற மரம் நிலையாக நிற்க முடியாது. மரம் எவ்வளவு உயர்ந்தாலும், எவ்வளவு இனிய கனிகளைத் தந்தாலும், நாம் நீர் ஊற்றுவது வேர்களுக்குத்தான். நாம் இன்று என்ன நிலைக்கு உயர்ந்தாலும் நம் கசப்பான வேர்கள் என்றும் நம் நினைவில் நிற்க வேண்டும். 2) நம் இலக்கு. நாம் எதை நோக்கிப் போகிறோம்? இலக்கு தெளிவாக இல்லாதவர்களுக்கு எல்லா நாளும் ஒரே நாள்தான், எல்லா நேரமும் ஒரே நேரம்தான். மனிதர்களின் வாழ்வில் இரண்டு நாள்கள் முக்கியமானவை: ஒன்று நாம் பிறந்த நாள், இரண்டு நாம் எதற்காக பிறந்தோம் என்பதை அறிந்துகொள்கின்ற நாள். பிறந்த நாளை மட்டும் நினைவுகூர்ந்து, நம் வாழ்வின் குறிக்கோளை அறியத்தவறினால் வாழ்க்கை நமக்குக் கேள்விக்குறியே.

எவற்றைத் தூக்கியெறிய வேண்டும்? நாம் தூக்கியெறிய வேண்டியவை இரண்டு: 1) தவறான கோட்பாடுகள். 'அவர் அப்படித்தான்', 'இவர் இப்படித்தான்,' 'என் விதி அவ்வளவுதான்,' 'என்னால் இது முடியாது', 'எனக்குத் தெரியாது' என நமக்கு நாமே சொல்லிக் கொள்கின்ற சாக்குப்போக்குகளையும், நாம் பார்வையைப் பாழாக்கும் முற்சார்பு எண்ணங்களையும், 'எனக்கு எல்லாம் தெரியும்' போன்ற அதீத நம்பிக்கைகளையும், 'என் நேரம் சரியில்லை' போன்ற மூட நம்பிக்கைகளையும், 'என்னால் இதைச் செய்ய முடியாது' போன்ற அவநம்பிக்கைகளையும் தூக்கி எறிய வேண்டும். 2) மூடத்தனமான எதிர்பார்ப்புக்கள். 'இவர் இப்படி இருக்க வேண்டும்'. 'அவர் அப்படி இருக்க வேண்டும்'. வாழ்க்கையில் அனைத்தும் நான் நினைப்பது மாதிரியே நடக்க வேண்டும். எல்லாரும் என்னைப் போற்ற வேண்டும். எல்லாரும் என் பின்னால் வரவேண்டும். நம் அடிப்படைப் பிரச்சினை என்ன தெரியுமா? நாம் இங்கே இருக்கும்போது, அங்கே இருக்க விரும்புகிறோம். அங்கே இருக்கும்போது இங்கே இருக்க விரும்புகிறோம். நம் மனமே நாம் விரும்பும்படி இயங்காதபோது, மற்றவர்கள் நம் மனதிற்கு ஏற்ப நடக்கவில்லை என்று நினைப்பதிலும், கோபம் கொள்வதிலும் என்ன நியாயம்?

எவற்றை நினைத்து ஆச்சர்யப்பட வேண்டும்? அவை இரண்டு: 1) நம் கனவு. ஒரு சிறு தீப்பொறிதான் ஒரு பெரிய வாகனத்தை இழுக்கும் என்ஜினுக்கு உயிர்கொடுக்கிறது. இந்த ஒற்றைச் சொல்தான் நம் வாழ்க்கை எந்திரத்தை நகர்த்துகின்றது. நம் விடியலுக்கு அர்த்தம் கொடுப்பவை நம் கனவுகள். ஒவ்வொரு பொழுதும் நம் குடும்பத்திற்காக, நம் குழந்தைகளுக்காக, நம் சமுதாயத்திற்காக புதிய கனவுகளைக் காண்போம். இன்று நம் கைகளில் தவழும் கண்டுபிடிப்புக்கள் அனைத்தும் அன்று எவரோ ஒருவர் கண்ட கனவுதான். 'நூறு கனவுகள் கண்டாலே ஆறு கனவுகள் பலிக்காதா?' 2) நம் சேமிப்பு. இது பணச் சேமிப்பு அல்ல. மாறாக, உணர்வுகள் சேமிப்பு. நாம் நம் உறவுகளில் எதைச் சேமிக்கிறோமோ அதைத்தான் நாம் திரும்பப் பெறுவோம். அன்பைச் சேமித்தால் அன்பைப் பெறுவோம். பாhரட்டைச் சேமித்தால் பாராட்டைப் பெறுவோம். கோபத்தைச் சேமித்தால் கோபத்தைப் பெறுவோம். வெறுப்பைச் சேமித்தால் வெறுப்பைப் பெறுவோம். நாம் மற்றவர்களுக்குக் கொடுக்காத ஒன்றை நாம் ஒருபோதும் பெறப்போவதில்லை. 'தீதும், நன்றும் பிறர்தர வாரா!'

இத்தாலிய மொழியில் ஒரு விநோதமான பழமொழி உண்டு: 'உங்கள் கவலைகளெல்லாம் உங்கள் புத்தாண்டு வாக்குறுதிகள் போல மறைந்து போகட்டும்!' நம் வாழ்வில் வாக்குறுதிகள் நிலைக்கட்டும்! கவலைகள் மறையட்டும்! 

Sunday, December 29, 2013

முகநூல் குடும்பமும் திருக்குடும்பமும்

உலகில் ஏறக்குறைய எல்லோர் உதட்டிலும் தவழும் ஒரு வார்த்தை: ஃபேஸ்புக் - முகநூல். எவ்வளவு தூரத்தில் இருந்தாலும், எப்பவோ பழகியிருந்தாலோ, புதிதாகப் பழக நினைத்தாலோ இந்தக் குடும்பத்திற்குள் போய்விட்டால் போதும். மீண்டும் உறவைப் புதுப்பித்துக்கொள்ளலாம். பேசலாம். சிரிக்கலாம். கேலி செய்யலாம். கோபப்படலாம். பிடித்திருந்தால் 'லைக்' போடலாம், 'ஷேர்' செய்யலாம். ஆனால் இது ஒரு தொட்டும் தொடாத குடும்பம். யாருக்கும் யாரைப்பற்றியும் கவலை இல்லை. யார் அக்கறையும் யாருக்கும் தேவையில்லை. இந்த முகநூல் குடும்பத்தைப்போலத்தான் இன்று பல குடும்பங்கள் மாறிக்கொண்டிருக்கின்றன. வேலை, படிப்பு என பெற்றோர், பிள்ளைகளை விட்டும், குழந்தைகள் தன் உடன்பிறந்தவர்களை விட்டும் பிரிந்து நி;ற்கின்றனர். வேலைப்பளு, மன அழுத்தம், சோர்வு, பரபரப்பு, அவசரம் என்று சதா ஓடிக்கொண்டேயிருக்கும் மனிதர்களுக்கு குடும்பம் வெறும் துணிமாற்றும் அறைகளாக மட்டுமே மாறிக்கொண்டிருக்கிறது.

படைப்பு, இஸ்ராயேல் மக்களின் விடுதலை வரலாறு, மீட்பரின் வருகை என இம்மூன்று முக்கிய நிகழ்வுகளிலம் குடும்ப உறவு இழையோடி நிற்கின்றது. மேலும், ஆபிரகாம் - சாரா, ஈசாக்கு – ரபேக்கா, யாக்கோபு – லேயா, ரேச்சல் என முதுபெரும் தந்தையர்களின் குடும்பங்களும், தோபியா – சாரா என இணைத்திருமறையின் குடும்பமும், யோசேப்பு – மரியாள் என புதிய ஏற்பாட்டுக் குடும்பமும் குடும்ப உறவின் அன்பை, தியாகத்தை, பகிர்தலை, எதிர்நோக்கியிருத்தலை நமக்குக் கற்பிக்கின்றன. 

இயேசுவை நாம் சந்திக்க வேண்டுமானால், அங்கே அவரது குடும்பத்தையும் நாம் சந்திக்க வேண்டும். '(இடையர்கள்) விரைந்து சென்று மரியாவையும், யோசேப்பையும், தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள்' (லூக் 2:16).

1. அமைதி. இயேசுவின் பிறப்பையொட்டிய நிகழ்வுகளை லூக்கா நற்செய்தியாளர் தொகுக்கும்போது, திருக்குடும்பத்தைப் பற்றிய இடத்திலெல்லாம் ஒருவிதமான அமைதியை அடிநாதமாக எழுதுகின்றார். 'மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார்' (லூக் 2:19). இயேசுவின் பிறப்பு அவர்களை ஆழ்மன அமைதிக்கு அழைத்துச் செல்கின்றது. நம் குடும்பங்களில் இருக்க வேண்டியது இத்தகைய அமைதிதான். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் செய்யும் மிக நீண்ட பயணம் தன் ஆழ்மனத்தை நோக்கிய பயணம்தான். அமைதியில் திளைக்கும் குடும்பம்தான் வெற்றிபெற முடியும். எந்நேரமும் சண்டை சச்சரவுகளையும், எரிச்சலையும், சலசலப்பையம் கொண்டிருக்கும் குடும்பம் தோல்வியில்தான் முடியும். கற்களும், செங்கற்களும் ஒரு அழகிய கட்டடத்தைக் கட்டலாம். அதை இல்லமாக மாற்றுவது அமைதியான மனித மனங்கள்தாம்.

2. ஒழுங்கு. இதில் ஒழுங்கு என்பது ஒருவர் மற்றவரைக் கட்டுக்குள் கொண்டுவரத் துடிக்கும் வேகத்தையல்ல, மற்றவரின் நலன் காப்பதையே நான் குறிப்பிடுகிறேன். சாலையில் நாம் செல்கின்றோம். வழியில் எச்சரிக்கைகள், வேகத்தடைகள், பச்சை - மஞ்சள் - சிகப்பு என விளக்குகள் வைக்கப்பட்டிருக்கின்றன. இவையெல்லாம் நம்மைக் கட்டுப்படுத்தவா? நம் பயண வேகத்தைக் குறைத்து நம் சுமையைக் கூட்டுவதற்காகவா? இல்லை. நம் நலனுக்காக. நாம் பத்திரமாய் வீடுதிரும்புவதற்காக. அதுபோலத்தான், குடும்பத்தில் ஒருவர் மற்றவரிடம் விரும்புகின்ற ஒழுக்கமும், ஒழுங்கும் அடக்கியாளும் கட்டுப்பாட்டையல்ல, நலனையே கொண்டிருக்க வேண்டும். மேலும், மற்றவர் நலன் என்று வரும்போது, சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் தூக்கியெறியத் துணிய வேண்டும். யோசேப்பு மரியா கருவுற்றிருக்கிறாள் என்று தெரிந்தும் ஏற்றுக்கொண்டபோது, யூத மரபை மீறத் துணிகி;ன்றார். மரியாவின் மற்றும் குழந்தையின் நலன் காக்கின்றார்.

