Saturday, August 20, 2022

அனைவரும் வருக!

ஆண்டின் பொதுக்காலம் 21ஆம் ஞாயிறு

I. எசாயா 66:18-21 II. எபிரேயர் 12:5-7,11-13 III. லூக்கா 13:22-30

அனைவரும் வருக!

ஒருவர் செய்யும் சமயச் சடங்கு அவருக்கு மீட்பைக் கொண்டுவருமா? மீட்பு அல்லது நலம் என்பது ஆட்டோமேடிக்காக நடக்கும் ஒரு நிகழ்வா? 'இல்லை' என்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.

மீட்பு அல்லது கடவுளின் தெரிவு என்பது ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல என்றும், அந்த இனத்தில் பிறந்தால், வளர்ந்தால், இறந்தால் மட்டும் ஒருவர் 'ஆட்டோமேடிக்காக' மீட்பு பெற்றுவிடுவதில்லை என்றும், மீட்பு என்னும் வீட்டின் கதவுகள் அனைவருக்கும் திறந்துவிடப்பட்டுள்ளன என்றும், எனவே, 'அனைவரும் வருக' என்றும் அழைப்பு விடுக்கிறது இன்றைய ஞாயிறு.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 66:18-21), இறைவாக்கினர் எசாயா, பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து மீண்டு வந்த இஸ்ரயேல் மக்களிடம் உரையாடுகிறார். அழிந்துபோன தங்கள் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இவர்கள், உடைந்து போன ஆலயத்தைக் கட்டி எழுப்புவதைத் தங்களுடைய முதன்மையான கடமையாகக் கொண்டிருந்தனர். அவர்களுடைய தோற்றம் மற்றும் வரலாற்றின் பின்புலத்தில் தங்களையே தனித்தன்மை வாய்ந்த சமூகமாகக் கருதினர் இஸ்ரயேல் மக்கள். தங்களுடைய தனித்தன்மையைத் தக்கவைக்கவும், தங்களைக் கடவுள் முன் உயர்த்திக் காட்டவும் ஆலயம் கட்ட விரும்பினர். இவர்களின் இந்த விருப்பத்தைக் கேள்விக்கு உட்படுத்துகிறார் எசாயா. ஏனெனில், 'பிறஇனத்தார், பிறமொழியினா அனைவரையும் நான் கூட்டிச் சேர்க்க வருவேன். அவர்களும் கூடிவந்து என் மாட்சியைக் காண்பார்கள்' என்கிறார் ஆண்டவர். சீனாய் மலையில் ஆண்டவரின் மாட்சி தங்களுக்கு மட்டுமே வெளிப்படுத்தப்பட்டது என்று எண்ணிப் பெருமைப்பட்டர்வளுக்கு ஆண்டவரின் வார்த்தைகள் நெருடலாகவே இருந்திருக்கும். மேலும், அவ்வாறு மாட்சியைக் கண்ட மக்கள் அதே மாட்சியை மற்றவர்களுக்கு அறிவித்து மற்றவர்களையும் தங்களோடு அழைத்து வருவார்கள் என்றும், அவர்களுள் சிலர் குருக்களாகவும் லேவியர்களாகவும் நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறுகிறார் ஆண்டவர். ஆக, தங்களுக்கு வெளிப்படுத்த மாட்சி பிறருக்கு வெளிப்படுத்தப்படுவதையும், தங்கள் லேவி இனத்தில் மட்டுமே குருக்கள், லேவியர்கள் வருவார்கள் என்ற நிலை மாறி, எல்லாரும் குருக்களாகவும் லேவியராகவும் ஏற்படுத்துப்படுவார்கள் என்பதையும் இப்போது எசாயா மக்களுக்கு அறிவிக்கின்றார். இப்படிச் சொல்வதன் வழியாக, இஸ்ரயேல் மக்கள் இவ்வளவு நாள்கள் பிடித்துக் கொண்டிருந்த பெருமை, செருக்கு, மற்றும் மேட்டிமை உணர்வைக் களைய அழைப்பு விடுப்பதோடு, மற்ற மக்களையும் கடவுள் அணைத்துக்கொள்கிறார் என்ற உள்ளடக்கிய பரந்த உணர்வைப் பெற்றுக்கொள்ளவும் அழைப்பு விடுக்கின்றார். மேலும், இறைவனின் இத்திட்டத்திற்கு அவர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கின்றார்.

