Sunday, May 19, 2019

தெய்வங்களே மனித உருவில்

இன்றைய (20 மே 2019) முதல் வாசகம் (திப 14:5-18)

தெய்வங்களே மனித உருவில்

'கோவிலில் ஆடு, கோழி பலியிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது' என்று தமிழகத்தில் ஒரு சட்டம் இருந்தாலும், இன்னும் கோவில்கள் இவற்றைப் பலியிடுவது நடைபெற்றுக்கொண்டேதான் இருக்கிறது. இன்று காலை 'மதுரை பாண்டி கோயில்' பகுதியில் ஒரு பெரிய கிடாயைப் பலியிட்டு அதன் இரத்தம் வடிய வடிய சாலையில் கொண்டு சென்றனர். சிறு வயதில் எங்க ஊர் அம்மன் கோவில் திருவிழாவில் ஆடு, கோழி பலியிடும் நிகழ்வை நேருக்கு நேர் பார்த்திருக்கிறேன். அம்மன் என்ற தெய்வத்திற்கே இவர்கள் பலியிடுகிறார்கள். பலியிடப்பட்டதை அம்மன் சாப்பிடுவதில்லை என்றாலும், இவர்கள் அம்மன் முன்பாக பலியிடும் அப்பொருள் அம்மனுக்கே படைக்கப்பட்டதாக நம்புகின்றனர்.

பலி ஏன் கொடுக்கப்படுகிறது?

தன்னிடம் உயிரோடு இருந்த ஓர் ஆட்டின் மதிப்பை பக்தர் அம்மன் முன் இழக்கின்றார். அதாவது, தாழ்வானது ஒன்றை இழந்து மேலானதைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது அவருடைய இலக்காக இருக்கிறது.

மேலும், பலி நன்றியின் அடையாளமாகவும் செலுத்தப்படுகிறது - ஒருவர் பெற்றுக்கொண்ட ஒரு கொடைக்காக.

இன்றைய முதல் வாசகத்தில் இக்கோனியா என்ற ஊரிலிருந்து துரத்தப்படுகின்ற பவுலும் பர்னபாவும் லிஸ்திராவுக்கு வருகின்றனர். வந்த இடத்தில் கால் வழங்காத ஒருவர் இருக்கிறார். அவரிடம் நலம் பெறுவதற்கான நம்பிக்கை இருப்பதைக் கண்டு பவுல் அவரை உற்றுப் பார்த்து உரத்த குரலில், 'நீர் எழுந்து காலூன்றி நேராக நில்லும்!' நிற்கச் சொன்னவர் துள்ளி எழுந்து நடக்கத் தொடங்குகிறார். பவுல் செய்ததைக் கண்ட கூட்டத்தினர் தங்கள் மொழியில், 'தெய்வங்கள் மனித உருவில் நம்மிடம் இறங்கி வந்திருக்கின்றன' என்று சொல்லி, பர்னபாவை 'சேயுசு' கடவுள் என்றும், பவுலை 'எர்மேசு' கடவுள் ('பேச்சுக்கலையின் கடவுள்') என்றும் அழைத்தனர். மேலும், சேயுசு கோயில் அர்ச்சகர் காளைகளையும் பூமாலைகளையும் கொண்டு வந்து அவர்களுக்குப் பலியிட விரும்பினர்.

திருத்தூதர்கள் உடனடியாக குறுக்கிட்டு, 'நாங்களும் மனிதர்களே' என்றே சொல்லி அவர்களுக்கு மனமாற்றத்தின் செய்தியை அறிவிக்கின்றனர்.

திருத்தூதர்களின் ஒரு நல்ல பண்பை இங்கே பார்க்கிறோம். அதாவது, மக்கள் தங்களைப் புகழ்ந்து பேசியதாலும், தங்களைக் கடவுளுக்கு நிகர் என்று கருதியதாலும் மகிழ்ச்சி அடையவில்லை. மாறாக, மக்களைக் கடிந்துகொள்கின்றனர். திருத்தூதுப்பணிக்கு பெரிய சவால் 'புகழ்ச்சி.'

திருத்தூதர்கள் மக்களின் மனநிலையை நன்கு அறிந்தவர்கள்.

