I. எரேமியா 38:4-6, 8-10 II. எபிரேயர் 12:1-4 III. லூக்கா 12:49-53
இணைக்கும் பிளவுகள்
ஒரு பங்கு ஆலயத்தில் திருப்பண்ட அறையில் (சக்ரீஸ்து) நடுத்தர வயது நபர் ஒருவர் வேலை பார்த்து வந்தார். அவர் கொஞ்சம் படித்தவர். பல ஆண்டுகளாக திருப்பண்ட அறையில் வேலை செய்து வந்தார். அந்தப் பங்கிற்கு புதிதாய் வந்த அருள்பணியாளருக்கு அவரைப் பிடிக்கவில்லை. அவர் செய்யும் எல்லாவற்றிலும் குறை கண்டுபிடித்துக்கொண்டே இருப்பார். ஒருநாள் கோபத்தின் உச்சியில், 'இனி நீ வேலைக்கு வர வேண்டாம். உன் கணக்கை முடித்துக்கொள்' என்று சொல்லி அனுப்பிவிடுகின்றார். இவர் ரொம்பவும் கெஞ்சிப் பார்க்க அருள்பணியாளர் மனம் மாறுவதாய் இல்லை. வீட்டிற்கு வருகின்ற இவர் ரொம்ப நேரமாக யோசிக்கிறார். தன் வீட்டிற்கு முன் நிறைய புல் முளைத்திருக்கிறது. இதை மேய்வதற்கு இரண்டு மாடுகள் வாங்கி விடலாம் என நினைக்கிறார். மாடுகள் வாங்கி விட, பால் வியாபாரம் நன்றாக நடக்கிறது. கோவிலுக்குச் செல்வதற்காக காலையில் எழுந்து பழகிய அவர் அதே பழக்கத்தில் மாடுகளைக் கவனிக்கவும், பால் கறக்கவும் என அர்ப்பணத்தோடு ஈடுபட சில ஆண்டுகளில் பெரிய பண்ணைக்கு உரிமையாளர் ஆகிவிடுகின்றார். இந்நேரத்தில் அருள்பணியாளரும் மாற்றலாகிச் சென்றுவிடுகின்றார். மாற்றலாய்ச் சென்ற அருள்பணியாளரை இவர் சந்திக்க தன்னுடைய புதிய காரில் செல்கின்றார். புதிய கார் வருகிறதே என்று வேகமாக அருள்பணியாளர் வெளியே வந்து பார்க்கிறார். காரில் வந்தவர் சக்ரீஸ்தர் என்றவுடன் அறைக்குள் சென்றுவிடுகின்றார். இவர் கதவைத் தட்ட, அவர் கோபமாய், 'என்னய்யா, என்ன வேணும்? இங்கு எந்த வேலையும் இல்லை' என்கிறார். அதற்கு இவர் சொல்கிறார், 'சாமி, உங்களுக்கு நன்றி சொல்லத்தான் வந்தேன். நல்ல வேளை என்னை சக்ரீஸ்தர் வேலையிலிருந்து வெளியேற்றினீர்கள். இன்னைக்கு நான் பெரிய பால்பண்ணைக்கு உரிமையாளராய் இருக்கிறேன். இல்லைன்னா இன்னும் மெழுகுதிரி ஏத்திக்கிட்டு உட்கார்ந்திருப்பேன்.'
நிற்க.
இப்படியாக சில பிளவுகள் நன்மையில் போய் முடிகின்றன. தன் முந்தைய பணியிடமிருந்து அவர் ஏற்படுத்திய பிளவு அவருடைய பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிவகுக்கிறது.
இதற்கு எதிர்மாறாக சில பிரிவுகள் அல்லது பிளவுகள் சோகத்தில் வெறுமையில் இறப்பில் முடிகின்றன.
எல்லாப் பிளவுகளும் தீமையானவை அல்ல. நன்மையான சில பிளவுகள் அல்லது பிரிவுகள் இருக்கின்றன என்று மொழிகிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.
இன்றைய முதல் வாசகத்தில் (காண். எரே 38:4-6, 8-10) இறைவாக்கினர் எரேமியாவுக்கும் அரசன் செதேக்கியாவுக்கும் இடையே ஏற்படும் பிளவு பற்றி வாசிக்கின்றோம். பாபிலோனிய அரசன் நெபுகத்னேசர் யூதாவை முற்றுகையிடுகின்றார். தன்னுடைய பதில் அரசனாக செதேக்கியாவை நியமிக்கின்றார். இது அரச அலுவலர்களுக்கு அதிருப்தியைக் கொடுத்தது. எனவே பாபிலோனியாவுடன் போர் தொடுக்குமாறு அவர்கள் செதேக்கியாவைத் தூண்டுகின்றனர். ஆனால், அப்படிப் போர் செய்வது பெரிய அழிவை உண்டாக்கும் எனவும், இப்போதைக்கு சரணாகதி அடைவதே சிறந்த வழி என்றும் சொல்கிறார் எரேமியா. ஏனெனில், அரசர்களும் அரச அலுவலர்களும் மக்களும் கடவுளின் உடன்படிக்கையை மீறிப் பாவம் செய்ததால்தான் இத்தீமை வந்திருக்கிறது என்பதை எரேமியா அறிவார். அரச அலுவலர்கள் எரேமியாவின் இக்கூற்றை அரசியல் எதிர்க்கருத்து என்று எண்ணி, 'இம்மனிதன் கண்டிப்பாய்ச் சாக வேண்டும். ஏனெனில் இவன் மக்களின் அழிவைத் தேடுகிறானே அன்றி நலனைத் தேடுவதில்லை' என்கிறார்கள். அத்தோடு அவரைப் பாழுங்கிணற்றில் தள்ளி, பசியால் அவரைக் கொன்றுவிட நினைக்கின்றனர். அரசவையின் எத்தியோப்பிய பணியாளன் எபேதுமெலேக்கு எரேமியாவுக்குச் சார்பாக நின்று அவரை பாழுங்கிணற்றிலிருந்து காப்பாற்றுகின்றார்.
அரசன் மற்றும் அரச அலுவலர்கள் நெபுகத்னேசர் மீது மேற்கொண்ட போர் அவர்களுக்கு இன்னும் பேரழிவைத் தருகின்றது. அவர்கள் எரேமியாவின் பேச்சைக் கேட்டிருந்தால் இவ்வளவு பெரிய அழிவு வந்திருக்காது. அவர்கள் இரண்டு நிலைகளில் தவறு செய்கின்றனர்: (அ) இறைவனின் வார்த்தை எது, தங்களின் வார்த்தை எது என்று அவர்களால் தேர்ந்து தெரிவு செய்ய முடியவில்லை, (ஆ) தங்களுடைய எண்ணம்போலக் கடவுள் செயல்படுவார் என்று எண்ணி கடவுளை ஒரு பொம்மையாக்க முனைகின்றனர். ஆனால் கடவுளின் வார்த்தைக்கு யாரும் விலங்கிட முடியவில்லை. அவரின் வார்த்தைகள் நிறைவேறுகின்றன. எரேமியாவின் வார்;த்தைகள் மக்களிடம் பிளவை உண்டாக்கின. ஆனால், கடவுளின் வார்த்தைகள் அவை என்று நினைத்தவர்களுக்கு அவை பாதுகாப்பைக் கொண்டுவந்தன.
இரண்டாம் வாசகம் (காண். எபி 12:1-4) எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் நம்பிக்கை என்றால் என்ன என வரையறை செய்த ஆசிரியர், 'திரண்டு வரும் மேகம் போல இத்தனை சாட்சிகள் இருக்க' என எல்லா நம்பிக்கையாளர்களையும் ஒன்றாக்கி, இவர்களின் பாதுகாப்பில் தன்னுடைய நம்பிக்கையாளர்கள் தொடர்ந்து முன்னேற அறிவுறுத்துகின்றார். இந்த தொடர் முன்னேற்றத்தை ஓட்டப் பந்தயத்திற்கு ஒப்பிடுகின்றார் ஆசிரியர். ஓட்டப் பந்தயத்தில் ஓடுபவர் விரைவாக ஓடுவதற்கு உந்துப் பலகை வைக்கப்படுவதுண்டு. உந்துப் பலகை கனமாக இருக்கும். அதன் ஒரு பகுதி நிலத்தில் பதிக்கப்பட்டிருக்கும் உந்துப் பலகையை எத்தி ஒருவர் அந்த விசையைப் பயன்படுத்தி முதல் அடியை நீளமாக எடுத்து வைத்தால் அவர் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம். ஆனால், அவர் அப்படிச் செய்யாமல் உந்துப் பலகையோடு