Monday, September 11, 2017

லேபிள்கள்

இன்று புனே செல்வதற்காக சென்னை உள்நாட்டு முனையத்தில் காத்திருந்தேன்.

வாயில் எண் 13 மைனஸ் ஒன் தளத்தில் இருந்தது. ஏறக்குறைய 1 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்ததாலும், அந்த விமானத்திற்காக காத்திருந்த பயணிகள் மிகச் சிலர் என்பதாலும் நிறைய இருக்கைகள் காலியாக இருந்தன. ஹவுஸ் கீப்பிங் செய்யும் பெண்கள் மூன்று பேர் கூட்டிக் கொண்டிருந்தனர்.

தொடர்ந்து ஒருவர் மட்டும் தண்ணீர் வைத்துத் துடைத்துக்கொண்டிருந்தார்.

'இவளுக இரண்டு பேர் எங்க போனாங்க?' என்று முணுமுணுத்துக்கொண்டே துடைத்துக்கொண்டிருந்தார்.

நிற்க.

நகரும் படிக்கட்டுக்களை நோக்கியே பார்த்துக்கொண்டிருந்தேன்.

கூட்டிக்கொண்டிருந்த இரண்டு அக்காக்களில் ஒருவர் தன் கேமராவால் நகரும் படிக்கட்டுக்களைப் படம் பிடிக்க, மற்றொரு அக்கா கையில் மாப் ஸ்டிக் - பக்கெட் என இறங்கி வருவதை மற்றவர் கேமராவில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார்.

'இது என்னடி?' என இந்த அக்கா வேகமாக படம் எடுத்துக்கொண்டிருந்தவரை நோக்கி நகர்ந்தார்.

'ஏன் எங்கள வீடியோ எடுக்கக்கூடாதா?' என்றார் படிக்கட்டுக்களில் இறங்கிவந்தவர்.

நிற்க.

நாம் பல நேரங்களில் லேபிள் பண்ணி விடுகிறோம்.

இவர்தான் அழகு
இவர்தான் படித்தவர்
இவரைத் தான் ஃபோட்டோ எடுக்க வேண்டும்
இவர்தான் வீடியோவில் வர வேண்டும்

என இப்படி நாம் நிறைய லேபிள்களை வைத்திருக்கிறோம்.

கோட்-சூட் போட்டு கைகளில் ஐபேட், ஸ்மார்ட்ஃபோன் என நகரும் படிக்கட்டுக்களில் இறங்கினால்தான் வீடியோ எடுக்க வேண்டுமா?

பழைய யூனிஃபார்ம், அழிந்தும் அழியாத பொட்டு, கையில் பக்கெட், விளக்கமாறு, காலில் ஓரத்தில் கிழிந்த ஷூ - இப்படி இறங்கினால் வீடியோ எடுக்கக் கூடாதா?

இந்தப் பெண்ணின் கேள்விகள் நான் எனக்குள் எழுதியிருக்கும் நிறைய லேபிள்களை கிழித்தெறியத் தூண்டின.

அப்படி கிழித்தெறியப்பட்ட லேபிள்களையும் சிறிய புன்முறுவலுடன் நாளை கூட்டிப் பெருக்குவாள் அந்தப் பெண்.

1 comment:

  1. தந்தையே! செல்லும் எந்த ஊரையும், கால் பதிக்கும் எந்த இடத்தையும்,பார்க்கும் எந்த நபரையும் ஒரு சரித்திரமாக்கும் தங்களின் ஆற்றலைத்தான் இந்தப்பதிவிலும் காண்கிறேன்.ஆனால் சாதாரணமனிதனின் கண்களுக்கு மிகச்சாதாரணமாய்த் தெரியும் விஷயங்கள் தங்களின் கண்களுக்கு மட்டும் மிக அசாதாரணமாய்த் தெரிகின்றனவே!" அது எப்படி? யாரும்,எதுவும் ஒதுக்கப்பட வேண்டியவர்களோ,ஒதுக்கப்பட வேண்டிய விஷயமோ இல்லை; அது கல்லாயிருப்பினும் அதற்கும் ஒரு பின்புலம் உண்டு" என்ற தங்களின் தனித்துவமான சிந்தனையே இதற்குக்காரணம் என்று நினைக்கிறேன்.அந்த இறுதி வரி..." அப்படிக் கிழித்தெறியப்பட்ட லேபிள்களையும் சிறிய புன்முறுவலுடன் நாளை கூட்டிப்பெருக்குவாள் அந்தப்பெண்" என் உதடுகளையும் புன்முறுவல் பூக்கச்செய்தன.தொடரட்டும் தங்கள் கண்களின் கலைப்பயணம்! வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete