ஏழு முறை மட்டுமல்ல
மத்தேயு நற்செய்தியில் உள்ள குழுமப் போதனை (அதி. 18) இன்றைய வாசகத்திலும் தொடர்கின்றது. இன்றைய வாசகத்தில் இழையோடுகின்ற கருத்து 'மன்னிப்பு.' பேதுருவின் கேள்வியோடு தொடங்கும் இப்பகுதி மத்தேயு நற்செய்தியில் மட்டுமே காணப்படுகின்றது.
'ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்து வந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்?' என்று கேட்கின்றார் இயேசு.
இந்தக் கேள்விக்கு நம் விடை எப்படி இருக்கும்?
'அது ஒருவரின் தவறு அல்லது பாவத்தைப் பொருத்து!' என்று சொல்வோம். இல்லையா?
'பென்சில் திருடும் குற்றத்தை' எத்தனை முறை வேண்டுமானாலும் மன்னிக்கலாம். நம் இல்லத்தில் உள்ள நகைகளைத் திருடுபவரை எத்தனை முறை வேண்டுமானாலும் மன்னிக்க முடியுமா?
நம் மன்னிப்பு பல நேரங்களில் குற்றத்தின் அளவைப் பொருத்தும், குற்றம் ஏற்படுத்துகின்ற தாக்கத்தைக் குறித்தும், குற்றம் செய்தவரின் இயல்பைப் பொருத்தும் இருக்கிறது.
ஆனால், இயேசு இப்படிப்பட்ட எந்தவொரு யோசனையும் செய்யாமல், உடனடியாக, எந்தவொரு நிபந்தனையுமின்றி, 'ஏழு முறை மட்டுமல்ல. எழுபது தடவை ஏழு முறை' என்கிறார். தொடர்ந்து இயேசு ஓர் உவமையையும் சொல்கின்றார். அரசரிடம் பெருந்தொகை மன்னிப்பு பெற்ற பணியாளர், தன் உடன்பணியாளரின் சிறுதொகையை மன்னிக்க மறுக்கின்றார். அரசர் எவ்வளவு பெரிய தொகையையும் மன்னிக்கலாம். ஏனெனில், அது அவருடைய பணம் இல்லையே! – என்று நாம் வாதாடலாம்.
ஆனால், இந்த உவமை கூறும் உள்கருத்தைப் புரிந்துகொள்வோம்:
(அ) கீழிருக்கும் ஒருவர் மேலிருக்கும் ஒருவரை எளிதில் மன்னிக்கலாம்.
எடுத்துக்காட்டாக, ஆசிரியராக நான் பணிபுரிகிறேன் என வைத்துக்கொள்வோம். என் தலைமை ஆசிரியர் நான் செய்யாத தவறுக்காக என்னை மற்றவர்கள்முன் கடிந்துகொள்கின்றார். அது என்னை நிறையவே காயப்படுத்துகின்றது. ஆனால், சில நாள்களுக்குப் பின்னர் தன் தவற்றை உணர்ந்து தலைமை ஆசிரியர் என்னிடம் மன்னிப்பு கேட்கின்றார். 'ஐயோ! சார் பரவாயில்லை! இதுல என்ன இருக்கு! இருக்கட்டும்!' என்று சொல்வேன். ஆக, கீழிருக்கும் நான் எனக்கு மேலிருக்கும் தலைமையாசிரியரை மன்னிக்கிறேன். அப்படி மன்னிப்பதால் அவரிடமிருந்து இன்னும் எனக்கு நிறைய பலன்கள் கிடைக்கலாம். ஆனால், என்னுடன் பணியாற்றும், அல்லது எனக்குக் கீழ் படிக்கும் மாணவர் ஒருவரை என்னால் எளிதில் மன்னிக்க இயலாது. ஏனெனில், நான் அவரை மன்னிப்பதால் எனக்கு அவரிடமிருந்து எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை.
உவமை தருகின்ற முதல் பாடம், மன்னிப்பு என்பது கீழ்நோக்கி நகர்தல் வேண்டும்.
(ஆ) மன்னிப்பு என்பது ஒருவர் பெறுகின்ற இரக்கத்தைப் பொருத்து அமைய வேண்டும்.
பணியாளர் தலைவரிடமிருந்து மிகுதியான பரிவைப் பெறுகின்றார். அவர் பெறுகின்ற பரிவு அவரைத் தனக்குக் கீழிருப்பவரிடம் பரிவுகொள்ளத் தூண்ட வேண்டும். ஆனால், அது நடைபெறவில்லை. பரிவைப் பெற்ற அவர் அதைத் தன்னுடன் நிறுத்திக்கொள்வதோடு, அரசர் தனக்குப் பரிவு காட்டியது அவருடைய கடமை என்று நினைத்துக்கொள்கின்றார். 'எனக்கு உதவி செய்வது மற்றவர்களுடைய கடமை' என நினைப்பவர் நன்றியுணர்வு பாராட்டமாட்டார். அப்படியே, 'மற்றவர் என்னை மன்னிப்பது அவர்களுடைய கடமை' என நினைப்பவர் மற்றவர்களை மன்னிக்க மாட்டார்.
(இ) கடவுளின் பரிவும் சினமும்
பணியாளரிடம் பரிவு காட்டிய அரசர் சில மணி நேரங்களில் சினம் காட்டுகின்றார். கடவுளிடம் இந்த இரு இயல்புகளும் உண்டு. நம்மிடமும் இந்த இரு இயல்புகளும் உண்டு. 'பரிவு' என்னும் உணர்வு 'மற்றவர்கள்மேல் நாம் கொள்ள வேண்டிய அன்பு உணர்விலிருந்து' வருகின்றது. 'சினம்' என்னும் உணர்வு 'மற்றவர்கள்மேல் நாம் காட்ட வேண்டிய நீதி உணர்விலிருந்து' வருகின்றது. வங்கியில் வரிசையில் எனக்குப் பின்னால் நிற்கும் ஒருவர் எனக்கு முன்னால் சென்றுவிட்டால் அவர்மேல் கோபம் வருகின்றது. ஏனெனில், அவர் எனக்கு அநீதி செய்கின்றார். ஆனால், வயது முதிர்ந்த ஒருவர் நமக்குப் பின்னால் நிற்க, நாமே அவரிடம், 'சார்! நீங்க போங்க!' என்று சொல்லும்போது அங்கே நம் அன்பு வெளிப்படுகின்றது. கடவுளின் அன்பை அனுபவித்த ஒருவர் மற்றவரை அன்புடன் நடத்த வேண்டுமே தவிர, அநீதியுடன் நடத்தக் கூடாது. அப்படி நடத்தினால் அது கடவுளின் சினத்தைத் தூண்டியெழுப்பும்.
'மன்னிப்பு' – மனமுதிர்ச்சியின் அடையாளம்.
இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசே 12:1-12), இறைவாக்கினர் எசேக்கியேலை நாடுகடத்தலின் அடையாளமாக அனுப்புகிறார் ஆண்டவராகிய கடவுள். ஆனால், மக்கள் அவரைக் கண்டுகொள்ளாவில்லை. அவர்களின் பாராமுகத்தைக் கடிந்துகொள்கின்ற கடவுள், அவர்கள்மேல் வரவிருக்கும் தண்டனையை முன்னுரைக்கின்றார்.
நற்செய்தி வாசகத்தில் நாம் காணும் பணியாளும் தலைவரின் மன்னிப்பு தருகின்ற பாடத்தின் பொருள் உணராதவராக இருந்தார்.
No comments:
Post a Comment