ஆக, இஸ்ரயேல் இனத்திற்கு மட்டுமே மீட்பு உண்டு, கடவுளின் உடனிருப்பு உண்டு என்று எண்ணியவர்களின் எண்ணத்தை அழிக்கும் ஆண்டவராகிய கடவுள், மீட்பின் கதவுகளை பிறஇனத்தாருக்கும் திறந்து விடுகின்றார். மேலும், ஒரு இனத்தில் பிறத்தல் மட்டுமே மேன்மையைக் கொண்டுவராது, கடவுளின் திட்டத்தால் யாரும் மேன்மை பெறலாம் என்றும் முன்மொழிகின்றார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். எபி 12:5-7,11-13), எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர், தன்னுடைய திருச்சபையில் மக்கள் துன்பத்தைப் பற்றிக் கொண்டிருந்த புரிதலைக் கேள்விக்குட்படுத்துகிறார். சிலர் கிறிஸ்தவர்களாக மாறினால் எந்தத் துன்பமும் இல்லாமல் இருக்கலாம் என்று எண்ணினர். இன்னும் சிலர் தங்களுடைய துன்பங்கள் தங்களுடைய பழைய பழைய பாவங்களுக்கான தண்டனை என்று எண்ணினர். மேலும் சிலர் கடவுள் அவர்களைக் கண்டுகொள்வதில்லை என்று எண்ணினர். 

இவர்களின் இத்தவறான புரிதல்களுக்குச் சவால்விடுகிறார் ஆசிரியர். ஆசிரியைப் பொருத்தவரையில் துன்பங்களும் வலியும் வறுமையும் பயிற்சிக்கான தளங்களாக அமைகின்றன. நம்பிக்கையில் காலப் போக்கில் மனம் தளர்ந்து போன இம்மக்களுக்கு எழுதும் ஆசிரியர், 'திருத்தப்படுவதற்காகத் துன்பங்களைத் தாங்கிக்கொள்ளுங்கள். கடவுள் உங்களைத் தம் பிள்ளைகளாக நடத்துகிறார்' என்கிறார். திருத்தப்படுவது அல்லது ஒழுக்கமாய் இருப்பது என்பது விளையாட்டு வீரர் அதிகமாகப் பெற்றிருக்க வேண்டிய ஒரு பண்பு. அவருடைய 'கைகள் தளர்ந்து போகும்போதும்,' 'முழங்கால்கள் தள்ளாடும்போதும்' அவரால் விளையாட முடியாது. இவ்விரண்டையும் சரி செய்ய அவர் தானே முயற்சிகள் எடுத்து அவற்றை நிறைவேற்ற வேண்டும். 

