ஊரெல்லாம் பேச்சு
இன்றைய நற்செய்தியில் நான்கு பேர் பேசுகின்றனர். முதலில் இயேசு பேசுகின்றார். இயேசுவின் பேச்சைக் கேட்டு மக்கள் வியப்படைகின்றனர். இரண்டாவதாக, தொழுகைக் கூடத்திலிருந்த தீய ஆவி பிடித்தவர் பேசுகிறார். இயேசு தீய ஆவியை விரட்டுகின்றார். மூன்றாவதாக, இயேசுவின் செயலைக் கண்ட மக்கள் வியந்து பேசுகின்றனர். இறுதியாக, ஊரே இயேசுவைப் பற்றிப் பேசுகின்றது.
மேற்காணும் நால்வரில் இயேசுவையும் அவருடைய பேச்சையும் நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.
இயேசு இரு நிலைகளில் பேசுகின்றார். அல்லது அவருடைய போதனை இரு நிலைகளில் இருக்கின்றது. முதலில், அவர் தொழுகைக் கூடத்தில் போதிக்கின்றார். இரண்டாவதாக, 'வாயை மூடு! இவரை விட்டு வெளியே போ!' எனத் தீய ஆவியிடம் பேச, தீய ஆவி உடனடியாக வெளியேறுகின்றது. இங்கே, இயேசுவின் பேச்சு செயலாற்றுகிறது. செயலாக மாறுகின்றது.
'வாயை மூடு!' என்று தீய ஆவிக்குக் கட்டளையிடுகின்றார் இயேசு. இதைக் கேட்ட ஊரே தன் வாயைத் திறந்துகொள்கின்றது.
நேர்முகமான தாக்கத்தை ஏற்படுத்தும் சொற்களை இயேசு பேசுகின்றார்.
இதையே இன்று நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.
இன்று நாம் நிறையச் சொற்களைப் பேசுகின்றோம். நிறைய எழுத்துகளை குறுஞ்செய்திகளாக, மின்னஞ்சல்களாகப் பகிர்ந்துகொள்கின்றோம். இச்சொற்கள் முதலில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றனவா? நம் சொற்கள் ஏற்படுத்தும் தாக்கம் நேர்முகமாக இருக்கின்றதா? அல்லது எதிர்மறையாக இருக்கின்றதா?
இயேசுவின் சமகாலத்திலிருந்த பேயோட்டிகள் கடவுளின் பெயரால் அல்லது தீய ஆவியின் தலைவன் பெயரால் பேய்களை ஓட்டினர். ஆனால், இயேசு தன் சொந்த அதிகாரத்தாலேயே ஓட்டுகின்றார். இயேசுவின் அதிகாரம் அவருடைய கடவுள்நிலையிலிருந்து வந்தாலும், இயேசுவிடம் சொல்லுக்கும் செயலுக்குமான எந்த முரணும் இல்லை. இயேசுவின் இருத்தலும் தீய ஆவியின் இருத்தலும் ஒரே இடத்தில் சாத்தியமல்ல.
இன்றைய முதல் வாசகத்தில் மனித இயல்பு மற்றும் ஆவிக்குரிய இயல்பு பற்றிப் பேசுகின்ற புனித பவுல், மனித இயல்பு மட்டுமே கொண்டிருப்பவரால் ஆவிக்குரியதை அறிந்து ஏற்றுக்கொள்ள இயலாது என மொழிகின்றார்.
நம்மில் செயலாற்றுவது எந்த இயல்பு?
இன்றைய நாளில் நாம் பேசும் சொற்கள் நேர்முகமான தாக்கத்தை மற்றவர்கள்மேல் ஏற்படுத்த முயற்சி செய்வோம். நம் நடுவே இருக்கின்ற தீமையைக் கடிந்துகொள்ளும் பக்குவம் பெறுவோம். தீய ஆவி தன்னைப் பற்றிய நம்பிக்கை அறிக்கை செய்ததால் இயேசு அதைப் பாராட்டி மகிழவில்லை. தீய ஆவியின் நம்பிக்கை அறிக்கை வெற்று அறிக்கை என்பதை உணர்ந்திருந்தார் அவர். மேலும், தூய ஆவிக்குரிய இயல்பில் வாழ்வதற்கான உறுதி ஏற்போம்.
No comments:
Post a Comment