Thursday, May 30, 2019

சந்திப்பு

இன்றைய (31 மே 2019) திருநாள்

சந்திப்பு

இன்று மரியாள் எலிசபெத்தைச் சந்தித்த நிகழ்வின் விழாவைக் கொண்டாடி மகிழ்கிறோம்.

மே 31 - ஆசிரியப் பணி, படிப்பு என இருப்பவர்களுக்கு பிடிக்காத நாள் மே 31. ஏனெனில், அடுத்த நாளிலிருந்து புதிய கல்வி ஆண்டு தொடங்கிவிடும். பள்ளி, கல்லூரிகள், மேற்படிப்பு நிறுவனங்கள் என அனைத்தும் தங்கள் கல்வி ஆண்டை ஜூன் முதல் வாரத்தில் தொடங்குகின்றன. விடுமுறையை நிறைவு செய்யும் நாளே இது. விடுமுறையை விட்டு வேலைக்கு அல்லது படிப்புக்கு கடந்து செல்வதன் கடினத்தை உணர்கின்ற சில பள்ளிகள் (இத்தாலியில்) விடுமுறைக்குப் பின், 'விடுமுறையிலிருந்து பள்ளிக்கு மாறும் பருவம்' என ஒரு வாரத்தை அறிவித்து விடுமுறையின் அனுபவங்களை மறக்கவும், புதிய கல்வி ஆண்டிற்குக் குழந்தைகளைப் பயிற்றுவிக்கவும் செய்கிறார்கள்.

நம் நாட்டில் ஜூன் 1-ல்தான் பங்கின் செயல்பாடுகள் ஆண்டும் தொடங்குகிறது. புதிய பங்குத்தந்தை, புதிய உதவிப் பங்குத்தந்தை என புதியவர்கள் அறிமுகம் ஆவதும் இன்றிலிருந்துதான்.

ஆக, மாற்றத்தை அறிவிக்கின்ற நாளாக இருக்கின்றது மே 31.

மரியாள் எலிசபெத்தைச் சந்தித்த நிகழ்விலும் மாற்றம் அறிவிக்கப்படுகிறது. இளவல் ஒருத்தி தான் கருத்தாங்கியிருப்பதை அறிவிக்க, கருத்தாங்கியிருக்கும் முதியவள் ஒருவரை நாடிச் செல்கின்றாள். 'நானுந்தான், நானுந்தான்' என்று இருவரும் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்கின்றனர். விளைவு - குழந்தைகள் மகிழ்கின்றன வயிற்றில்.

மனித முகங்கள் ஆச்சர்யமானவை. அவை சந்திக்கப்பட வேண்டும். ஒவ்வொரு முகமும் நமக்கு கடவுளின் முகத்தையே காட்டுகிறது.

'உன்னை யாரும் பார்க்கவில்லை என்றால், உன்னை எல்லாரும் மறந்துவிடுவார்கள்' என்பது இரஷ்ய நாவல் ஒன்றில் வரும் வரி. ஆகையால்தான், நீண்ட காலம் பார்க்காத ஒருவரிடம், 'நீ என்னை மறந்துவிட்டாய்' என்கிறோம்.

இன்று காணொளி அழைப்புக்கள் இந்தப் பார்த்தலை நமக்கு மிகவும் எளிதாக்கிவிட்டன. நினைத்தவுடன், நினைத்தவரை கண்முன் பார்த்துவிட முடிகிறது. ஆனாலும், இக்காணுதலில் குறை இருக்கவே செய்கிறது.

மரியாவைப் போல விரைந்து சந்தித்து வாழ்த்துக்களைப் பரிமாறி, அடுத்தவரின் தேவையில் உடனிருக்க நம்மை அழைக்கிறது இத்திருநாள்.

ஆக, புதிய கல்வி ஆண்டு, புதிய இடம், புதிய படிப்பு, புதிய பணி என்னும் கவலை வேண்டாம். எங்கும் இனிய சந்திப்புக்கள் சாத்தியமாகும்.


2 comments:

  1. பிறக்கவிருக்கும் ஜூன் மாதம் நமக்குக் கொண்டுவரவிருக்கும் மாற்றங்கள் பற்றிக்கூறும் தந்தை, மரியாள் எலிசபெத்தை சந்தித்த நிகழ்விலும் மாற்றம் அறிவிக்கப்படுகிறது என்கிறார்.”இளவல் ஒருத்தி தான் கருத்தாங்கியிருப்பதை அறிவிக்க.......குழந்தைகள் மகிழ்கின்றன வயிற்றில்.” இந்நிகழ்வை மனமுருக விளக்கும் தந்தை இந்நாளின் காணொளி அழைப்புகள் பற்றியும் பேசுகிறார்.அங்கே அழைப்பு மட்டுமே உண்மையாயிருக்குமே யொழிய மற்றதெல்லாம் செயற்கையாயிருக்க வாய்ப்புண்டு. நேருக்கு நேர் உதிர்க்கும் இன்றைய சிரிப்பில் கூட ‘ப்ளாஸ்டிக் ஸ்மைல்’ என்று ஒருவகை இருப்பதாக்க் கூறுகிறார்கள்.இந்நிலையில் நமக்கு உணர்த்தப்படும் இன்றைய சந்திப்பு? புனித பூமிக்கு போய்வந்தவர்களுக்குத் தெரியும் மரியாளும்,எலிசபெத்தும் வசித்த ஊர்களுக்கு இடையேயுள்ள தூரம்.இந்நிலையில் வயிற்றில் பாரத்துடன், தன் உடம்பு முழுவதையும் உபாதைக்குள்ளாக்கி,கரடுமுரடான சிற்றூர்களைக்கடந்து, நடைபயணமாக எலிசபெத்தைப் பார்ப்பதற்காக மட்டுமின்றி,அவர்களுடன் சில மாதங்கள் தங்கி
    அவர்களுக்கு உதவ வேண்டுமென முடிவெடுத்த நல்ல மனம் இன்றைய காலத்து இளவல்களுக்கு இருக்குமாவெனில் பதில் ‘ இல்லை’ என்றே வரும்.ஆம்! மரியாவைப்போல் விரைந்து சந்தித்து வாழ்த்துக்களைப்பரிமாறி,அடுத்தவரின் தேவையில் உடனிருக்க நாமும் அழைக்கப்படுகிறோம் என்பதை அழகுறச் சொல்கிறது இன்றைய பதிவு.அதே நேரத்தில் “ மாற்றங்கள் கண்டு மருள வேண்டாம்” எனும் தந்தையின் குரலுக்கும் செவிமடுப்போம்.ஏனெனில் எங்கு வேண்டுமானாலும் சந்திப்புகள் சாத்தியமாகும் என ஓங்கி ஒலிக்கிறது அவர் குரல்.
    அந்த “‘நானுந்தான்,நானுந்தான்’ என்று இருவரும் வாழ்த்துக்களைப்பரிமாறிக்கொள்கின்றனர்.விளைவு- குழைந்தைகள் மகிழ்கின்றன வயிற்றில்.”.... தந்தையின் கவித்துவமிக்க வரிகள் மகிழ்ச்சியால் மனத்தை நிறைக்கின்றன. வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete