Thursday, September 14, 2017

வியாகுலத்தாய்

நாளை தூய மரியாளை வியாகுலத்தாய் எனக் கொண்டாடுகிறோம்...

'ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை
சான்றோன் எனக்கேட்ட தாய்'

என்ற பொய்யாமொழிப் புலவனின் வார்த்தைகள் பொய்யாய்ப் போனதோ இவரிடம்!

இவரின் மகனைப் பற்றி இவரிடம் என்ன சொல்லியிருப்பார்கள் மற்றவர்கள்?

அந்த நேரத்தில் இவரின் உள்ளக்கிடக்கை என்னவாக இருந்திருக்கும்?

தான் இறக்கும் அந்தத் தருணத்தில்கூட

இவர் வளர்த்த ஆசை மகன்

'இதோ! உன் அன்பார்ந்த மகன்!'

என்று தன்னை; சுட்டிக்காட்டாமல்
தன் சீடன் ஒருவரைக் காட்டி விடுகின்றார்.

'என்னது இவர் என் மகனா? அப்படின்னா நீ எனக்கு யார்?'

'இதோ உன் தாய்!' என உன் சீடனிடம் என்னை ஏன் தள்ளி விடுகிறாய்?

என்னையும் உன்னோடு எடுத்துக்கொள்ளேன்!

'நான் உனக்கு யார்?'

எனக் கேட்டிருப்பார் இந்தக் கன்னித் தாய்.

'உன் இதயத்தை ஒரு வாள் ஊடுருவும்!'

என்று சிமியோன் சொன்னது இந்த நாளைக் குறித்துத்தானோ?

மரியாளின் கன்னிமை, அமல உற்பவம், இறைத்தாய்மை

என எல்லா இறையியல்களும் நம்மைத் தொடவில்லையென்றாலும்,

அவர் வடித்த கண்ணீர் என்னவோ நம் மனதையும் பிசைந்து விடுகிறது.

நாளை இந்த அன்னையின் கண்ணீரைக் கொண்டாடும் வேளையில்

அன்றாடம் கண்ணீர் வடிக்கும்  கண்கள் நோக்கி

என் கரம் நீண்டால்

நாளைய திருநாள் வெற்றி!

2 comments:

  1. "ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்".... தான் இறக்கும் தருணத்தில் தன் விழிகளை மூட வேண்டிய மகன்; ஆனால் தன் கண்கள் காண்பதோ அவரின் விலாவும் குத்தித்திறக்க்கபட்டு,இறுதி சொட்டு இரத்தமும் வழிந்தோடும் ஒரு கோரமரணம்.தன் மகனைச் சான்றோன் எனச் செவிகள் கேட்காமல் போனாலும் தன் கண்கள் முன் தன் மகன் உயிரை விடுவது... எந்தத் தாய்க்கும் நேரக்கூடாத ஒன்று. ஆமாம்.... தந்தையின் சொற்கள் மிகச்சரியே! இன்று இந்த அன்னையின், கண்ணீரைக்கொண்டாடும் வேளையில் அன்றாடம் கண்ணீர் வடிக்கும் கண்களை நோக்கி என் கரம் நீண்டால் இன்றைய திருநாள் எனக்கு வெற்றியே! தந்தைக்கும் இந்த அன்னையின் பெயரைத்தாங்கி நிற்கும் அனைவருக்கும் திருநாள் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. மாதாவின் கண்ணீர் .. அர்த்தங்கள் ஆயிரம்..அதின் ஒவ்வொரு துளியும் நம் இதயத்தை தூய்மையான வழி நடத்தும்..

    ReplyDelete