3. உழைப்பு. உழைப்பிற்குப் பாதுகாவலராக நாம் யோசேப்பைக் கொண்டாடுகின்றோம். உழைப்பின் வேர்கள் கசப்பாக இருக்கும். ஆனால் அதன் கனிகளோ என்றும் இனிமையானவை. உழைப்பு என்பது பணத்திற்காக வேலைசெய்வது அன்று. மாறாக, நம்மை நாமே முழுமனிதர்களாக மாற்றுவதுதான் உழைப்பு. நாம் செய்கின்ற வேலை என்பது நம் இயல்பை வெளிப்படுத்தும் ஒரு கருவியாக மட்டுமே இருக்கவேண்டுமே தவிர, அதுவே நம் அடையாளமாக மாறிவிடக்கூடாது. அடையாளமாக மாறும்போதுதான், அதை வைத்து நாம் மற்றவர்களை நாம் மட்டம்தட்ட ஆரம்பிக்கின்றோம். உழைப்பு குறையும்போது சுயநலமும், பதுக்குகின்ற சிந்தனையும் தலைதூக்குகின்றது.

4. இறைநம்பிக்கை. இறைநம்பிக்கை திருக்குடும்பத்தின் ஆணிவேராக இருந்ததுபோல நம் வாழ்விலும் இருக்க வேண்டும். திருக்குடும்பம் எருசலேமுக்குச் சென்ற நிகழ்வை வாசித்தால் இந்த நம்பிக்கை புலப்படும்.இறைவன் மையமாக இருக்கும் குடும்பமே இணைந்து நிற்கும். நம்மிடம் குறைவுபடுகின்ற வெறுமையை மற்றவரிடம் தேடும்போது வெறுமையும், வெறுமையும் இணைந்து வெறுமையே மிஞ்சும். ஆனால், அந்த இடத்தில் இறைமையைத் தேடினோமென்றால் நம் குறைகள் நிறைவாகும்.

உம் அடியான் கேட்கிறேன்

பின்பு ஏலி சாமுவேலை நோக்கி, 'சென்று படுத்துக்கொள். உன்னை அவர் மீண்டும் அழைத்தால் அதற்கு நீ, 'ஆண்டவரே பேசும், உம் அடியான் கேட்கிறேன்' என்று பதில் சொல்' என்றார். சாமுவேலும் தன் இடத்திற்குச் சென்று படுத்துக்கொண்டான். அப்போது ஆண்டவர் வந்து நின்று, 'சாமுவேல், சாமுவேல்' என்று முன்புபோல் அழைத்தார். அதற்குச் சாமுவேல், 'பேசும், உம் அடியான் கேட்கிறேன்' என்று மறுமொழி கூறினான். (1 சாமுவேல் 3:9-10)

சாமுவேலை இறைவன் அழைக்கின்றார். சாமுவேலின் துறவறம் இங்கே தொடங்குகின்றது. 'துறவறம்' என்பது இல்லறத்தோடு கலந்ததாகவே இருக்கின்றது தொடக்க காலத்தில்.

இல்லறத்திலிருந்து விலகி நிற்பது மட்டும்தான் துறவறமா? துறவறம் என்றால் என்ன?

விவேகானந்தர் தம் 14 வயதில் துறவறம் மேற்கொள்ள விரும்பி தன் தாயிடம் அனுமதி கோரச் செல்கின்றார். 'அம்மா, நான் துறவறம் மேற்கொள்ளப் போகிறேன். அனுமதி தருவீர்களா?' என்ற கேட்ட அவரிடம் அவருடைய தாய், 'போய், சமையலறையிலிருந்து கத்தியை எடுத்துக்கொண்டு வா' என்கிறார். இவரும் எடுத்து வருகிறார். தாய் சொல்கிறர், 'இப்போது நீ போக முடியாது'. ஒரு மாதம் கழித்து மறுபடியும் அனுமதி கேட்கின்றார். மறுபடியும் தாய் கத்தியை எடுத்துவரச் சொல்கின்றார். மறுபடியும் 'இப்போது நீ போக முடியாது' என்று அனுமதி மறுக்கின்றார். மூன்று மாதங்கள் கழித்து மீண்டும் அவர் தன் தாயிடம் அனுமதி கேட்க வருகின்றார். இம்முறையும் கத்தியை எடுத்துவரச் சொல்கின்றார். எடுத்து வந்தவுடன் தாய், 'மகனே, நீ இப்போது துறவறத்திற்குச் செல்லலாம!'; என்று அனுமதி கொடுக்கின்றார். இவருக்கு ஒன்றுமே புரியவில்லை. 'அம்மா, ஒவ்வொரு முறையும் கத்தியை எடுத்துவரச் சொன்னபோது கத்தியைத்தானே எடுத்து வந்தேன். இப்போது மட்டும் எப்படி அனுமதி கொடுக்கிறீர்கள்' என்று கேட்கின்றார். 'மகனே, முதல் இரண்டு முறை கத்தியை எடுத்து வந்தபோது பாதுகாப்பான கைப்பிடியை நீ வைத்துக்கொண்டு வெட்டுகின்ற பகுதியை என்னிடம் நீட்டினாய். இன்றுதான் வெட்டுகின்ற பகுதியை நீ பிடித்துக்கொண்டு பாதுகாப்பான பகுதியை என்னிடம் நீட்டினாய். துறவறம் என்பதும் அதுதான். வெட்டுகின்ற பகுதியை நீ பிடித்துக்கொண்டு பாதுகாப்பான பகுதியை மற்றவர்களுக்கு நீட்டுவது.' 

நாம் ஒருவர் மற்றவருக்கு நம்மையே கையளிப்பதே துறவறம்!

பேசும், உம் அடியான் கேட்கிறேன்!

Friday, December 27, 2013

என்னை அழைத்தீர்களா?

சிறுவன் சாமுவேல் ஏலியின் மேற்பார்வையில் ஆண்டவருக்கு ஊழியம் செய்துவந்தான். அந்நாள்களில் ஆண்டவரின் வார்த்தை அரிதாக இருந்தது. காட்சியும் அவ்வளவாக இல்லை. அப்போது ஒருநாள் ஏலி தம் உறைவிடத்தில் படுத்திருந்தார். கண்பார்வை மங்கிவிட்டதால் அவரால் பார்க்க முடியவில்லை. கடவுளின் விளக்கு இன்னும் அணையவில்லை. கடவுளின் பேழை வைக்கப்பட்டிருந்த ஆண்டவரின் இல்லத்தில் சாமுவேல் படுத்திருந்தான். அப்பொழுது ஆண்டவர், 'சாமுவேல்' என்று அழைத்தார். அதற்கு அவன், 'இதோ! அடியேன்' என்று சொல்லி, ஏலியிடம் ஓடி, 'இதோ அடியேன். என்னை அழைத்தீர்களா?' என்று கேட்டான். (1 சாமுவேல் 3:1-5)

சாமுவேல் ஆண்டவருக்காக நேர்ந்தளிக்கப்பட்டு சீலோவில் ஆண்டவரின் இல்லத்தில் ஏலியோடு குடியிருக்கின்றார். இறைவனின் இல்லம் பற்றிச் சொல்லும்போது 'இறைவனின் பிரசன்னம்' அந்நாள்களில் அவ்வளவாக இல்லை என்று விவிலியம் சொல்கிறது. விவிலியத்தில் இறைவனின் மௌனம் நிறையவே இருக்கின்றது. ஏன் இன்றும் கூட இறைவனின் காட்சிகள் வெளிப்படுவதே இல்லை. 

'கண்பார்வை மங்கிவிட்டது ஏலிக்கு!' 'கடவுளின் விளக்கும் மெதுவாக அணைந்து கொண்டிருக்கிறது'. இன்றைய சிந்தனைப் பகுதியில் மையமாக இருக்கும் வார்த்தை 'காட்சி', 'கண்கள்'. 

வயது முதிரும்போது கண்பார்வை மங்குகின்றது. இது உடலில் குறையும் காட்சி. நம் மனதில் பிரச்சினைகள் இருக்கும்போது கடவுள் நம்பிக்கை தளர்கின்றது. இது உள்ளத்தில் குறையும் காட்சி. உடலிலும், உள்ளத்திலும் சில நேரங்களில் விளக்கு முணுக் முணுக் என்று எரிந்துகொண்டுதான் இருக்கின்றன.

அந்த நேரத்தில் இறைவன் நம்மையும் பெயர் சொல்லி அழைக்கின்றார்.

நாமும் கேட்போம்: 'என்னை அழைத்தீர்களா?'

Thursday, December 26, 2013

உங்களையே கொழுக்க வைப்பதேன்?

அப்போது இறையடியார் ஒருவர் ஏலியிடம் வந்து கூறியது: 'ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: 'எகிப்து நாட்டில் பார்வோன் வீட்டாருக்கு உன் மூதாதை வீட்டார் அடிமைகளாக இருந்தபோது அவர்களுக்கு நான் என்னையே வெளிப்படுத்தினேன். நான் உன் வீட்டாரை என் குருக்களாக ஏற்படுத்தினேன். பின் நானே கட்டளையிட்ட பலிகளையும், படையல்களையும் துச்சமாய் மதிப்பது ஏன்? உன் புதல்வர்களை எனக்கு மேலாக உயர்த்தி, என் மக்கள் இஸ்ரயேல் செலுத்தும் ஒவ்வொரு படையலிலும் சிறந்தவற்றை எடுத்துக்கொண்டு உங்களையே கொழுக்க வைப்பதேன்?'' (1 சாமுவேல் 2:27-30)

ஏலியும் அவரது புதல்வர்கள் ஒப்னியும், பினகாசும் சீலோவில் உள்ள இறைவனின் இல்லத்தின் குருக்களாகத் திகழ்கின்றனர். ஏலி இறைவனின் மேல் பயம் உள்ளவர்களாக இருக்கின்றார். ஆனால் அவரது புதல்வர்கள் 'கோயில் பூனை சாமிக்குப் பயப்படாது' என்பது போல இறைவனின் மேல் பற்றற்றவர்களாக இருந்து கொண்டு இறையாலயத்திற்கு வரும் காணிக்கைப் பொருள்கள் மேல் பற்றுக்கொள்ளத் தொடங்குகின்றனர். இது இறைவனின் பார்வையில் தவறெனப் படுகின்றது. அவர்களின் பாவத்தைச் சுட்டிக்காட்ட இறையடியார் ஒருவரை இறைவன் அனுப்புகின்றார்.

பாவம் என்றால் என்ன? 'முதன்மைப்படுத்துவதில் ஏற்படும் குழப்பமே பாவம்'. ஏலியின் புதல்வர்கள் இறைவனை முதன்மைப்படுத்துவதற்குப் பதிலாக தங்களின் வயிற்றை முதன்மைப்படுத்துகின்றனர்.

'முதன்மையானதை முதன்மையானதாக வையுங்கள்' என்பது மேலாண்மையியல் பாடம்.

இன்று நம் வாழ்வில் முதன்மையானவை முதன்மையானவைகளாக இருக்கின்றனவா?

'உங்களையே கொழுக்க வைப்பதேன்?'

