Monday, August 22, 2022

உட்புறத்தைத் தூய்மையாக்குங்கள்

இன்றைய (23 ஆகஸ்ட் 2022) நற்செய்தி (மத் 23:23-26)

உட்புறத்தைத் தூய்மையாக்குங்கள்

இயேசு மறைநூல் அறிஞர்களையும் பரிசேயர்களையும் சாடுவது தொடர்கின்றது. இரு காரியங்களுக்காக இயேசு இன்றைய நற்செய்தியில் அவர்களைச் சாடுகின்றார்: ஒன்று, பத்தில் ஒரு பங்கைக் கொடுக்கும் அவர்கள் நீதி, இரக்கம், நம்பிக்கை ஆகியவற்றைக் கடைப்பிடிக்காமல் இருக்கிறார்கள். இரண்டு, வெளிப்புறத் தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அவர்கள் உள்புறத் தூய்மையை மறுக்கிறார்கள்.

'கிண்ணத்தின் உள்புறத்தைத் தூய்மையாக்குங்கள். அதன் வெளிப்புறமும் தூய்மையாகும்' என்னும் இயேசுவின் போதனையை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

இந்த வாக்கியத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் எடுத்துக்கொள்ளலாம். நேரடிப் பொருளாக எடுத்துக்கொண்டால், ஒரு பாத்திரத்தின் உட்புறத்தைக் கழுவும்போது இயல்பாக வெளிப்புறமும் தூய்மையாகிறது என்பது நம் அனுபவம். மிக மிக அரிதான சூழலில்தான் - கெட்டில் போன்ற மின்னணுச் சாதங்களைக் கழுவும்போது - உள்புறத்தை மட்டும் நாம் கழுவுகிறோம். மறைமுகப் பொருளில், இயேசு கிண்ணத்தின் உட்புறம் என மொழிவது மனித இதயத்தைக் குறிக்கிறது. இயேசுவின் சமகாலத்தில் தூய்மை என்பது வாழ்வியல் எதார்த்தமாக இருந்த நிலை மாறி சமயச் சடங்காக மாறியிருந்தது. இந்த நிலையில் சடங்குமயமாக்கும் போக்கையும் அவர் கண்டிக்கின்றார்.

இன்றைய சார்பியல் (ரெலடிவிட்டி) உலகில், 'தூய்மை' என்பதை 'இதுதான்' என்று வரையறுக்க முடியாது. தூய்மை என்பது தனிநபர் சார்ந்தது. நான் தூய்மை எனக் கருதும் இடம் மற்றொருவருக்குக் குப்பையாகத் தோன்றலாம். மேலும், தூய்மை என்பதை எப்போதும் உயர்ந்து மதிப்பீடு என்றும் முன்மொழிய முடியாது. எடுத்துக்காட்டாக, சாலையில் தூங்கும் நாடோடிப் பெண்களுக்கு அவர்களுடைய அழுக்கே பாதுகாப்பு. 

'புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப்படும்' (குறள் 298) என்று மொழியும் திருவள்ளுவர், தூய்மையை, புறம் மற்றும் அகம் என்னும் இரண்டாகப் பிரித்து, இரண்டும் அவசியம் எனவும், இரண்டையும் அடைவதற்கான வழிகளையும் முன்மொழிகின்றார்.

தூய்மை என்பதை நாம் எப்படிப் புரிந்துகொள்வது?

(அ) தூய்மை என்பது தயார்நிலை. தூய்மையாக இருக்கும் தட்டு உணவருந்தப் பயன்படுவதற்குத் தயாராக இருக்கிறது. தூய்மையாக இருக்கும் மெத்தை தூங்குவதற்குப் பயன்படுகின்றது. தூய்மையாக இருக்கும் அறை வாழ்வதற்குப் பயன்படுகின்றது. 

(ஆ) தூய்மை என்பது ஒன்றின் இருத்தல் நிலை. ஒரு பொருளை வாங்கும்போது அது தூய்மையாக இருக்கிறது. காலப் போக்கில் அதன்மேல் அழுக்கு ஏறுகிறது. அல்லது அந்தப் பொருள் தேயத் தொடங்குகிறது. எடுத்துக்காட்டாக, நாம் அணியும் ஆடை. இது முதன்முதலாகத் தன் இருத்தலைப் பெறும்போது இருக்கின்ற நிலையே அதன் தூய்மை.

பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்கள் தாங்கள் பயன்படுத்தும் பாத்திரங்களின் தயார்நிலை பற்றி அக்கறை கொண்டிருந்தார்களே அன்றி தாங்கள் உள்ளத்தில் இறைவனை ஏற்பதற்கான தயார்நிலை பற்றி அக்கறையின்றி இருந்தார்கள். தங்கள் மேல் தாங்களே வலிந்து பூசிக்கொண்ட அழுக்கினால் தங்கள் இருத்தல் நிலை கறைபட்டிருப்பதை அவர்கள் உணரவில்லை.

இதுவே நம் நிலையாகவும் இருக்கலாம்.

என் உள்ளம் இறைவனையும் மற்றவர்களையும் ஏற்பதற்கான தயார்நிலை கொண்டிருக்கிறதா?

என் இருத்தலின்மேல் நானே ஏற்றிக்கொண்டு நிற்கும் அழுக்குகள் எவை?

நாம் பேசும் பொய்கள், மற்றவர்கள்மேல் நாம் வளர்க்கும் கோபம், வன்மம், பகைமை, நாம் கொள்ளும் பொறாமை உணர்வு ஆகியவற்றால் நாம் உள்ளத் தூய்மையை இழந்துகொண்டே இருக்கின்றோம். 

அழுக்குகளை அழுத்தித் தேய்த்தால் பாத்திரங்களில் கோடுகள் விழுவது போல, நம் அழுக்குகளைத் தேய்த்து எடுக்கும் முயற்சியில் நாமும் நம் பாத்திரங்களில் கோடுகளை ஏற்படுத்திவிடுகின்றோம். ஆனால், சில விடாப்பிடியான கறைகளைத் தேய்த்துத்தான் எடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

தூய்மை நோக்கிய பயணம் என்பது தொடர் பயணம். 

'எதையாவது சுத்தம் செய்துகொண்டே இருந்தால் நம்மை அறியாமலேயே நம் அகமும் சுத்தமாகிறது' என்று கூறுவார் பவுலோ கோயலோ என்னும் நாவலாசிரியர். 

ஆக, வெளிப்புறத் தூய்மை உள்புறத் தூய்மையின் வெளிப்பாடாக இருத்தல் நலம். வெறும் சடங்காகச் சுருங்கிவிட்டால் ஆபத்து.


No comments:

Post a Comment