Sunday, August 28, 2022

திருமுழுக்கு யோவானின் பாடுகள்



இன்றைய (29 ஆகஸ்ட் 2022) திருநாள்

திருமுழுக்கு யோவானின் பாடுகள்

அண்மையில் புதிய ஏற்பாட்டு கலிலேயப் பகுதியில் பெண்கள் அணியும் ஜிமிக்கி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்கள். இது ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் புழக்கத்தில் இருந்தது என்று சொல்லப்படுகின்றது.

ஏரோதியாவின் மகள் சலோமியின் காதுகளில் இருந்த இரண்டு ஜிமிக்கிகளில் ஒன்று அவர் நடனமாடும் போது தவறி விழுந்து இன்று நம் கைகளில் கிடைத்திருக்கிறதோ! இருக்கலாம்!

இன்று திருமுழுக்கு யோவானின் பாடுகள் திருநாளைக் கொண்டாடுகிறோம். திருமுழுக்கு யோவான் ஏரோது அரசனால் கொல்லப்படும் நிலையே அவர் அனுபவித்த பாடு.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மாற் 6:17-29) நாம் அதிகமாக வாசிக்கக் கேட்ட ஒன்றுதான்: ஏரோது, ஏரோதியா, சலோமி, யோவான்.

இந்த நிகழ்வு ஒரு வாழ்வியல் உருவகம் என்றே கருதுகிறேன். இந்நிகழ்வில் யோவான் மட்டுமல்ல, ஒட்டு மொத்த நான்கு பேருமே பாடுகள் பாடுகின்றனர். இப்பாடுகளை நாமும் நம் வாழ்வில் படுகின்றோம். இந்நால்வரின் துன்பங்கள் நம் துன்பங்களாகவும் இருக்கின்றன.

1. இரண்டு நல்லவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தலின் துன்பம்

நமக்கு வாழ்க்கையில ஒரு நல்லது ஒரு கெட்டது என்று சொல்லி ஒன்றைத் தேர்ந்தெடுக்கச் சொன்னால் கண்ணை மூடிக்கொண்டு அந்த ஒரு நல்லதைத் தேர்ந்தெடுத்து விடுவோம். ஒரு தட்டில் உணவும் இன்னொரு தட்டில் கல்லும் வைத்தால் நாம் உண்பதற்கு உணவைத் தேர்ந்துகொள்வோம். ஆனால், வாழ்க்கையின் தெளிவுகள் எல்லாமே அப்படி எளிதாக அமைந்துவிடுவதில்லை. இரண்டும் நல்லவையாக இருந்தால் அல்லது நல்லவை மாதிரி தெரிந்தால் என்ன செய்வது? தன் சகோதரனுடைய மனைவி ஏரோதியாவை வைத்திருப்பது நல்லது அல்ல என்று ஏரோதுக்குத் தெரிகிறது. ஆகையால் யோவானின் வார்த்தைகளுக்குச் செவிமடுக்கிறார். அதே நேரத்தில் ஏரோதியா தன்னோடு இருப்பதும் நல்லது என்றும், தான் அவள்மேல் கொள்ளும் காதல் உண்மை என்றும் தெரிகிறது. தொடர்ந்து, திருமுழுக்கு யோவான் வாழ்வதும் நல்லது என்று நினைக்கிறார். விருந்தினர்களைத் திருப்திப்படுத்துவதும் நல்லது என நினைக்கிறார். இரண்டு நல்லவைகளில் நாம் எந்த ஒன்றை எடுத்தாலும் அது நல்லது என்கிறது அறநெறியியல். ஆனால், ஏரோதின் தெரிவு யோவானின் உயிரை விலையாகக் கேட்கிறது.

2. கண்களில் விழும் தூசி தரும் துன்பம்

ஒரு குழுமத்தில் இருக்கிறோம் என வைத்துக்கொள்வோம். அல்லது ஒரு பள்ளிக்கூடத்தில் நிறையப் பேரோடு வேலை செய்கிறோம். ஐம்பது பேர் இருக்கின்ற அந்த இடத்தில் ஒருவர் நம்மை ஏதோ சொல்லிக் காயப்படுத்திவிட்டார். அந்த வார்த்தை நம் கண்களில் ஒரு தூசி போல விழுந்துவிடுகிறது. நாம் கசக்கினால் கண்கள் கலங்கும். கசக்காமல் விட்டால் தூசி வெளியே வராது. கண்களை உறுத்திக்கொண்டே இருக்கும். மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் இருக்கும் துன்பங்கள் இவை. ஏரோதியாவின் கண்களில் விழுந்த தூசிதான் திருமுழுக்கு யோவான். 'என் கணவர் பிலிப்பை விட்டுவிட்டு நான் ஏரோதிடம் கூடி வாழ்வதால் எனக்கும் பிரச்சினையில்லை, என் முன்னாள் கணவருக்கும் பிரச்சினையில்லை, என் இந்நாள் கணவருக்கும் பிரச்சினையில்லை, என் குடும்பத்தில், சமூகத்தில் யாருக்கும் பிரச்சினையில்லை. உனக்கு என்ன பிரச்சினை?' என்று அன்றாடம் யோவானைப் பார்க்கும்போதெல்லாம் தன் மனத்துள் கேட்டுக்கொள்கிறாள் ஏரோது. நேரம் வந்தவுடன் அதைச் சரியாகப் பயன்படுத்தி தூசியை அகற்றி விடுகிறாள். ஆனால், பாவம்! தூசியை அகற்றும்போது கண்ணையே குத்திக்கொள்கிறாள்.

3. 'நான் என்ன செய்வது?' என்று கேட்கும் துன்பம்

யாராவது நண்பரை டீக்கடைக்குக் கூட்டிச் சென்று, 'என்ன வேண்டும்?' என்று கேளுங்கள். அவர் அங்கிருக்கும் போர்டைப் பார்ப்பார், அடுத்தவர் குடிக்கும் குவளையைப் பார்ப்பார், அல்லது 'நீயே ஏதாச்சும் சொல்லு' என்பார். 'எனக்கு டீ பிடிக்குமா? காஃபி பிடிக்குமா?' என்றே பலருக்குத் தெரிவதில்லை. தங்களுக்கு என்ன வேண்டும், தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் இருப்பவர்கள் மிகவும் பரிதாபத்துற்குரியவர்கள். சலோமி அப்படித்தான் இருக்கிறாள். அவளுக்கு என்ன வேண்டும் என்பது அவளுக்குத் தெரியவில்லை. நடனம் ஆடத் தெரிந்த அவளுக்கு நாட்டின் பாதியை ஆளத் தெரியாதுதான். ஆனால், அதுவே அவளுக்குத் தெரியவில்லை. தாயிடம் ஓடி, 'நான் என்ன கேட்கலாம்?' எனக் கேட்கிறாள். இந்த நேரத்தில் எனக்கு என்ன வேண்டும்? என் வாழ்விலிருந்து எனக்கு என்ன வேண்டும்? நான் செய்யவிருப்பது என்ன? என்று தெளிவாக இருப்பவர்களே இத்துன்பத்திலிருந்து தப்ப முடியும்.

4. நீதியா? சமரசமா? என எழும் துன்பம்

என்னிடம் ஒருவர் வேலை செய்கிறார் என வைத்துக்கொள்வோம். அவருடைய வேலைக்கு நான் தர வேண்டியது ஐந்நூறு ரூபாய். ஆனால், அவர் என்னிடம் முன்னால் நிறைய உதவிகள் பெற்றிருக்கிறார். நான் என்ன செய்கிறேன்? அதை மனத்தில் வைத்துக்கொண்டு முந்நூறு ரூபாய் கொடுக்கிறேன். அப்படிச் செய்யும்போது நான் நீதியோடு சமரசம் செய்துகொள்கிறேன். 'அரசன் செய்யும் தவற்றைச் சுட்டிக்காட்ட வேண்டும்' என்ற நீதியின் வேட்கை ஒரு பக்கம். 'யார் என்ன செய்தால் என்ன? இதில் என்ன தவறு?' என்ற மனச்சான்றைச் சமரசம் செய்து கொள்ளும் ஆசை ஒரு பக்கம். இந்த எண்ணம் ஒருவேளை யோவானுக்கும் வந்திருக்கலாம். ஆனால், சமரசம் செய்துகொள்ள அவர் மறுக்கிறார்.

மேற்காணும் நான்கு துன்பங்களும் நாம் அனுபவிக்கும் வாழ்வியல் பாடுகள். பாடுகளில் வெல்வது என்பது ஒரு காலை ஊன்றி இருப்பது. இரண்டு படகுகளில் கால் வைக்கும் எவரும் தன் பயணத்தை முடிப்பதில்லை. இரண்டு மான்களைத் துரத்தும் எவரும் ஒரு மானையும் பிடிப்பதில்லை. 


No comments:

Post a Comment