ஏனெனில், தெய்வங்கள் என்று வணங்கிய மக்கள் கொஞ்ச நேரத்தில் திருத்தூதர்கள்மேல் கல்லெறியத் துணிகின்றனர். அவர்கள் இறந்துவிட்டார்கள் என நினைக்கும் அளவிற்குக் கல்லால் எறிகின்றனர்.

'கூட்ட மனநிலை' என்பது இதுதான். எந்த நேரத்தில் கூட்டம் எப்படி மாறும் என்றே சொல்ல முடியாது.

ஆனால், திருத்தூதர்கள் மனநிலை ஒன்றுபோல இருக்கிறது.

கல்லால் எறியப்பட்ட பவுல் ஓய்ந்துவிடவில்லை. எழுந்து நகருக்குள் செல்கின்றார்.

எந்த அளவிற்கு அவர்கள் கிறிஸ்து அனுபவத்தால் பற்றி எரிந்திருக்கிறார்கள்!

அகநானூhற்றில் காதலின்-காதலி படலத்தில், காதலியின் மேல் கொண்ட காதலுக்காக காதலன் எந்தவித அவமானத்தையும் ஏற்பான் என்பதற்கு நிறைய எடுத்துக்காட்டுக்கள் உண்டு. நம் விவிலியத்தின் இனிமைமிகு பாடலிலும், 'பெருங்கடலும் அன்பை அணைக்க முடியாது. வெள்ளப்பெருக்கும் அதை மூழ்கடிக்க இயலாது. அன்புக்காக ஒருவன் தன் வீட்டுச் செல்வங்களை எல்லாம் வாரியிறைக்கலாம். ஆயினும், அவன் ஏளனம் செய்யப்படுவது உறுதி' (காண். 8:2) என்று இருக்கிறது. அன்பு அவமானத்தையும் ஏற்றுக்கொள்ள உறுதி தருகிறது.

கிறிஸ்துவின்மேல் கொண்ட அன்பிற்காய் திருத்தூதர்கள் அவமானத்தையும் இன்முகத்தோடு ஏற்றுக்கொள்கிறார்கள்.

ஆக, நம் நிலை என்ன என்பதை அறிந்து, போற்றலையும் தூற்றலையும் மையப்படுத்தாத சமமான மனநிலை நாம் கொண்டிருந்தால் எத்துணை நலம்!

2 comments:

  1. தந்தை விரும்புகின்ற சமமான மனநிலையை தாங்கி என்றும் செயல்பட ,நித்தமும் இறையை இறைஞ்சுவோம்... தந்தையின் வழிநின்று....

    ReplyDelete
  2. “ வாழ்ந்தாலும் ஏசும்; தாழ்ந்தாலும் ஏசும்.வையகம் இதுதானடா...”:பாடலை நினைவு படுத்துகிறது இன்றையப்பதிவு.போற்றுவார் போற்றிடினும்,தூற்றுவார் தூற்றிடினும் நாங்கள் இப்படித்தான் என்று தன்னையும், தன்னைச் சேர்ந்தவர்களையும் கிறிஸ்துவின் மேல் கொண்ட அன்பிற்காய் சரியான பாதையில் நடத்திச் சென்ற பவுல் நாம் எவ்வழியைத்தேர்வு செய்ய வேண்டுமென்பதற்கு வழிகாட்டியாய் இருப்பாராக! நம்முடைய பார்வை சரியாக இருப்பின்,பாதையும் சரியாகவே இருக்கும் என்பது நம் திருத்தூதர்கள் நமக்கு சொல்லித்தரும் பாடம். காவியக்காதலை காரியத்தில் காட்ட அவமானத்தை சந்திப்பதில் தப்பில்லை எனும் பொருள்படும் விவிலியத்தின் இனிமைமிகு பாடலின் வரிகள் அருமை. வாழ்வின் ஏற்றங்கள் மற்றும் இறக்கங்கள் நம்மைத்தடுமாறச் செய்யாத சம்மான மனநிலையை நோக்கி நாம் பயணிக்க அழைப்பு விடுக்கிறது இன்றையப் பதிவு. காரணி தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete