Tuesday, October 3, 2017

அசிசி

ஏழைகளின் தந்தையாகிய இறைவா,
அசிசி நகர் புனித பிரான்சிஸ்குவை நீர் தேர்ந்தெடுத்து,
எளிய வாழ்வாலும், தாழ்ச்சி நிறை பண்பாலும்
கிறிஸ்துவைப் போன்றிருக்கச் செய்தீரே:
அவருடைய சிறப்பான வாழ்வுக்காக
உம்மைப் போற்றிப் புகழ்கின்றோம்.
அவரிடம் விளங்கிய மகிழ்ச்சி, மனச்சுதந்திரம், மன நிறைவு
முதலிய பண்புகளைக் கடைப்பிடிக்கவும்,
கிறிஸ்துவின் மீது உண்மையான அன்பும்
ஆழமான உறவும் கொண்டு வாழவும் எங்களுக்கு அருள்தாரும்.

(உரோமை திருப்பலி புத்தகம், சபை மன்றாட்டு, அக்டோபர் 4)

நாளை தூய பிரான்சிஸ் அசிசியாரின் திருநாளைக் கொண்டாடுகிறோம். முதன் முதலாக எனக்கு பிரான்சிஸ்கு அசிசியாரின் கப்புச்சின் சபையினரின் அறிமுகம் கிடைத்தது நான் ஒன்பதாம் வகுப்பு படித்தபோதுதான். நாகர்கோவிலுக்கு அருகில் உள்ள அவர்களின் தியான இல்லத்திற்கு சுற்றுலாவின் ஒரு பகுதியாக நாங்கள் அப்போது சென்றிருந்தோம்.

அடுத்தடுத்து அவரது வாழ்க்கை வரலாறைப் படிக்க வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு கிடைத்த ஐந்து காய வரத்தைப் போல எனக்கும் வர வேண்டும் என்று நிறைய நாள் வேண்டியிருக்கிறேன். விடிந்தவுடன் எழுந்து அப்படி ஏதாவது காயம் வந்திருக்கிறதா என்றும் பார்த்திருக்கிறேன்.

அசிசியார் என்னை அடுத்தபடியாக கவர்ந்தது என்னுடைய திருத்தொண்டர் பணியின் போது. அசிசியார் திருநாளின் சபை மன்றாட்டை வாசிக்கக் கேட்டபோது நான் கேட்ட மூன்று வார்த்தைகள் 'மகிழ்ச்சி, மனச்சுதந்திரம், மன நிறைவு' அவரின் ஒட்டுமொத்த வாழ்க்கையை நமக்குச் சொல்வதாக இருக்கிறது.

இந்த மூன்றும் இன்றும் என்றும் நம் வாழ்வில் நிலைபெற இன்று செபிக்கலாமே!

1 comment:

  1. அழகான,ஆழமான கருத்துக்களைக் கொண்டதொரு பதிவு.தன் இளம் பிராயத்தில் தனக்கேற்பட்ட புனித பிரான்சிஸ் அசிசியின் அறிமுகத்தை நினைவு கூறும் தந்தை, அவரைப்போல் தனக்கும் ஏதாவது காயம் வந்துள்ளதா என்று பார்த்ததாக்க் கூறுவது நெகிழ்வைத்தருகிறது. என்னுடைய இளம்பிராயத்தை புனித பிரான்சிஸ்கு சபைக் கன்னியரின் வழிகாட்டுதலில் கழித்திருப்பதால் எனக்கும் இந்தப் புனிதர் மீது அலாதி ஈடுபாடு உண்டு. செல்வச்செழிப்பான பின்னனியில் பிறந்து வளர்ந்தவரேயானாலும் அத்தனையையும் துச்சமெனத் தூக்கி எறிந்து 'அவரை'மட்டுமே பற்றிக்கொண்ட இந்த இளவல் எடுத்து வைக்கும் 'மகிழ்ச்சி,மனச்சுதந்திரம்,மன நிறைவு' எனும் வார்த்தைகள் தந்தை போன்ற அருட்பணியாளரை மட்டுமின்றி நம் வாழ்வையும் நிரப்ப செபிப்போம்..... தந்தைக்குத் திருநாள் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete