Tuesday, August 30, 2022

இலக்குத் தெளிவு

இன்றைய (31 ஆகஸ்ட் 2022) நற்செய்தி (லூக்கா 4:38-44)

இலக்குத் தெளிவு

இயேசு கப்பர்நகுமில் உள்ள தொழுகைக்கூடத்தில் போதனையை முடித்துவிட்டு சீமோனின் வீட்டிற்கு வருகின்றார். தொடர்ந்து மூன்று நிகழ்வுகள் நடக்கின்றன: ஒன்று, கடுங்காய்ச்சலால் துன்புற்ற சீமோன் பேதுருவின் மாமியாருக்கு நலம் தருகின்றார். இரண்டு, கதிரவன் மறையும் நேரத்தில் ஊரின் நடுவே நோயுற்றோர் பலருக்கு நலம் தருகின்றார், பேய்களை ஓட்டுகின்றார். மூன்று, தனிமையான இடத்திற்குச் சென்று இறைவேண்டல் செய்கின்றார்.

இயேசுவின் இப்பணிகளைக் கண்ட ஊரார் அவரைத் தடுத்து நிறுத்தப் பார்க்கின்றனர். இயேசுவோ தான் மற்ற ஊர்களிலும் நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்று சொல்லித் தன் வழி நடக்கின்றார்.

மூன்று பாடங்களை நமக்கு இயேசு தருகின்றார்:

(அ) தன் பணி ஒருபோதும் தன் பாதுகாப்பு வளையமாக மாறிவிட இயேசு விரும்பவில்லை. இன்று நாம் செய்யும் பணிகள், நம் ஊர் மற்றும் உறவுகள் நம் பாதுகாப்பு வளையங்களாக இருக்கின்றனவா? அவற்றிலிருந்து வெளியேறுவது எப்படி?

(ஆ) 'தங்கி விடும்' என்னும் சோதனை! இயேசுவை ஊரார் சோதிக்கின்றனர். 'இங்கேயே தங்கி விடும்!' என்று சொல்லும் அவர்களே, 'எங்களை விட்டு அகலும்!' என்று சொல்வார்கள் என்பதை இயேசு முன்னுணர்ந்தார். தங்குவிடுதல் என்பது தேக்கநிலை என்பதை இயேசு அறிந்திருந்ததால் அங்கிருந்து நகர முயற்சி செய்கின்றார். இன்று நாம் எவற்றில் எல்லாம் தேக்க நிலை அடைந்துள்ளோம்?

(இ) 'மற்ற ஊர்களிலும் இறையாட்சி' - இயேசு தன் இலக்கையும் அதற்கான பாதையையும் தெளிவாக அறிந்திருந்தார். வழிப்போக்கர் போல தன் வழியே நடக்கின்றார். தோமா நற்செய்தி வ. 42இல், இயேசு தன் சீடர்களிடம் 'வழிப்போக்கர் போல இருங்கள்!' என அறிவுறுத்துகின்றார். எதையும் பற்றிக்கொள்ளாமல், சுமைகளைக் குறைத்துக்கொண்டே தன் வழியே செல்பவரே வழிப்போக்கர்.

முதல் வாசகத்தில் (காண். 1 கொரி 3:1-9), பவுல் கொரிந்து நகரத் திருஅவையில் விளங்கிய பிரிவினையைக் கடிந்துகொள்கின்றார். அவர்கள் ஒவ்வொரு திருத்தூதரையும் பற்றிக்கொண்டிருந்தனர். நற்செய்தியைப் பற்றிக்கொள்வதை விடுத்து, நற்செய்தி அறிவித்தவரைப் பற்றிக்கொண்டு, அவரின் பொருட்டு தாங்கள் பிளவுபட்டுக் கிடந்தனர். பற்றுகள் விடுத்துப் பயணம் செய்தலே நலம் எனக் கற்பிக்கின்றார் பவுல்.


No comments:

Post a Comment