Monday, May 13, 2019

சீட்டுக் குலுக்கினார்கள்

இன்றைய (14 மே 2019) திருநாள் (புனித மத்தியா)

சீட்டுக் குலுக்கினார்கள்

இன்று நாம் திருத்தூதரான புனித மத்தியாவின் திருநாளைக் கொண்டாடுகிறோம். தம் சீடர்களிடமிருந்து இயேசு பன்னிரு திருத்தூதர்களைத் தேர்ந்தெடுக்கிறார். இப்பன்னிவருள் யூதாசு இஸ்காரியோத்து 'திருத்தொண்டையும் திருத்தூதுப்பணியையும் விட்டகன்று தனக்குரிய இடத்தை அடைந்து விட்டான்.' இந்த வெற்றிடத்தை அடைக்க மத்தியா வருகிறார்.

இவர் தேர்ந்தெடுக்கப்படும் விதம் ஆச்சர்யமாக இருக்கிறது. பர்சபா மற்றும் மத்தியா என்னும் இருவரைத் திருத்தூதர்கள்முன் மக்கள் கொண்டுவர, 'அந்த யூதாசுக்குப் பதிலாக யாரைத் தெரிந்தெடுக்க வேண்டும் என இந்த இருவருள் ஒருவரை எங்களுக்குக் காண்பியும்' என்று இறைவனிடம் வேண்டி, அவர்கள் சீட்டுக்குலுக்குகிறார்கள்.

சீட்டு மத்தியா பெயருக்கு விழுகின்றது. அதாவது, இறைவனின் திருவுளம் மத்தியாவைத் தெரிந்தெடுக்கிறது. இவ்வாறாக, பன்னிரு திருத்தூதர்கள் என்னும் எண்ணிக்கை நிறைவுபெறுகிறது. இதற்குப் பின் வந்த பவுலும் தன்னைப் புறவினத்தாரின் திருத்தூதர் என அழைத்துக்கொள்கிறார். அங்கே பவுலுக்கு அழைப்பு அவர் தாயின் கருவறையில் இருந்தபோதும், தமஸ்கு நகர் செல்லும்போதும், பர்னபா வழியாகவும் என மூன்று முறை நிகழ்கிறது.

இரண்டு விடயங்களை இன்று சிந்திப்போம்.

அ. யூதாசால் ஏற்பட்ட வெற்றிடம்

யூதாசு, 'திருத்தொண்டையும் திருத்தூதுப்பணியையும் விட்டகன்று தனக்குரிய இடத்தை அடைந்துவிட்டான்' எனப் பதிவு செய்கிறார் லூக்கா. இங்கே திருத்தூதர்கள் அல்லது அருள்பணி நிலைக்கு அழைக்கப்பட்டவர்கள் கொண்டிருக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்புணர்வை லூக்கா அடிக்கோடிடுகிறார். எப்படி?

யூதாசைப் பொறுத்தவரையில் 'தனக்கரிய இடம்' என்பது 'தற்கொலை செய்து கொண்டு இறப்பது.' அது எப்போது நடக்கிறது? வெறும் கயிற்றில் தொங்குவதாலா? இல்லை. திருத்தொண்டை, திருத்தூதுப்பணியை விட்டு அகலும் ஒவ்வொரு நொடியும் அது நடக்கிறது. அதாவது, தன் பணியைச் செய்ய வேண்டிய யூதாசு செய்யத் தவறுகிறார்.

இன்றைய நாளில் அருள்பணி நிலையில் இருக்கும் நான் கேட்க வேண்டிய கேள்வியும் இதுதான்: 'என் திருத்தொண்டையும் அருள்பணியையும் விட்டு அகல்கிறேனா?'

ஆ. மத்தியாவின் பெயருக்குச் சீட்டு

மத்தியா இதை தன் அதிர்ஷ்டம் என்று எடுத்தாரா அல்லது துரதிர்ஷ்டம் என நினைத்தாரா எனத் தெரியவில்லை. சீட்டு நம் பெயருக்கு விழுவது எல்லா நேரமும் நமக்கு மகிழ்வைத் தராது. பொங்கல் விழாவில் குலுக்கலில் பரிசு விழுந்து, நம் பெயரோ அல்லது நம் எண்ணோ தெரிவு செய்யப்பட்டு நமக்கு ஒரு கார் வழங்கப்பட்டால் அது மகிழ்வைத் தருகிறது. ஆனால், ஜெர்மானிய நாசி வதைமுகாமில், ஒருவரின் பெயருக்கு சீட்டு விழுந்து அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும்போது அது அவருக்குக் கண்டிப்பாக மகிழ்வைத் தராது.

மற்ற திருத்தூதர்களைப் பொறுத்தவரையில் இது இறைவனின் திருவுளம்.

ஆனால், மத்தியாதான் இதைத் தெரிவு செய்ய வேண்டும். 'இது பரிசுச் சீட்டா?' அல்லது 'மரணத்திற்கான நுழைவுச் சீட்டா?' முத்தியா இதைப் பரிசுச் சீட்டாகவே எண்ணியிருப்பார்.

நம் வாழ்வில் ஒவ்வொரு நிமிடமும் சீட்டு நம் பெயருக்கு விழுந்துகொண்டே இருக்கிறது.

அவசரமாக வெளியூர் செல்ல வேண்டும். திடீரென்று ஒரு கார் சவாரி கிடைக்கிறது. சீட்டு நம் பெயருக்கு விழுகிறது.

திடீரென உடல்நலம் சரியில்லாமல் போகிறது. நாம் பார்க்கும் மருத்துவர் அன்றுதான் நம் ஊருக்கு வருகிறார். சீட்டு நம் பெயருக்கு விழுகிறது.

பணத் தேவை இருக்கிறது. நாம் தற்செயலாக கைப்பையைத் திறக்க அதில் நாம் எப்போதோ மறந்து வைத்த பணம் இருக்கிறது. சீட்டு நம் பெயருக்கு விழுகிறது.

நிறையப் பேர் நம்முடன் வேலை செய்கிறார்கள். நமக்கு பணி உயர்வு கிடைக்கிறது. சீட்டு நம் பெயருக்கு விழுகிறது.

நம் பெண்ணுக்கு வரன் தேடுவோம். திடீரென்று ஒருவர் மணமகனாக வந்து சேர்வார். சீட்டு நம் பெயருக்கு விழுகிறது.

இப்படி, ஒவ்வொரு நாளும் சீட்டு நம் பெயருக்கு விழுகிறது. ஆனால், இதை நாம் 'பரிசுச் சீட்டாக' நினைத்து மகிழ்கிறோமா? அல்லது 'மரணச் சீட்டாக' நினைத்து வருந்துகிறோமா? என்பதுதான் கேள்வி.

சேர்ந்து செபிக்க வந்த மத்தியா திருத்தூதராக மாறுகிறார்.

சீட்டு அவர் பெயருக்கு விழுந்தது.

எதிர்பாராத அற்புதங்களில் ஆச்சர்யங்களில் சீட்டு நம் பெயருக்கும் விழுகிறது. இதை அறிதல் நலம்!


2 comments:

  1. 🙏
    இறைவன் நம் பெயரில் விழச்செய்யும் அனைத்து சீட்டும் " பரிசு சீட்டே" என ஏற்றுவாழும் அருளை தா....என இறையை இறைஞ்ச பணித்த அருட்பணி யேசு லுக்கு, ஆத்மார்த்தமான நன்றிகள்.🙏

    ReplyDelete
  2. மிகவும் சீரியஸான இரு விடயங்கள் குறித்துப்பேசுகிறார் தந்தை. முதல் விடயம் ‘அருட்பணியாளர்களை’ மட்டுமே குறி வைப்பது போல் தோன்றிடினும் திருமுழுக்கின் வழியாக பொதுக்குருத்துவத்தில் சேர்ந்த அனைவருக்குமே உரியதே!ஒவ்வொரு முறையும் இறைபாதையில் இருந்து விலகி,நம் சகோதரனுக்கு எதிரான வரிசையில் நிற்கையில் நாமும் கூட நம் அருள்நிலையை விட்டு விலகி ‘ நமக்குரிய’ இடத்தை’ நாமே தேர்வு செய்கிறோம். நமக்குக் குறிக்கப்பட்ட இடத்தில் நிற்கிறோமா இல்லை விலகி நிற்கிறோமா? யோசிக்க அழைக்கப்படுகிறோம். இரண்டாவதாக வரும் நம் பெயருக்குச்சீட்டு விழும் நேரம்..... ஒன்றா..இரண்டா? எத்தனை ஆயிரம் முறைகள்.... சிலமுறை நாம் கேட்டும், பலமுறை நாம் கேட்காமலும் விழுகிறது. நாம் தான் உணர்வதில்லை. தந்தை சொல்கிறார்....” எதிர்பாராத அற்புதங்களில்...ஆச்சரியங்களில்....சீட்டு நம் பெயருக்கும் விழுகிறது. இதை அறிதல் நலம்”.ஒரு ஆங்கிலப்பாடலின் வரிகள் நினைவிற்கு வருகிறது.
    “Count your blessings; name them one by one
    And it’ll surprise u what The Lord has done.”
    விதவிதமான பரிசுச் சீட்டுக்களைப் பட்டியலிட்டு நம்மை அழகானதொரு ஆத்தும சோதனைக்கு இட்டுச்சென்ற தந்தையை இறைவன் ஆசீர்வதிப்பாராக!

    ReplyDelete