Friday, May 10, 2019

தொற்கா

இன்றைய (11 மே 2019) முதல் வாசகம் (திப 9:31-42)

தொற்கா

நாவலாசிரியர் பவுலோ கோயலோ தன் தந்தையின் இறப்பு பற்றி ஒரு நிகழ்வைப் பதிவு செய்கிறார். தன் தந்தை தான் இறந்தவுடன் தான் எரிக்கப்பட விரும்புவதாகவும், எரித்தபின் கிடைக்கும் சாம்பலை கடற்கரை ஒன்றில் தூவி விட வேண்டும் என்றும், அப்படித் தூவுவும்போது அவருக்குப் பிடித்த பாடல் ஒன்றை டேப் ரெக்கார்டரில் ஒலிக்கவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றார். சில நாள்களில் தந்தை இறக்கின்றார். உடலை எரித்து சாம்பலை ஒரு குடுவையில் பெற்றுக்கொண்டனர் வீட்டார். குறிப்பிட்ட நாள் அன்று, சாம்பல், டேப் ரெக்கார்டர் என்று அவர்கள் ஒரு கடற்கரைக்குச் சென்றனர். அது தூரமான கடற்கரை. மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாக இருக்கும். இவர்கள் சென்று இறங்கும் நேரம் ஏறக்குறைய நண்பகல். கடற்கரையில் யாரும் இல்லை. வுண்டியை நிறுத்திவிட்டு, டேப் ரெக்கார்டரை எடுத்து வைத்து, குடுவையைத் திறக்கின்றனர். மேல் மூடி திறந்தாயிற்று. திறந்து பார்த்தால் உள்ளே இன்னொரு குடுவையில் ஸ்க்ரூ ஒன்று டைட்டாக அறையப்பட்டிருக்கிறது. ஸ்க்ரூ டிரைவர் இருந்தால் மட்டுமே அதைத் திறக்க முடியும். வண்டியில் ஏதாவது ஸ்க்ரூ டிரைவர் இருக்கிறதா என்று தேடுகின்றனர். இல்லை. இனி ஊருக்குச் சென்று ஸ்க்ரூ டிரைவர் எடுக்க வேண்டுமென்றால் இன்னும் 3 மணி நேரங்கள் பயணம் செய்ய வேண்டும். 'என்ன செய்வது?' என்று யோசித்துக் கொண்டிருந்த நேரம் அந்தப் பக்கம் ஒரு பிச்சைக்காரர் வருகின்றார். வந்தவர், கையில் ஒரு ஸ்க்ரூ டிரைவர் வைத்திருந்தார். அவர் இவர்களிடம், 'இது உங்களுக்குப் பயன்படுமா என்று பாருங்கள். இறந்தவர் உண்மையிலேயே புண்ணியவான். சில நிமிடங்களுக்கு முன்தான் நான் இதைக் கீழே கிடந்து எடுத்தேன்' என்று சொல்லி, ஸ்க்ரூ டிரைவரைக் கொடுத்துவிட்டு வழிநடக்கின்றார்.

நிற்க.

இது எப்படி?  

இதுதான் அற்புதம்.

இதை ஒரு எதேச்சையான நிகழ்வு என்றும் பார்க்கலாம். அற்புதம் என்றும் பார்க்கலாம்.

மகாபாரதம் இதை 'காஸ்மிக் தர்மா' என்று அழைக்கிறது. பாஞ்சாலியின் ஆடை உரியப்படும் நிகழ்வில் அவருடைய ஆடை தொடர்ந்து வளர்ந்துகொண்டே வரும். கண்ணனின் அருளால் சேலை வளரும் என்று சில பிரதிகளில் மட்டுமே உள்ளது. சில பாடங்களில் தானாகவே உரிவதாகவே உள்ளது. இதுதான் காஸ்மிக் தர்மம். அதாவது, நம் ஒழுங்காய் இருக்கும்போது பிரபஞ்சத்தின் ஒழுங்கு நம்மைப் பாதுகாக்கும். ஏனெனில், நாம் பிரபஞ்சித்தின் ஒழுங்கின் ஒரு பகுதியே.

இன்றைய முதல் வாசகத்தில் பேதுரு தற்செயலாக யோப்பாவிற்கு வருகின்றார். அந்த நேரத்தில் தபித்தா என்ற பெண் - தொற்கா (பெண்மான்) என்பது இவருடைய செல்லப் பெயர் - இறக்கின்றார். பேதுருவிடம் அறிவிக்கப்படுகிறது. பேதுரு இறைவேண்டல் செய்கிறார். உடனடியாக அற்புதம் நடக்கிறது. இறந்தவர் உயிர் பெறுகின்றார்.

தபித்தா என்ற கைம்பெண் செய்த நற்காரியங்கள் அந்த ஊர் மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. நற்காரியங்கள் பிரபஞ்சத்தின் தர்மத்தோடு சேர்ந்துகொண்டு நம்மைத் தாங்குகின்றன.

இதையே, 'தர்மம் தலைகாக்கும்' என்கிறது நம் மண்ணின் ஞானம்.

ஆக, நாம் செய்கின்ற நற்காரியங்கள் - நற்காரியங்களுக்காகவே - செய்யப்படட்டும். அப்போது பிரபஞ்சத்தின் தர்மம் நம்மைக் காக்கும்.

அற்புதங்கள் தற்செயல் நிகழ்வுகளே.

ஆனால், தற்செயல் நிகழ்வுகளிலேயே அற்புதங்கள் நடக்கும்.  


1 comment:

  1. வாழ்வியலின் ஒரு உண்மையை விளக்கத் தந்தை நாவலாசிரியர் பவுலோ கோயலோவின் இறப்பிற்குப் பின் நடந்த நிகழ்வை நினைவு கூறுகிறார்."நாம் ஒழுங்காய் இருக்கும் போது பிரபஞ்சத்தின் ஒழுங்கு நம்மைப்பாதுகாக்கும். ஏனெனில் நாம் பிரபஞ்சத்தின் ஒழுங்கின் ஒரு பகுதியே!".... இதற்குப்பெயர்தான் ' காஸ்மிக் தர்மா'" .....தந்தையின் செய்தி.இது பேதுரு போன்றவர்களுக்கு நடந்தது போல் ஏன் எல்லோருக்கும் நடப்பதில்லை எனும் கேள்வியும் கூடவே எழுகிறது. ஆனாலும் நடக்கும் நல்ல காரியம் யார் வழியாக நடப்பினும் சரியே! என உள்மனம் சொல்வதும் செவிகளில் விழுகிறது.. "அற்புதங்கள் தற்செயல் நிகழ்வுகளே! ஆனால் தற்செயல் நிகழ்வுகளிலேயே அற்புதங்கள் நடக்கும்". நாம் ஒழுங்காய் இருந்து,பிரபஞ்சத்தின் ஒழுங்கும் நம்மைப்பாதுகாக்கும் பட்சத்தில் நம்மிலும் அற்புதங்கள் நடக்கட்டுமே! இத்தனை அருமையான,மேன்மையான விஷயத்தை போகிற போக்கில் சொல்ல தந்தையே!தங்களால் மட்டுமே முடியும்! உள்ளத்தின் ஆழத்திலிருந்து என் பாராட்டுக்கள்!!!

    ReplyDelete