ஆக, கிறிஸ்தவர்களும் தாங்கள் ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவ நம்பிக்கையால் தாங்கள் அனைவரும் மீட்கப்பட்டுவிட்டதாக எண்ணாமல், தங்களுடைய துன்பங்களை பிள்ளைக்குரிய பக்குவத்துடன் ஏற்றுக்கொள்வதன் வழியாகவும், ஒழுக்கம் மற்றும் பயிற்சியின் வழியாகவும் தங்களையே தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும், இத்தகைய துன்பங்களை ஏற்கும் அனைவருமே இறைவனைத் தந்தையாக ஏற்றுக்கொள்ள முடியும் என்றும் மறைமுகமாக அறிவுறுத்துகிறார் ஆசிரியர்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 13:22-30) இயேசு எருசலேம் நோக்கிப் பயணம் செய்கிறார். வழியில் அவரைச் சந்திக்கின்ற ஒருவர், 'மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா?' என்று கேட்கிறார். கேள்வி கேட்டவருடைய எண்ணம் யூதர்களுக்கு மட்டும் மீட்பு என்பதாக இருக்கிறது. இயேசுவின் சமகாலத்து யூதர்கள் தாங்கள் ஆபிரகாம் வழி வந்தவர்கள் என்பதாலும், தாங்கள் கடவுளின் மக்கள் என்பதாலும் தங்களுக்கு மீட்பு தானாகவேக் கிடைத்துவிடும் என்று எண்ணினர். ஒருவர் ஒரு குழுமம் அல்லது சமூகத்தைச் சார்ந்தவர் என்பதற்காக அவருக்கு மீட்பு ஆட்டோமேடிக்காக கிடைத்துவிடும் என்ற எண்ணத்திற்குச் சவால் விடுவதாக இருக்கின்றன இயேசுவின் வார்த்தைகள். விளையாட்டு வீரருக்கு உரிய பழக்கம் ஒன்றை வலியுறுத்துவது போல, 'வருந்தி முயலுங்கள்' என்கிறார். மேலும், 'இடுக்கமான வாயில் வழியே நுழையுங்கள்' என்று அறிவுறுத்துவதோடு, 'வாயில் அடைக்கப்படலாம்' என எச்சரிக்கவும் செய்கின்றார். உள்ளே நுழைய முடியாமற்போவோர், 'நாங்கள் உம்மோடு உணவு உண்டோம், குடித்தோம், நீர் எங்கள் வீதிகளில் போதித்தீர்' என்ற இயேசுவோடு தங்களை ஒன்றிணைத்துக்கொள்ள முயல்கின்றனர். ஆனால், 'நாங்கள் உம்மை நம்பினோம், உம் வார்த்தைக்குச் செவிமடுத்தோம்' என்றோ சொல்லவில்லை. இயேசுவும் ஒரு யூதர் என்பதால் யூதர் எல்லாருக்கும் அவருடைய மீட்பு கிடைக்கும் எனப் புரிந்துகொண்டனர். இவர்களே தங்களை 'முதன்மையானவர்கள்' என எண்ணிக்கொண்டவர்கள். ஆனால், இவர்களால் கடைசியானவர்கள் என்று எண்ணப்பட்ட புறவினத்தார் இயேசுவை ஆண்டவராகவும் மீட்பராகவும் ஏற்றுக்கொள்ளவும், நம்பவும் செய்தனர். 

ஆக, மேலோட்டமான அடையாளங்களைக் கொண்டிருப்பதால் மட்டும் ஒருவருக்கு மீட்பு கிடைத்துவிடும் என்ற நம் எண்ணத்திற்குச் சவால் விடுவதாக இருக்கின்றது இன்றைய நற்செய்தி வாசகம். மேலும், இடுக்கமான வாயில் வழியே வருந்தி நுழையும் அனைவருக்கும் மீட்பு என்று மீட்பின் கதவுகளைப் புறவினத்தாருக்கும், கடைசியானவர்களுக்கும் திறந்து வைக்கிறார் இயேசு.

இன்று மீட்பு, கடவுள், மறுவாழ்வு, நிலைவாழ்வு பற்றிய என் புரிதல்கள் எவை? நானும் தவறான புரிதல்கள் கொண்டிருக்கின்றேனா? நம்முடைய பெயர், குடும்பம், பின்புலம், சமயம், சாதி, படிப்பு, வேலை போன்ற அடையாளங்கள்கூட நம்மை மேட்டிமை உணர்வுகொள்ளச் செய்து அடுத்தவர்களை இகழ்ச்சியாகப் பார்க்கும் எண்ணத்தை நம்மில் விதைக்கலாம். இவற்றிலிருந்து விடுபடுவது எப்போது? 'அனைவரும் வருக' என்று அரவணைத்துக்கொள்ளும் பக்குவம் பெற நாம் என்ன செய்ய வேண்டும்?

