இது முறையல்ல
நம் வாழ்க்கையில், 'இது முறை, இது முறையல்ல' என்பதைத் தாண்டிய விடயங்கள் இருக்கின்றன எனக் காட்டுகின்றது இன்றைய நற்செய்தி வாசகம்.
யாரும் தன்னைக் கவனித்துவிடக் கூடாது என்று புறவினத்து நகர ஊரில் பயணம் செய்த இயேசுவை அடையாளம் கண்டுகொள்வது முறையல்ல.
பெண் ஒருத்தி சாலையில் கத்திக்கொண்டு ஓடுவது முறையல்ல.
புறவினத்துப் பெண் ஒருத்தி, யூத ஆண்மகனிடம், அதுவும் சாலையில் நின்று பேசுவது முறையல்ல.
பேய்பிடித்த மகளின் தாய் ஒருத்தி, நடமாடும் போதகர் ஒருவரை வழியில் நிறுத்தி, 'தாவீதின் மகனே' எனப் புகழ்வது முறையல்ல.
'இவளை அனுப்பிவிடும், கத்திக்கொண்டே வருகிறாள்' என்று சீடர்கள் சொல்வது முறையல்ல.
உலகின் மீட்பராக வந்த ஒருவர் தன் பணியை இஸ்ரயேலுக்கென முடித்துக்கொள்வது முறையல்ல.
பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல.
ஆம்! இவை முறையல்ல!
ஆனால், முறை-முறையல்ல என்பதைப் பொருத்து அல்ல வாழ்க்கை என்று காட்டுகிறாள் அந்தப் பெண்.
மேசையிலிருந்து சிதறிய துண்டுகளை நாய்க்குட்டிகள் திண்பது முறை-முறையல்ல என்பதைப் பொருத்து அல்ல. அது பசி, உரிமை, இயல்பு, எதார்த்தத்தைப் பொருத்தது.
முறை-முறையல்ல என்று சமூகம் வடிவமைத்த கட்டமைப்பை, தன் நம்பிக்கையால் உடைத்து எறிகின்றார் கானானியப் பெண்.
தான் வேண்டியது கிடைக்கு மட்டும் கத்துகின்றாள். தான் கத்தியதைப் பெறும் மட்டும் ஓடுகிறாள். நாய்க்குட்டிகள் அப்படித்தான். அவை கத்தும், ஓடும், பெற்றுக்கொள்ளும்.
மேசையில் இருப்பவர் உணர்ந்துகொள்ளவேண்டும்.
எதை?
அவர் இருப்பது மேல்.
நாய் இருப்பது கீழ்.
ஆனால், இருவருள்ளும் இருப்பது ஒரே ரொட்டித் துண்டு.
முறை-முறையல்ல என்ற இருதுருவப் பிளவை உடைக்கின்றார் அந்தப் பெயரில்லாப் பேதை.
No comments:
Post a Comment