Tuesday, May 21, 2019

சுமை

இன்றைய (22 மே 2019) முதல் வாசகம் (திப 15:1-6)

சுமை

'பிரச்சினை என்பது தயிர் போல. அதை உடனடியாகக் கவனிக்க வேண்டும். அதை அப்படியே விட்டுவைத்தால் அதன் புளிப்பு கூடிக்கொண்டே போகும்' 

பிரச்சினைகளை இப்படிக் கையாளுபவர்கள் சிலர்.

'பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழி நேரம். நேரம் ஆக ஆக பிரச்சினைகள் தங்களையே தீர்த்துக்கொள்ளும். ஆறப்போட்டால் மாற்றம் பிறக்கும்.'

பிரச்சினைகளை இப்படிக் கையாளுபவர்கள் சிலர்.

இன்றைய முதல் வாசகத்தில் நம்பிக்கையாளர்கள் ஒரு பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். புதிய நம்பிக்கையை எற்றுக்கொண்ட புறவனித்தார், யூதர்கள் போல விருத்தசேதனம் செய்துகொள்ளவேண்டும். அதாவது, ஒருவர் யூதராக மாறினால்தான் கிறிஸ்தவராக மாற முடியும் என்ற ஒரு நிபந்தனை விதிக்கப்படுகிறது. 

இதைச் சொன்னவர்களுக்கும் பவுலும் பர்னபாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவாகிறது. ஏனெனில், பவுலுக்கும் பர்னபாவுக்கும் இதில் உடன்பாடு இல்லை. இவர்கள் இருவருமே தாராள உள்ளத்தினர். தங்களுடைய பார்வையை விரித்துப் பார்ப்பவர்கள். ஆக, உடலின் ஒரு உறுப்புச் சிதைவு இவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.

வாழ்வில் நாம் இப்படி இருந்தால் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும். 'இதுல என்ன இருக்கு!' என்று கேட்கின்றனர் பவுலும் பர்னபாவும்.

குழப்பம் நீடிக்கவே உடனடியாக அவர்கள் எருசலேம் பயணம் செய்து இப்பிரச்சினையை திருத்தூதர்கள் மற்றும் மூப்பர்களிடம் கொண்டு செல்கின்றனர். அதாவது, தங்கள் வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு இப்பிரச்சினையைத் தீர்க்க நேரம் எடுத்து, சிரமம் எடுத்துப் புறப்பட்டுச் செல்கிறார்கள். ஆக, தாங்களாகவே தீர்த்தாலன்றி பிரச்சினை தீராது என்பது ஒரு பக்கம். அதே வேளையில், தாங்கள் விரும்பும் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதால் பிரச்சினையை உடடினயாக தங்களைவிட மேலிடத்திற்குக் கொண்டு செல்கிறார்கள்.

இங்கே இவர்களுடைய பெருந்தன்மையையும் கவனிக்க வேண்டும். 'நான்தான் நற்செய்தி அறிவித்தேன். நான்தான் புதிய நம்பிக்கையை ஊட்டினேன். எனவே நான்தான் இவர்களின் தலைவர்' என்று உரிமை கொண்டாடாமல், தங்கள் பணியிலிருக்கும் பலனிலிருந்து ஒதுங்கி நிற்கின்றனர். நற்செய்தி அறிவித்தலில் உள்ள கடமையைச் செய்தார்களே தவிர, அதில் உள்ள உரிமையைக் கொண்டாடவில்லை.

பிரச்சினை உடனடியாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

தங்கள் நம்பிக்கையாளர்கள் தேவையற்ற பிரச்சினைகள் என்னும் சுமைகளைச் சுமக்கக் கூடாது என்பதற்காக, சுமைகளைச் சுமக்க திருத்தூதர்கள் முன்வருகிறார்கள்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 15:1-8), திராட்சைக் கொடி - கிளை உருவகம் தருகிறார் இயேசு. தன்மேல் ஒட்டிக்கொண்டிருக்கும் கிளையை சுமையாகப் பார்ப்பதில்லை கொடி. 

ஆக, இன்று நம் வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நாம் எப்படி கையாளுகிறோம்?

பிரச்சினை மற்றவர்களுக்கு என்று நினைக்கும்போது அதை ஏற்கும் பொறுப்புணர்வு நமக்கு இருக்கிறதா?

1 comment:

  1. தங்கள் நம்பிக்கையாளர்கள் தேவையற்ற பிரச்சனைகள் எனும் சுமைகளை சுமக்கக்கூடாது என்பதற்காக,சுமைகளை சுமக்க திருத்தூதர்கள் முன்வருகிறார்கள் என்கிறது இன்றையப்பதிவு. திருத்தூதர்களின் தீர்வு சரியாக இருக்கும் பட்சத்தில் சரி..இலையெனில் வீண்பழியை அவர்கள் சுமக்கவும் தயாராக இருக்கவேண்டும் என்பது திருத்தூதர்களுக்குக் கூடுதல். சுமைதானே! இதையும் அவர்கள், சுமையாகப் பார்ப்பதில்லை.... தான் சுமந்திருக்கும் கிளைகளை சுமையாக நினைக்காத திராட்சைக்கொடி போல என்கிறது இன்றைய வாசகம்.நாமாகவே வரவழைக்கும் பிரச்சனைகள் ஒருபுறம்...அழைப்பு இல்லாமலே நம்மை நோக்கிப்படையெடுக்கும் பிரச்சனைகள் மறுபுறம்... இப்படி பிரச்சனைகள் பல ரகம். .பிரச்சனைகளைக் கண்டுகொள்ளாமல் இருந்தாலே அவை காலப்போக்கில் காணாமல் போய்விடும். என்பதும் உண்மை.ஆனால் நம்மை அடுத்தவர்களுக்கு வரும் பிரச்சனைகளை நமதாக ஏற்று தீர்வு காணும் நல்ல உள்ளம் கொண்டோர் எத்தனை பேர்? நாமும் அவர்களில் ஒருவராக இருப்பின் எத்துணை சுகம்! வாழ்க்கையில் நாம் சந்திக்கும் அன்றாட விஷயங்களைக் கருப்பொருளாக்கி பதிவாகத்தரும் தந்தைக்கு ஒரு சபாஷ்!

    ReplyDelete