Thursday, May 2, 2019

மூன்று முகங்கள்

இன்றைய (3 மே 2019) நற்செய்தி (யோவா 14:6-14)

மூன்று முகங்கள்

இன்று திருத்தூதர்களான பிலிப்பு மற்றும் சின்ன யாக்கோபின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

திருத்தூதர் பிலிப்பை நாம் யோவான் நற்செய்தியில் மூன்று இடங்களில் சந்திக்கின்றோம்:

அ. 'என்னைப் பின்பற்றி வா!' (யோவா 1:43)

பிலிப்பு யோவானின் நண்பர். கலிலேயாவுக்குச் செல்ல விரும்பும் இயேசு, பிலிப்பைக் கண்டு, 'என்னைப் பின்தொடர்ந்து வா!' என்று கூறுகின்றார். இயேசுவை உடனடியாக பின்பற்றிய பிலிப்பு, தான் இயேசுவைப் பின்பற்றியதோடு, நத்தனியேலையும் இயேசுவிடம் அழைத்து வருகின்றார்.

பிலிப்பின் இந்த முகம் இயேசுவைப் பின்பற்றுவதற்கு எப்போதும் தயார்நிலையில் இருக்கிறது.

ஆ. 'ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே' (யோவா 6:7)

இயேசு அப்பங்களைப் பகிரும் நிகழ்வில், 'இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?' என்று இயேசு பிலிப்பைக் கேட்க, பிலிப்பு, 'இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே' என்று பதில் தருகின்றார்.

பிலிப்பின் இந்த முகம் கணக்குப் பார்க்கிறது.

இ. 'தந்தையை எங்களுக்குக் காட்டும். அதுவே போதும்'

தன்னுடைய சீடர்களின் காலடிகளைக் கழுவிவிட்டுப் பந்தியில் அமர்ந்திருக்கும் இயேசு, அவர்களோடு உரையாடுகின்றார். அந்த உரையாடலில், 'ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும். அதுவே போதும்' என்கிறார் பிலிப்பு. இயேசுவும், 'பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். அப்படியிருக்க, 'தந்தையை எங்களுக்குக் காட்டும்' என்று நீ எப்படிக் கேட்கலாம்?' என்கிறார்.

பிலிப்பின் இந்த முகம் பொறுமையிழக்கிறது.

இவ்வாறாக, ஒரே நேரத்தில் இயேசுவைப் பின்பற்றுபவராகவும், அப்பங்களைக் கணக்குப் பார்க்கிறவராகவும், 'இதுவே போதும்' என்றும் பொறுமை இழக்கிறார்.

நம்மிலும் இந்த மூன்று முகங்கள் உண்டு.

முதல் முகம் சரணாகதி அடையும். இரண்டாம் முகம் அரைகுறை மனத்துடன் இருக்கும். மூன்றாம் முகம் தயக்கம் காட்டும்.

முதல் முகமே நம் முழு முகமாய் இருத்தல் எத்துணை நலம்.

அந்த முகத்தையே தன் இறுதி முகமாக்கிக் கொண்டார் பிலிப்பு. ஆகையால்தான், இறப்பிலும் இயேசுவைப் பின்தொடர்கின்றார்.

2 comments:

  1. 'பிலிப்பு'..... நத்தானியேல்,அத்திமரம் என்ற சொற்கள் நம் செவிகளில் விழுகையில் நமக்குத் தெரிவது பிலிப்பின் முகமே! இவருக்கு மூன்று முகங்கள் இருப்பதாகத் கூறும் தந்தை, அந்த முகங்களுக்கான இயல்பு பற்றியும் கூறுகிறார்.அவர் ஒரே நேரத்தில் இயேசுவைப்பின்பற்றுபவராகவும்,அப்பங்களைக் கணக்குப்பார்க்கிறவராகவும், ' இதுவே போதும்' என்று பொறுமை இழப்பபராகவும் காட்டப்படுகிறார். இயேசுவே தன் இறைமுகத்தையும்,மனிதமுகத்தையும் மாறி,மாறிக் காட்டி வாழ்ந்தவர்தானே! அப்படி இருக்க மனிதன் எம்மாத்திரம்? ஒரு மனிதனின் இயல்பு அவனுடைய அப்போதைய மனநிலை, சுற்றியிருப்பவர்கள் அவன் மேல் செலுத்தும் ஆதிக்கம்( influence) இத்தனையையும் பொறுத்து மாறத்தானே செய்யும்? சரணாகதி அடையும் முதல் முகம் மட்டுமே நமக்கு இருப்பின் நல்ல விஷயமே! ஆனால் மனித இயல்பில் அது சாத்தியமா தெரியவில்லை.ஆயினும் 'முயற்சித்தால் முடியாதது ஒன்றில்லை'என்று காட்டும் பிலிப்பு நமக்கொரு பாடமாக அமைவாராக! "அவரிடம் சரணாகதி அடைவோம்; இறப்பிலும் இயேசுவைப்பின் தொடர்வோம்" நல்லதொரு மனிதனைப்பற்றிய அழகானதொரு பதிவிற்காகத் தந்தையைப் பாராட்டுதல் தகும்!!!

    ReplyDelete
    Replies
    1. பல நேரங்களில் முகங்கள் மாறுவது மனித இயல்பு... ஆனால் என் நிலையான முகம் எது என்று சிந்திக்க உதவியது உங்கள் பதிவு... நன்றி தந்தையே

      Delete