யாரும் எதிர்பாராத இடத்தில்

பிரபல தமிழ் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், 'துறவியும் மீனும்' என்ற ஐந்து நிமிட ஜென் குறும்படத்தைப் பற்றித் தன் வலைப்பக்கத்தில் எழுதுகின்றார்: 'புத்த மடாலயம் ஒன்றில் ஒரு நீர்த்தேக்கம் இருக்கிறது. ஒருநாள் ஒரு புத்த பிக்கு அதில் அழகாக நீந்திக் கொண்டிருக்கும் ஒரு மீனைப் பார்க்கிறான். உடனே அதைப் பிடிக்க வேண்டும் என நினைத்து ஒரு தூண்டில் எடுத்து வந்து மீன்மேல் வீசுகிறான். மீன் தப்பி ஓடுகிறது. பின் வலையை விரிக்கிறான். வலையிலும் அது விழவில்லை. இரவெல்லாம் அவனுக்குத் தூக்கமேயில்லை. அந்த மீனை எப்படிப் பிடிப்பது என சிந்தித்துக் கொண்டே இருக்கிறான். அடுத்த நாள் தன் நண்பர்களிடம் அதைப்பற்றியே பேசுகிறான். மீன் பிடிப்பது எப்படி? என்று புத்தகங்களைத் தேடிப் படிக்கிறான். ஆனால் அவனால் மீனைப் பிடிக்கவே முடியவில்லை. அம்பு விட்டு;ப் பார்க்கிறான். உள்ளே இறங்கி அதை விரட்டிப் பிடிக்கப் பார்க்கிறான். முடியவேயில்லை. இறுதியாக, மீனைப் பிடிக்க நினைப்பது முட்டாள்தனம், அதன் போக்கில் நாமும் கலந்துவிட வேண்டும், அதுவே மீனைப் புரிந்துகொள்ளும் வழி என நினைத்து மீனோடு நீந்துகிறான். அவனும் மீனும் நெருக்கமாகி விடுகிறார்கள். மீன் அவனோடு சேர்ந்து நீந்துகிறது. துள்ளுகிறது. இருவரும் ஒன்றாக முடிவற்ற புள்ளியை நோக்கி மகிழ்ச்சியாக வானில் தாவி மறைகிறார்கள்'.

இறைமை மனிதத்தோடும், மனிதம் இறைமையோடு கைகோர்த்துக்கொண்ட ஒரு அற்புத நிகழ்வே கிறிஸ்துமஸ். முதல் கிறிஸ்துமஸ்! காலண்டரில் குறிக்கப்படவில்லை. பலூன்கள் ஊதப்படவில்லை. நட்சத்திரங்கள் கட்டப்படவில்லை. வானவேடிக்கை இல்லை. விடுமுறை இல்லை. வாழ்த்து அட்டைகள் பரிமாறப்படவில்லை. கேக்குகள் இல்லை. கேரல்ஸ் இல்லை. ஸ்வீட்ஸ் இல்லை. யாருமே எதிர்பார்க்கவில்லை. 'பழைய ஏற்பாட்டின் எல்லாப் பக்கங்களிலும் அவர் நிழல் தெரிந்தது. யாரும் அவர் வருவதைக் கண்டுகொள்ளவேயில்லை. யாரும் எதிர்பாராத இடத்தில், எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத விதத்தில் இறைமை மனிதத்தைத் தழுவிக் கொண்டது.

மரியாள், வானதூதர், பெத்லகேம், அகஸ்டஸ் சீசரின் கணக்கெடுப்பு, ஏரோதின் பொறாமை, 'இடம் இல்லை' என்று சத்திரத்தில் தொங்கிய 'போர்டு', வானதூதர்கள், இடையர்கள், கீழ்த்திசை ஞானியர், நட்சத்திரம், ஒட்டகம், மாடு, கழுதை, குகை என எண்ணற்றவைகளை நாம் கேட்டுவிட்டோம். இவைகளைப் பற்றிச் சொல்லத் தொடங்குமுன் இவை என்னவென்று நமக்குத் தெரியும். இன்று நாம் எவ்வளவு கேட்டாலும் நாம் கேட்பது போலக் கேட்கின்றோம். 'அதிகமாகக் கேட்டல்' அலுப்புத் தட்டுகிறது.

Tuesday, December 24, 2013

கால்பதித்த கடவுள்!

அயர்லாந்து நாட்டில் ஒரு டிசம்பர் மாதம். குளிர்காலம். மாலை நேரத் தேநீரைக் குடித்துக்கொண்டிருக்கிறார் ஒரு பெண்மணி. திடீரென அவரது வீட்டின் அழைப்பு மணி ஒலிக்கிறது. 'யார் வந்திருப்பார்கள்?' என்று நினைத்துக்கொண்டே கதவின் துவாரம் வழியே பார்க்கின்றார். வாசலில் ஒரு சிறுவனும், சிறுமியும் நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பார்த்தாலே 'ஏழைச் சிறுவர்கள்' என்று சொல்லிவிடலாம். ஏனோதானோவென்ற ஆடை, அழுக்குப்படிந்த முகம், சிக்கு விழுந்த தலை. 'என்ன வேண்டும்?' கேட்கிறார் பெண். 'உங்கள் வீட்டில் பழைய நியூஸ்பேப்பர் இருந்தால் கொடுப்பீர்களா?' பதில் வருகிறது. 'ஏன்?' 'ரொம்ப பனி பெய்கிறது. குளிர் அதிகமாக இருக்கிறது. இந்தப் பனியில் நடப்பதற்காக பழைய செய்தித்தாள்களை நாங்கள் எங்கள் பாதங்களில் கட்டிக்கொள்வோம். எங்கள் ஆடைகளுக்குள்ளும் வைத்து குளிர்போக்கிக்கொள்வோம்'. அந்தப் பெண்மணி குனிந்து அவர்களின் பாதங்களைப் பார்க்கின்றாள். அவர்கள் பாதங்களில் கட்டியிருந்த பழைய செய்தித்தாள்கள் பனியில் நனைந்து கிழிந்துகொண்டிருந்தன. விரைவாக அவர்களை வீட்டிற்குள் அழைக்கின்றாள் அவர்களை சோஃபாவில் அமரச் செய்துவிட்டு அவர்களுக்கு தேநீர் கொண்டு வருகின்றாள். தேநீர்க் கோப்பையைக் கையில் எடுத்தவுடன் சிறுவன், 'அம்மா, நீங்கள் பணக்காரரா?' என்று கேட்கின்றான். அந்தப் பெண்மணி, 'எப்படிக் கேட்கிறாய்?' என, சிறுவன் சொல்கிறான், 'பணக்காரர்கள் வீட்டில்தான் கப்பும், சாசரும் மேட்ச்சாக இருக்கும் என என் அம்மா சொல்லியிருக்கிறார்கள்' என்கிறான். அப்போதுதான் அந்தப் பெண்மணிக்குத் தோன்றுகிறது: 'மற்றவரிடம் இல்லாத பல தன்னிடம் இருக்கிறது. அதை நான் உணராமல் அன்றாடம் என் குறைகளையே நினைத்து புலம்புகிறேனே' என்று. தன் வீட்டில் இருந்த குழந்தைகளின் பழைய காலணிகளை அவர்களுக்குக் கொடுத்து, ஆடைகளும் கொடுத்து அனுப்புகின்றாள். கதவை அடைத்து விட்டு உள்ளே வந்து அவர்கள் விட்டுச் சென்ற தேநீர்க் கோப்பையை எடுத்துப் பார்க்கின்றாள். ஆம். அது மேட்ச்சாக இருந்தது. சோஃபாவின் அருகில் அந்தச் சிறுவர்களின் காலடித்தடங்கள் பழைய நியூஸ்பேப்பரின் ஈரத்தோடு ஒட்டியிருக்கின்றன. அதைத் துடைக்காமல் அப்படியே விடுகின்றாள். 

இரண்டாயிரத்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பெத்லகேம் மாடடைக்குடிலில், ஒரு குளிர் இரவில் தன் பிஞ்சுப் பாதங்களைப் பதித்த பாலஸ்தீனத்தைக் குழந்தையும் நமக்கு இதைத்தான் நினைவுபடுத்துகின்றது: 'நாமெல்லாம் செல்வந்தர்கள்'. 'அவர் செல்வராயிருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார்' (2கொரி 8:9). இறைவனின் பாதப்பதிவுகள் மனுக்குலத்திற்குச் சொந்தமான நாள் கிறிஸ்துமஸ். காலங்களையெல்லாம் கடந்த கடவுள் மனித நேரத்திற்குள் நுழைந்த இரவு இந்த இரவு. பெயர்களையெல்லாம் கடந்த இறைவன் இம்மானுவேல், இயேசு என்று பெயர் பெற்ற நாள் இந்த நாள். இந்தப் பாதச்சுவடுகள் நம் உள்ளங்களிலும், இல்லங்களிலும் பதிய வேண்டும் என்று குடில் ஜோடித்து அழகு பார்க்கின்றோம். அவரது பிறப்பை அடையாளம் காட்டிய நட்சத்திரம் நமக்கும் நல்வழி காட்ட வேண்டும் என ஒளியால் அலங்கரித்துள்ளோம். கீழ்த்திசை உதித்த ஆதவனாய், பாவம் போக்க மனுவுரு எடுத்த நம் மன்னவனின் ஒளி அகஇருள் போக்கி நிறைஒளி தர வேண்டிநிற்கின்றோம். 'வார்த்தை மனிதரானார். நம் நடுவே தன் காலடிகளைப் பதித்தார்' (யோவா 1:18). 

'நற்செய்தி அறிவிப்பவரின் பாதங்கள் எத்துணை அழகானவை' (எசா 52:7) என்று எசாயா முன்னுரைத்தது இன்று நிறைவேறுகின்றது. இந்த நற்செய்தி அறிவிப்பவர் இயேசுவே. அவர் கொண்டு வந்த நற்செய்தி அன்பு, மகிழ்ச்சி, அமைதி, நம்பிக்கை. 'நீர் வானங்களைப் பிளந்து இறங்கி வரமாட்டீரா?' (எசா 63:1) என்று வேட்கை கொண்ட எசாயா இஸ்ராயேல் மக்களின் எதிர்பார்ப்பை எடுத்துரைக்கின்றார். இயேசுவின் பிறப்பு மட்டுமல்ல, அவரது பணிவாழ்வும் கூட அவர் இம்மண்ணுலகில் காலூன்றி நின்றதை நமக்குக் காட்டுகின்றது. பாவியான ஒரு பெண் அவரது காலடிகளில் கண்ணீர் வடிக்கின்றார் (லூக் 7:38). மீன்பாட்டைக் கண்டவுடன் சீடர்கள் இயேசுவின் காலடிகளில் விழுகின்றனர் (மாற் 5:22). திருமுழுக்கு யோவான் இயேசுவின் காலடிகளைத் தொடக்கூடத் தகுதியில்லை எனத் தம் வெறுமையை ஏற்றுக்கொள்கின்றார். தொழுகைக்கூடத் தலைவர் யாயீர் காலடிகளில் பணிகின்றார் (மாற் 5:33). சக்கரியாவும் தனது பாடலில் 'நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும் நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும், இரக்கத்தாலும் விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகின்றது' (லூக் 1:79) என்று பாடுகின்றார். தன் இறுதி இராவுணவில் தம் சீடர்களின் காலடிகளைக் கழுவியதோடு மட்டுமல்லாமல் அதையே அவர்களும் செய்ய வேண்டும் எனக் கட்டளையிடுகின்றார் (யோவா 13:14). இயேசுவின் காலடிகளைப் பற்றி விவிலியம் பேசும் இடத்திலெல்லாம், மனுக்குலத்தில் அவர் வேரூன்றி நின்றதுதான் வெளிப்படுகின்றது.

கிறிஸ்து மனுக்குலத்தில் காலூன்றிய இந்த நிகழ்வு நமக்கு மூன்று வாக்குறுதிகளைத் தருகின்றது: 

1. உடனிருப்பு. இறைவன் மனுக்குலத்தோடு உடனிருக்க இறங்கி வருகின்றார். பழைய ஏற்பாட்டு காலத்திலிருந்து இறைவன் உடனிருக்கும் இறைவனாகவே மக்கள் நடுவே திகழ்கின்றார். இறைவன் நம்மோடு உடனிருக்கிறாரெனில், நாம் ஒருவர் மற்றவரோடு உடனிருக்கின்றோமா? நம் உடனிருப்பு மற்றவரின் பிரசன்னத்திற்கு அழகு சேர்க்கின்றதா? அல்லதா அழித்து விடுகின்றதா?

2. வாழ்வில் வேரூன்றல். இன்றைய பல தீமைகளில் மிகக் கொடுமையானது 'நம்பிக்கையிழப்பது.' தோல்வியைவிட, தோல்வியைக் குறித்த பயம்தான் நம்மை அதிகமாக பயமுறுத்துகின்றது. கடவுள் மனிதவுரு ஏற்றார். மனிதம் மேன்மையானது. மனிதம் சார்ந்த அனைத்தும் வாழ்வு தருவது. ஆகையால், எதையும் துணிச்சலோடு எதிர்கொள்தல் அவசியம். நம் இறைவன் நாம் அழிவுற நினைக்கும் இறைவனல்லர். நம் வாழ்வு ஒரு கொடை. அந்தக் கொடையைப் பெறுதலே பெரிய பாக்கியம். அதில் மகிழ்வோம்.

3. பிரிவினைகள் அழிந்தன. இறைவன் - மனிதன், ஆண் - பெண், வளமை – வறுமை, நிறைவு – குறைவு என்று மனிதர் வைத்திருந்த அனைத்துப் பிரிவினைகளும் இயேசுவின் பிறப்பில் அழிந்தன. வலுவற்றதை வல்லமை தழுவிக் கொண்டதால் அனைத்துமே வல்லமை பெற்றது. 

நம் நடுவில் அவர் காலடிகளைப் பதித்தார். நாம் ஒருவர் மற்றவர் வாழ்வில் அன்பினால் கால் பதிப்போம்.

நான் அவனை ஆண்டவரிடமிருந்து கேட்டேன்!

எல்கானா தம் மனைவி அன்னாவோடு கூடி வாழ்ந்தார். ஆண்டவரும் அவரை நினைவுகூர்ந்தார். உரிய காலத்தில் அன்னா கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுத்தார். 'நான் அவனை ஆண்டவரிடமிருந்து கேட்டேன்' என்று சொல்லி, அவர் அவனுக்குச் 'சாமுவேல்' என்று பெயரிட்டார். அவர் தம் கணவரிடம், 'பையன் பால் குடி மறந்ததும் அவனை ஆண்டவரின் முன்னிலையில் எடுத்துச் செல்வேன். அவன் ஆண்டவர் திருமுன் சென்று என்றும் அங்கே தங்கியிருப்பான்' என்று சொன்னார். (1 சாமுவேல் 1:21-23)

ராபர்ட் ஆல்டர் என்ற இலக்கிய ஆய்வாளர் தான் ஆங்கில இலக்கியத்தில் கற்ற அனைத்துப் பரிமணாங்களையும் விவிலியத்தின் கதையாடல்களில் பயன்படுத்துகின்றார். இலக்கியத்தில் இருப்பது போலவே விவிலியத்திலும் நிறைய ஃபார்முலாக்கள் இருக்கின்றன. ஆல்டர் ஆறு ஃபார்முலாக்களைக் கண்டுபிடித்துள்ளார்: 1) மலடியாயிருக்கும் ஒரு பெண்ணுக்கு ஹீரோவின் பிறப்பு பற்றிய முன்னறிவிப்பு, 2) கிணற்றடியில் பெண் பார்க்கும் படலம், 3) வயல்வெளியில் ஆண்டவரின் தூதர் சந்திப்பு, 4) கடவுள் தனக்குப் பிடித்தமானவர்களைச் சோதிப்பது, 5) பாலைவனத்தின் ஆபத்தும், ஆபத்திலிருந்து விடுதலையும், 6) இறக்கும் கதாநாயகனின் இறுதி வார்த்தைகள். 

இந்த ஆறு ஃபார்முலாக்களில் 'கிணற்றடியில் பெண் பார்க்கும் படலத்தை' நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். இன்று முதல் ஃபார்முலாவைப் பார்க்கலாம்:

இந்த முதல் ஃபார்முலாவை வைத்து விவிலியத்தில் ஏழு நிகழ்வுகள் உள்ளன:

1. ஆபிரகாம் மற்றும் சாரா – அவர்களுக்குப் பிறக்கும் ஈசாக்கு (தொநூ 16:1-21:7)
2. ஈசாக்கு மற்றும் ரெபாக்கா – அவர்களுக்குப் பிறக்கும் ஏசா, யாக்கோபு (தொநூ 25:19-26)
3. யாக்கோபு மற்றும் லேயா, ராக்கேல் - அவர்களுக்குப் பிறக்கும் பன்னிரு புதல்வர்கள் (தொநூ 29:31-30:24)
4. மனோவாகு மற்றும் அவரின் மனைவியும் - அவர்களுக்குப் பிறக்கும் சிம்சோன் (நீதி 13:2-25)
5. எல்கானா மற்றும் அன்னா – அவர்களுக்குப் பிறக்கும் சாமுவேல் (1 சாமுவேல் 1:1-21)
6. சக்கரியா மற்றும் எலிசபெத்து – அவர்களுக்குப் பிறக்கும் யோவான் (லூக்கா 1:5-80)
7. யோசேப்பு மற்றும் மரியா – அவர்களுக்குப் பிறக்கும் இயேசு (லூக்கா 1:26-2:7, மத் 1:18-25)

இந்த ஏழு நிகழ்வுகளிலும் பொதுவானவைகள் மூன்று:

1. மனைவியின் மலட்டுத்தன்மை பற்றிய குறிப்பு
2. மலட்டுத்தன்மை முடிந்து குழந்தை பெறுவாய் என்ற வாக்குறுதி
3. கருத்தரித்தல் மற்றும் குழந்தை பெறுதல்

இன்று நாம் சிந்திக்கும் எல்கானா – அன்னா வழியாக நிகழும் சாமுவேலின் பிறப்பு நிகழ்விலும் இந்த மூன்று பண்புகள் உள்ளன. அன்னா தன் குழந்தையை இறைவனுக்கு அர்ப்பணிக்கின்றார். 'நேர்ச்சை' என்பது பழங்கால சமயங்கள் மற்றும் சமூக வழக்கங்களில் முக்கியமானதாக இருக்கின்றது. 

'ஒரு தாய் செய்த நேர்ச்சைக்கு குழந்தை பலிகடா ஆக வேண்டுமா?' என்பது சமூகவியல் ஆய்வாளர்களின் எதிர்வாதமாக இருக்கிறது. 

இன்றும் நேர்ச்சை பல முகங்களில் வலம் வருகின்றது. 'நீ நேர்ந்து கொண்டதை இறைவனுக்குச் செலுத்து' என்று மோசேயின் கட்டளையும் பழைய ஏற்பாட்டில் உள்ளது. 

சாமுவேலின் பெயர் நமக்குக் கற்றுக் கொடுப்பது இதுதான்: 'இறைவன் நம் குரலைக் கேட்பார்!'

Monday, December 23, 2013

என் துன்ப துயரங்களின் மிகுதியால்...

அன்னா இவ்வாறு ஆண்டவர் திருமுன் தொடர்ந்து மன்றாடிக் கொண்டிருந்தபோது, ஏலி அவருடைய வாயைக் கவனித்தார். அன்னா தம் உள்ளத்தினுள் பேசிக்கொண்டிருந்தார். அவருடைய உதடுகள் மட்டும் அசைந்தன. குரல் கேட்கவில்லை. ஆகவே ஏலி அவரை ஒரு குடிகாரி என்று கருதினார். ஏலி அவரை நோக்கி, 'எவ்வளவு காலம் நீ குடிகாரியாய் இருப்பாய்? மது அருந்துவதை நிறுத்து' என்றார். அதற்கு அன்னா மறுமொழியாக, 'இல்லை என் தலைவரே! நான் உள்ளம் நொந்த ஒரு பெண். திராட்சை இரசத்தையோ வேறு எந்த மதுவையோ நான் அருந்தவில்லை. மாறாக, ஆண்டவர் திருமுன் என் உள்ளத்தைக் கொட்டிக் கொண்டிருக்கிறேன். உம் அடியாளை ஒரு கீழ்த்தரப்பெண்ணாகக் கருத வேண்டாம். ஏனெனில், என் துன்ப துயரங்களின் மிகுதியால் நான் இதுவரை பேசிக்கொண்டிருந்தேன்' என்று கூறினார். (1 சாமுவேல் 1:12-16)

சீலோவாமில் உள்ள ஆண்டவரின் ஆலயத்தில் அன்னா புலம்பி அழுது கொண்டிருக்க அதை குடிபோதை என முத்திரையிடுகிறார் ஏலி. 'தான் நினைப்பது போலத்தான் மற்றவர்கள்!' என்று தன் முற்சார்பு எண்ணத்தால் முத்திரையிடுகிறார் ஏலி. ஆனால், தான் நல்லவள் என்பதை அவருக்கு உணர்த்துகின்றார் அன்னா. 

'யாரும் யாரையும் கீழ்த்தரமாகக் கருதக் கூடாது!' என்பதையே கற்பிக்கின்றன அன்னாவின் வார்த்தைகள். 

துன்ப துயரங்கள் வாழ்வில் மிகும்போது நம் உதடுகள் நம்மையறியாமலேயே துடிக்கத் தொடங்குகின்றன. துன்பம் இயற்கையின் நியதி. இடையிடையே இன்பத்தில் இளைப்பாறிக் கொள்கின்றது மனித வாழ்க்கை.

நம் வாழ்வின் துன்பங்களைப் போக்க வந்த மெசியாவின் பிறப்பைக் கொண்டாட ஊர் உலகம் தயாராகிக் கொண்டிருக்க அவர் மீண்டும் பிறப்பாரா?


Sunday, December 22, 2013

நான் உனக்குப் பத்துப் புதல்வரைவிட மேலானவன் அன்றோ?

அன்னாவின் மீது அவர் அன்புகொண்டிருந்தும் அவருக்கு ஒரே பங்கைத்தான் அளித்தார். ஏனெனில் ஆண்டவர் அவரை மலடியாக்கியிருந்தார். ஆண்டவர் அவரை மலடியாக்கியிருந்ததால், அவருடைய சக்களத்தி அவரைத் துன்புறுத்தி வதைத்தாள். இவ்வாறு ஆண்டுதோறும் நடந்தது. அவர் ஆண்டவரின் இல்லம் வந்தபோதெல்லாம் அவள் அவரைத் துன்புறுத்துவார். அன்னா உண்ணாமல் அழுவார். அப்போது அவர் கணவர் எல்கானா அவரை நோக்கி, 'அன்னா, நீ ஏன் அழுகிறாய்? நீ ஏன் உண்ணவில்லை? நீ ஏன் மனவருத்தம் அடைகிறாய்? நான் உனக்குப் பத்துப் புதல்வரை விட மேலாவன் அன்றோ?' என்பார். (1 சாமுவேல் 1:5-8)

இன்று முதல் இறைவாக்கினர் நூலைத் தொடங்குகிறோம். இஸ்ரயேல் மக்களில் இறைவாக்கினர் என்ற நிலையில் முதலில் மோசே இருந்தாலும், இறைவாக்கினர்களின் காலம் என்பது சாமுவேலில் இருந்துதான் தொடங்குகிறது. சாமுவேல் என்பதை 'சமு வேல்' எனப் பிரித்தால் 'கடவுளின் பெயர்' எனவும், 'சாமு ஏல்' எனப் பிரித்தால் 'கடவுள் கேட்டார்' எனவும் பொருள் தரும். சாமுவேலின் தந்தை பெயர் 'எல்கானா'. எல்கானா என்றால் 'கடவுள் வாங்கிக் கொண்டார்' எனவும் 'கடவுளுடையது' எனவும் பொருள். 'அன்னா' (எபிரேயத்தில் 'ஹன்னா') என்றால் 'அருள்' என்பது பொருள். 

எல்கானாவிற்கு இரண்டு மனைவியர்: ஒருவர் பெயர் 'பெனின்னா'. பெனின்னா என்றால் 'வைரச் சங்கிலி' என்று அர்த்தம். எபிரேயப் பெயர்கள் மிகவும் நேர்த்தியானவைதாம்! பெனின்னாதான் மூத்தவர். இரண்டாம் மனைவி தான் அன்னா. அன்னாவை மலடியாக்கியிருந்தார் கடவுள் என விவிலியம் சொல்கிறது. எதற்கு என்ற காரணம் கொடுக்கப்படவில்லை. அதன் காரணத்தை பின்னால் ஆராய்வோம். பெனின்னா என்ற வைரச் சங்கிலிதான் அன்னாவை அலைக்கழிக்கிறது. 'உனக்குக் குழந்தையில்லையே!' என அன்னாவைக் கேலி பேசுகின்றார் பெனின்னா. 

இதற்கிடையில் எல்கானா, பெனின்னா, அன்னா என்னும் இம்மூவரும் ஆண்டுதோறும் சீலோவில் ஆண்டவரின் ஆலயத்திற்குச் செல்வது வழக்கம். 'சீலோ' என்றால் 'அனுப்பப்படுதல்' என்றும் 'எய்யப்பட்ட அம்பு' என்றும் பொருள். அங்கே ஏலி என்று குருவைச் சந்திக்கின்றனர். 'ஏலி' என்றால் 'என் கடவுள்' என்று பொருள். 

ஒவ்வொரு வருடமும், ஆண்டவரின் இல்லம் வரும்போதெல்லாம் அங்கே அன்னா பெனின்னாவால் துன்புறுத்தப்படுகிறாள். 'கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு வந்தா அங்க ரெண்டு கொடுமை அவுத்துப் போட்டு ஆடுச்சாம்' என்று நம்மூரில் பழமொழி உண்டு. அப்படிக் கோவிலில் தன் சக்களத்தியால் கொடுமைப்படுத்தப்பட்ட தன் இளைய மனைவி அன்னாவுக்கு ஆறுதல் வார்த்தை கூறுகின்றார் எல்கானா.

அவர் கூறும் வார்த்தைகளில் எனக்கு மிகவும் பிடித்தவை இவைதாம்: 'நான் உனக்குப் பத்துப் புதல்வரை விட மேலாவன் அன்றோ?'

நான் சிறு வயதாய் இருந்தபோது பேருந்துகளில் 'நாம் இருவர் – நமக்கு இருவர்' எனவும், 'ஆசைக்கு ஒன்று – ஆஸ்திக்கு ஒன்றும்' என எழுதி ஒரு குடும்பத்திற்கு இரண்டு குழந்தைகள் போதும் அல்லது தேவை என விளம்பரப்படுத்தியது நம் அரசு. 15 ஆண்டுகளுக்கு முன்பு 'நாம் இருவர் – நமக்கு ஒருவர்' என விளம்பரம் மாறியது. இன்று அதே விளம்பரம், 'நாமே குழந்தை – நமக்கேன் குழந்தை' என மாறிவிட்டது. இன்றைய இந்த விளம்பர வார்த்தைகளை அன்றே சொல்லிவிட்டார் எல்கானா: 'நானே உனக்குக் குழந்தை! இன்னும் நமக்கேன் குழந்தை!'

இல்லற வாழ்க்கைக்கு இது ஒரு நல்ல பாடம். ஒவ்வொரு கணவனும் தன் மனைவியின் முதல் குழந்தையாகிறார். வேறு வார்த்தைகளில் சொன்னால் ஒவ்வொரு மனைவியும் தன் கணவனுக்கு முதலில் தாயாகிறார். 

'நான் உனக்குப் பத்துப் புதல்வரைவிட மேலானவன் அன்றோ!'

Saturday, December 21, 2013

புதுவாழ்வுனக்கு அன்னவன் தருவான்

'ஆண்டவர் திருப்பெயர் போற்றி! போற்றி!
உன்னைக் காக்கும் பொறுப்பினை உடையான்
ஒருவனை அவர்தாம் அருளியுள்ளார்
இஸ்ரயேலில் அவனது பெயரும் புகழுடன்
ஓங்கித் திகழுவதாக!
புதுவாழ்வுனக்கு அன்னவன் தருவான்.
முதுமையில் உனக்கு அன்னமும் அளிப்பான்.'
(ரூத்து 4:14-15)

போவாசு ரூத்து திருமணம் இனிதே நடைபெற்று விட்டது. ரூத்து கருத்தரித்து ஓர் ஆண்மகவையும் பெற்று விட்டார். இந்த இனிய நிகழ்வைக் கொண்டாடும் ஊரார் நகோமியை வாழ்த்துகின்றனர். உரைநடைப் பகுதியைவிட பாடல் பகுதிகளின் மொழிபெயர்ப்பு தமிழில் மிக அழகாகவே உள்ளது.

புதிதாய் வந்திருக்கும் புது உறவு நகோமிக்கு புது வாழ்வு தருவான் எனவும், முதுமையில் அன்னம் தருவான் எனவும் வாழ்த்துகின்றனர். வாழ்வில் நமக்குத் தேவை இதுதான்: அன்றாடம் புதுவாழ்வும், அன்னமும்.

இதை நமக்கு உறுதி செய்யும் நம் உறவுகளுக்கு நன்றி கூறுவோம். நம் உறவுகளுக்கு இதை உறுதி செய்வோம்.

Friday, December 20, 2013

இன்று எந்த வயலில் கதிர் பொறுக்கினாய்?

நாகோமி ரூத்திடம், 'இன்று எந்த வயலில் கதிர் பொறுக்கினாய்? அது யாருடைய வயல்?' என்று கேட்டுவிட்டு, 'உனக்குப் பரிவு காட்டியருக்கு ஆண்டவர் ஆசி வழங்குவாராக!' என்றார். ரூத்து தம் மாமியாரிடம் தாம் கதிர் பொறுக்கின வயல் இன்னாருடைய என்பதைத் தெரிவிப்பதற்காக, 'நான் இன்று கதிர் பொறுக்கின வயலின் உரிமையாளர் போவாசு' என்றார். நமோமி அவரிடம், 'அப்படியா? வாழ்வோர்க்கும் இறந்தோர்க்கும் என்றும் பேரன்பு காட்டும் ஆண்டவர் அவருக்கு ஆசி வழங்குவாராக' என்றார். 

விவிலியம் எழுதப்படுவதற்கு முன் அது பல ஆண்டுகள் வாய்மொழியாகவே பரிமாறப்பட்டது. பல நாட்டுப்புறக் கதைகளாக விளங்கிய கதைகளே பின் தொகுக்கப்பட்டு விவிலியமாக உருவானது. இது விவிலியத்திற்கு மட்டுமல்ல. எல்லாப் பழம்பெரும் இலக்கியங்களுக்கும் பொருந்தும். நம் இந்திய நாட்டின் ரிக், யஜூர், சாம மற்றும் அதர்வண வேதங்கள் ஒரு காலத்தில் வாய்வழியாகப் பரிமாறப்பட்டவையே. மிகப்பெரும் புராணங்களாகத் திகழ்கின்ற இராமாயாணமும், மகாபாரதமும் கூட பல தெருப்பாடகர்களால் முதலில் பாடப்பட்டவையே. பின்பே அவை எழுத்துருவம் பெற்றன. 

வாய்மொழி வழக்கில் இருக்கின்ற காவியங்களை நினைவில் வைப்பதற்காக ஒரு குறிப்பிட்ட ஃபார்முலா வைத்திருப்பார்கள். எடுத்துக்காட்டாக, போரைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால் இப்படி இருக்க வேண்டும். அரசவை குறித்த நிகழ்வுகள் இப்படி இருக்க வேண்டும். இதே போலத் தான் விவிலியத்திலும் நிறைய ஃபார்முலாக்கள் இருக்கின்றன. அதில் முக்கியமான ஒரு ஃபார்முலா 'பெண்பார்க்கும் படலம்'. பெண்பார்க்கும் படலம் பின்பற்றும் ஒரு ஃபார்முலா இதுதான்: ஒருவர் பெண் கேட்டு வருவார். வருகின்ற இடத்தில் கிணறு இருக்கும். கிணற்றுக்கு நீர் எடுக்க மணப்பெண் வருவார். பெண் பார்க்க வருபவர் அந்தப் பெண்ணுக்கு உதவி செய்வார். பெண் விரைந்து வீட்டிற்கு ஓடுவார். பின் விருந்து நடக்கும். தொடர்ந்து திருமண ஒப்பந்தம் நடைபெறும். ஈசாக்கின் பெண் பார்க்கும் படலம் (தொநூ 24), யாக்கோபின் பெண் பார்க்கும் படலம் (தொநூ 29) மற்றும் மோசேயின் பெண் பார்க்கும் படலம் (விப 3) என அனைத்தும் இதே ஃபார்முலாவை வைத்தே உருவாக்கப்பட்டுள்ளன. 

போவாசு மற்றும் ரூத்து சந்திப்பிலும் இதே ஃபார்முலா மறைமுகமாக உள்ளது. போவாசு வயலுக்கு வருகிறார். ரூத்து போவாசிடமிருந்து தண்ணீர் பெறுகிறார். தன் மாமியாரிடம் திரும்பி ஓடுகிறார். விருந்திற்கு பதில் 'பார்லி' அறுவடை அடையாளமாக உள்ளது. இப்படியாகவே சவுலின் பெண் பார்க்கும் படலமும் உள்ளது. புதிய ஏற்பாட்டில் இயேசு சமாரியப் பெண்ணைச் சந்திக்கும் நிகழ்விலும் இதே ஃபார்முலா உள்ளது.

விவிலியத்தையும் இலக்கியத்தையும் ஒட்டி வைத்துப் பார்க்கும்போது இலக்கிய நயத்தோடு அமைந்துள்ளது விவிலியம். விவிலியம் ஒரு கிறித்தவ மதப் புத்தகம் அல்ல. அது உலகிற்குத் தன்னைத் திறந்து காட்டும் ஒரு இலக்கியக் களஞ்சியம். 

மற்றொரு புறம் நம் மண்ணின் இலக்கியங்கள் விவிலியம் என்னும் இலக்கியத்தைவிட அதிகச் செறிவுள்ளதாகவே உள்ளன. இது நம் மண்ணின் இலக்கியங்களின் பெருமையை உணர்த்துகிறது. யாரோ நமக்குக் கற்பித்த இலக்கியத்தின் மீதுள்ள பற்றைவிட நம் இலக்கியங்களையும் குனிந்து பார்ப்பது இன்று அவசியமாகிறது. 

விவிலியம் சாதாரண மனிதர்களின் வாய்மொழியாய் வலம் வந்த ஒன்றுதான். ஆனால் இன்று ஏனோ அது புத்தக வடிவெடுத்து பல வீட்டு அலமாரிகளில் முடங்கி விட்டது. சிலருக்கு விவிலியம் பணம் வைக்கும் பர்சாகவும், மெடிக்கல் சீட்டு, கரண்ட் பில் சேகரிக்கும் இடமாகவும் மட்டும் மாறிவிட்டது வருத்தத்திற்குரிய ஒன்று.

சில வருடங்களுக்கு முன்னால் நம் வீடுகளில் தட்டில் சோறை வைத்து ஏதாவது கதை சொல்லி உணவு ஊட்டுவார்கள். எங்கள் வீட்டில் எல்லாக் கதைகளும் சொல்லப்படும் - இந்து, இசுலாம், பவுத்தம், கிறிஸ்தவம், நாத்திகம் அனைத்தும் பேசப்படும். இன்று என் தங்கையிடம், 'நீ எப்படி உன் மகனுக்கு உணவூட்டுகிறாய்?' எனக் கேட்;டால், 'அவன் ஆதித்யா டிவி பார்த்துக்கிட்டே சாப்பிடுகிறான்,' என்கிறாள். பெரிய தலைமுறை இடைவெளி!

'இன்று எந்த வயலில் கதிர் பொறுக்கினாய்?'

Thursday, December 19, 2013

படித்ததில் பிடித்தது

He was born in an obscure village,
the child of a peasant woman.
He grew up in still another village,
where He worked in a carpenter shop
until He was 30.
Then for three years
He was an itinerant preacher.
He never wrote a book.
He never held an office.
He never had a family or owned a house.
He didn't go to college.
He never traveled more than 200 miles
from the place He was born.
He had no credentials but Himself.
He was only 33
when public opinion turned against Him.
His friends deserted Him.
He was turned over to His enemies
and went through the mockery of a trial.
He was nailed to a cross between two thieves.
When He was dying,
His executioners gambled for His clothing,
the only property He had.. . . on earth.
When He was dead,
He was laid in a borrowed grave
through the pity of a friend.
Twenty centuries have come and gone,
and today He is the central figure of the human race,
the leader of humankind's progress.
All the armies that ever marched,
all the navies that ever sailed,
all the parliaments that ever sat,
all the kings that ever reigned, put together,
have not affected the life of man on earth
as much as that One Solitary Life.

(James A. Francis)

Wednesday, December 18, 2013

என்னை ஏன் இவ்வளவு பரிவுடன் நடத்துகிறீர்?

ரூத்து போவாசின் பாதங்களில் விழுந்து வணங்கி, 'என்னை ஏன் இவ்வாறு கருணைக் கண் கொண்டு நோக்குகிறீர்? அயல் நாட்டுப் பெண்ணாகிய என்னை ஏன் இவ்வளவு பரிவுடன் நடத்துகிறீர்?' என்று கேட்டார். போவாசு, 'உன் கணவன் இறந்ததிலிருந்து உன் மாமியாருக்காக நீ செய்துள்ள அனைத்தையும் கேள்விப்பட்டேன். உன் தந்தையையும் தாயையும் சொந்த நாட்டையும் துறந்துவிட்டு, முன்பின் தெரியாத ஓர் இனத்தாருடன் வாழ நீ வந்திருப்பது எனக்குத் தெரியும்' என்றார். (ரூத்து 2:10-11)

ரூத்து தன் மாமியாருக்குக் காட்டிய தாராள உள்ளத்திற்காக போவாசும் அவருக்குத் தாராள உள்ளம் காட்டுகின்றார். நாம் ஒருவருக்குச் செய்யும் நன்மை நமக்கே திரும்ப வரும் என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

தாராள உள்ளம் காட்டுவோம். தாராள உள்ளம் பெறுவோம்.

'என்னை ஏன் இவ்வளவு பரிவுடன் நடத்துகிறீர்?'

Tuesday, December 17, 2013

ஆண்டவர் உங்களோடு இருப்பாராக!

சிறிது நேரம் கழித்து, போவாசு பெத்லகேமிலிருந்து அங்கு வந்து சேர்ந்தார். அவர் அறுவடையாளர்களை நோக்கி, 'ஆண்டவர் உங்களோடு இருப்பாராக!' என்றார். அவர்களும், 'ஆண்டவர் உமக்கு ஆசி வழங்குவாராக!' என்றார்கள். அவர் அறுவடையாளர்களின் கண்காணியிடம், 'இவள் யார் வீட்டுப் பெண்?' என்று கேட்டார். அதற்கு அறுவடையாள்களுக்கு மேற்பார்வையாளராய் நியமிக்கப்பட்டிருந்த வேலையாள், 'இவள்தான் மோவாபு நாட்டிலிருந்து திரும்பியுள்ள நகோமியோடு வந்திருக்கும் மோவாபியப் பெண்' என்றார். (ரூத்து 2:4-7)

'நிலா வந்தாச்சு!' 'கிருஷ்ணா வந்தாச்சு!' என்ற தெய்வத்திருமகள் வசனம் போல, 'ரூத்து வந்தாச்சு!' 'போவாசு வந்தாச்சு!' என்று போவாசும் வந்து விட்டார். 

'யார் கண்ணில் எனக்குத் தயை கிடைக்கிறதோ!' என்று எண்ணிய ரூத்துக்கு போவாசின் தயை கிடைக்கிறது. ரூத்தைக் கண்டு கொள்கிறார் போவாசு. போவாசின் நல்ல குணங்களை ஒவ்வொன்றாக ஆராய்வோம்.

இன்று போவாசின் கடவுள் பக்தி. 'ஆண்டவர் உங்களோடு இருப்பாராக!' என்று திருப்பலியில் நாம் சொல்லும் வார்த்தைகள் போவாசின் வார்த்தைகளே. பழைய ஏற்பாட்டில் வானதூதர்கள் மனிதர்களைச் சந்திக்க வரும்போதெல்லாம் இதே வார்த்தைகளைச் சொல்லியே வாழ்த்துவர். நாசரேத்தூர் மரியாவிடம் வரும் கபிரியேல் வானதூதரும் இதே வார்த்தைகளைச் சொல்லியே வாழ்த்துகின்றார். 

நம்மிடம் எல்லாம் இருந்தாலும் 'ஆண்டவர்' என்ற நம்பிக்கை இல்லையென்றால் என்ன ஆகும்!

'ஆண்டவர் உங்களோடு இருப்பாராக!'

Monday, December 16, 2013

போய் வா, மகளே!

நகோமிக்குப் போவாசு என்ற உறவினர் ஒருவர் இருந்தார். அவர் செல்வமும், செல்வாக்கும் உடையவர். எலிமலேக்கின் வழியில் உறவானவர். ரூத்து நகோமியிடம், 'நான் வயலுக்குப் போய், யார் என்னைக் கருணைக் கண் கொண்டு நோக்குவாரோ, அவர் பின்னே சென்று கதிர்களைக் பொறுக்கிக் கொண்டு வருகிறேன். எனக்கு அனுமதி தாரும்' என்றார். அவரும், 'போய் வா, மகளே' என்றார். ரூத்து ஒரு வயலுக்குப் போய், அறுவடையாள்கள் பின்னால் சென்று, அவர்கள் சிந்திய கதிர்களைப் பொறுக்கிச் சேர்த்தார். தற்செயலாக அவர் போயிருந்த அந்த வயல் எலிமலேக்கிற்கு உறவினரான போவாசுக்கு உரியதாய் இருந்தது. (ரூத்து 2:1-3)

ஏழை இளைஞனுக்கு பணக்காரப் பெண் காதலியாகக் கிடைப்பதும் அதனால் அவன் நிலை உயர்வதும், ஏழைப் பெண்ணுக்கு பணக்கார இளைஞன் காதலியாகக் கிடைத்து அவள் சிறப்படைவதும் திரைப்படங்களிலும், நாவல்களிலும் வரும் புரட்டிப்போடுதல் மட்டுமல்ல. விவிலியத்திலும் இது உண்டு. சவுலிடமிருந்து தப்பி ஓடி பாலைவனத்தில் நாடோடியாய்த் திரிந்த தாவீது என்ற இளைஞனின் வாழ்க்கைக்குள் அபிகாயில் என்ற இளவரசி நுழைகின்றாள். தாவீதின் வாழ்க்கை மாறிப்போகின்றது. கணவன் இல்லை, பொருள் இல்லை, சொந்த ஊர் இல்லை என அனைத்தையும இழந்து நின்ற ரூத்து போவாசு என்பவரைக் கைப்பிடிக்கின்றார். அவரது நிலையும் விரைவில் உயர்ந்து விடும்.

'செல்வமும், செல்வாக்கும்'. இந்த இரண்டு வார்த்தைகள் விவிலியத்தில் பயன்படுத்தப்படும் இடங்களில் என்ன பொருள் தெரியுமா? 'டாடாவும், பிர்லாவும்' போல என்று அர்த்தம். அந்த அளவிற்கு உயர்ந்து நின்ற ஒருவர். 

கைம்பெண்கள், ஏழைகள் அறுவடைக் காலத்தில் என்ன செய்வார்களென்றால் அறுவடை நடந்த இடத்தில் சென்று அறுவடை செய்வோர் விட்டுச் சென்ற கதிர்களைப் பறிப்பர். அப்படி ஒரு சில கதிர்களை அறுவடை செய்யும்போது அவர்களுக்காக விட வேண்டும் என மோசேயின் சட்டமும் அவர்களுக்குச் சொன்னது. அதை நம்பி ரூத்து வயலுக்குச் செல்கின்றார். அந்த வயல் 'தற்செயலாக' போவாசுடையதாக இருக்கின்றது. போவாசு என்றால் 'அவனது வலிமை' என்றும் 'இறைவனே வலிமை' என்றும் பொருள். 

'தற்செயலாக' என்று நடந்தது என்று சொல்வதை விட 'இறைவனின் செயலாக' அது நடந்தது என்றே சொல்லலாம். அன்றாடம் நாமும் தற்செயலாக பலரைச் சந்திக்கின்றோம், பல நிகழ்வுகளில் பங்கு கொள்கின்றோம். 'தற்செயலாக' நடக்கும் செயல்களே பல நேரங்களில் நீண்ட கால மாற்றத்தை நம்மில் உருவாக்குகின்றன.

ரூத்து சென்ற நேரம் போவாசு இல்லை. போவாசு எப்போது வந்தார்? 

'என்னைக் கரம்பிடிக்க என் கண்ணாளன் வருவான்!' என்று ரூத்து காத்திருந்தாரா? கரம் பிடித்தாரா? 

Sunday, December 15, 2013

'நகோமி' என அழைப்பது ஏன்?

அவரோ, 'என்னை 'நகோமி' என அழைக்காதீர்கள். 'மாரா' என அழையுங்கள். நிறைவுடன் இங்கிருந்து சென்றேன். ஆனால் ஆண்டவர் என்னை வெறுமையாய்த் திரும்பிவரச் செய்தார். ஆண்டவர் என்னைத் தண்டித்து விட்டார். எல்லாம் வல்லவர் என்மீது துயரத்தைச் சுமத்தியுள்ளார். இப்படியிருக்க என்னை 'நகோமி' என அழைப்பது ஏன்?' என்றார். (ரூத்து 1:20-21)

'நகோமி' என்றால் எபிரேயத்தில் 'இன்பம்' என்பது பொருள். 'மாரா' என்றால் 'கசப்பு' என்பது பொருள். தன் வாழ்க்கை 'இன்பமாய்த்' தொடங்கி 'துன்பமாய்' முடிந்தது என்று புலம்புகின்றார் நவோமி. 

நவோமியும், ரூத்தும் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்புகின்றனர்.

அவர்கள் திரும்பும் காலம் 'வாற்கோதுமை அறுவடை' தொடங்கியிருந்தது எனக் குறிப்பிடுகிறது. வளமையின் காலத்தில் அவர்கள் உள்நுழைகிறார்கள். 

வறுமை மறந்து வளமை நுழைகிறது நவோமி வாழ்வில்.

நம் வாழ்விலும்...

எல்லாம் இழந்து விட்டோம் என்று புலம்புகிற நேரம் சற்றே ஓரமாகத் திரும்பிப் பார்ப்போம். அங்கேயும் வாற்கோதுமை அறுவடை நடந்து கொண்டிருக்கலாம்!

'நகோமி' என அழைப்பது ஏன்?

Saturday, December 14, 2013

சாவிலும் உம்மைவிட்டு நான் பிரியேன்

அதற்கு ரூத்து, 'உம்மோடு வராமல் உம்மை விட்டுப் பிரிந்து போகும்படி என்னை நீர் வற்புறுத்த வேண்டாம். நீர் செல்லும் இடத்திற்கே நானும் வருவேன். உமது இல்லமே எனது இல்லம். உம்முடைய இனமே எனது இனம். உம்முடைய தெய்வமே எனக்கும் தெய்வம். நீர் எங்கே இறப்பீரோ அங்கேயே நானும் இறப்பேன். அங்கேதான் என் கல்லறையும் இருக்கும். சாவிலும் உம்மைவிட்டு நான் பிரியேன். அப்படிப் பிரிந்தால் ஆண்டவர் என்னைத் தண்டிப்பாராக!' என்றார். (ரூத்து 1:16-17)

நீதித் தலைவர்கள் நூல் மகிழ்ச்சியாகத் தொடங்கி அழுகையாக முடிகிறது. நீதித் தலைவர்கள் காலத்தில் நவோமி என்ற ஒரு குடும்பத்தில் நடந்த நிகழ்வை விளக்குவதே ரூத்து என்னும் நூல். நவோமி ஒரு இஸ்ரயேலர். ரூத்து மோவாபு இனத்தைச் சார்ந்தவர். பெத்லகமேலிருந்து எலிமலேக்கின் (நவோமியின் கணவர்) குடும்பம் மோவாபிற்குச் செல்கின்றது. எலிமேலக் என்றால் 'என் இறைவனே அரசன்' என்பது பொருள். இறைவனையே அரசனாகக் கொண்ட ஒரு குடும்பம் அனைத்தையும் இழக்கின்றது. பெத்லகேம் என்றால் 'அப்பத்தின் வீடு' என்பது பொருள். அந்த 'அப்பத்தின் வீட்டிலேயே' அப்பம் இல்லை என்ற நிலை வந்து விடுகிறது. இந்நிலையில் தன் குழந்தைகள் மக்லோன் மற்றும் கிலியோனுடன் மோவாபு நோக்கிப் புறப்படுகின்றனர் எலிமேலக் - நவோமி தம்பதியினர். 'மக்லோன்' என்றால் 'பலவீனம்' என்பது, 'கிலியோன்' என்றால் 'வீழ்கின்ற' என்பதும் பொருள். இந்த இரண்டு பெயர்களின் பொருளுக்கேற்பவே அவர்கள் விரைவில் இறந்து விடுகின்றனர். எலிமேலக்கும் இறந்து விடுகின்றார். இப்போது மீதம் இருப்பது மூன்று கைம்பெண்கள்: நவோமி, ஓர்பா மற்றும் ரூத்து. 

ரூத்து நூலின் துவக்கம் மிகவும் முக்கியம். இங்கு கவனித்தீர்களா?

மூவரும் பெண்கள்.

மூவரும் விதவைகள் (கைம்பெண்கள்).

மூவரும் ஏழையர்.

இப்படியாக மூன்று நிலைகளில் சமூகம் புறந்தள்ளிவிடும், கடவுளால் சபிக்கப்பட்டவர்கள் என்று மற்றவர்கள் சொல்லத் துணியும் அளவிற்குத் தாழ்ந்து போனவர்கள்.

இனித் தன்னால் தன் மருமகள்களுக்குப் பயன் ஒன்றுமில்லை என நினைக்கின்ற நவோமி தன் மருமக்கள் இருவரையும் அவர்களின் இல்லம் திரும்பச் சொல்கின்றார். ஓர்பா உடனடியாகத் தன் தாய் வீடு திரும்பி விடுகிறாள். ஆனால் ரூத்து நவோமியோடே தங்கத் துணிகிறாள்.

'உம்மால் எனக்குப் பயன் ஒன்றுமில்லை என்று நீர் நினைத்தாலும் பரவாயில்லை. உம்மோடு நான் என்றும் இருப்பேன்' என்று தன் தாராள உள்ளத்தைக் காட்டுகிறார் ரூத்து.

மாமியார்-மருமகள் உறவிற்கு மட்டுமல்ல, நட்பு, பாசம், காதல், பக்தி என்ற எல்லா உறவுகளுக்கும் ரூத்து ஒரு நல்ல எடுத்துக்காட்டு. உறவு என்பது பயன்பாட்டால் நிர்ணயிக்கப்பட வேண்டியது அல்ல எனவும், என்றும் ஒருவர் மற்றவர்க்கு தாராளமாக உள்ளத்தைத் திறந்து கொடுக்கவும் நம்மை அழைக்கிறார் ரூத்து.

'சாவிலும் உம்மைவிட்டு நான் பிரியேன்'.

Thursday, December 12, 2013

எனக்கு வேறு என்ன இருக்கிறது?

மீக்காவும், மீக்காவின் அண்டை வீட்டாரும் தாண் மக்களை நோக்கிக் கத்தினர். தாண் மக்கள் திரும்பிப் பார்த்து மீக்காவிடம், 'நீ ஏன் ஆள்திரட்டி வருகின்றாய்? உனக்கு என்ன வேண்டும்?' என்று கேட்டனர். அவர், 'நான் செய்த தெய்வங்களை நீங்கள் எடுத்துச் செல்கிறீர்கள். குருவையும் கூட்டிக் கொண்டு செல்கிறீர்கள். எனக்கு வேறு என்ன இருக்கிறது? இப்படி இருக்க உனக்கு என்ன வேண்டும் என்று என்னையே கேட்கிறீர்களே?' என்றார். தாண் மக்கள் அவரிடம், 'எங்களோடு விவாதம் செய்யாதே! செய்தால் கொடிய மனம் கொண்ட இம்மனிதர் உங்களைத் தாக்குவர். நீயும் உன் வீட்டாரும் உயிரிழக்க நேரிடும்' என்றனர். மீக்கா அவர்கள் தம்மைவிட வலிமை வாய்ந்தவர்கள் என்று கண்டு தம் வீட்டிற்குத் திரும்பிச் சென்றார். (நீதித் தலைவர்கள் 18:23-26)

இந்த நிகழ்வை நான் அடிக்கடி கற்பனை செய்து பார்த்ததுண்டு. மீக்காவின் பக்கத்து வீட்டுக்காரர்கள் எப்படி சத்தம் போட்டிருப்பார்கள்? மீக்கா எப்படி ஓடியிருப்பார்? யாரையெல்லாம் துணைக்கு அழைத்திருப்பார்? எவ்வளவு வேகமாக ஓடிச் சென்றிருப்பார்? மீக்காவுக்கும் தாண் குலத்தாருக்கும் இடையே நடக்கும் உரையாடல் நகைச்சுவையான ஒன்று. 'எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டீர்கள். என் வாழ்வாதாரங்களையே அழித்து விட்டீர்கள். அதற்கு நான் குரல் கொடுத்தால், 'உனக்கு என்ன பிரச்சினை?' என்று என்னையே கேட்கிறீர்கள்'. அவர்களின் வலிமைக்கு முன் தன்னால் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் பின்வாங்குகிறார்.

வலிமையின் முன் மென்மை பணிந்து போவது ஒரு பரிதாபமான சூழல். 

'மூடர்கூடம்' திரைப்படத்தில் வரும் ஒரு நிகழ்வு நினைவிற்கு வருகிறது. அந்தத் திரைப்படத்தின் கதாநாயகன் உட்பட நான்கு பேர் ஒரு வீட்டிற்குத் திருடச் சென்றிருப்பர். அந்த வீட்டில் உள்ளவர்களையெல்லாம் ஒரு அறையில் சிறைப்பிடித்து வைத்து வீட்டை நோட்டமிட்டுக் கொண்டிருப்பர். அப்போது அந்த பணக்கார தொழிலதிபர் திருட வந்த கதாநாயகனைப் பார்த்துக் கேட்பார்: 'ஏன்டா! இப்படித் திருடி பிழைக்கிறீங்களே! உங்களுக்கெல்லாம் வெட்கமாயில்லை?' 