தன்னை இணைத்துக் கொண்டால், அல்லது உந்துப் பலகையைத் தன் காலோடு சேர்த்துக் கொண்ட ஓட முயற்சித்தால் என்ன ஆகும்? அவர் விழுந்து தன்னைக் காயப்படுத்திக் கொள்வதோடு போட்டியிலும் தோற்றுவிடுவார். ஆக, அவரின் கால்களுக்கும் உந்துப் பலகைக்கும் இடையே ஏற்படும் பிளவே அவரை வெற்றியாளராக மாற்றும். இதையே ஆசிரியர், ஒருவர் தன்னுடைய சுமையையும், பாவத்தையும் உதறித் தள்ளாத ஒருவர் பந்தயத்தில் வெற்றி அடைய முடியாது என்கிறார். உந்துப் பலகையிலிருந்து கால்கள் எடுக்கப்பட்டவுடன் ஓடுபவரின் கண்கள் இலக்கில் பதிய வேண்டும். இதை ஆசிரியர், 'நம்பிக்கையைத் தொடங்கி வழிநடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின்மீது கண்களைப் பதிய வைப்போம்' என்கிறார். இங்கே நம்பிக்கையின் உந்துப் பலகையாக, உடன் ஓடி வந்து உற்சாகம் தருபவராக, பந்தயத்தை நிறைவு செய்து வைக்கும் விளையாட்டின் நடுவராக இயேசுவை முன்வைக்கிறார் ஆசிரியர்.
இயேசு இந்த நிலைக்கு உயரக் காரணம் அவர் அனுபவித்த இழிவும் சிலுவையுமே. தான் அடைய வேண்டிய மகிழ்ச்சியை முன் நிறுத்தி தன்னுடைய இழிவு மற்றும் சிலுவையை ஏற்றுக்கொள்கின்றார் இயேசு. அவருடைய செயல்களுக்கு பாவிகள் பலர் எதிரிகளாக இருந்தாலும் அவர்களோடு ஏற்படுத்திக் கொண்ட பிளவால் இவர் வெற்றியை அடைகின்றார். ஆக, இயேசு அவருடைய எதிரிகளோடு ஏற்படுத்திய பிளவு இவருக்கு வெற்றியைக் கொடுக்கின்றது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 12:49-53), 'மண்ணுலகில் தீயை மூட்ட வந்தேன்' எனச் சொல்கின்ற இயேசு, 'மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை. பிளவை உண்டாக்க வந்தேன்' என்று நமக்கு அதிர்ச்சியூட்டுகின்றார். அமைதியின் அரசர் என்றழைக்கப்பட்டவர், 'மண்ணுலகில் அவர் தயவு பெற்றோருக்கு அமைதி' என்று வானதூதர்களால் பாடி மகிழப்பட்டவர் அமைதிக்கு எதிரானவரா? இயேசுவைத் தேர்ந்துகொள்கிறவர்கள் எதிர்கொள்ள வேண்டிய பிளவு இங்கே சுட்டிக்காட்டப்படுகிறது. இயேசுவின் நற்செய்தி எல்லாருக்கும் ஏற்புடையது அல்ல. அதைச் சிலர் ஏற்றுக் கொள்வர். பலர் ஏற்றுக்கொள்ள மறுப்பர். ஏற்றுக்கொள்ளாதவர் இயேசுவைக் குறித்து இடறல் படுவர். இந்த இடறலே அவர்களுக்குள் பிளவை உண்டாக்கிவிடும். ஆனால், இதைப் பொருட்படுத்தாமல் ஒருவர் இயேசுவின்மேல் நம்பிக்கை கொள்ளும்போது இந்தப் பிளவே அவரை இயேசுவோடு இணைக்கும்.
இவ்வாறாக,
இன்றைய முதல் வாசகத்தில், எரேமியா ஏற்படுத்தும் பிளவு மக்களைக் கடவுளோடு இணைக்கிறது. இரண்டாம் வாசகத்தில், நம்பிக்கையாளர்கள் தங்களுடைய பாவத்தோடு ஏற்படுத்தும் பிளவு அவர்களை இயேசுவோடு இணைத்து நம்பிக்கையில் நிலைக்கச் செய்கிறது. நற்செய்தி வாசகத்தில், இயேசுவைத் தேர்ந்துகொள்வதால் ஏற்படும் பிளவு ஒருவரை நீதியின் அரியணைமுன் வெற்றியாளராய் நிறுத்துகிறது.
இதை இன்று நம்முடைய வாழ்வோடு எப்படிப் பொருத்திப் பார்ப்பது?
பிளவுகள் அல்லது போராட்டங்கள் நமக்கு வெளியில் நடப்பதைவிட உள்ளேயே நடக்கின்றன. காலையில் அலார்ம் வைத்து எழுவதில் தொடங்கி, திருமணம், அருள்பணி நிலை தேர்வு போன்ற பெரிய முடிவுகள் எடுப்பது வரை நம் உள்ளத்தில் போராட்டம் நடந்துகொண்டே இருக்கின்றது. இந்தப் போராட்டத்தினால் நம்முடைய மன அமைதி கெட்டு, உடல் நலமும் பாதிக்கப்படுகிறது.
ஏன் இந்தப் போராட்டம்?
தவறானதைத் தெரிந்துவிடுவோமோ என்ற பயம். நாளை என்ன நடக்குமோ? அல்லது ஒன்றின் முடிவு எப்படி இருக்குமோ? என்ற கலக்கம். நம்முடைய பயமும் கலக்கமும் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் மற்றவர்களோடு ஒப்பிடுதல். மற்றவரோடு என்னையே ஒப்பிட்டு அவர் செய்வதனைத்தையும் நான் செய்ய முற்படும்போதும், அவருக்கு வெற்றியாக அமைவது எனக்கும் வெற்றியாக அமையும் என நினைப்பதும் கூட நம் அமைதியைக் கெடுத்துவிடுகிறது.
ஆனால், போரட்டம் அல்லது பிளவு இல்லாமல் வெற்றி இல்லை.
பிளவுபடாமல் நினைக்கின்ற உள்ளம் காலில் ஒட்டிக்கொண்ட உந்துப் பலகை மாதிரி சுமையாக மாறிவிடும். ஆக, தேவையான நேரத்தில் தேவையற்றதை உதறித் தள்ளினால் தேவையானதை நோக்கி நான் வேகமாக நகர முடியும்.
இதை மூன்று நிலைகளில் அடையலாம்:
அ. இறைவனின் வார்த்தை எது, என்னுடைய வார்த்தை எது என்று பிரித்துப் பார்த்தல். எரேமியாவின் வார்த்தைகளை இறைவனின் வார்த்தைகளாகப் பார்க்க அவருடைய சமகாலத்தவர்கள் மறுத்தார்கள். ஏனெனில், அவர்கள் சுகமானவற்றையே எதிர்பார்த்தார்கள். என்னுடைய மூளை சுமைக்குப் பயந்து சுகமான வார்த்தைகளையே இறைவார்த்தைகளாக என்முன் காட்ட ஆரம்பிக்கும். இது பெரிய ஆபத்து. இறைவனின் வார்த்தையை அடையாளம் காண ஆழ்ந்த அமைதி, தியானம், செபம் போன்றவை துணை செய்யும்.
ஆ. என்னுடைய சுமை அல்லது பாவத்தை உதறித் தள்ளுவது. சுமை என்று தெரிந்தும், இழுத்துக் கொண்டு போய் விடலாம் என நினைப்பது, என் கால்களுக்குத் தளர்ச்சியைத் தருவதோடு என்னை பந்தயத்திலிருந்து வெளியேற்றிவிடவும் செய்யும். அதே நேரத்தில் பாவத்தை உதறித் தள்ளாமல் புண்ணியத்தில் வளர நினைப்பது என்பது, இறந்து போன எலியை அகற்றாமல் ஊதுபத்தி கொளுத்தி, 'சமாளித்துக்கொள்ள' நினைப்பது. எவ்வளவு அகர்பத்திகள் கொளுத்தினாலும் இறந்த எலி தரும் நாற்றத்தை அகற்ற முடியாது.
இ. மனநெருக்கடிக்குத் தயாராக இருப்பது. இயேசுக்கும் மனநெருக்கடி இருக்கிறது. நெருக்கடி உள்ள இடமே விரைவில் காலி ஆகும். குட்டை கலங்கினால்தான் மீன் சிக்கும்;. என் வாழ்வில் நான் தெரிவுகளை மேற்கொள்ள நிறைய குழப்பங்கள் வழியே நடந்து செல்ல வேண்டும்.
இறுதியாக,
இவை எல்லாவற்றிலும் இறைவன் மேல் என் கண்கள் பதிந்து இருந்தால், எல்லாப் பிளவுகளும் என்னை அவரோடு இணைத்துவிடும்!
No comments:
Post a Comment