Thursday, August 25, 2022

உங்களைத் தெரியாது

இன்றைய (26 ஆகஸ்ட் 2022) நற்செய்தி (மத் 25:1-13)

உங்களைத் தெரியாது

விண்ணரசு பற்றிய எடுத்துக்காட்டாக, பத்துக் கன்னியர் அல்லது பத்துத் தோழியர் எடுத்துக்காட்டை முன்மொழிகின்றார் இயேசு. இந்த எடுத்துக்காட்டே மத்தேயு நற்செய்தியில் நாம் காணும் இறுதி உவமை ஆகும். திருமண நிகழ்வின் பின்புலத்தில் இந்த உவமை அமைகின்றது. யூதர்களின் திருமணம் இரு நிலைகளில் நடந்தேறும். முதலில், நிச்சயம். இரண்டாவது திருமணம். திருமண நிகழ்வில் மணமகள் அழைப்பு, மணமகனுடைய பெற்றோர்முன் திருமணம், ஏழுநாள் கொண்டாட்டம் என்று மூன்று பகுதிகள் உண்டு. மணமகளை அழைத்துச் செல்வதற்காக மணமகன் அவளுடைய இல்லத்திற்கு வரும்போது இந்த நிகழ்வு நடக்கிறதா, அல்லது மணமகளை மணமகன் தன் பெற்றோரின் இல்லத்திற்கு அழைத்துச் செல்லும்போது நடக்கிறதா என்பது பற்றிய கலாச்சாரத் தரவுகள் தெளிவாக இல்லை.

மேலும், இந்த உவமையை இயேசுவே மொழிந்தாரா? அல்லது தொடக்கத் திருஅவை வாய்மொழி வரலாற்றில் இது உருவானதா என்றும் தெரியவில்லை. ஏனெனில், 'முன்மதியோடு அல்லது தயாரிப்பு நிலையில் இருத்தல்' என்பது, இயேசுவின் மலைப்பொழிவு பகுதியில் வரும், 'அன்றன்றைய தொல்லை அன்றன்றைக்குப் போதும்' என்னும் அறிவுரைப் பகுதியின் முரணாகவும் தெரிகின்றது. 

நற்செய்திப் பகுதியின் இறுதி வாக்கியத்திலிருந்து நம் சிந்தனையைத் தொடங்குவோம். கடைகளில் போய் எண்ணெய் வாங்கிக் கொண்டு இல்லம் திரும்பிய கன்னித் தோழியர் மணமகனின் கதவுகளைத் தட்டுகின்றனர். அப்போது அவர், 'எனக்கு உங்களைத் தெரியாது' என்கிறார். இது மிகப் பெரிய நிராகரிப்பு. 

இப்போது விளக்குகள் எரிந்துகொண்டிருந்தாலும் அவற்றின் வெளிச்சத்தால் பயனொன்றும் இல்லை. அந்த வெளிச்சம்கூட அவர்களை மணமகனுக்கு அடையாளப்படுத்தவில்லை. 

விண்ணரசு பற்றி இந்த உவமை சொல்வது என்ன?

விண்ணரசுக்குள் சிலர் அனுமதிக்கப்படுவர். சிலருக்கு அனுமதி மறுக்கப்படும். அனுமதி மறுக்கப்பட்டவர்கள் உள்ளே நுழைவது சாத்தியமே இல்லை. மேலும், முன்மதி அல்லது தயாரிப்பு நிலை மிகவே அவசியம்.

ஐந்து தோழியர் அறிவிலிகள் எனக் கருதப்பட மூன்று காரணங்கள் உள்ளன:

ஒன்று, அவர்கள் தங்களை மையமாக வைத்து யோசித்தார்களே அன்றி, மணமகனை மையமாக வைத்து யோசிக்கவில்லை. தங்கள் கைகளில் உள்ள விளக்கு எரிகிறது. அதற்குள் அவர் வந்துவிடுவார் என நினைக்கின்றனர். நேற்றைய நற்செய்தியில் நாம் கண்ட பொல்லாத பணியாளர், 'தலைவர் வரக் காலம் தாழ்த்துவார்' எனத் தனக்குள் சொல்லிக் கொள்கின்றார். இந்த இளவல்களோ, 'தலைவர் சீக்கிரம் வந்துவிடுவார்' எனத் தனக்குள் சொல்லிக் கொள்கின்றனர். இருவர் நினைப்பதும் தவறாகிவிடுகிறது.

இரண்டு, 'உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள்' எனத் தங்களின் சகத் தோழியரிடம் பங்கு கேட்கின்றனர். இப்படிச் செய்வதால் அவர்கள் தோழியரின் வளத்தைப் பகிர்ந்துகொள்ள நினைப்பதுடன், அவற்றை வற்றிப் போகச் செய்யவும் துணிகின்றனர். ஆனால், விண்ணரசைப் பொருத்தவரையில் அவர்களுடைய செயல்களின் பலன்கள் அவர்களுக்கு மட்டுமே. மற்றவர்கள் அவற்றில் பங்குபோட இயலாது.

மூன்று, திசை மாறிச் செல்கின்றனர். மணமகன் வருகின்ற திசை நோக்கிச் செல்லாமல், வணிகரின் திசை நோக்கிச் செல்கின்றனர். இவர்களுடைய பார்வை மீண்டும் தங்கள் விளக்குகளின்பக்கம் இருக்கிறதே தவிர, மணமகன் பக்கம் இல்லை. ஆகையால்தான், மணமகன் இவர்களைக் காணவில்லை. ஒருவேளை மணமகன் திசை நோக்கி அவர்கள் சென்றிருந்தால் அவரும் அவர்கள்மேல் இரக்கம் கொண்டு, 'பரவாயில்லை! வாருங்கள்!' எனச் சொல்லி அவர்கள்மேல் இரக்கம் காட்டி அவர்களைத் தன்னுடன் அழைத்துச் சென்றிருப்பார்.

இன்றைய நாளில் நம் ஆன்மிக வாழ்வில் மேற்காணும் மூன்று தவறுகளை நாமும் செய்கின்றோமா? எனக் கேட்டறிவோம்.

'உங்களை எனக்குத் தெரியாது' என்று இயேசு நம்மை நோக்கிச் சொன்னால் எப்படி இருக்கும்?

நாம் பல நேரங்களில் இயேசுவை நமக்குத் தெரியும் எனச் சொல்கிறோம். ஆனால், அவருக்கு நம்மைத் தெரியுமா? அவர் நம்மை குரலை அறிவாரா? நாம் ஏந்தியிருக்கும் ஒளி அவருக்கு நம்மை அடையாளப்படுத்துகிறதா? அல்லது ஒளி மங்கலாக இருக்கிறதா? இதையே பவுலும் கலாத்திய இறைமக்களிடம், 'நீங்கள் கடவுளை அறிந்துள்ளீர்கள். உண்மையில், கடவுளே உங்களை அறிந்துள்ளார்' (காண். கலா 4:9) என்று கூறுகின்றார்.

நற்செய்தி வாசகத்தில் ஐவரின் முன்மதியை நாம் பாராட்டுகின்றோம். ஆனால், 'மனித ஞானத்தை விடக் கடவுளின் மடமை ஞானம் மிக்கது' என்கிறார் பவுல் (முதல் வாசகம்).


No comments:

Post a Comment