அதற்குக் கதாநாயகன் அழகாகப் பதில் சொல்வார்: 'எங்களைத் திருடன்னு சொல்றீங்களா? அப்படின்னா நீங்க யாரு? தொடக்கத்திலே நாம எல்லோருமே அம்மணமாதான் இருந்தோம். நாகரீகம்னு நீங்க ஒன்னைத் தொடங்கி உங்களையே நீங்க உயர்வுன்னு நினைச்சுகிட்டீங்க. உங்ககிட்ட வேலி இருக்குதுங்கிற காரணத்திற்காக ஒட்டுமொத்த குளத்திற்கே வேலி போட்டு உங்களோடதுன்னு எடுத்துக்கிட்டீங்க. நாங்க அம்மணமாவே இருந்துட்டோம். ஒரு மாமரத்துல 100 மாம்பழம் இருக்குதுன்னு வச்சிக்குவோம். அந்த மரத்துக்கு கீழே 100 பேர் பசியோட நிற்கிறாங்க. அங்க நிற்கிற ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பழம் என்பது இயற்கை எழுதி வைத்த நீதி. ஆனால் அதுல உங்கள மாதிரி 5 பேர்கிட்ட ஏணி இருந்ததனால வேகமாக ஏறி நீங்களே எல்லாத்தையும் பறிச்சிகிட்டீங்க. 95 பேர் பசியோட வீட்டுக்குப் போனாங்க. அடுத்த நாள் நீங்க அவங்ககிட்ட சொன்னீங்க: 'தினமும் வந்து எனக்கு பழம் பறிச்சு தாங்க, உங்களுக்குச் சம்பளம் தாரேன்'னு சொல்லி அவங்க பறிச்சிக் கொடுத்த மாம்பழத்திலேயே ஒரு கீத்து (கீற்று) கொடுத்து, 'இதுதான் உன் சம்பளம்' என்று சொல்லி புத்திசாலித்தனமா அனுப்பி வச்சீங்க. இதற்கு ஒரு தியரியும் கொடுத்து, 'சர்வைவல் ஆஃப் த ஃபிட்டஸ்ட்' என்று சொல்லி உங்களையே தட்டிக் கொடுத்துக் கொண்டீர்கள். அந்தத் தியரி விலங்குகளுக்குத் தான் பொருந்தும். அப்போ நீங்க மனிதர்கள் இல்லையா? ஒருத்தனிடமிருந்து எடுப்பது மட்டும் திருட்டு அல்ல. ஒருத்தன எடுக்க முடியாம பண்றதும் திருட்டுத்தான்!'

திருட்டை நியாயப்படுத்த நான் இங்கே இதைக் குறிப்பிடவில்லை. இந்த 100 மாம்பழ எடுத்துக்காட்டில் ஒட்டுமொத்த பொருளாதாரக் கொள்கையே புதைந்து கிடக்கிறது என்பதுதான் உண்மை. இன்றும் 'வலிமை' தான் ஆட்சி செய்கின்றது. நேற்று டில்லியில் நடந்த ஒரு பொருளாதார மாநாட்டில் மத்திய நிதி அமைச்சர் மேதகு ப. சிதம்பரம் சொன்னது என்ன தெரியுமா? 'நாட்டில் விலைவாசி உயர்ந்ததற்குக் காரணம் மாநில அரசுகளாம்!' அத்தோடு மட்டும் அவர் நிறுத்தவில்லை. தொடர்ந்து சொன்னார்: 'மத்திய அரசு வரி விகிதங்களைச் சரி செய்து, அந்நியப் பொருட்களை இறக்குமதி செய்வதை விடுத்து, உள்நாட்டுப் பொருட்கள் உற்பத்தியையும், பயன்பாட்டையும் அதிகப்படுத்த வேண்டுமாம்!'. இவற்றைச் செய்வதற்குத்தானே அமெரிக்காவின் 'ஹார்வர்டில்' படித்த ஒருவரை பிரதமராகவும், மற்றவரை நிதியமைச்சராகவும் வைத்திருக்கிறோம். அதை நீங்கதான சார் செய்யணும்? 'மத்திய அரசு' செய்யணும்னு சொல்றீங்களே. அப்ப நீங்க சென்ட்ரல் கேபினட்டில் இல்லையா?' இன்னும் கொஞ்ச நாள் போனால் இவரே, 'விலைவாசிக்குக் காரணம் நம் தெருக்களில் நின்று துணி தேய்க்கும் குப்புசாமியோ, நம் வீட்டிற்கு நியூஸ்பேப்பர், பால் பாக்கெட் போடும் குமாரசாமியோ தான்' என்பார். வாழ்க ஜனநாயகம்! வலிமை படைத்தோர் என்பதற்காக என்னவானாலும் செய்யலாம் நம் ஊரில். பாவம் நம் மக்கள். 

மற்றவர்களின் பண பலம், ஆள் பலம், செல்வாக்கிற்கு முன்னால் தங்கள் உரிமைகளும், வாழ்வாதாரங்களும் பறிக்கப்பட்டு இன்றும் பல மீக்காக்கள் மௌனமாகத் தங்கள் வீடு திரும்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்!

'எனக்கு வேறு என்ன இருக்கிறது?'

எது உனக்கு நலம்?

மீக்காவின் வீட்டுக்குள் சென்ற ஐவரும் செதுக்கிய உருவம், ஏபோது, தெராபீம், வார்ப்புச்சிலை ஆகியவற்றை எடுத்தபொழுது குரு அவர்களிடம், 'நீங்கள் செய்வது என்ன?' என்று கேட்டார். அவர்கள் அவரிடம், 'பேசாதே! வாயை மூடு! எங்களுடன் நட. எங்களுக்குத் தந்தையாகவும் குருவாகவும் இருப்பாய். எது உனக்கு நலம்? ஒரு தனி மனிதனின் வீட்டிற்கு குருவாக இருப்பதா? இஸ்ரயேலின் ஒரு குலத்திற்கு, ஒரு குடும்பத்திற்குக் குருவாக இருப்பதா?' என்றனர். குருவின் இதயம் மகிழ்வுற்றது. அவர் ஏபோது, தெராபீம் செதுக்கிய உருவம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு மக்களிடையே வந்தார். (நீதித் தலைவர்கள் 18:18-20)

வேவு பார்த்தவர்கள் சொன்னதின் பேரில் தாண் குலத்தார் போருக்குப் புறப்படுகின்றனர். போருக்குச் செல்லும் வழியில் மீக்காவின் வீட்டிற்கு வருகின்ற அவர்கள் அங்கிருந்த சிலைகளைக் கொள்ளையிட்டு, அங்கிருந்த லேவியரையும் கடத்திச் செல்கின்றனர். 'இஸ்ரயேலில் அரசன் இல்லாத காலத்தில் மக்கள் தாங்கள் விரும்பியதையெல்லாம் செய்தார்கள்' என அடிக்கடி சொல்லும் இந்நூல், 'மக்கள் விரும்புவது அனைத்துமே' கடவுளுக்கு விரும்புவது அல்ல என்பதை நமக்குச் சொல்கின்றது. அடக்குமுறைக்கு விலைபோகின்றார் லேவி. அரசனும் இல்லை. குருக்களின் தலைமையும் சரியாக இல்லை. இஸ்ரயேல் மிகவும் கவலைக்கிடமாக இருக்கின்றது. 

தங்கள் யாவே இறைவனை மறந்து விட்டு செதுக்கிய உருவங்களைக் கடவுளாகக் கருதத் தொடங்குகின்றனர் இஸ்ரயேல் மக்கள். கடவுளைச் சிலைகளாகச் சுருக்கி விட முடியுமா என்ன? இன்று கடவுளுக்குப் பதிலாக நாம் வைத்திருக்கும் குட்டி உருவங்கள் எவை?

'எது உனக்கு நலம்?'

Tuesday, December 10, 2013

நீங்கள் எதுவும் செய்யப்போவதில்லையா?

வேவு பார்க்கச் சென்றவர்கள் தங்கள் சகோதரர்களிடம் திரும்பி வந்தனர். அவர்கள் சகோதரர்கள் அவர்களிடம், 'நீங்கள் கண்டதென்ன?' என்று கேட்டனர். அவர்கள், 'வாருங்கள், அவர்களுக்கு எதிராகப் புறப்படுவோம். ஏனெனில் நாங்கள் ஒரு நாட்டைக் கண்டோம். அது மிகவும் செழிப்பானது. நீங்கள் எதுவும் செய்யப்போவதில்லையா? அங்கு செல்ல தயங்க வேண்டாம். நீங்கள் கவலையற்ற மக்களிடம் செல்லவிருக்கின்றீர்கள். (நீதித் தலைவர்கள் 18:8-10)

தாண் குலத்திலிருந்து வேவு பார்க்கச் சென்றவர்கள் தங்கள் நாட்டிற்குத் திரும்புகின்றனர். தாங்கள் வேவு பார்த்த நாட்டைப் பற்றி அவர்களிடம் சொல்கின்றனர். அவர்கள் வேவு பார்த்த நாட்டின் பெயர் லாயிஷ். இன்றும் தொல்லியில் நிபுணர்கள் இந்த இடத்தில் ஆய்வு செய்து கொண்டிருக்கின்றனர். இந்த நகரம் அழிந்தது பற்றி நீதித் தலைவர்கள் 18:28 இப்படிச் சொல்கின்றது: 'மற்ற ஊர்களிலிருந்து அவர்கள் தொலைவில் இருந்ததாலும், அவர்களுக்கு மற்ற மனிதர்களுடன் தொடர்பு இல்லாதிருந்ததால் அவர்களைக் காப்பாற்ற யாருமில்லை'.

ஒரு நாட்டிற்கு மட்டுமல்ல, தனிநபருக்கும் இந்நிலை வரலாம். நாம் மற்றவர்களிடமிருந்து ரொம்ப விலகி நிற்கும் போதும், மற்ற மனிதர்கள் தொடர்பு இல்லாமல் இருக்கும்போதும் நம்மை எதிரி எளிதாக வென்று விடலாம். 'தொடர்பு' மனித வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று. மனிதர்களைப் பற்றிச் சொல்லும் போது அவர்களைத் 'தொடர்பு' அடிப்படையில் மட்டுமே வரையறை செய்கின்றோம். 'தொப்புள் கொடி' என்ற தொடர்பு அறுபடும்போது குழந்தை அழுகின்றது. இனி தனக்கு இந்த உலகில் எதுவும் இல்லை என்று பயம் கொள்கின்றது. கொஞ்ச கொஞ்சமாக அந்தக் குழந்தை பயத்திலிருந்து வெளிவருகின்றது.

இறைவன் தந்த தொடர்புகள், நாமே ஏற்படுத்திக் கொண்ட தொடர்புகள், பூர்வ ஜென்மப் பந்தமாய்த் தொடரும் தொடர்புகள் என அனைத்திற்காகவும் நன்றி கூறுவோம்.

தொடர்பில் நிலைப்போம்.

'மற்ற ஊர்களிலிருந்து அவர்கள் தொலைவில் இருந்ததாலும், அவர்களுக்கு மற்ற மனிதர்களுடன் தொடர்பு இல்லாதிருந்ததால் அவர்களைக் காப்பாற்ற யாருமில்லை'.