1. எல்லாம் அவரின் திருவுளம்

'ஆண்டவருக்குக் கோவில் கட்ட வேண்டும்' என்பது மக்களின் எண்ணமாக இருக்கிறது. இது நல்ல எண்ணமே. ஆனால், கடவுளின் திருவுளம் வேறுமாதிரியாக இருக்கிறது. இவர்கள் வெறும் ஆலயத்தைப் பார்க்க, கடவுளோ ஒட்டுமொத்த மக்களினத்தைப் பார்க்கிறார். அவரின் திருவுளமே நடந்தேறுகிறது. 'நாம்தான் அரசர்கள், நாம்தான் மறைப்பணியாளர்கள், நாம்தான் குருக்கள்' என்ற எண்ணத்தைப் புரட்டிப் போடுகின்றார் கடவுள். தான் விரும்பும் அரசர்களை, மறைப்பணியாளர்களை, குருக்களை ஏற்படுத்துகின்றார். ஆக, எல்லாவற்றிலும் அவரின் திருவுளமே நடந்தேறும் என்று நினைப்பது சால்பு.

2. தளர்ந்துபோன கைகள், தள்ளாடும் முழங்கால்கள்

கைகளின் இயல்பு தளர்வது. கால்களின் இயல்பு தள்ளாடுவது. வலுவின்மையைக் கொண்டாட வேண்டும். என் அடையாளம் எனக்குத் தருகின்ற மேட்டிமை உணர்வை, தனித்தன்மையை விடுத்து நான் அனுபவிக்கின்ற வலுவின்மையை ஏற்று, அதன் வழியாக நான் அடுத்தவரோடு என்னை இணைத்துக்கொள்ள வேண்டும். 'நான் அருள்பணியாளர். நான் செபம் செய்தால் கடவுள் வருவார். நான் கேட்பது எல்லாம் நடக்கும்' என்று நான் மேட்டிமை உணர்வு கொண்டிருப்பதற்குப் பதிலாக, என்னில் எழும் சோர்வு, நம்பிக்கையின்மை, விரக்தி, தனிமை போன்ற நேரங்களில் நான், 'நானும் மற்றவர்களில் ஒருவன்' என்று என்னை மற்றவரோடு இணைத்துப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்தால், நான் அனைவரையும் அணைத்துக்கொள்ள முடியும்.

3. இடுக்கமான வாயில் வழியே நுழையுங்கள்

இடுக்கமான வாயில் என்பது நான் அனுபவிக்கும் துன்பம். துன்பம் ஏற்றலே இடுக்கமான வாயில் வழியே நுழைதல். நன்றாக தூக்கம் வருகின்ற நேரத்தில் நான் எழுந்து வகுப்பிற்குச் செல்ல வேண்டும் என்றால் அதுதான் நான் நுழைகின்ற இடுக்கமான வாயில். எல்லாரும் நேர்மையற்று நடக்கும் இடத்தில் நான் நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பது இடுக்கமான வாயில். அகலமான வாயிலில் அனைவரும் நுழைவர். அங்கே யாருக்கும் யாரையும் பற்றிக் கவலை இல்லை. ஆனால் இடுக்கமான வாயிலில் நுழைபவர் தன்னை முழுமையாக அறிந்திருக்க வேண்டும். 

இறுதியாக,

'நான், எனது, எனக்கு' என்று எண்ணம் விடுத்து, 'நாம், நமது, நமக்கு' என்று குழு இணைவதையும் விடுத்து, வாழ்வில் எதுவும் ஆட்டோமேடிக்காக நிகழ்வது அல்ல என்பதை அறிந்து, 'அனைவரும் வருக' என்றழைக்கும் இறைநோக்கி ஒருவர் மற்றவரோடு கரம் கோர்த்து நடத்தல் சிறப்பு.

No comments:

Post a Comment