Thursday, May 9, 2019

இணைந்திருப்பேன்

இன்றைய (10 மே 2019) நற்செய்தி (யோவா 6:52-59)

இணைந்திருப்பேன்

இன்றைய முதல் வாசகத்தையும் (காண். திப 9:1-20) நற்செய்தி வாசகத்தையும் (காண். யோவா 6:52-59) இணைக்கும் ஒற்றைச் சொல் 'இணைந்திருத்தல்.'

'எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர். நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்' என்று நற்செய்தி வாசகத்தில் சொல்லும் இயேசு, தமஸ்கு நகரில் சவுலைத் தடுத்தாட்கொண்டு பவுலாக மாற்றும்போது, 'ஆண்டவரே, நீர் யார்?' என்னும் பவுலின் கேள்விக்கு, 'நீ துன்புறுத்தும் இயேசு நானே' என்கிறார்.

இந்த வகையான இணைந்திருத்தலே நான் கணவன்-மனைவி, பெற்றோர்-பிள்ளை, காதலன்-காதலி, நட்பு என எந்த உறவிலும் பார்ப்பது கிடையாது. 'தாயும் பிள்ளையும் என்றாலும் வாயிம் வயிறும் வேறு' என்பதே வாழ்வியல் எதார்த்தமாக இருக்கிறது.

இயேசு தன் திருஅவையோடு தன்னை இணைத்துக்கொள்கிறார்.

'என்னைக் கண்டவர் என் தந்தையைக் கண்டார்' என்று தந்தையோடு உள்ள உறவில் இணைந்திருக்கும் இயேசு, 'என் திருச்சபையைத்துன்புறுத்தினால் அது என்னைத் துன்புறுத்துவது' என்று தன் தன் திருச்சபையோடு தன்னை இணைத்துக்கொள்கின்றார்.

எல்லாவற்றையும் இணைத்துப் பார்ப்பவனே ஞானி என்கிறது தாவோயிஸ மரபு. ஆகையால்தான், அது, 'நீ உன் வலது கை சுண்டுவிரலை அசைக்கும் போது எங்கோ இருக்கும் ஒரு நட்சத்திரத்தை அசைக்கிறாய்' என்கிறது.

பவுலின் மனமாற்றத்திற்குக் காரணம் இயேசுவின் இணைந்திருத்தல்தான் என்று நினைக்கிறேன். இயேசு இந்த இடத்தில் வேறு என்ன சொல்லியிருந்தாலும் பவுல் அதைப் பொருட்படுத்தியிருக்க மாட்டார். கடவுளும் திருச்சபையும் ஒன்று என்ற அளவிற்கு இறங்கி வந்துள்ள கடவுளின் நெருக்கமே அவரின் மனமாற்றதிற்குக் காரணமாக இருக்கிறது.

முதல் ஏற்பாட்டில் கடவுள் மக்களோடு உடன்படிக்கை செய்துகொண்டாலும், 'நாம் உங்கள் கடவுளாய் இருப்போம். நீங்கள் எம் மக்களாய் இருப்பீர்கள்' என்றுதான் சொல்கிறாரே தவிர, 'நானும் நீங்களும் ஒன்று' என்றோ, எகிப்தில் பார்வோனிடம் போய், 'நீ என்னைத் துன்புறுத்துகிறாய்' என்றோ சொல்லவில்லை. இரண்டாம் ஏற்பாட்டில்தான் நெருக்கம் பிறக்கிறது. 'கடவுள் நம்மோடு' என்று இறங்கி வந்த இயேசு 'நாமே கடவுள்' என்ற நிலைக்கு நம்மை உயர்த்திவிடுகிறார். அவர் நம்மோடு இணைந்ததால் அவரின் தரம் குறையவில்லை. மாறாக, நம் தரம் உயர்ந்தது. இதுவே வாழ்வு. இதுவே மீட்பு.

ஆக, இது மிகப்பெரிய பொறுப்புணர்வை நமக்குத் தருகிறது.

நான் கடவுள் நிலையில் இருக்கிறேனா? அவரைப் போல பார்க்கிறேனா? ஏன்ற கேள்வியே அப்பொறுப்பு.


1 comment:

  1. " இணைந்திருத்தல்"..... தன்னிலேயே அழகானதொரு வார்த்தை."என்னைக்கண்டவர் என் தந்தையைக்கண்டார்" எனறு தனக்கு மேலே உள்ள தந்தையிடமட்டுமின்றி, " என் திருச்சபையைத் துன்புறுத்தினால் அது என்னைத் துன்புறுத்துவது" என்று தனக்குக் கீழேயுள்ள திருச்சபையோடும் தன்னையும் இணைத்துக்கொள்கிறார் இயேசு.வாய் வார்த்தைகள் செய்யாத பவுலின் மனமாற்றத்தை கடவுளின் நெருக்கம் செய்துவிட்டது என்பது நெருக்கத்தின் வலிமை சொல்கிறது.அவர் நம்மில் இணைவதால் நம் தரம் உயர்கிறது என்பது உண்மையெனில் நான் யாருடன் இணைந்தால் 'அவர்களின்' தரம் உயரும் எனக்கண்டறிவோம்.கடவுள் நிலையில் இருப்பதும் சரி,அவரைப்போலப் பார்ப்பதும் சரி...இரண்டுமே பொறுப்புணர்வுதான்.
    " நீ உன் வலதுகை சுண்டுவிரலை அசைக்கும்போது எங்கோ இருக்கும் ஒரு நட்சத்திரத்தை அசைக்கிறாய்." அருமை! இப்படி தேடித்தேடி நன்முத்துக்கள் போன்ற விஷயங்களை அள்ளித்தரும் தந்தைக்கு என் நன்றிகளும்! வாழ்த்துக்களும்!!!.

    ReplyDelete